சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றியைத் தவற விட்டவர்களுக்கான வேலை மற்றும் மேற்படிப்பு வாய்ப்புகள்!

சிவில் சர்வீஸ் தேர்வுகளில் இம்முறை வெற்றியைத் தவற விட்டவர்களுக்கான பிற வாய்ப்புகள் குறித்து நாம் இப்போது தெரிந்து கொள்வோம்.
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றியைத் தவற விட்டவர்களுக்கான வேலை மற்றும் மேற்படிப்பு வாய்ப்புகள்!

கடந்த வெள்ளியன்று 2018 -19 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகின. மொத்தம் 759 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் இந்திய அளவில் முதல் ரேங்க் பெற்று தரவரிசைப்பட்டியலில் முன்னிலையில் இருக்கிறார் ராஜஸ்தானைச் சேர்ந்த கனிஷ்கா கட்டாரியா. தமிழகத்தில் இருந்து 35 மாணவர்கள் இந்தத் தேர்வில் வெற்றி பெற்று ஐ ஏ எஸ் ஆகப் பொறுப்பேற்க உள்ளனர். தமிழக அளவில் மூன்றாம் இடம் பிடித்த அபிஷேக் சென்னை குரோம்பேட்டையைச் சேந்தவர். மின்னணு பொறியியல் பட்டம் பெற்றவரான அபிஷேக், தனது தனியார் துறை வேலையை ராஜினாமா செய்து விட்டு 3 ஆண்டுகள் கடுமையாக உழைத்துப் படித்து இத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாகத் தகவல். வெற்றிபெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில் தேர்வில் வெற்றி பெற முடியாதவர்கள் குறித்தும் நாம் அக்கறை செலுத்த வேண்டும் இல்லையா?! ஏனெனில் ஐஏஎஸ் கிட்டாவிட்டால் என்ன? ஐ ஏ எஸ்ஸுக்கு இணையான வேறு பல வேலைவாய்ப்புகளும் அரசு மற்றும் தனியார் துறைகளில் இருக்கின்றனவே. அது குறித்த விழுப்புணர்வை மாணவர்களிடையே உண்டாக்க வேண்டியது ஊடகங்களின் கடமை.

இப்போது சிவில் சர்வீஸ் தேர்வுகளில் இம்முறை வெற்றியைத் தவற விட்டவர்களுக்கான பிற வாய்ப்புகள் குறித்து நாம் இப்போது தெரிந்து கொள்வோம்.

இந்திய அளவில் சிவில் சர்வீஸ் தேர்வுகள் என்பவை கடுமையானதாகக் கருதப்படுகின்றன. இத்தேர்வுகளுக்காகத் தயாராவது என்பது சாதாரண காரியமில்லை. மிக மிகக்கடுமையான உழைப்பைக் கோரக்கூடிய தேர்வுகள் இவை. நுட்பமான திட்டமிடலும், அயராத முயற்சியும், தளராத மனமும் இருந்தால் மட்டுமே இத்தேர்வுகளை எவரொருவராலும் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்ய இயலும். அத்தனை உழைப்பும் இருந்த போதிலும் சிலருக்கு தேர்வில் வெற்றி கிட்டவில்லை என்றால் அதற்காக மனம் சோர்ந்து விடத் தேவையில்லை. அவர்களுக்கான பிற வாய்ப்புகளும் நிறையவே இங்கு கொட்டிக் கிடக்கின்றன. சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றியைத் தவற விட்டவர்கள் அடுத்தபடியாக அரசு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகலாம். மாநில அளவிலான PSC தேர்வுகள், SSC CGL, வங்கி அதிகாரி பணிகளுக்கான தேர்வுகள், ஆசிரியர் பணிக்கான தேர்வுகள் (TET) உள்ளிட்ட தேர்வுகளை எழுதி வெற்றி பெற முயற்சிக்கலாம். சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பாடத்திட்டங்களை நன்கு படித்துத் தயாரானவர்களுக்கு மேற்கண்ட தேர்வுகள் எல்லாம் ஒன்றுமே இல்லை. அவர்களால் எளிதில் இந்தத் தேர்வுகளில் வெற்றி பெற முடியும்.

போட்டித் தேர்வுகளில் ஈடுபட விருப்பம் இல்லாதவர்கள் மேற்படிப்புகளில் கவனம் செலுத்தலாம். MBA, MTech உள்ளிட்ட மேற்படிப்புகளில் கவனம் செலுத்தலாம். முதலில் தாங்கள் அடைய விரும்பும் வேலையைப் பற்றிய தெளிவான கண்ணோட்டம் அவசியம். அதற்கேற்ப திட்டமிடலும் இருக்க வேண்டும். சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றிருந்தால் பெறவிருக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப் எஸ் பதவிகளுக்கு நிகரான வேலை வாய்ப்புகளைப் பெற வேண்டுமெனில் அதற்கேற்ப சிறந்த கல்லூரிகளை நாம் மேற்படிப்புக்காகத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியமாகிறது. இதில் நாம் தேர்வு செய்யும் கல்லூரியின் தேசிய மற்றும் மாநில அளவிலான தரவரிசை, கல்வி முடிந்ததும் தங்களது மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதில் அந்தக் கல்வி நிறுவனம் காட்டும் முனைப்பு அவற்றின் கடந்தகால வேலைவாய்ப்பு விகித வரலாறு போன்றவற்றை முக்கியமாகக் கவனித்த பின் அக்கல்லூரிகளில் சென்று மேற்படிப்பு பயில்வது உத்தமம்.

சிலருக்கு தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண்டே மீண்டும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காகத் தயார் செய்யும் ஆவல் இருக்கலாம். அத்தகையோர் தங்களது பயிற்சிக்குக் குந்தகம் விளைவிக்காத  தனியார் துறை வேலைவாய்ப்புகளை ஏற்றுக் கொண்டு மீண்டும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பங்கேற்பதற்கான முயற்சியைத் தொடரலாம். இடைப்பட்ட காலத்தில் குறுகிய கால சான்றிதழ் பட்டங்களைப் பெறுவதற்கான கோர்ஸுகள் எதையாவது முடிக்க முடியுமென்றால் அதையும் முயலலாம். ஏனெனில் ஒருவேளை சிவில் சர்வீஸில் வெற்றி பெற முடியாமலானாலும் இத்தகைய சான்றிதழ் படிப்புகள் மாற்று வேலைவாய்ப்புகளைப் பெற நமக்கு உதவும்.

மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி என்ற ரேஞ்சில் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெறுவது ஒன்றே வாழ்க்கையின் ஒற்றைக் குறிக்கோள் என்று சங்கல்பம் செய்து கொண்டவர்கள் எனில் நீங்கள் மீண்டும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான பயிற்சியையே மிகுந்த முனைப்புடன் தொடரலாம். கற்பதைக் காட்டிலும் கற்றுக் கொடுப்பது மேலும் அதிக பலன்களைத் தரக்கூடும். எனவே இரண்டு முறைகளுக்கு மேல் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய அனுபவம் கொண்டவர்கள் எனில் நீங்கள், உங்களைப் போல சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதில் முனைப்புடன் இருக்கும் பிற இளைய மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் இருந்து கொண்டு அவர்களுடன் இணைந்து தேர்வுகளுக்குத் தயாராகலாம்.

ஒருவேளை நீங்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் ஏதேனும் இரு நிலைகளை வென்று இறுதிப் போட்டியில் வெல்ல முடியாதவர்களாக இருந்தால் கவலை வேண்டாம். நேர்மையான கடின உழைப்பு ஒருபோதும் சோடை போகாது. நிச்சயம் அடுத்த முறை வெற்றிக்கனி உங்கள் கை சேர்ந்தே தீரும் எனும் நம்பிக்கையுடன் பயிலத் தொடங்குங்கள். வெற்றி நமதே!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com