கிலோ 1,73,435 ரூபாய் ‘பிளாக் சிக்கன்’ கேள்விப்பட்டிருக்கீங்களா?

அடேயப்பா... நம்மூர் மதிப்புக்கு 1,73,435.00 ரூபாய் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தந்தூரி என்ற பெயரில் நம்மூரில் சிக்கனைக் கருக விட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம், இந்தச் சிக்கனை 
கிலோ 1,73,435 ரூபாய் ‘பிளாக் சிக்கன்’ கேள்விப்பட்டிருக்கீங்களா?

பட்டர் சிக்கன், ஜிஞ்சர் சிக்கன், பள்ளிப்பாளையம் சிக்கன், செட்டிநாடு சிக்கன் தெரியும், அதென்ன பிளாக் சிக்கன்?! அப்படி ஒரு சிக்கன் இருக்கிறது. அதன் விலையும் மிக அதிகம் என்கிறார்கள். உலகின் மிக விலையுயர்ந்த உணவு வகைகளில் இதுவும் ஒன்றாம்! உங்களுக்குத் தெரியுமா?

உலகின் விலையுயர்ந்த சிக்கன்!

உலகின் அதி விலையுயர்ந்த சுவையான உணவு வகைகளைப் பற்றி இணையத்தில் தேடிக் கொண்டிருந்த போது இந்த பிளாக் சிக்கன் விஷயம் கண்ணில் பட்டது. அசைவ பட்ஷிணியான எனக்கு இது புத்தம் புதிதாக இருந்ததால் அதைப் பற்றி மேலும் கூகுள் செய்ததில் கிடைத்த தகவல்களை உங்களுடன் பகிர்கிறேன்.

பிறப்பிடம்...

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் வளர்த்தெடுக்கப்படும் ஒரு வகை ஸ்பெஷல் கோழி இனம் தான் இந்த அயாம் செமனி பிளாக் சிக்கன் வெரைட்டி. இதில் சேவலும் உண்டு. இதன் ஸ்பெஷாலிட்டியே நிறம் தான். முழுக் கருப்பு. மூக்கு, இறகு, கால் மட்டுமில்லை இந்தப் பறவையின் நாக்கு, குடல் உள்ளுறுப்புகள் அனைத்தும் கூட அடர் கருப்பு தான். ரத்தம் மட்டும் பிற கோழிகளைப் போல சிவப்பாக இருக்கும். கேட்க அதிசயமாகத்தானே இருக்கிறது.

எங்கெங்கு இறக்குமதியாகின்றன?

இந்த வகை கோழியினங்கள் ஆரம்பத்தின் ஜாவா தீவில் மட்டுமே வளர்த்தெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. இது உலகின் பிற பகுதிகளுக்கு உடனடியாகப் பரவாததற்கான காரணம் கருப்பு நிறத்தின் மீதிருக்கும் அச்சம். இந்தியர்களைப் பொருத்தவரை கருப்பு, பிளாக் மேஜிக்கின் அடையாளம். அத்துடன் பறவைக் காய்ச்சல் வேறு அப்போது தீவிரமாகப் பரவிக் கொண்டிருந்த காரணத்தால் இந்தப் பறவைக்கான வரவேற்பு இந்தியாவில் சுத்தமாக இல்லை. ஆனால், ஐரோப்பிய நாடுகளில் சில தமது வாடிக்கையாளர்களுக்காக இந்தப் பறவைகளை இறக்குமதி செய்கின்றன. இவற்றின் அதீத கருப்பு நிறத்திற்குக் காரணம் ஹைப்பர் பிக்மண்டேஷன் எனும் நிறமிக் குறைபாடே. அந்தக் குறைபாட்டினால் ஃபைப்ரோமெலனோசிஸ் எனும் மரபியல் குறைபாட்டால் கோழியின் திசுக்களில் மெலனின் அதிகரிக்க அதிகரிக்க அவற்றில் தோலின் நிறம் மாறும். அதனால் தான் இவ்வகைக் கோழிகள் அடர் கருப்பாகத் தோற்றமளிக்கின்றன.

அயாம் செமனி என்றால் என்ன?

