‘அந்தக் காய்கறி இங்க வளர மாட்டான், தூரம்ல இருந்து வரான்’ - தமிழ் பேசி அசத்தும் வெள்ளைக்கார இயற்கை விவசாயி!

இப்ப உனக்கு கேரட் வேணும்னா ஊட்டில இருந்து வரணும். அங்க இருந்து லாரியில கொண்டு வரனும். அப்போ அந்த லாரியை மெயிண்டெயின் பண்ண அதுக்கான ஒரு ஃபேக்டரி இங்க வரனும். லாரி இயங்கனும்னா பெட்ரோல் வேணும். லாரியை 
‘அந்தக் காய்கறி இங்க வளர மாட்டான், தூரம்ல இருந்து வரான்’ - தமிழ் பேசி அசத்தும் வெள்ளைக்கார இயற்கை விவசாயி!

கிருஷ்ணா மெக்கன்ஸி... 

யூ டியூபர்களுக்கு இவரை முன்பே தெரிந்திருக்கலாம். இதுவரை தெரியாது என்றால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால், தமிழர்களான நம்மால் தெரிந்து கொள்ளப்பட வேண்டிய நபர் இவர். இவர் பேசும் தமிழ் கொள்ளை அழகாக இருக்கிறது. நம்மூர் ராஜாஸ்தான் பட்டாணிக்காரர்கள் பேசுவதைக் காட்டிலும் அழகான தமிழில் அடித்து விளாசுகிறார். சமீபத்தில் உலகத் தமிழர்களுக்கான விழாவொன்றில்... தமிழ் மண்ணின் உணவுக்கலாச்சாரம் குறித்து இவர் பேசிய விடியோ ஒன்று காணக்கிடைத்தது. நிலம் குறித்த, அந்நிலத்து மக்களின் உணவுப் பழக்கக்கங்கள் குறித்த, மனிதர்கள் எதைத் தேடிக் கண்டடைய வேண்டும் எனும் மானுட தரிசனம் குறித்த புரிதலுடன் கூடிய மிக அருமையான பேச்சாக அமைந்திருந்தது அது.

பாண்டிச்சேரி ஆரோவில் கிராமத்தில் Solitude Farms அதாவது நாட்டுக் காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களுக்கென தனிப்பண்ணை அமைத்து தற்போது இயற்கை விவசாயம் செய்து வரும் கிருஷ்ணா மெக்கன்ஸியின் மனைவி தீபா திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். ஆம், தமிழ்ப்பெண்ணைத் தான் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் அவர். இரண்டு குழந்தைகள் உண்டு. தமிழகத்துக்கு வந்தது தனது குருவான ஜப்பானிய இயற்கை விஞ்ஞானி மசினோவின் இன்ஸ்பிரேஷனால் என்று சொல்லும் கிருஷ்ணா பாண்டிச்சேரியில் செட்டிலாக 26 வருடங்கள் ஆகின்றனவாம்.

இயற்கை ஹோட்டல்...

வெள்ளைக்காரராக இருந்து கொண்டு தமிழர் பாரம்பர்ய விவசாய முறைகளில் ஈடுபாடு வந்தது எப்படி என்ற கேள்விக்கு, நான் தமிழ்நாட்டுக்கு வந்து சிதம்பரம் பார்த்தேன், பரத நாட்டியம் பார்த்தேன், இங்க இருக்கற நாட்டுக்காய்கறிகள், பழங்கள் மற்றும் கிழங்குகளைப் பார்த்தேன். என்னால் இந்த மண்ணின் மகத்துவத்தை உணர முடிந்தது. இங்கேயே வாழந்தால் என்ன என்று தோன்றியது. இந்த ஊர்ப்பெண்ணையே திருமணம் செய்து கொண்டு இயற்கை விவசாயம் செய்து கொண்டு இங்கேயே தங்கிவிட்டேன். பாண்டிச்சேரி ஆரோவில்லில் நான் ஒரு ஹோட்டல் நடத்துகிறேன், அதில் நாட்டுக்காய்கறிகளுக்குத் தான் முதலிடம். தினம் சுண்டைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, முடக்கத்தான் கீரை, பண்ணைக்கீரை, பப்பாளிக்காய் கூட்டு, நாட்டுப்பழங்களில் சாலட், என்று வெரைட்டியாக சத்தான உணவுகளைச் சமைத்துத் தருகிறேன். 4 மணிக்கு ஹோட்டலை மூடி விடுவேன். குடும்ப வாழ்க்கை இருக்கே, அதனால் காலையும், மதியமும் மட்டும் ஹோட்டல் என்று சிரிக்கிறார். கிருஷ்ணாவின் ஹோட்டல் பெயர் இயற்கை. அதற்குத் தேவையான காய்கறி மற்றும் பழங்களை அவர் தனது பண்ணை மற்றும் வயலில் இருந்தே பெறுகிறார். எதையும் விலைக்கு வாங்குவதில்லை.

அந்தக் காய்கறி இங்க விளைய மாட்டான், தூரம்ல இருந்து வரான்...

சிலரிடம் உங்களுக்குப் பிடிச்ச காய்கறி என்னன்னு கேட்டா? கேரட், பிரக்கோலி, பொட்டேடோன்னு சொல்வாங்க. அதெல்லாம் இங்க தமிழ்நாட்ல விளையறது இல்லை. உங்க ஊர்ல விளையறதைச் சாப்பிட்டா உனக்கு பொல்யூஷன் கிடையாது. இப்ப உனக்கு கேரட் வேணும்னா ஊட்டில இருந்து வரணும். அங்க இருந்து லாரியில கொண்டு வரனும். அப்போ அந்த லாரியை மெயிண்டெயின் பண்ண அதுக்கான ஒரு ஃபேக்டரி இங்க வரனும். லாரி இயங்கனும்னா பெட்ரோல் வேணும். லாரியை கட்டுமானம் செய்ய இரும்பு ஃபேக்டரி, பிளாஸ்டிக் ஃபேக்டரி, பெயிண்ட் அடிக்க பெயிண்ட் ஃபேக்டரி எல்லாம் தமிழ்நாட்டுக்கு கொண்டு வரனும். இதனால என்னாகும்? ஃபேக்டரிகள் உள்ளே வந்து இண்டஸ்ட்ரியலைசேஷன் ஆகும் போது எல்லா விதமான பொல்யூஷனும் உள்ளே வரும். இப்படித்தான் நாம நம்ம பாரம்பர்யத்தைக் கொஞ்சம் கொஞ்சமா மறந்து உணவுக் கலாச்சாரத்தை கொஞ்சமா கொஞ்சமா கை விட்டிடறோம். எனக்கு அந்த முறை மாறனும்னு தோணுச்சு. என் குருவோட கான்செப்ட் படி பாரம்பர்ய உணவு வகைகளை புழக்கத்துக்கு கொண்டு வந்து அந்த மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்ற்சியாகத் தான் ஆரோவில்லில் தங்கி இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். எனும் இந்த வெள்ளை மனிதரின் பேச்சுக்கூட அவரைப் போலவே வெள்ளையாகத் தான் இருக்கிறது. இவர் சொல்வது நிஜம் தான்.

தினம் மூன்று வேலை உணவு உண்ணும் பழக்கம் கொண்ட நம்மில் எத்தனை கைப்பிடி கவளம் உண்பதற்கு முன் யோசித்திருக்கிறோம்? நாம் உண்ணும் இந்த உணவு நமக்கு எங்கிருந்து கிடைத்திருக்கிறது என்று? உடனே கடையில் இருந்து என்று யாரேனும் சொல்லி விடாதீர்கள். நாம் உண்ணும் காய்கறிகளும், பழங்களும், கீரைகளும், ஏன் அரிசி முதற்கொண்டு எல்லாமே நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஏதோவொரு விவசாயியால் விளைவிக்கப்படுவது தான். அது நம்மை வந்தடையும் முன் அதனில் நிகழும் மாற்றங்கள் குறித்து நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? அதனால் தான் கிருஷ்ணா மெக்கன்ஸி போன்றோரைப் பார்க்கையில் நமக்கு அதிசயமாக இருக்கிறது. அவர் அவருக்குத் தேவையான காய்கறிகளை தாமே உற்பத்தி செய்து கொண்டு மிஞ்சியதில் இயறகை ஹோட்டலும் நடத்தி அசத்தி வருகிறார்.

Courtesy:  World Tamilar Festival you tube channel

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com