சுடச்சுட

  

  டிரம்ப்புக்கு எதிராக கண்டனங்களைக் குவித்த புகைப்படத்துக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த சர்வதேச செய்தி புகைப்பட விருது!

  By RKV  |   Published on : 12th April 2019 12:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  international_photo_journalism_award

   

   

  கடந்த ஆண்டின் துவக்கத்தில் இணையதளங்கள் முதல் அச்சு ஊடகங்கள் வரை ஒரு புகைப்படம் வைரல் ட்ரெண்டிங்கில் வலம் வந்தது. பார்ப்பவர் மனதைக் கரையச் செய்யும் விதத்தில் இருந்த அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்றது ஒரு பெண்குழந்தை. அமெரிக்கா, மெக்ஸிகோ பார்டரில் தன் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்துடன் தாயின் முழங்காலைப் பற்றிக் கொண்டு விசும்பும் அந்தச் சிறுமியின் புகைப்படம் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அமெரிக்க, மெக்ஸிகோ எல்லைக் கொள்கையை மாற்றிக் கையெழுத்திடத் தூண்டியது என்றால் மிகையில்லை.

  ஆண்டுதோறும் முறையான பாஸ்போர்ட் இன்றி எல்லை தாண்டி அமெரிக்காவுக்குள் ஊடுருவும் அண்டை நாட்டினரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்த முறைகேட்டைத் தடுக்கும் பொருட்டே எல்லை தாண்டி வந்து ஆவணங்கள் இன்றி பிடிபடுவோரது குழந்தைகளை அவர்களிடமிருந்து பிரித்து காப்பகங்களின் பராமரிப்பில் விடுத்து பெற்றோரை உரிய விசாரணையின் பின் எல்லை தாண்டிய குற்றத்துக்கான தண்டனை அளிக்கும் நடைமுறையை டிரம்ப் அரசு கடந்த ஆண்டு தொடங்கியது. இந்த நடைமுறையில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் எல்லை தாண்டி அமெரிக்காவுக்குள் ஊடுருவிய தங்களது பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு காப்பகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்தக் காப்பகங்கள் ஒரே இடத்தில் இருப்பவை அல்ல. அவை அமெரிக்காவின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இருக்கலாம். டிரம்பின் இந்தப் புதிய கட்டுப்பாடு உலக அளவில் கடும் கண்டனங்களை எழுப்பியது.

  குழந்தைகளைப் பெற்றோரிடம் இருந்து பிரிப்பது சட்டப்படி குற்றம். அதை டிரம்ப் தலைமையிலான அரசு எவ்வித குற்ற உணர்வும் இன்றி செய்து வருகிறது. என உலகநாடுகள் அனைத்தும் அமெரிக்காவைக் குறை கூறின. ஆயினும் ட்ரம்ப், தனது இந்த நடவடிக்கை எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை வேரோடு களையும் பொருட்டு தொடங்கப்பட்டதே என்று சாதித்தார். அந்தப் பதட்டமான சூழலில் மெக்ஸிகோவின் கொண்டூராவில் இருந்து தனது மகள் யனெலாவுடன் அமெரிக்க எல்லையைக் கடக்க முயற்சித்தார் சாண்ட்ரா சான்செஸ் எனும் பெண். எல்லை தாண்டும் போது அமெரிக்க காவல்துறையின் தேடுதல் வேட்டையில் சாண்ட்ரா சிக்கிக் கொள்ள சிறுமியை அவளது அம்மாவிடன் இருந்து பிரித்து தனியே நிற்க வைக்க முயல்கிறார் அங்கிருக்கும் காவல்துறை அதிகாரியொருவர். அதற்கு ஒப்புக் கொள்ளாமல் முரண்டு பிடிக்கும் குழந்தை தன் அம்மாவின் முழங்காலை விட்டு நகர மறுத்து அழுகிறது.

  டிரம்ப் அரசின் எல்லைப்புறக் கொள்கையை கண்டிக்கும் விதத்தில் மறுநாள் ஊடகங்களில் வெளியான இந்தப் புகைப்படம் உலக நாடுகளிடையே கடும் அதிருப்தியைக் கிளப்பியது. பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளைப் பிரிப்பது தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அடக்கும் முயற்சியா? இது கொடூரம், இத்தகைய மன உளைச்சலுக்கு பெற்றோரையும், குழந்தைகளையும்  உள்ளாக்கும் அதிகாரம் அமெரிக்காவுக்கு இல்லை என்று கண்டனக்குரல்கள் வலுத்தன. அதைத் தொடர்ந்து சில மாதங்களில் எல்லைப்புறக் கொள்கையின் கடுமையைக் குறைக்கும் ஆவணத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டார் டிரம்ப்.

  அந்தப் புகைப்படத்திற்கு தற்போது சர்வதேச செய்தி புகைப்படத்திற்கான விருது கிடைத்திருப்பது பாராட்டுதலுக்குரியது.

  இந்தப் புகைப்படத்தை எடுத்தவர் ஜான் முர்ரே எனும் செய்திப் புகைப்படக் கலைஞர்.

  அமெரிக்காவின் எல்லைப்புறக் கொள்கைகள் கடுமையான போது தகுந்த அனுமதியின்றி அமெரிக்காவுக்குள் ஊடுருவ நினைத்த அண்டை நாட்டார் ஆயிரக்கணக்கில் அமெரிக்க எல்லைப்புறங்களில் கைதானார்கள். வாஷிங்டன் எல்லைக் காவல்படை வீரர்களின் சைரன் ஒலிக்கும் காவல் வாகனங்களில் கைது செய்து அழைத்துச் செல்லப்படும் ஆண்கள் மற்றும் பெண்களின் முகங்களில் தங்களது குழந்தைகள் தங்களிடமிருந்து பிரிக்கப்பட்ட அச்சம் பனி போல் உறைந்திருந்தது. அவர்களால் எதுவும் செய்வதற்கு இயலாத அந்த நிலையின் துயரத்தை இந்த உலகத்திற்கு நான் ஒரு கதையாகச் சொல்ல முற்பட்டேன். அந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி தான் இந்தப் புகைப்படத்திற்கு கிடைத்த கவனமும், விருதும் என்கிறார் முர்ரே.

  புகைப்படம் ஊடகங்களில் வைரலாகி ட்ரம்புக்கு எதிராக கடும் கண்டனங்களை எழுப்பிய நேரத்தில் வாஷிங்டன் காவல்துறை குழந்தையை தாயிடமிருந்து பிரிக்கவில்லை என மறுப்பு தெரிவித்தது.

  அந்த குறிப்பிட்ட குழந்தை, தன் தாயைப் பிரிய மறுத்ததால் நாங்கள் சோதனையுடன் நிறுத்திக் கொண்டோம். சிறுமி அவளது அம்மாவுடனே தான் தங்க அனுமதிக்கப்பட்டாள். என்ற விளக்கமும் பின்னாட்களில் வெளிவந்தது.

  ஆயினும் அமெரிக்காவின் கடுமையான எல்லைப்புறக் கொள்கைகளைத் தளர்த்தியதில் இந்தப் புகைப்படம் மிகப்பெரும் பங்காற்றியதை மறுக்க முடியாது. அந்தப் புகைப்படத்திற்கு இன்று விருதும் கிடைத்திருப்பதைக் கண்டு பாராட்டத் தோன்றும் அதே வேளையில் உலக அவலங்களை பத்திரிகை தர்மம் என்ற பெயரில் இப்படிப் புகைப்பட ஆவணமாக்க முயலும் புகைப்படக் கலைஞருக்கு இதனால் நேரும் மன உளைச்சலையும் மறந்து விடக்கூடாது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai