10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத குதிரையில் சென்ற கேரள மாணவி! (வைரல் விடியோ)

இதென்ன கூத்து! பப்ளிசிட்டிக்காக இப்படியெல்லாம் செய்கிறீர்களா? என்று சிலர் கேட்கிறார்கள். அப்படியேதும் இல்லை. யாராவது பப்ளிசிட்டிக்காக உயிரைப் பணயம் வைத்து 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத குதிரையில் ச
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத குதிரையில் சென்ற கேரள மாணவி! (வைரல் விடியோ)

கிருஷ்ணா, கேரள மாநிலம் திருச்சூரில் இருக்கும் மலா பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி. இவரது தந்தை அஜய் காளிந்தி, தாயார் இந்து. இத்தம்பதியினரின் ஒரே குழந்தை கிருஷ்ணா. அஜய் காளிந்தி மலாவில் இருக்கும் விஷ்ணு ஆலயத்தின் அர்ச்சகராகப் பணிபுரிகிறார். பெரிய வருமானமென்று சொல்ல முடியாது. ஆயினும் தன் மகளுக்கு குதிரைகளின் மீது இருந்த ப்ரியத்தைக் கண்டு கிருஷ்ணாவின் 11 ஆம் பிறந்த நாளின் போது சாம்பல் நிறக் குதிரை ஒன்றைப் பரிசளித்திருக்கிறார். பிறகு கிருஷ்ணா 10 ஆம் வகுப்பில் சேர்ந்ததும் புதிதாக ஒரு வெள்ளைப் புரவியும் பரிசாக வந்து சேர்ந்தது. இந்த இரண்டு குதிரைகள் மட்டுமல்லாது மேலும் ஒரு பசு மற்றும் எருமை மாடும் வளர்க்கிறார்கள். வீட்டு மனிதர்களோடு விலங்குகளையும் சேர்த்தால் இப்போது அஜயின் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை 7. இவர்களைப் பராமரிப்பதே தற்சமயம் போதுமானதாக இருப்பதால் இனி மேற்கொண்டு குதிரைகளை வாங்கித் தன் மகளுக்கு பரிசளிக்கப்போவதில்லை என்று சிரிக்கிறார் அஜய். குதிரைகளின் மீதான மகளின் ஆசை பெரிதில்லை... ஆனால், பெண் பிள்ளைக்கு குதிரையேற்றமெல்லாம் எதற்கு? என்று தட்டிக் கழிக்காமல் கிருஷ்ணாவின் ஆசையை நிஜமாக்கிய தகப்பன் என்ற வகையில் அஜயைப் பாராட்ட வார்த்தையில்லை.

கிருஷ்ணா குதிரையில் பள்ளிக்குச் செல்வது புதிதில்லை. அவர் இவர் முன்பும் தேர்வுக் காலங்களில் ஏதாவது ஒரு நாளில் குதிரையில் பள்ளிக்குச் செல்வது வழக்கம் தானாம். சிலர், அதெல்லாம் தேவையற்ற ஆபத்து! நகரத்தின் வாகன நெரிசலில் குதிரையில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய அவசியம் என்ன? என்றெல்லாம் எச்சரித்திருக்கிறார்கள். ஆனாலும், கிருஷ்ணாவுக்கு தனது குதிரையேற்றத் திறமையின் மீது அபார நம்பிக்கை. தன்னால் தனது குதிரையை செம்மையாகக் கையாள முடியும் என்று அந்தச் சிறுமி நம்பினார். அதன் விளைவே 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வின் கடைசி நாளான சமூக அறிவியல் தேர்வு அன்று குதிரையேறி தேர்வெழுத பள்ளிக்குச் சென்ற அழகு! கிருஷ்ணா 7 ஆம் வகுப்பிலிருந்தே குதிரையேற்றம் கற்று வருகிறார். கற்றுத்தர இரண்டு பயிற்சியாளர்கள் உண்டு. முன்பெல்லாம் கிருஷ்ணா குதிரையில் பள்ளி செல்கையில் பெரிதாக எவ்வித வியப்பும் இருந்ததில்லை. உடன் பயிலும் மாணவர்களும், அங்கு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களும் சும்மா வேடிக்கை பார்ப்பார்கள். ஆனால் இம்முறை கிருஷ்ணா குதிரையில் சென்றதை அவரது பயிற்சியாளர்களின் ஒருவர் விடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் பகிர அதுவே தற்போது வைரலாகி பலரும் கிருஷ்ணாவைத் தொடர்பு கொண்டு பாராட்டுகிறார்களாம்.

இதென்ன கூத்து! பப்ளிசிட்டிக்காக இப்படியெல்லாம் செய்கிறீர்களா? என்று சிலர் கேட்கிறார்கள். அப்படியேதும் இல்லை. யாராவது பப்ளிசிட்டிக்காக உயிரைப் பணயம் வைத்து 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத குதிரையில் செல்வார்களா என்ன? அப்படியெல்லாம் எதுவுமில்லை. என் மகள் முறையாக குதிரைச் சவாரி கற்றிருக்கிறாள். அவளுக்குக் குதிரையேற்றம் பிடிக்கும். தன்னால் திறமையாக குதிரையைக் கையாள முடியும் என அவள் நம்பினாள். அந்த நம்பிக்கை எங்களுக்குப் பெருமிதம் தந்தது. அதனால் நாங்கள் அவளை அனுமதித்தோம். என்கிறார் அஜய்.

சூப்பர் அப்பா, சூப்பர்ப் பொண்ணு!

ஹாட்ஸ் ஆஃப் டு யூ கிருஷ்ணா!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com