இந்தோனேசிய மொழியில் ‘அயாம்’ என்றால் சிக்கன் என்று பொருள். ‘செமனி’ என்பது ஜாவாவில் குறிப்பாக அந்த வகைக் கோழிகள் மட்டுமே அதிகம் உற்பத்தியாகும் கிராமத்தின் பெயர். எனவே உற்பத்தியாகும் இடத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கோழியினங்களுக்கு ‘அயாம் செமனி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஜாவா தீவில் இந்த வகைக்கோழிகள் கடந்த நூற்றாண்டின் ஆரம்பம் முதலே மதம் மற்றும் ஆன்மீக நோக்கங்களுக்காக வளர்த்தெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனவாம். ஆனால், இப்படி ஒரு கோழி வகை இருப்பதை உலகத்தார் அறிய நேர்ந்தது இந்தோனேசியாவில் டச்சு காலனி ஆதிக்கத்தின் பின்னரே. டச்சுக்காரரான ஜான் ஸ்டீவன்ரிக் தான் முதன்முதலாக அயாம் செமனி வகை கோழிகளை 1998 ஆம் ஆண்டு வாக்கில் ஐரோப்பாவுக்கு இறக்குமதி செய்தார். தற்போது இந்த வகை ஸ்பெஷல் கோழிகள் நெதர்லாந்து, ஜெர்மனி, ஸ்லோவோக்கியா, செக் குடியரசு உள்ளிட்ட பல நாடுகளில் வளர்க்கப்படுகின்றன.

ஏன் அரிதானதாகக் கருதப்படுகிறது?

இவற்றில் பொதுவாக சேவல் இனங்கள் 2 முதல் 2.5 கிலோ கிராம் வரை எடை கொண்டிருக்கும். கோழிகள் 1.5 முதல் 2 கிலோ கிராம் வரை எடைகொண்டிருக்கும். இவற்றின் முட்டைகள் வெண்மையாக இருப்பதில்லை. மாறாக க்ரீம் அல்லது அரை வெள்ளை நிறத்தில் இருக்கும். அத்துடன் இவ்வகைக் கோழிகள் குயில்களைப் போல அரிதாகவே அடைகாத்து குஞ்சு பொரிக்கக் கூடியவை என்பதால் இந்த இனமும் அரிதானதாகக் கருதப்படுகிறது. இவற்றின் முட்டைகள் 45 கிராம் எடை கொண்டவை.

சந்தை மதிப்பு...

இந்த வகைக் கோழிகள் இந்தோனேசிய பறவைச் சந்தைகளில் மட்டுமே தற்போது கிடைத்து வருகின்றன. இவற்றின் சந்தை மதிப்பை தீர்மானிக்கக் கூடிய காரணிகளாக இருப்பவை இவற்றின் எடை மற்றும் நிறமே! பறவை எத்தனைக்கெத்தனை அடர் கருப்பாக இருக்கிறதோ, கறி எத்தனை கருப்பாக இருக்கிறதோ அதைப் பொருத்து அதன் விலை அதிகரிக்கும். அதன் அடிப்படையில் கோழிகளின் தரத்தைப் பொருத்து கிலோவுக்கு $50 முதல் $2500 வரை விலை வித்யாசப்படுகிறது. இவற்றில் இந்தோனேசியன் கிங் வகை அயாம் செமனி கோழிகள் $2500 வரை விற்பனையாகின்றனவாம்.

அடேயப்பா... நம்மூர் மதிப்புக்கு 1,73,435.00 ரூபாய் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

தந்தூரி என்ற பெயரில் நம்மூரில் சிக்கனைக் கருக விட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம், இந்தச் சிக்கனை அப்படிச் சமைக்க நினைத்தால் கருகியிருக்கிறதா? வெந்திருக்கிறதா? என்பதை எப்படிக் கண்டுகொள்வதாம்?! இத்தனை விலை கொடுத்து வாங்கி நம்மவர்கள் எங்கே இதெல்லாம் சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கப் போகிறார்கள் என்று நினைத்தால் நம் மக்கள் பிளாக் சிக்கனையும் ஒரு கை பார்த்திருக்கிறார்கள் என்று யூ டியூப் சொல்கிறது.

இதோ கிராண்ட்பா கிச்சன் சேனலில் ஒரு வயதானவரும், நவாப்ஸ் கிச்சன் ஃபுட் ஃபார் ஆல் ஆர்பன்ஸ் சேனலில் செஃப் நவாபும் பிளாக் சிக்கன் சமைப்பது எப்படி என்று விலாவரியாக விளக்கிச் சிறப்பித்திருக்கிறார்கள்.

நவாப்ஸ் கிச்சனின் க்வாஜா சொல்கிறார் இந்த வகைக் கோழிகள் மிகை புரதத்துக்கும், குறை கொழுப்புக்கும் பேர் போனவை என்று.

வாய்ப்புக் கிடைத்தால் சமைத்துச் சாப்பிட்டுப் பார்த்து விட்டு எங்களுக்கு எழுதுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com