Enable Javscript for better performance
100 more dead in Bihar due to AES... litchi to bLame?!- Dinamani

சுடச்சுட

  

  பிகாரில் 100 க்கும் மேலான குழந்தைகளைக் காவு வாங்கிய லிச்சிப்பழம்! அதிர்ச்சி ரிப்போர்ட்!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 17th June 2019 12:30 PM  |   அ+அ அ-   |  

  litchi_fruits

   

  ஏழைக் குழந்தைகளுக்கு எமனான லிச்சிப் பழங்கள்!

  மிக இனிப்பான லிச்சிப் பழங்களைச் சாப்பிட்டதால் பிகார் மாநிலம் முஸாஃபர்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் மொத்தமாக ஒரே நாளில் சுமார் 48 குழந்தைகள் இறந்திருக்கிறார்கள் என்றொரு செய்தியை இரண்டு நாட்களுக்கும் முன்பு காலை நாளிதழ்களில் காண நேர்ந்தது. இப்போது கூடுதலாக 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அதே லிச்சியால் உயிரிழந்ததாக இன்று இணையச் செய்திகளில் காண நேர்ந்ததும் பகீரென்று இருந்தது.

  லிச்சிப் பழங்கள் உண்ணத்தகுந்தவை தானே? அவையொன்றும் விஷமென்று ஒதுக்கப்பட்டவை அல்லவே! பிறகெப்படி என்று குழப்பமாக இருக்கிறதா உங்களுக்கும்?! காரணம் இருக்கிறது. அந்தக் குழந்தைகள் அத்தனை பேருமே வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். காலை முதலே எதையும் உண்ணாமல் லிச்சிப் புதர்களுக்குள் சுற்றித் திரிந்து பசிக்கும் போதெல்லாம் அந்த லிச்சிப் பழங்களை அதிகமாகப் பறித்து உண்டதால் அவர்களுக்கு இப்படியொரு விபரீத மரணம் நேர்ந்திருக்கிறது என்கிறார்கள் இறந்தவர்களின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள். பிகாரின் முஸாஃபர்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இது லிச்சி சீசன். பெருமளவில் காய்க்கும் லிச்சிப் பழங்கள் தான் அங்கு வாழும் ஏழைக்குழந்தைகளின் காலை உணவாக மாறி வருகிறது.

  இறந்த குழந்தைகள் அனைவருமே 10 வயதுக்குக் கீழானவர்கள். இவர்களது இறப்புக்கு காரணம் லிச்சிப் பழம் தான் என்று கண்டறியப்பட்ட பின்பு மாநில அரசின் சுகாதாரத் துறை மூலம் அப்பகுதி மக்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை!

  முஸாபர்பூர் மற்றும் பாட்னாவைச் சார்ந்த ஏழைப் பெற்றோர், தங்களது  குழந்தைகள் பசிக்கும் போது தங்களையும் அறியாது காலை வேலையில் வெறும் வயிற்றில் லிச்சிப் பழங்களை அதிக அளவில் உண்பதைத் தடுக்க வேண்டும். அது மட்டுமல்ல அரைகுறையாய் பழுத்த பழங்கள், அல்லது காயாகவே உள்ள லிச்சிகளை உண்பதையும் தடுக்க வேண்டும். அத்துடன் லிச்சிப் பழங்களை அதிகம் உண்ட குழந்தைகளை வெறும் வயிற்றுடன் இரவில் படுக்கைக்கு அனுப்பக்கூடாது. ஒருவேளை தங்களது குழந்தைகள் பசி தாங்கமுடியாமல் லிச்சிப் பழங்களை அதிகமாக உண்டு விட்டார்கள் என்று தெரிந்தால், இரவில் வேறு சத்தான உணவுகளை எதையேனும் அளித்து அவர்களது வயிற்றை நிரப்பி பின்னரே அவர்களைத் தூங்க அனுமதிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் முஸாஃபர்பூர் அரசு மருத்துவமனையின் சிவில் சர்ஜன் மருத்துவரான எஸ்.பி சிங்.

  லிச்சியில் ஏது நஞ்சு?!

