Enable Javscript for better performance
Born in Tamilnadu is unlucky for sports Persons?! come lets go through it from GOMATHI MARIMUTHU'S S- Dinamani

சுடச்சுட

  

  தமிழகத்தில் பிறப்பது விளையாட்டு வீரர்களின் துரதிர்ஷ்டமா?! வாங்க தெரிஞ்சுக்கலாம் கோமதி மாரிமுத்து ஜெயித்த கதையிலிருந்து!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 27th April 2019 03:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  goomathi_marimuthu

   

  திருச்சியில் ‘முடிகண்டம்’ என்றொரு  குக்கிராமம். சரியான சாலை வசதி கிடையாது. பக்கா கிராமம். அந்த கிராமம் இன்று இந்தியா முழுவதும் அறியப்படுகிறதென்றால் காரணம் அங்கு பிறந்து வளர்ந்து இன்று 23 ஆவது ஆசிய தடகளப் போட்டிகளில் இந்தியா சார்பாக ஓடி தங்கம் வென்ற முதல் மங்கையான கோமதி மாரிமுத்துவால் தான். 

  யார் இந்த கோமதி மாரிமுத்து?

  கடந்த வாரம் வரை இந்தப் பெயரை தமிழகத்தில் யாரும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் இன்று அவரை அழைத்து விருதளித்து விருந்தளித்து சிறப்பிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது தமிழக விளையாட்டுத்துறை.

  கோமதி மாரிமுத்து பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிக்கு அருகில் இருக்கும் முடிகண்டம் கிராமத்தில். மாரிமுத்து தம்பதியினருக்கு 4 பிள்ளைகள். அவர்களில் இளையவர் கோமதி. பண்ணைக்கூலிகளான ராசாத்தி, மாரிமுத்து தம்பதியினர் தங்களது கடைக்குட்டி மகளான கோமதியின் தடகள ஆர்வத்தைக் கண்டு ஆரம்பம் முதலே ஆதரிக்கத் தொடங்கினர்.

  அதிலும் தந்தை மாரிமுத்துவுக்கு வெயிலானாலும் சரி அடை மழையானாலும் சரி மகள் கோமதி ஓட்டப் பந்தயப் பயிற்சி எடுத்துக் கொள்வதென்றால் எதுவும் பொருட்டில்லை. கருக்கிருட்டில் மகளை எழுப்பித் துணையாக சைக்கிள் எடுத்துக் கொண்டு அவள் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல துணையாக நிற்பார். அந்த அப்பாவுக்கு மகள் இந்திய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் ஜெயிக்க வேண்டும் என்பது பெருங்கனவாக இருந்திருக்கிறது. அப்படித்தான் விளையாட்டுப் போட்டிகளில் ஜொலிக்கத் தொடங்கி இருக்கிறார் கோமதி.

  திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் இளநிலை பி ஏ எகனாமிக்ஸ் முடித்து விட்டு சென்னை எம் ஓ பி வைஷ்ணவா கல்லூரியில் எம் ஏ மீடியா மேனேஜ்மெண்ட் பயின்றிருக்கிறார். அப்போதெல்லாம் அவர் வென்றெடுத்த பதக்கங்களை வைக்க இப்போது அவரது 150 சதுர அடி முடிகண்டம் வீட்டில் இடமே இல்லை என்கிறார்கள் பேட்டிக்காக அங்கு சென்று வந்தவர்கள். கோமதியின் அம்மா ராசாத்தி தன் மகள் பெற்ற பதக்கங்களையும் கோப்பைகளையும் வைக்க இடமின்றி ஒரு பெரிய பெட்டியிலும், பேகிலுமாக திணித்து வைத்திருக்கிறார். அத்தனை பதக்கங்கள். ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கோமதிக்கு கர்நாடக மாநில இன்கம்டாக்ஸ் துறையில் வேலை கிடைத்து தற்போது பணிநிமித்தம் அங்கு வசித்து வருகிறார் கோமதி.

  அவருடன் பிறந்த இரு சகோதரிகளுக்குத் திருமணமாகி விட்டது. கோமதி, தனது வெற்றிக் கனவுகளுக்காக திருமணத்தை தள்ளிப் போட்டிருக்கிறார் என்கிறார் அம்மா ராசாத்தி. தோகாவில் தங்கம் வென்ற தமிழகத்து கோமதியின் கதை இப்படித் தான் தொடங்குகிறது அவரைப் பற்றி செய்தி வெளியிடும் அத்தனை ஊடகங்களிலும்.

  அதே சமயம் ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற நொடியில் இருந்து இப்போது வரை கோமதியைச் சந்தித்த அத்தனை ஊடகத்தினரிடமும் கோமதி மறவாமல் தெரிவிக்க விரும்பிய ஒரு விஷயம் உண்டு. அது;

  ‘எனக்கு இந்தப் போட்டியில் ஜெயிக்கும் வரை ஸ்பான்சர்கள் யாரும் கிடையாது. இந்தப் போட்டிக்கே நான் என் சொந்த செலவில் தான் விமான டிக்கெட்டுகளை புக் செய்து கொண்டு சென்றேன். இங்கே தங்குமிடம், விளையாட்டுக்குத் தேவையான உபகரணங்கள், முக்கியமாக ஓட்டப் பந்தய வீரங்கனையான எனக்குத் தேவையான தரமான ஷூ, சத்தான சாப்பாடு எல்லாவற்றுக்கும் நான் என்னை மட்டுமே நம்பியிருந்தேன். எனக்கு வெற்றியைத் தேடித் தந்த இந்தப் போட்டியில் கூட நான் கிழிந்த ஷூவைப் போட்டுக் கொண்டு தான் ஓடி ஜெயித்திருக்கிறேன். போட்டியில் என்னுடன் பங்கேற்ற அத்தனை விளையாட்டு வீரர்களுக்கும் இது தெரியும். பிற விளையாட்டு வீரர்களுக்கு இருந்த பகட்டான உடை வசதி எல்லாம் என்னிடம் கிடையாது. நான் சுமாரான உடைகளுடன் தான் அங்கு தங்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். அதற்காகவெல்லாம் நான் வருத்தப்படவில்லை. நான் என்னுடைய குறிக்கோளில் மட்டுமே ஆழ்ந்த கவனத்துடன் இருந்தேன். அந்த கவனமும், அதை அடையும் மன உறுதியும் தான் எனக்கு இந்த வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கின்றன என்று நம்புகிறேன் நான், ஆனாலும், நான் வெல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இருந்ததால் இது சாத்தியப்பட்டது. நம் மாநிலத்தில் என்னைப் போல பலர் விளையாட்டில் ஆர்வத்துடன் பங்கேற்று மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் சாதித்த பின்னும் கூட விளையாட்டு வேண்டாம் என்று ஒதுங்கும் நிலை தான் இன்றும் நீடிக்கிறது. காரணம் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளத் தேவையான பொருட்செலவை தாக்குப்பிடிக்க முடியாமல் தான். 

  சரியான ஸ்பான்சர்கள் கிடைப்பதில்லை. வெற்றியாளர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. போட்டிகளில் பங்கேற்கத் தேவையான ஊட்டச்சத்துடன் கூடிய உணவு, போக்குவரத்துச் செலவு, தங்குமிடச் செலவு, கோச்களுக்கான செலவு, விளையாட்டு உபகரணங்களுக்கான செலவு என்று எதுவுமே கிடைக்காமல் வீரர்கள் எத்தனை நாட்களுக்குத் தான் தாக்குப்பிடிக்க முடியும்?! அத்தனை கஷ்டங்களும் எனக்கு இருந்தன. காயம் காரணமாக நடுவில் 2 வருடங்கள் என்னால் பயிற்சியில் ஈடுபட முடியாமல் மொத்தமாக போட்டிகளில் இருந்து விலகி இருக்க வேண்டிய சூழலும் வந்தது. கஷ்டமான அந்தக் காலத்தையும் கடந்து வந்தேன். ஆனால், எத்தனை பேரால் இப்படித் தடைகளைக் கடந்து வெல்ல முடியும்?. விளையாட்டில் ஆர்வமுடைய, சாதிக்கக்கூடிய அளவுக்கு திறமைகள் கொண்ட பலர் இருக்கிறார்கள் தமிழ்நாட்டில். ஆனால் மேற்சொன்ன கஷ்டங்களைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகி ஒரு கட்டத்தில் முற்றிலுமாக விளையாட்டே வேண்டாம் என்று ஒதுங்கி விடுகிறார்கள் பலர். திறமையுள்ளவர்களை அடையாளம் காண முடியாமல் போவதால் யாருக்கு நஷ்டம்? தமிழ்நாட்டில் தான் தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் விட்டுக் கொடுக்கப்படுகிறார்கள். வடமாநிலங்களில் அப்படியல்ல. அவர்கள் தங்களது மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு ஏதாவது கஷ்டம் என்றால் கடைசி வரை அவர்களுடன் நின்று போராடத் தயங்குவதே இல்லை. அங்கே விளையாட்டு வீரர்கள் கொண்டாடப்படுகிறார்கள்.

  அப்பா தான் குலதெய்வம்!

  என்னையே எடுத்துக் கொள்ளுங்கள், நான் ஒரு விளையாட்டு வீரங்கனையாக உருவாக வேண்டும், சர்வதேச போட்டிகளில் விளையாடி வெற்றிபெற வேண்டும் என்ற கனவுடன் என்னை வளர்த்து வந்த என் அப்பா ஒரு சமயத்தில் முற்றிலுமாக உடல் நலிந்து படுக்கையில் வீழ்ந்தார். அவருக்குத் தேவையான உணவுக்குச் செலவளிக்க கூட வீட்டில் பணமே இல்லாது போல சூழல் வந்தது. அப்படியும் அப்பா, என்னை எப்படியாவது மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளத் தேவையான ஊக்கம் அளித்து அனுப்பி வைக்கத் தவறவில்லை. அப்பாவுக்குத் தன் நண்பர்களிடம் எல்லாம் என்னைப் பற்றிப் பெருமையாகப் பேச எப்போதுமே ப்ரியம் அதிகம். ஒருமுறை கால்கள் செயலிழந்து படுக்கையில் விழுந்த நிலையிலும் கூட வீட்டில் சாப்பிட உணவின்றி மாட்டுக்கு வைத்த உணவை சாப்பிட்டுக் கொண்டு என்னைப் போட்டிகளுக்கு அனுப்ப ஆர்வத்துடன் இருந்தார் என் அப்பா, இன்றைக்கு அப்பா இல்லை, அவர் இப்போது என் முன்னால் இருந்தால் அவரைத் தான் என் குலதெய்வம் என்பேன் நான். என் வெற்றிகளுக்கெல்லாம் என் அப்பா தந்த ஊக்கமே முதல் காரணம்”

  -  என்று கண்ணீருடன் நெகிழ்ச்சியாகத் தன் கதையைப் பகிர்கிறார் கோமதி மாரிமுத்து.

  தங்க மங்கையை தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் அசோஸியேசன் கண்டுகொள்ளவில்லையா?

  நேற்று வெள்ளியன்று ஆசிய தடகளப் போட்டிகள் நடைபெற்ற கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து இந்தியா திரும்பினார் கோமதி. அவரை உடனடியாக வரவேற்கச் சென்றவர்கள் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் அசோஸியேசன் அல்ல, வேலம்மாள் பள்ளி நிர்வாகத்தினரே! ஆசிய தடகளப் போட்டிகளில் முதல்முறையாகத் தங்கம் வென்ற பெண் எனும் சிறப்புக்குரிய கோமதி மாரிமுத்துவை வரவேற்பதில் தமிழக ஸ்போர்ட்ஸ் அசோஸியேசன் ஏன் இத்தனை மெத்தனம் காட்ட வேண்டும்? என்ற கேள்வி வேலம்மாள் பள்ளி நிர்வாகத்தினர், தங்களது வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கோமதியிடம் முன் வைக்கப்பட்டது. அப்போது கோமதி அளித்த பதில்;

  தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் அசோஸியேசனுக்கு தான் ஊர் திரும்பும் விவரங்கள் தெரியாது. அதனால் அவர்கள் முதலாவதாக என்னைத் தொடர்பு கொள்ள இயலாமல் போய்விட்டது. நான் இந்தியா திரும்பியதும் முதன்முதலாக வேலம்மாள் பள்ளி நிர்வாகத்தினர் என்னை அணுகி, அவர்கள் எனது அடுத்தடுத்த போட்டிகளுக்கு ஸ்பான்சர்களாக இருப்பதாக விருப்பம் தெரிவித்தனர். ஸ்பான்சர்களுக்காக மேலும் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்று வேலம்மாள் பள்ளி விழாவில் கலந்து கொண்டபின் நாளை தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் அசோஸியேசன் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருக்கும் பாராட்டு விழாவுக்கு என்னை அழைத்திருக்கிறார்கள். நாளை நான் அங்கு செல்ல வேண்டும். அவர்கள் எனது வெற்றியைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை என்பதெல்லாம் சரியான செய்தி அல்ல’ என்றார் கோமதி மாரிமுத்து.

  கோமதி மாரிமுத்துவின் ரோல்மாடல் யார்?

  ஓட்டப்பந்தயப் போட்டிகளில் தன்னுடைய சிறந்த ரோல்மாடலாக கோமதி கருதுவது தடகள வீரங்கனை சாந்தியை.

  சாந்தியை தமிழகம் அத்தனை சீக்கிரம் மறந்திருக்காது என்று நம்புவோம்.

  தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை சாந்தி. 2006-ம் ஆண்டு கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். 800 மீட்டர் ஓட்டத்தில் அவர் பதக்கம் பெற்றுக் கொடுத்தார். ஆனால் அவரிடம் நடத்தப்பட்ட பாலின பரிசோதனையில் ஆண் தன்மை அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது பதக்கம் பறிக்கப்பட்டதோடு அவர் தடகள போட்டியில் பங்கேற்கவும் தடைவிதிக்கப்பட்டது. அதில் மனமுடைந்த சாந்தி, மேற்கொண்டு இந்த விஷயத்தில் தனது போராட்டத்தை எப்படி மேற்கொள்வது என்பதறியாமல் செங்கல் சூளையில் ரூ.200 ஊதியத்துக்கு தினக்கூலியாக வேலைக்குச் செல்லத் தொடங்கி விட்டார். அத்துடன் தற்போது அவர் தன்னிடம் இருந்து தட்டிப் பறிக்கப்பட்ட பதக்கக் கனவை திறமையுள்ள பிற இளம் விளையாட்டு வீரர்கள் பெறும்படியாக அவர்களுக்கு இலவசத் தடகளப் பயிற்சி அளித்து வருவதாகவும் தகவல்.

  அந்த சாந்தி தான் தனது ரோல்மாடல் என்கிறார் கோமதி மாரிமுத்து. சாந்தி குறித்துப் பேசும் போது, ‘அக்கா, தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருந்ததால் தான் அவருக்கு இப்படி ஒரு நிலை. ஒருவேளை அவர் வடமாநிலங்களில் பிறந்திருந்து இப்படி ஒரு நிலைக்கு ஆளாகி இருந்தால் நிச்சயம் அந்த மாநிலத்தார் அக்காவை விட்டுக் கொடுத்திருக்க மாட்டார்கள்.’ என்ற தனது வருத்தத்தையும் பதிவு செய்யத் தவறவில்லை.

  தோகாவில் தங்கம் வென்றதுமே கோமதியை மகிழ்ச்சியில் உச்சி குளிர வைத்த ஆரத்தி வரவேற்பு!

  தோகாவில் வசித்த தமிழ் குடும்பங்கள் சில ஒன்றிணைந்து இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் இருந்து வந்து இங்கே ஆசிய தடகளப்போட்டியில் தங்கம் வென்ற தங்களது மண்ணின் வெற்றி மங்கையை வீட்டுக்கு அழைத்து விருந்தளித்து உபசரிக்க வேண்டும் என்று கருதி இருக்கிறார்கள். அதற்காக தோகாவில் இருக்கும் இந்திய அதிகாரிகளிடம் அனுமதி கேட்ட போது முதலில் மறுத்தவர்கள் பின்னர் 1 மணி நேரம் மட்டும் அனுமதி வழங்கி இருக்கிறார்கள். அப்படித்தான் அங்கிருந்த தமிழ்க்குடும்பத்தினரில் ஒருவரது வீட்டுக்கு வரவழைக்கப்பட்டார் கோமதி மாரிமுத்து. வீட்டுக்கு வந்த விளையாட்டு வீரங்கனையை ஆரத்தி எடுத்து வரவேற்றிருக்கிறார்கள் தமிழ்ப்பெண்கள். அதைக் கண்டு நெகிழ்ந்து போன கோமதி, ‘எனக்கு இப்படியெல்லாம் இதுவரை யாருமே செய்ததில்லைங்க’ என்று நெகிழ, கோமதிக்குப் பிடித்த மீன் குழம்பை மண்பானையில் சமைத்துச் சுடச்சுட அரிசிச்சாதத்துடன் தலைவாழை இலையில் விருந்தளித்து அசத்தி இருக்கிறார்கள் அங்கத்திய தமிழர்கள். ஆசிய தடகள வெற்றிக்காக கோமதிக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் என்றால் இதைத்தான் சொல்ல வேண்டும். 

  கோமதியின் ட்ராக் ரெகார்டு...

  இந்த வருடத் துவக்கத்தில் பாட்டியாலாவில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பைக்கான தடகளப் போட்டியில் 800 மீட்டர் தூரத்தை 2:03:21 நிமிடங்களில் ஓடி சாதனை படைத்திருந்தார். தன்னுடைய இந்த சாதனையை மீண்டும் தோகாவில் நடைபெற்ற ஆசியத் தடகளப் போட்டியில் அதே 800 மீட்டர் தூரத்தை 2:02:70s நிமிடங்களில் ஓடிக் கடந்து தன்னுடைய முந்தைய சாதனையை தானே முறியடித்திருக்கிறார் கோமதி மாரிமுத்து.

  கோமதியை வந்தடைந்த அன்பளிப்புகள்!

  திமுக சார்பாக 10 லட்சமும், தமிழக காங்கிரஸ் சார்பாக ரூ 5 லட்சமும் தடகள வீரங்கனை கோமதிக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் என அந்தந்த கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், கோமதிக்கு 1 லட்சம் ரூபாய் அன்பளிப்பு வழங்குவதாக அறிவித்திருக்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆசியத் தடகளப் போட்டியில் இந்தியா சார்பாக தங்கம் வென்ற கோமதியை தமிழக அரசு சார்பாக வாழ்த்தி வரவேற்றிருக்கிறார்.

  கோமதியின் அடுத்தடுத்த இலக்குகள்...

  தற்போது டைமண்ட் லீக் போட்டிகளில் பங்கேற்கத் தயாராகிக் கொண்டிருக்கும் கோமதி அடுத்தபடியாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தகுதியுடையவராகத் தன்னை தயார் செய்து கொள்வதே தந்து அடுத்தகட்டப் பணியாகும் என்று தெரிவித்துள்ளார்.

  கோமதியின் வெற்றி கர்நாடகத்துக்கா? தமிழகத்துக்கா?

  கோமதி மாரிமுத்துவின் வெற்றிக்குப் பின் பலர் அவரது வெற்றிக்கு சொந்தம் கொண்டாடும் உரிமை தமிழகத்துக்கா? அல்லது கர்நாடகத்துக்கா? யாருக்கு உரியது இந்த வெற்றிக்கான பெருமை என்றொரு கேள்வியை முன்வைக்கிறார்கள். காரணம் கோமதி தற்போது பணிபுரிந்து வருவது கர்நாடக மாநில இன்கம்டாக்ஸ் துறையில். பணிபுரிவது அங்கு என்றாலும் பிறந்து வளர்ந்தது, படித்தது எல்லாம் தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் தான். திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் தான் தனது இளநிலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்கிறார். தடகளப் பயிற்சி பெற திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி மைதானத்திற்குச் செல்வாராம். அங்கு கோச் ராஜாமணியிடம் பயிற்சி பெறச் செல்ல வேண்டுமென்றால், கோமதி முடிகண்டத்தில் இருந்து அதிகாலை 4.30 மணி பேருந்தை பிடிக்க வேண்டும். அப்படியெல்லாம் கஷ்டப் பட்டு பயிற்சி எடுத்துப் பெற்றது தான் இந்த தங்கப் பதக்கம். இன்று பணிக்காக அவர் கர்நாடகத்தில் இருக்க வேண்டிய சூழல் இருந்தாலும் வெற்றிக்கான பெருமையை தமிழகத்துக்கு வழங்கவே தான் எப்போதும் விரும்புவதாக கோமதியே தெரிவித்திருக்கிறார்.

   

   

   


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai