நடு வீட்டில் வைத்து நாயைக் குளிப்பாட்டினால்...

ஒவ்வொரு விஷயத்தையும் எப்படிச் செய்ய வேண்டும் என்று ஒரு முறை இருக்கிறது. அதை அப்படித்தான் செய்தாக வேண்டும். இல்லாவிட்டால் விக்கியை குளிப்பாட்டிய கதை தான். ஐ மீன் நடுவீட்டில் நாயைக் குளிப்பாட்டிய கதை 
நடு வீட்டில் வைத்து நாயைக் குளிப்பாட்டினால்...

வார்த்தைகளுக்குள் உள்ளர்த்தம் கற்பித்துக் கொள்வது மனிதர்களின் பொதுவான இயல்பு. நாய் வாலை நிமிர்த்த முடியாது போல, மனிதர்களின் இந்த இயல்பையும் மாற்ற முடியாது. இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், காரணமாகத்தான், கட்டுரையின் இறுதியில் அதற்கான பதில் உண்டு. 

சரி இப்போது இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முயற்சியுங்கள்.

நீங்கள் எப்போதாவது நாயைக் குளிப்பாட்டி இருக்கிறீர்களா? 

வளர்ப்பு நாயைத்தான், தெரு நாய்களைக் குளிப்பாட்டும் அளவுக்கு மிருகங்களின் மீதான பரிவுணர்வு எல்லா மனிதர்களுக்கும் இருப்பதில்லை. 
அதற்கெல்லாம் நம்மூரில் மேனகாகாந்திகளும், அமலாக்களும், திரிஷாக்களும் பிறந்து வர வேண்டும். நான் கேள்விப்பட்ட வரை அவர்கள் தான் மிருகங்களின் மீது சாலப் பரிந்தூட்டும் அன்னைகளாக இதுவரை அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். இவர்களைத் தவிர, என் வீட்டின் அருகிலும் கூட ஒரு மேனகா காந்தி இருக்கிறார் என்பதை நான் சமீபத்தில் தான் அறிந்து கொண்டேன். அவர் வீட்டிலிருந்து தினமும் வேலைக்காரர்கள் உணவு சமைத்து எடுத்து வந்து தெரு முக்கில் அமர்ந்து எங்கள் ஏரியாவில் இருக்கும் அத்தனை நாய்களுக்கும் உணவிடுவார். தங்களிடம் தொடர்ந்து சாப்பிட்டுப் பழகிய தெரு நாய்களுக்கு அவர்கள் கழுத்துப் பட்டி அணிவித்து தடுப்பூசி எல்லாம் போட்டு பராமரித்து வருவதாகக் கேள்வி. இது நிச்சயமாக மிகப்பெரிய சேவையே தான். இதில் அண்டை வீட்டுக்காரர்கள், அக்கம் பக்கத்தார் என எங்களது பங்கு என்னவென்றால், அவர்களை கரித்துக் கொட்டி, எப்போ பார், நாய் வளர்க்கறேன்னு 10, 15 நாயக்கூட்டிட்டு வாக்கிங் போறாங்க. ச்சே, கொஞ்சம் நிம்மதியா தெருவுல நடக்க முடியுதா? என்று எங்களுக்குள் கம்ப்ளெய்ண்ட் செய்து கொண்டு அவர்களை அன்ஃப்ரெண்டு செய்யாமல், நாங்கள் பாட்டுக்கு எங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதே மேல் என்றிருப்பது தான்.

சிலருக்கு அனிமல்ஸ் என்றாலே அலர்ஜி. எனக்கும் தான். ஆனால், அதற்காக யாராவது பெட் அனிமல்ஸ் வளர்த்தால் அதைப் பார்த்து காண்டாகும் அளவுக்கு மனவிலாசம் அற்றுப் போய்விடவில்லை 

சமீபத்தில் வெளிநாட்டில் பெட் அனிமல்ஸ் என்று சொல்லப்படக்கூடிய வளர்ப்பு மிருகங்களை அவர்கள் எப்படியெல்லாம் பராமரிக்கிறார்கள் என்று ஒரு விடியோ பார்த்தேன். கைக்குழந்தையைப் பராமரிப்பது போல அத்தனை பக்குவமாகப் பார்த்துக் கொள்கிறார்கள். யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்பதாக நீங்களும் தான் அந்த விடியோவைப் பாருங்களேன்!

நம் நாட்டிலும், இப்படி பெட் அனிமல்ஸ் மேல் உயிராக இருப்பவர்கள் அனேகம் பேர் இருக்கிறார்கள் என்பதை மேலே சொன்னேனில்லையா அந்த அண்டை வீட்டுக்காரம்மா மூலமாகத் தான் தெரிந்து கொண்டேன். அவர்கள் வீட்டில் மனிதர்களுக்குத் தான் தடுப்பு அரண் உண்டே தவிர நாய்களுக்கு இல்லை. வீட்டுக்குள் நாய்கள் சர்வ சுதந்திரமாக வளைய வருகின்றன. மேலே இரண்டு மாடிகளும், அவற்றில் சில ஆடம்பர அறைகளும் உண்டு. எங்கும் நாய்களுக்குத் தடையே இல்லை. தெரு நாய்கள் தவிர பெர்மனண்ட்டாக வீட்டுக்குள்ளும் நான்கைந்து நாய்களை சொந்தப் பிள்ளைகள் போல வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். நம் வீட்டில் நமது பிள்ளைகளுக்கு நாம் என்னென்ன உரிமைகளை எல்லாம் அளித்திருக்கிறோமே அதெல்லாம் அவர்கள் வீட்டில் அந்த நாய்களுக்கு உண்டு. நாங்கள் வாக்கிங் செல்கையில் பார்த்திருக்கிறோம். அந்த வீட்டில் மிரள வைக்கத் தக்க சைஸில் ஒரு நாய் சோபாவில் அமர்ந்து டி வி பார்த்துக் கொண்டிருப்பதை. இன்னொரு மிடில் சைஸ் அல்சேஷன் உண்டு, அது வீட்டருகில் யார் நெருங்கினாலும் சரி, தன் பாணியில் குரைத்துக் குரைத்தே, வந்திருப்பது யார்? எங்கிருந்து வருகிறார்கள்? என்ன வேண்டும்? என்றெல்லாம் தெரிந்து கொண்டாற் போல மேலே சென்று அந்த வீட்டம்மாவிடம் சொல்லி விட்டு வரும். இன்னொருபக்கம் ஒரு குட்டி பொமரேனியன் எந்நேரம் பார்த்தாலும் கால் துடைக்கும் மேட் போன்ற குட்டி மெத்தையில் சமைந்த பெண்ணைப்போல குத்த வைத்து உட்கார்ந்திருக்கும். யாராவது வாசலைக் கடப்பது தெரிந்தால், வீட்டிலிருக்கும் வயதான பாட்டிகள் முனகுவார்களே, அதைப் போல மென்ஸ்தாயி அதட்டல் வரும் அதனிடமிருந்து. இன்னொரு வெரைட்டி நாய், அதன் பெயர் என்னவென்று தெரியவில்லை, உடல் நீளமாக உருளை போல இருக்கும். வால் நீண்டு வளைந்து அரைவட்டமாக இருக்கும். கண்களில் எப்போதும் கோபம் கொப்பளிக்கும். கொஞ்சம் டேஞ்சரான நாய் தான். இது வரை யாரையும் கடித்து வைத்ததெல்லாம் இல்லை. அவர்கள் தான் கேட்டைப் பூட்டியே தானே வைத்திருக்கிறார்கள். எப்போதாவது நேரம் வாய்த்தால் அந்தம்மா, சூரிய பகவான் எட்டுக் குதிரை பூட்டிய சாரட்டில் வானவீதியில் ஊர்வலம் போவது போல அந்தம்மா தனது பஞ்ச பாண்டவ நாய்ப்பிள்ளைகளை கழுத்துப் பட்டை பூட்டி ஒற்றை ஆளாக வாக்கிங் அழைத்துச் செல்வார். நாய்க்கொரு திசையில் இழுத்தாலும் பொறுமையாக வாண்டுப் பிள்ளைகளை அதட்டுவது போல அதட்டி ஒரு சுற்று அழைத்துப் போய் வருவார். இதெல்லாம் பார்க்க படு வேடிக்கையாக இருக்கும். ஆக மொத்தம், அந்த வீட்டில் நாய்களை, நாய்களாகப் பார்த்தது நாங்கள் மட்டுமாகத்தான் இருக்க வேண்டும். 

அப்போதெல்லாம் யோசித்திருக்கிறேன். எல்லாம் சரி தான். ஆனால், இந்த நாய்களுக்கு சாப்பாடு போட்டு பராமரித்து வளர்ப்பதெல்லாம் சரி தான். ஆனால், குளிப்பாட்டுவது தான் மிகக் கடினமான காரியமாக இருக்குமென்று. ஏனென்றால், எனக்கு வாய்த்த அனுபவம் அப்படி.

நான் என் அத்தை வீட்டில் நாய் வளர்த்தார்கள். அதன் பெயர் விக்கி. சுத்த வெள்ளை நிறம். ஒரு நடுத்தரக்குடும்பத்தில் நாய் வளர்க்க ஆசைப்படுவோர் படக்கூடிய சிரமங்கள் அத்தனையையும் என் அத்தை பட்டார். நாய் வளர்த்துக் கொண்டு அதை மாதம் ஒரு முறையாவது குளிப்பாட்டாமல் விட முடியுமா? அது கிராமம். இன்று நகரத்தில் அபார்மெண்டுகளிலோ அல்லது தனி வீடுகளிலோ நாய் வளர்ப்பது போல இல்லை அந்த நாட்களில் கிராமத்தில் நாய் வளர்ப்பது என்பது. அது, அதன்பாட்டில் எங்கெங்கோ ஊர் சுற்றி விட்டு வரும். வரும் என்பதை சற்று அழுத்து வாசியுங்கள். ஏனென்றால், நாய் எங்கே சுற்றினாலும் கடைசியாக நிச்சயம் வீட்டுக்கு வந்தே தீரும். அப்போது அதன் கோலத்தைப் பார்த்தீர்கள் என்றால் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். சில சமயங்களில், அத்தையின் கண்களில் ரத்தக் கண்ணீர் வராத குறை! 

அத்தையோ, ஒரு குக்கிராமத்து அரசுப்பள்ளியில் தலமை ஆசிரியை வேறு! ஆனாலும், ஏதோ ஒரு ப்ரியத்தின் பேரில் நாய் வளர்த்துக் கொண்டு இருந்தார். நாய் மட்டுமல்ல, அவர்கள் வீட்டில் அப்போது சில காலம் பூனை, முயல் எல்லாம் கூட வளர்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கே தெரியாமல் வீட்டில் வெகுகாலமாக எட்டிப்பார்க்கப் படாமல் இருந்த மரப்பரணில் எலிகளும், எலிக்குஞ்சுகளும் கூட வளர்ந்து கொண்டிருந்தன. எப்போதாவது வெள்ளை வெளேரென்று எலிக்குஞ்சொன்று தரையில் தவ்விச் சென்றால் திடுக்கிட்டு அதிராமல் இருக்க நாங்கள் சில நாட்களில் பழகிக் கொண்டோம். இப்படி சக ஜீவராசிகளுடன் கனிந்துருகி வாழ்ந்து நாட்கள் கழிந்து கொண்டிருக்கையில் அத்தை ஒரு ஞாயிறு விடுமுறையில் விக்கிக்கு வீட்டில் குளிப்பாட்டலாம் என்று முடிவெடுத்தார்.

வழக்கமாக மாமா, கிணற்றுக்கோ  அல்லது கம்மாய்க்கோ அழைத்துச் சென்று குளிப்பாட்டுவது தான் வழக்கம்.

ஆனால், அன்று விதி செய்த சதி... வீட்டில் குளிக்கச் செய்யலாம் என்றெடுத்த முடிவு.

அத்தையின் வீடு... ஒரு நீண்ட தாழ்வாரப் பத்தி. வலது பக்கம் நுழைந்தால் இடது பக்கம் வெளியில் வரலாம். நடுவில் ஒரு கூடம். வீட்டினுள் நுழையும் இரண்டு பாதைகளையும் மூடி விட்டி, கூடத்தை ஒட்டியுள்ள வெளிக்கதவையும் மூடி விட்டு, கூடத்து  சிமெண்ட் தொட்டியில் இருக்கும் நீரை வாரி இறைத்து விக்கியைக் குளிப்பாட்டினால் ஆயிற்று. தீர்ந்தது வேலை. என்று சிம்ப்பிளாக நினைத்து விட்டார் அத்தை.

வலது, இடது பக்க கதவுகளை மூடத் தாழ்ப்பாள் எல்லாம் கிடையாது. வெறும் கொக்கிகள் தான். நாங்கள் அதை இழுத்து தாங்கியில் பொருத்தி  கதவுகளை மூடி விட்டு விக்கியை குளிப்பாட்டத் தொடங்கினோம். அது அப்படியொன்றும் முரடு அல்ல. ஆனால், அன்று படுத்திய பாடு இருக்கிறதே. இன்றும் கூட நினைத்ததுமே மூச்சடைத்து மிரளச் செய்வதாக இருக்கிறது.

அத்தை தண்ணீர் சொம்பைக் கையில் எடுத்ததுமே, விக்கி என்ன நினைத்ததோ தெரியவில்லை. எங்களிடம் இருந்து திமிரத் தொடங்கியது. நாங்கள் இரண்டு பேர் இருந்தும் அதை சமாளிக்க முடியவில்லை. கையில் வழுக்கிக் கொண்டு நழுவியது. விக்கி நல்ல உயரம். நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த என்னைக் காட்டிலும் 4 வயது விக்கி சற்று உயரமாகவே இருந்த நினைவு. என்னையெல்லாம் சர்வ சாதாரணமாக ஏமாற்றி வலது பக்க கதவுக் கொக்கியை இடித்துத் தள்ளித் திறந்து ஓடத் தொடங்கியது. ஒரு பக்கம் அத்தை கையில் பிளாஸ்டிக் மக்கில் தண்ணீருடன் அதைத் துரத்த, மறுபக்கம் நானும் கையில் சோப்புடன் அதை இடது பக்க கதவு வழியாகத் துரத்தத் தொடங்கினேன். நான் சோப்புடன் ஓட, அத்தை, மக்கில் தண்ணீரை வாரி, வாரி விக்கி மீது வீச அது எங்களிடமிருந்து தப்பிவதிலேயே குறியாக முழு வீட்டையும் இடஞ்சுழியாகவும், வலஞ்சுழியாகவும் சுற்றிச் சுற்றி ஓட. கடைசியில் தொட்டித் தண்ணீர் தீர்ந்தது தான் மிச்சம். வீடெல்லாம் ஒரே வெள்ளக்காடு. விக்கி மழையில் நனைந்த வெற்றி வீரனாக இன்னும் வீட்டைச் சுற்றுவதை விட்டபாடில்லை. ஒரு கட்டத்தில் ஓய்ந்து போன அத்தை. ச்சீ போ நாயே என்று சலித்து போய் மெயின் கதவைத் திறந்து விட்டு விட விட்டான் பாரு ஜூட் என்பதாக பாய்ந்தோடித் தப்பியது விக்கி.

அத்தை தான் மாட்டிக் கொண்டார், மாமாவிடம்.

இதெல்லாம் உனக்குத் தேவையா? இப்போ அதைக் குளிப்பாட்டச் சொல்லி யார் அழுதாங்க, மொத்த வீட்டையும் இப்படி ரணகளப்படுத்தி இருக்கீங்க, என்று ஒரே காட்டுக் கத்தல்.

அப்புறமென்ன, முக்கால் குளியல் நடந்த வீட்டுக்கு முழுக்குளியல் நடத்தி வீட்டைக் கழுவித் துடைத்து, நனைந்த பொருட்களையும், ஆடைகளையும், பெட்டிகளையும் ஆற வைத்து எடுத்து என்று அடுத்த இரண்டு நாட்களுக்கு வேலை பின்னி எடுத்தது. அத்தை பள்ளிக்கு லீவு போட்டு விட்டு இதைச் செய்தார். அவ்வளவு தான், பிறகு எப்போதும் நாயைக் குளிப்பாட்டுகிறேன் பேர்வழியென்று எந்த ரிஸ்க்கையும் அவர் எடுத்ததே இல்லை.

ஆனால், அந்த விடியோவைப் பாருங்கள். வெளிநாட்டில் வளர்ப்பு மிருகங்களை எத்தனை அழகாக, எத்தனை நறுவிசாகப் பதமாக குளிப்பாட்டுகிறார்கள் என்று.

இதெல்லாம் நிச்சயம் நாம் அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள்.

ஒவ்வொரு விஷயத்தையும் எப்படிச் செய்ய வேண்டும் என்று ஒரு முறை இருக்கிறது. அதை அப்படித்தான் செய்தாக வேண்டும். இல்லாவிட்டால் விக்கியை குளிப்பாட்டிய கதை தான். ஐ மீன் நடுவீட்டில் நாயைக் குளிப்பாட்டிய கதை தான்.

இப்போது கட்டுரையின் முதல் வரிக்கு வாருங்கள்...

தலைப்பைக் கண்டு இது ஏதோ அரசியல் கட்டுரை என்று ஆர்வமாய் நுழைந்தவர்களின் ஏமாற்றத்துக்கு நான் பொறுப்பல்ல. இது வளர்ப்பு மிருகங்களை குளிக்க வைப்பதைப் பற்றியதான ஒரு நேரடியான கட்டுரை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com