  லிச்சிப் பழம் சாப்பிட்டால் உயிர் போகுமா? பழங்கள் ஆரோக்யமானவை தானே என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் இங்கு விஷயம் அப்படி இல்லை. Acute Encephalitis Syndrome (AES) என்று சொல்லப்படக்கூடிய கொடிய மூளைச் செயலிழப்பு நோய் வரக் காரணமான நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள் ஒன்று லிச்சிப்பழங்களில் இருப்பதால் அதை வெறும் வயிற்றில் உண்ணும் குழந்தைகளிடத்தில் கொடிய விளைவுகளை அப்பழங்கள் ஏற்படுத்துகின்றன என்கிறார்கள் மருத்துவர்கள். லிச்சியில் இருக்கும் மெத்திலீன் சைக்ளோ ப்ரொபைல் கிளைசீன் (MCPG) எனும் வேதிப்பொருள் உடலில் சர்க்கரை அளவு குறையும் போது அதாவது பசியின் காரணமாக ஏற்படக்கூடிய வளர்ச்சிக் குறைபாடு கொண்ட குழந்தைகளிடையே சர்க்கரை அளவு குறையும் போது அவர்களது மூளைச்செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க அளவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி மரணம் வரை இட்டுச் செல்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதை ஹைப்போகிளைசீமியா என்பார்கள். 

  தொடர் மரணங்களுக்குக் காரணம் லிச்சியாக இருக்க வாய்ப்பில்லை என மறுக்கும் மருத்துவர்!

  இப்பகுதி குழந்தைகளின் இறப்பிற்கு லிச்சிப் பழங்களை உண்டது தான் காரணம் என அரசு பொது மருத்துவரும் வேலூரைச் சேர்ந்த டாக்டர் ஜான் மற்றும் டாக்டர் அருண் ஷா இணைந்து சமர்பித்த ஆய்வுக் கட்டுரையும் உறுதியாகக் கூறிய பின்னரும். குழந்தைகளின் தொடர் இறப்புக்குக் காரணம் லிச்சிப் பழங்கள் அல்ல என்று மறுத்திருக்கிறார் முஸாஃபர்பூர், ஸ்ரீ கிருஷ்ணா மெடிக்கல் காலேஜ் மூத்த மருத்துவரும், குழந்தைகள் நலத்துறை தலைமை மருத்துவரும், உள்ளூர் மருத்துவ ஆய்வாளருமான டாக்டர் கோபால் ஷங்கர் சாஹ்னி. ஏனெனில், அக்யூட் என்செபாலிட்டீஸ் காரணமாக நிகழும் குழந்தைகளின் தொடர் மரணம் குறித்து 1995 ஆம் ஆண்டு முதலே ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருபவர் அவர். லிச்சிப் பழங்களினால் தான் மரணம் ஏற்படுகிறது என்றால், அந்தப்பகுதியில் இன்னும் லிச்சி விளையும் கிராமப்பகுதிகள் நிறைய இருக்கின்றன. அங்கிருக்கும் குழந்தைகளுக்கும் இந்தப்பாதிப்பு இருக்க வேண்டுமில்லையா? அங்கெல்லாம் இப்படிப் பட்ட மரணங்கள் இல்லையே! அப்படியானால், குழந்தைகளின் தொடர் இறப்பிற்கு லிச்சிப் பழங்கள் மட்டுமே காரணம் இல்லை என்பது தெளிவாகிறது. லிச்சி சீஸனில் குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் குழந்தைகள் மட்டும் கொத்துக் கொத்தாக் அக்யூர் என்செபாலிட்டீஸ் பாதிப்புக்கு உள்ளாகி உடனடியாக மரணிக்க காரணம் என்னவாக இருக்கும் என்பதை நாம் தொடர் ஆராய்ச்சிகளின் விளைவாகத்தான் கண்டறிய வேண்டுமே தவிர அவசரப்பட்டு லிச்சிப் பழங்களின் மீது பழியைப் போட்டு விஷயத்தை முடித்து விடக்கூடாது என்கிறார் இவர்.

  அதிகரிக்கும் வெப்பநிலை மற்றும் ஈரப்பத குழறுபடிகளே மரணத்திற்கு காரணம்!

  அதுமட்டுமல்ல, இந்த நோய் பரவும் போது இங்கு நீடிக்கும் அதிக வெப்பமும் அதிக ஈரப்பதமும் கூட நோய் பரவுவதற்கான முக்கியமான காரணிகளில் ஒன்றாகி விடுகிறது. இதை என்னால் கடந்த ஐந்தாண்டுகளாகச் சேகரித்து வைத்திருக்கும் பதிவுகள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகளின் ஆதாரத்துடன் எளிதில் மெய்பிக்க முடியும். வெப்பநிலை 35 டிகிரிக்கும் அதிகமாகி ஈரப்பதம் 65% முதல் 80% க்குள் வரும்போது நோய் அதி தீவிரமாகப் பரவத் தொடங்கி விடுகிறது.

  ஐந்தாண்டு புள்ளி விவர ஆதாரம்!

  2015 ஆம் ஆண்டில் AES (Acute Enchepalitis Syndrome) பாதிப்புக்கு உள்ளானவர்கள் 390 பேர். 2014 ஆம் ஆண்டில் 1,028 பேர், 2016 ஆம் ஆண்டில் 9 பேர், இந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் 2014 ஆம் ஆண்டில் அப்பகுதியில் காற்றின் ஈரப்பதம் மிக அதிகமாக இருந்திருப்பது தெரிகிறது. அதனால் நோய் பரவும் வேகமும் அதன் தாக்கமும் கூட அதிகமாகவே இருந்திருக்கிறது. இடைப்பட்ட ஒரு சில வருடங்களில் 10 முதல் 25% நோய் பரவும் வேகம் கட்டுக்குள் இருந்திருக்கிறது. இந்த ஆண்டு வெப்பநிலை 42 டிகிரியைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. ஈரப்பதமும் 65% முதல் 70% க்குள் இருக்கிறது. அதனால் தான் AES பாதிப்பு என்றுமில்லாத அளவில் தன் கொடூர முகத்தைக் காட்டத் தொடங்கி இருக்கிறது.

  டாக்டர் கோபால் ஷங்கர் இவ்விதமாக வாதிட்டாலும், பிகாரைச் சேர்ந்தவரும் கிஷான் பூஷன் விருது பெற்றவருமான SK துபே, குழந்தைகள் மரணத்திற்கு லிச்சிப் பழங்களே அடிப்படைக் காரணம் எனத் தான் நம்புவதாகக் கூறியுள்ளார். இருப்பினும் மருத்துவர்களின் மாறுபட்ட கருத்திலும் தனக்கு உடன்பாடு இருப்பதாகவும் இந்த மருத்துவர்கள் இந்த மரணங்களில் தங்களது ஆய்வுகளை மேலும் முன்னோக்கி எடுத்துச் சென்று ஆராய்ந்து தொடர் மரணங்களுக்கு காரணமான வைரஸை கண்டறிந்து மேலும் பல விலைமதிப்பற்ற குழந்தைகள் மரணமடையாமல் தடுக்குமாறு கோரியுள்ளார். 

  லிச்சிப் பழங்களுக்கான வரவேற்பு அதலபாதாளத்தில் விழும்!

  ஒருவேளை இவர்களில் பலரது கூற்றுப்படி இந்த அக்யூட் என்செபாலிட்டீஸ் சிண்ட்ரோம் மரணங்களுக்கு லிச்சிப்பழங்கள் தான் அடிப்படைக் காரணம் எனத் தெரியவந்தால் முதலாவதாக இப்பழங்களுக்கான விலை, பழச்சந்தையில் அதல பாதாளத்தில் விழக்கூடும். எனவே இப்பகுதியில் வாழும் லிச்சி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே மருத்துவர்கள் தொடர் மரணங்களுக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்து சொல்லும் வரை குழப்பமான பீதிநிலையே இங்கு நீடிக்கக் கூடும் என்று தெரிகிறது.

  இப்படி பிகாரில், தொடரும் குழந்தைகள் மரணத்திற்கு ஒரு புறம் லிச்சிப்பழம் தான் காரணம் எனச் சிலரும், மறுபுறம் அந்தப் பகுதியில் நிலவும் வெப்பநிலையும், ஈரப்பதமும் தான் காரணம் எனச் சிலரும் அவரவர் வாதத்தில் உறுதியாக நிற்கும் போது , தள்ளியிருந்து இந்த விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் மக்களுக்கோ உண்மையான காரணம் அறிந்து கொள்ளும் ஆர்வமும் குழந்தைகள் மரணங்களுக்கெதிரான கண்டனமும் அதிகரித்து வருகிறது. 

  அமைச்சர் பார்வையிடும் 1 மணி நேர இடைவெளியில் சடுதியில் 4 குழந்தைகள் மரணம்!

  தற்போது ஸ்ரீ கிருஷ்ணா மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குள்ளாகி வரும் குழந்தைகளை நேரில் கண்டு ஆறுதல் கூற சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ச்வர்த்தன் இன்று முஸாஃபர்பூர் SKMC சென்றார். அங்கு அமைச்சர் ஆய்வில் ஈடுபட்டிருக்கும் அந்த 1 மணி நேர இடைவெளியில் மேலும் 4 குழந்தைகள் மரணமடைந்தது அமைச்சரை திகைக்கச் செய்வதாக இருந்தது. மேலும் மரணங்கள் நிகழாமல் இருக்க தடுப்பு மருத்துவ முறைகளை மேம்படுத்தச் சொல்லி மருத்துவர்களிடம் உத்தரவிட்ட அமைச்சர், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai