உலக கதை சொல்லல் தினம், எக்ஸ்பர்ட்ஸ் என்ன சொல்றாங்க கேளுங்க!

இன்று உலக கதை சொல்லல் தினம். நீங்கள் தினமும் உங்கள் குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லுகிறீர்களா? இல்லையென்றால் இன்றிலிருந்து கூடத் தொடங்கலாம் அந்தப் பழக்கத்தை...
உலக கதை சொல்லல் தினம், எக்ஸ்பர்ட்ஸ் என்ன சொல்றாங்க கேளுங்க!

இன்று உலக கதை சொல்லல் தினம். நீங்கள் தினமும் உங்கள் குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லுகிறீர்களா? இல்லையென்றால் இன்றிலிருந்து கூடத் தொடங்கலாம் அந்தப் பழக்கத்தை...


வனிதாமணி (கதை சொல்லி)

தினமும் இரவுகளில் குழந்தைகளுக்குக் கதை சொல்வதை பெற்றோர்கள் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரை குழந்தைகளுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கு தேடிச் சென்று கதைகள் சொல்வதில் எனக்கு ஆர்வம் மிகுதி.

புராணக் கதைகளை நான் கேட்டு வளர்ந்ததில்லை என்பதால் நான் எனக்குப் பிடித்த சூழலியல் பாதுகாப்பு விஷயங்களை என் கதைகளுக்குள் புகுத்தி குழந்தைகளுக்குச் சொல்வது வழக்கம். அப்படிச் சொல்லும் போது குழந்தைகள் எழுப்பும் புதுப்புது கேள்விகள் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தும். சமீபத்தில் ஓரிடத்தில் சூழலியல் எக்ஸ்பர்ட் ஒருவரை அழைத்துச் சென்று குழந்தைகளுக்குக் கதை சொல்ல வைத்தோம். அப்போது தேனீக்களைப் பற்றிய அந்தக் கதை முடிந்ததும் குழந்தைகள் கேட்ட சில கேள்விகள் எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தின.

ஒரு குழந்தை கேட்ட கேள்வி... தேனீக்கள்... பூக்களில் தேன் எடுத்து விட்டுப் பறக்கையில் ஏன் அந்தப் பூக்களில் மகரந்தத்தின் நிறம் மாறுகிறது? என்பது ஒரு முக்கியமான கேள்வி. இந்தக் கேள்விக்கான பதிலை நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம். அடுத்ததாக இன்னொரு குழந்தை கேட்டது. தேன்கூட்டில் ஒரே ஒரு ராணித்தேனீ தானே இருக்கும்... ஒருவேளை அந்தத் தேன்கூட்டுக்கு இன்னொரு ராணித்தேனீயும் வந்து விட்டால் அப்போது முன்பே இருக்கக் கூடிய ராணித்தேனீ என்ன செய்யும்? அந்தக்குழந்தையின் கேள்வி... குழந்தைகள் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று எங்களை அசர வைத்தது. அந்தக் குழந்தையின் கேள்விக்கான பதிலை நாங்கள் தேடிக் கண்டுபிடித்து சொன்னோம். முன்னதாக இருக்கும் ராணித்தேனீ புதிதாக வந்த ராணித்தேனீயை கொன்று விடும் அல்லது தேவைக்காக வேறொரு கூட்டை உருவாக்கும் என்று.

குழந்தைகள் உலகம் எப்போதுமே கேள்விகளால் நிரம்பியது.

அந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தரக்கூடிய விதத்திலும், குழந்தைகளின் கற்பனையைத் தூண்டக்கூடிய விதத்திலும் நமது கதை சொல்லல் இருந்து விட்டால் நிச்சயம் நம்மால் ஆரோக்யமான சிந்தனையை குழந்தைகளுக்குள் வளர்த்தெடுக்க முடியும். எனவே பெற்றோர் தினமும் தங்களது குழந்தைகளுக்கு கதை சொல்வதை பழக்கப்படுத்திக் கொள்வதோடு அவர்களைக் கதை சொல்லுமாறு தூண்டவும் வேண்டும்.

விழியன் உமாநாத் (சிறார் இலக்கியப் படைப்பாளி)

இரவு நேரக்கதைகள் செய்யும் மாயமென்ன?

இரவு நேரக்கதைகளில் ஒன்று பெற்றோர்கள் குழந்தைகளுக்கு புத்தகத்திலிருந்து வாசித்து காட்டுவது அல்லது தானாக கதைகள் சொல்வது. இரண்டாவது குழந்தைகள் தானாக ஒவ்வொரு இரவும் வாசிப்பது. அந்த சமயம் பெற்றோர் உடன் இருப்பது மேலும் சுவாரஸ்யத்தை கூட்டும். இரவு நேரக்கதைகளை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லும்போது என்ன நேர்கின்றது?

1. குழந்தைகளுடன் நேரம் செலவழித்தல்


ஒரு நாளின் ஒட்டுமொத்த இறுக்கத்தையும் போக்க வல்லது கதைகள். பெற்றோருக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கு நிறைய இறுக்கம் இருக்கும். சக குழந்தையுடன் சண்டை, நினைத்தது செய்யமுடியாமல் போவது, பெற்றோரிடம் திட்டு வாங்குவது, விளையாட்டு என நிறைய இறுக்கம் இருக்கலாம். இரவு தூங்குவதற்கு முன்னர் அதனை தகர்ப்பது என்னது சுவாரஸ்யமான விஷயம்? கதைகள் அதனைச் செய்யும்

2, புதியவை அறிமுகம்


புதிய சொற்கள், புதிய உயிரினங்கள், புதிய செடிகள், புதிய மரங்கள், புதிய விலங்குகள், புதிய மனிதர்கள். ஆதிகாலத்தின் கற்பனை உலகம், யாருமற்ற புதிய உலகம் என பற்பல புதிய விஷயங்கள் அறிமுகமாகின்றன. வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல கதையின் ஊடாக பல்வேறு சத்தங்களும் அறிமுகமாகும். கதை சொல்லும்போது பெற்றோர்கள் கொஞ்சம் அதனை செய்யலாம். அது கதையினை சுவாரஸ்யமாக்குவதோடு அல்லாமல் அந்த சத்தமும் அவர்களுக்கு உள்ளே செல்லும்.

3. உரையாடலுக்கான சாத்தியங்கள்


கதை சொல்லும் ஆரம்ப நாட்களில் உங்கள் குழந்தைகள் அதிகமாக கதையினை குறுக்கிடுவார்கள். கதையை குதறுவார்கள்/ கதாபாத்திரங்களை மாற்றுவார்கள், அவர்களுக்கு விருப்பமான பெயர்களை உள்ளே நுழைப்பார்கள். இது மிக இயல்பானது. கதையை சொல்ல முடியவில்லையே என வருத்தமே வேண்டாம். இது தான் கதை சொல்லலின் வெற்றி. அப்படி அவர்கள் குறுக்கிடும்போது பேச விடுங்கள். அவர்களின் உலகினை உள்வாங்க இதைவிட சிறப்பான சந்தர்ப்பம் உங்களுக்கு அமைந்துவிடப்போவதில்லை. மெல்ல மெல்ல கதை கேட்க ஆரம்பிப்பார்கள். கதை சொல்லும்போது அவர்களையும் கதைசொல்லலில் ஈடுபடுத்த வேண்டும், எங்கே விட்டேன், அந்த மான் பேரு என்ன சொன்னேன், அந்த காக்கா நிறம் என்ன ? அப்படி…

4, கேட்கும் திறன்


இதைத்தான் நாமும் இழந்திருக்கின்றோம். பெரிய காதுகள் தேவைப்படுகின்றது. குழந்தை வளர்ப்பில் இது முக்கியமான ஒன்று. அதே போல குழந்தைகளுக்கு இந்த கேட்கும் திறனை வளர்த்தெடுப்பது அவசியம். அவர்களுடைய கவனை அலைபாய்ந்து கொண்டே இருக்கும் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்தவும் குவிய வைத்தால் தான் பின்நாட்களில் அவர்களின் வலுவான ஆளுமைக்கு வித்திடும். கதைகளை சொல்லச் சொல்ல அவர்களின் கேட்கும் திறன் அதிகரிக்கும்.

5, கற்பனை வளம்


கற்பனைத்திறன் வளர்க்கும் என சொன்னால் என் குழந்தை ஒன்னும் கதை எழுத தேவையில்லை, ஓவியம் வரையத்தேவையில்லை என பேச்சு அடிபடும். ஆனால் கற்பனைத்திறன் என்பது வெறும் கலைகளில் கவனம் செலுத்த அல்ல. அது வாழ்வின் அன்றாட தேவைகளில் உதவும். ஒரு அறையில் நான்கு சோபாக்களை போடவேண்டும் இடமும் வசதியாக இருக்க வேண்டும் அதனை திறம்பட நடைமுறைப்படுத்த கற்பனை வளம் வேண்டும். கதைகள் அவர்களுடைய கற்பனை உலகினை பெரியதாக்குகின்றன. கதை கேட்கும் போது சொல்லும் கதையை ஒரு வீடியோவாக மனதில் ஓட்டிப்பார்க்கின்றான். விடுபட்ட விஷயங்களை தன் கற்பனை உலகில் தானே நிரப்பி முழுமையாக பார்க்கின்றான். கதை கேட்பதிலும் வாசிப்பதிலும் தான் இது சாத்தியமாகும்.

கதை கேட்டலின் அடுத்த கட்டம் தானாக வாசித்தல். இதனை 7-8 வயது முதல் செய்யலாம். ஆரம்பத்தில் பெற்றோருடன் அமர்ந்து கூட்டாக வாசித்தலில் ஆரம்பிக்கலாம். இந்த பெரிய உலகினை வாசித்தல் மூலமே மேலும் கற்றுக்கொள்ளலாம் என கதைகள் சொல்லிக்கொடுத்துவிடும்.

இப்படி நன்மைகள் இருக்கே என கதை சொல்ல முற்பட வேண்டாம். கதையே ஒரு மகிழ்ச்சியான் அனுபவம். அதற்காகவேனும் கதைகள் சொல்லலாம், அது உங்கள் குழந்தையின் மொழி வளத்தை, கற்பனைத்திறனை, விலாசமானை பார்வையை, கேள்வி கேட்கும் பாங்கினை, காதுகொடுத்து கேட்கும் பண்பினை, வாழ்வின் மதிப்பீடுகளை, நெறிகளை வளர்த்தெடுக்கும் என்பதில் ஐயமே இல்லை. உங்கள் சிரமமானது சரியான கதைகளை சேகரிப்பதும் கொஞ்சம் மெனக்கெட்டு முன்னரே வாசித்துவிடுவதும், குழந்தைகளுடன் அமர்ந்து அந்த கதைகளை சொல்வது தான். நம் குழந்தைகளுக்காக இதனை செய்தே தீரவேண்டும். வளர்ப்பது மட்டுமல்ல நம் கடமை அவர்களை உயர்த்துவதும் நம் கடமையே.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com