Enable Javscript for better performance
KARNATAKA 'SINGHAM' SP ANNAMALAI RESIGNS FROM POLICE FORCE!- Dinamani

சுடச்சுட

  

  புகழின் உச்சியில் இருக்கையில் பணியை ராஜினாமா செய்து விட்டு விவசாயத்தில் இறங்கவிருக்கும் ஐபிஎஸ் அதிகாரி!

  By RKV  |   Published on : 29th May 2019 11:36 AM  |   அ+அ அ-   |    |  

  s_p_annamalai_resigned

   

  கர்நாடகா, எஸ் பி அண்ணாமலை ராஜினாமா விவகாரம் தற்போது இரு மாநில மக்களிடையேயும் மிகுந்த ஆர்வத்தைக் கிளறி விட்டுள்ளது. தன் பணியில் சிறந்து விளங்கி சிறந்த காவல்துறை அதிகாரியாகப் போற்றப்படும் இளைஞர் ஒருவர் திடீரென பணியை ராஜினாமா செய்து விட்டு சொந்த ஊருக்குத் திரும்புவதின் பின்னணி என்ன? எதற்காக எஸ் பி அண்ணாமலை தனது பணியை ராஜினாமா செய்கிறார்? பின்னணியில் அரசியல் அச்சுறுத்தலோ அல்லது பழிவாங்கும் நடவடிக்கையோ ஏதேனும் உண்டா? எனும் குழப்பம் அண்ணாமலையைப் பற்றி அறிந்த மக்களிடையே எழுந்தது. அந்தக் குழப்பத்தை அண்ணாமலையே தீர்த்து வைத்திருக்கிறார்.

  கடந்த ஆண்டு கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்று வந்த அனுபவமும், மற்றொரு ஐபிஎஸ் அதிகாரியான மதுகர் ஷெட்டியின் மறைவும் தன்னை மிகவும் யோசிக்க வைத்து விட்டதாகத் தெரிவித்துள்ளார் அண்ணாமலை. பணி அழுத்தத்தின் காரணமாகத் தன்னால் தனக்கு வேண்டிய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் குடும்பங்களில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகள் எதிலும் பங்கேற்க முடியவில்லை என்பதோடு அலுவல் சார்ந்த வாழ்க்கை குறித்த மனநெருடலும் அதிகரித்து விட்டதால் பணியை ராஜினாமா செய்து விட்டு விவசாயத்தில் ஈடுபடும் எண்ணம் வந்தது. அந்த எண்ணத்தை உறுதி செய்ய மேற்கண்ட இரு சம்பவங்கள் போதுமானதாக இருந்தன. எனவே இப்போது எவ்வித தயக்கமும் இன்றி நான் எனது பணியை ராஜினாமா செய்திருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் எஸ் பின் அண்ணாமலை.

  தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான எஸ்பி அண்ணாமலையின் பிறந்த ஊர் கரூர். கடந்த 2011 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாகப் பணி நியமனம் பெற்றார். கர்நாடகம், உடுப்பி மாவட்டத்தில் உள்ள கர்கலாவில் ஏ எஸ் பியாகப் பதவி வகித்தார். 2015 ஆம் ஆண்டு எஸ் பி யாகப் பதவி உயர்வு கிடைத்தது. கர்நாடகாவின் அயோத்தி என்றழைக்கப்படும் பாபா புதன்கிரியை மையமாக வைத்து நடந்த கலவரத்தில் அண்ணாமலையின் அடக்குமுறை பலரைக் கவர்ந்தது. கடந்த ஆண்டு கர்நாடகாவில் பாஜகவிடம் விலை போகாமல் பாதுகாத்துக் கொள்ள காங்கிரஸ் எம் எல் ஏக்கள் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இந்த எம் எல் ஏக்களை வெளியில் கொண்டுவர எடியூரப்பாவால் ராம்நகர எஸ் பியாக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இப்படியெல்லாம் தான் பணியில் இணைந்த குறுகிய காலத்திலேயே திறமை சார்ந்து புகழின் உச்சியில் ஏறத்துவங்கிய அண்ணாமலை திடீரெனப் பணியை ராஜினாமா செய்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் தமது வாழ்க்கையை இரு சம்பவங்கள் பாதித்ததால், தாம் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக அறிவித்திருக்கிறார்.

  முதலாவதாக கடந்த ஆண்டு மேற்கொண்ட கைலாஷ் மானசரோவர் யாத்திரையானது, மனிதர்கள் தம் வாழ்க்கையில் எதற்கு முதலில் முன்னுரிமையும், முக்கியத்துவமும் அளிக்க வேண்டும் எனும் தெளிவை தமக்கு அளித்ததாகவும். 

  இரண்டாவதாக கர்நாடக மாநிலம் பெல்லாரியில் தலைவிரித்தாடிய சுரங்க  ஊழலைக் கண்டுபிடித்தவரான திறமை வாய்ந்த ஐபிஎஸ் அதிகாரியான மதுக்கர் ஷெட்டியின் மரணம் தன்னை மிகவும் பாதித்து பணியை ராஜினாமா செய்வது பற்றிய தனது எண்ணத்தை ஓங்கச் செய்தது என்று தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை.
  மக்களவைத் தேர்தலுக்கு முன்பே தாம் ராஜினாமா செய்ய நினைத்ததாகவும், ஆனால், தனது முடிவுகள் அரசுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதால் தேர்வு முடிவுகள் வெளிவந்தபிறகு தனதுமுடிவை அறிவித்திருப்பதாகவும் கூறும் அண்ணாமலை இதுவரை தனது பணியில் தனக்கு கிடைத்த அனுபவங்களைத் தன்னால் மறக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

  அத்துடன், பணியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் இணையும் எண்ணமிருக்கிறதா? என்று சிலர் கேட்பதாகவும், இதுவரை அப்படியொரு எண்ணம் எதுவும் தனக்கு இல்லை எனவும், வருங்காலத்தைப் பற்றி உடனே எந்த முடிவுகளையும் எடுப்பதைக் காட்டிலும் முன்னதாக ஓய்வெடுத்து விட்டு குடும்ப அளவில் தாம் ஆற்ற வேண்டிய பணிகளைப் பூர்த்தி செய்து விட்டு சொந்த ஊரில் விவசாயம் செய்யும் எண்ணம் மட்டுமே தற்போது தனக்கு இருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

  தமிழக அரசியல் தலைவர்கள் யாருடனும் தனக்கு எவ்விதமான பழக்கமும் இல்லை என்பதால் இதுவரை தான் யாருடனும் பேசக்கூடிய வாய்ப்பும் இல்லை என்றதோடு,  மக்கள் சேவைப்பணியில் ஈடுபடவும் தனக்கு விருப்பமிருக்கிறது. அதைப்பற்றிய முடிவுகளைத் தீர ஆலோசித்து விட்டே எடுக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai