இரண்டுமே இளம்பெண்களின் ஆடை பற்றிய விமர்சனம் தான், ஆனால், இறுதியில் யாருடைய அணுகுமுறைக்கு வெற்றி?

கவர்ச்சியாக உடையணிந்து வந்திருந்த பெண், தனது வருங்கால அண்ணி என்ற போதும், அவரிடம் உடையைப் பற்றி பக்குவமாக விமர்சித்து, தான் சொல்ல வந்த விஷயத்தைப் புரிய வைத்து விட்டார். ஆனால், குருகிராம் முரட்டுப் பெண்
இரண்டுமே இளம்பெண்களின் ஆடை பற்றிய விமர்சனம் தான், ஆனால், இறுதியில் யாருடைய அணுகுமுறைக்கு வெற்றி?


ஓரிரு நாட்களுக்கு முன் சமூக ஊடகங்களில் ஒரு விடியோ ட்ரெண்டிங்கில் இருந்தது. அது இரு இளம்பெண்களுக்கு இடையிலான மிகச்சிறிய அந்நியோன்யமான உரையாடல். அதில் என்ன ஸ்பெஷல் என்று தோன்றுமே? இரண்டு பெண்களில் ஒருவர் பாலிவுட் டாப் ஸ்டார் சல்மான் கானின் தத்துச் சகோதரி அர்பிதா கான் சர்மா. மற்றொருவர், சல்மானின் சகோதரரான அர்பாஸ் கானை மணந்து கொள்ளவிருக்கும் ஜார்ஜியா. இருவரும் நேற்று மும்பையில் மாஜி எம் பியும், பாலிவுட் பிரபலங்களிடையே வெகு பிரபலமானவருமான பாபா சித்திக் அளித்த இஃப்தார் விருந்தில் கலந்து கொள்ளச் சென்றனர்.

அர்பிதா கான் முன்னரே சென்று விருந்தில் அமர்ந்திருந்தார். அர்பாஸ் கானுடன் வந்த ஜார்ஜியா, மரியாதை நிமித்தம் அர்பிதாவைப் பார்த்து ஏதோ பேசி விட்டு நகர, அவரை இடைமறித்த அர்பிதா, ஜார்ஜியாவிடம் தனிப்பட்ட முறையில் ஏதோ சொன்னார். வருங்கால நாத்தனார் சொன்னதைக் கேட்டு ஆமோதிப்பாகத் தலையசைத்த ஜார்ஜியா பிறகு தனது துப்பட்டாவை சரி செய்ய முயற்சித்தார். பின்னர் அடுத்தொரு விடியோ க்ளிப்பிங்கில் ஜார்ஜியா, தனது துப்பட்டாவை, கழுத்தைச் சுற்றி மூடி மிகச்சரியாக அணிந்து கொண்டு காட்சியளித்தார்.

விஷயம் இது தான். முதல் விடியோ கிளிப்பிங்கில் ஜார்ஜியா அணிந்திருந்த சல்வாரின் கழுத்துப் பகுதி அபாயகரமான அளவில் கீழிறங்கி, ட்ரெஸ்ஸிங் ஸ்டைல் பார்ப்பவர்களின் முகத்தில் அறைவது போன்று இருந்தது. இஃப்தார் விருந்துக்கு இத்தனை கவர்ச்சி எதற்கு? அதுவும் புனிதமான மதச் சடங்குக்காக கடைபிடிக்கப்படும் நோன்பு நேரத்தில் இந்த கவனச் சிதறலை ஏற்படுத்தும் ட்ரெஸ்ஸிங் ஸ்டைல் தேவையில்லை என அர்பிதா கூறியிருக்கலாம். அதை ஆமோதிக்கும் விதத்தில் ஜார்ஜியா அடுத்த விடியோ கிளிப்பிங்கில் மிகச் சரியாக துப்பட்டாவால் கழுத்தை மூடிக் கொண்டு வளைய வந்திருக்கலாம் என்று நெட்டிஸன்கள் கிளப்பி விடுகின்றனர். அதை இந்த விடியோவும் நிஜம் என்கிறது.

சரி இது அவர்களது பெர்சனல் விவகாரம் அதை விட்டு விடலாம். 

கடந்த ஏப்ரலில் டெல்லி, குருகிராம் ஷாப்பிங் மால் ஒன்றில் நடந்த விவகாரம் ஒன்று இணையத்தில் இதை விட அதிகமாக ட்ரெண்ட் ஆனது.

நடுத்தர வயது முரட்டுத்தனமான பெண் ஒருவர், ஷாப்பிங் மால் ஒன்றில் இருந்த இளம்பெண் முழங்காலுக்கு மேலே தோல் தெரியும் வண்ணம் உடை அணிந்திருந்ததைக் கண்டு, அவர்களை அதட்டலாக அழைத்து, இப்படியெல்லாம் குட்டை, குட்டையாக உடையணிந்து கொண்டு பொது இடங்களில் கவர்ச்சியாக வளைய வந்தீர்கள் என்றால் ஆண்கள் உங்களை நிச்சயம் மானபங்கம் செய்வார்கள். அதற்குத் தகுதியானவர்கள் நீங்கள்! என்று மிரட்டலாகச் சொல்ல, இதைக் கேட்ட அந்த இளம்பெண்கள் கொதித்துப் போய் அந்தப் பெண்மணியை, இப்போதே, நீங்கள் சொன்ன வார்த்தைக்காக மன்னிப்புக் கேட்கவில்லை என்றால், அறிவுரை என்ற பெயரில் நீங்கள் சொன்ன அருவருப்பான வார்த்தைகளை எல்லாம் நாங்கள் விடியோவாகப் பதிவு செய்து வைத்திருக்கிறோம். அதை அப்படியே நெட்டில் பதிவேற்றி விட்டு உங்களை உண்டு, இல்லையென்று செய்து விடுவோம் என எதிர்க்குரல் கொடுக்கத் தொடங்கி விட்டனர்.

அந்தப் பெண்மணி இளம்பெண்களைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகளை அப்பட்டமாகச் சொல்வதென்றால்; ‘இப்படியா முட்டிக்கு மேல் கால்கள் வெளியே தெரியும் வண்ணம் உடையணிவீர்கள்? நீங்களெல்லாம் ஆண்களால் எப்போது வேண்டுமானாலும் பாலியல் வன்முறைக்கு உட்படத் தகுதியானவர்கள், என்று சொன்னதோடு, அந்தப் பெண்கள் இவரை எதிர்த்து வாயாடத் தொடங்கிய போதும் தான் கூறிய அபத்தமான வார்த்தைகளில் இருந்து பின்வாங்காமல், ஷாப்பிங் மாலில் இருந்த ஆண்களை நோக்கி, ‘வாங்க, வந்து இந்தப் பெண்களை இப்போதே மானபங்கம் செய்யுங்கள்’ என்று வேறு அசிங்கமாக விமர்சித்திருக்கிறார். அந்தச் சமயத்தில், இளம்பெண்கள் அவரது அசிங்கமான கற்பனைக்காக உடனடியாக மன்னிப்புக் கேட்கச் சொல்லி காட்டமாக அந்தப் பெண்மணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த போது அங்கிருந்த மற்றொரு நடுத்தரவயதுப் பெண் அவர்களது சண்டையில் தலையிட்டு, 

‘பெண்களின் உடை விஷயத்தைப் பற்றி விமர்சிக்க நீங்கள் யார்? இந்தப் பெண்களில் யாராவது உங்களது மகளா? உங்களது மகள்கள் என்றால் நீங்கள் இப்படிப் பேசுவீர்களா? அவர்கள் யாராக இருந்த போதும், பெண்களை விமர்சிக்கையில் அதற்கொரு வரைமுறை இருக்கிறது. இப்படியெல்லாம் பேசுவது தவறு, எனக்கும் மகள்கள் இருக்கிறார்கள். பெண்களைப் பெற்றவள் என்ற முறையில் சொல்கிறேன், எனக்கு இந்தப் பெண்களின் உடையில் ஆபாசம் எதுவும் தெரியவில்லை. உங்களால் நல்லபடியாக சிந்திக்க முடியவில்லை என்றால், நீங்கள் உங்கள் வாயை ஜிப் போட்டு மூடிக் கொண்டிருப்பதே மேல்! என்று நறுக்குத் தெறித்தார் போல அந்தப் பெண்மணியின் முரட்டுத்தனமான அதட்டலை தட்டிக் கேட்டார். இத்தனைக்குப் பிறகும், சண்டைக்குக் காரணமான முரட்டுப் பெண்மணியோ, தன் கடுமையான விமர்சனம் மற்றும் ஆபாசமான வார்த்தைகளை திரும்பப் பெற்றுக் கொள்ளாமல், சண்டையை விடியோ எடுத்துக் கொண்டிருந்த இளம்பெண்ணை நோக்கி, உரத்த குரலில், நீங்கள் என் பேச்சை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டால் அது உங்களது இஷ்டம். எனக்கு அதைப்பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லை. பெண்கள், அதீத கவர்ச்சியாக உடையணிந்தால் ஆண்களால் அவர்களுக்கு ஆபத்து நிச்சயம், இதை நான் எங்கே வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்வேன்’ உங்களால் ஆனதைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று மொபைல் திரையைப் பார்த்து தில்லாகச் சொல்லி விட்டு கூலாக அங்கிருந்து நடையைக் கட்டினார்.

குருகிராம் வாக்குவாதம் காணொலியாகக் கீழே....

மேற்குறிப்பிட்ட இரண்டு நிகழ்வுகளிலுமே விஷயம் ஒன்று தான்.

இருவருமே ஆடையைப் பற்றித்தான் விமர்சித்திருக்கிறார்கள்.

ஒருவர் வயதில் சின்னவராக இருந்த போதும், கவர்ச்சியாக உடையணிந்து வந்திருந்த பெண், தனது வருங்கால அண்ணி என்ற போதும், அவரிடம் உடையைப் பற்றி பக்குவமாக விமர்சித்து, தான் சொல்ல வந்த விஷயத்தைப் புரிய வைத்து விட்டார். ஆனால், குருகிராம் முரட்டுப் பெண்மணியோ, என்னவோ, உலகில் ஒழுங்காக ஆடையணியும் பெண்களுக்கெல்லாம் தான் மட்டுமே ஜவாப்தாரி என்பது போல அதட்டி, ஆபாசமாக விமர்சித்து அந்தப் பெண்களுக்கு தான் சொல்ல வந்த விஷயத்தைப் புரிய வைக்க முயற்சிக்காமல், பூர்ஷ்வா மனப்பான்மையுடன் மேலும் சண்டைக்கு வித்திட்டு விட்டு நடையைக் கட்டினார். ‘நான் அப்படித்தான் சொல்வேன், நீ ஒழுங்காக இரு’ என்றால் இந்தக் காலத்துப் பெண்கள் அதைக் கேட்பார்களா? மாட்டார்களா? என்பதைக் கூட யோசிக்காமல் பேசிய அவரைக் கண்டால் ச்சே... உள்ளதையும் கெடுக்கும் மூர்க்கவாதி போல என்று எரிச்சலாகக்கூட இருந்தது.

அவ்வளவு தான் வித்யாசம்.

எதைச் சொல்வதாக இருந்தாலும். லேசான கண்டிப்பு இருப்பது தவறில்லை. ஆனால், அந்தக் கண்டிப்பின் எல்லை என்பது எதிரில் இருப்பவரது சுயமரியாதையையும், தன்மான உணர்வுகளையும் புன்படுத்தாத வண்ணம் கண்ணியமான வார்த்தைகளில் வெளிப்பட வேண்டும். அப்போது தான் அது பிறரால் மதிக்கப்படும். இல்லாவிட்டால் மீண்டும் ஏவியவரையே தாக்கி அழிக்கவல்ல பூமாராங் ஆகிவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com