Enable Javscript for better performance
ANYBODY REMEMBER RAIN PORRIDGE AND EFFIGY BURNING TRADITIONAL FOLK PRACTICE IN YOUR VILLAGE OR TOWN- Dinamani

சுடச்சுட

  

  மழை வேண்டி ‘மழைக்கஞ்சி எடுத்து உருவ பொம்மை எரிக்கும்’ சம்பிரதாயம் அறிவீரா நீங்கள்?!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 18th June 2019 04:21 PM  |   அ+அ அ-   |  

  00000mazai_kanji_folk_tradition

   

  கட்டை விரலில் பல் துலக்குபர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ?!

  நான் பார்த்திருக்கிறேன் என் பால்ய வயதில் கிட்டத் தட்ட தினமும், கோபால் தாத்தா அப்படித்தான் பல் துலக்குவார். என் தாத்தா வீடு அந்தத் தெருவில் இருபுறமும் நீளமான திண்ணைகளுடன் சற்றே உயரமான வாசல் படிகளுடன் இருந்ததில் எதிர் வீட்டு பாத்ரூமில் கட்டை விரலில் பல் தேய்த்துக் கொண்டிருக்கும் கோபால் தாத்தாவுடன் இங்கிருந்தே சர்வ சகஜமாக உரையாடலாம் .பெரும்பாலும் என் தாத்தா அவருடன் அப்படித் தான் பேசிக் கொண்டிருப்பார் எல்லா காலை நேரங்களிலும்.

  பெயருக்குத்தான் அது பாத் ரூமே தவிர யதார்த்தத்தில் அது திறந்த மேற்கூரைகளுடன் அரைகுறையாகக் கட்டப் பட்ட ஒரு வெளிப்புற அறை .அங்கே தண்ணீர் தொட்டி, கழுநீர்ப் பானை, அடிப்பாகம் உடைக்கப் பட்டு கவிழ்க்கப் பட்டிருக்கும் ஒன்றிரண்டு மண்பானைகள் (முளைப்பாரி போடும் காலங்களில் இதற்கு டிமாண்ட் ஜாஸ்தி) ஊரெல்லாம் இந்த உடைந்த மண் பானையின் மேற்புரத்திற்காக அலைவார்கள். 

  சரி கோபால் தாத்தாவைப் பற்றி சொல்கிறேன்.

  அப்போதெல்லாம் ஊரில் பருவ மழை தப்பினால் உடனே ‘இளசு’களும் ‘பெருசு’களும் ஒன்றாகச் சேர்ந்து "மழைக் கஞ்சி" எடுப்பார்கள். இதைத் தெலுங்கில் "வான கெஞ்சி" என்பது வழக்கம்.

  ‘வானா லேது... வர்ஷா லேது

  வான கெஞ்சி பொய்யண்டி;

  புழுவா லேது புல்லா லேது

  புல்ல கெஞ்சி பொய்யண்டி’

  இதற்கான தமிழ் வடிவம் ...

  ‘மேகம் இல்லை மழை இல்லை

  மழைக் கஞ்சி ஊற்றுங்கள்!

  புழுக்கள் இல்லை புல்லும் இல்லை

  புளித்த கஞ்சியாவது ஊற்றுங்கள்!’

  - என்பதாகும்.

  இந்த வரிகளைக் கேலியும் கிண்டலுமாகப் பாடிக் கொண்டே கிராமம் முழுக்க வலம் வந்து ஜாதி வித்யாசம் பாராமல் எல்லா வீடுகளிலும் இருக்கும் பதார்த்தங்களை (கம்மஞ்சோறு, கேழ்வரகுக் கூழ் ,அரிசிச்சோறு, நீராகாரம் ஊற்றி ஊற வைத்த பழைய சாதம் முதற் கொண்டு உப்புக் கருவாடு... கத்தரிக்காய் புளிக் கூட்டு, பச்சை வெங்காயம், பாசிப் பருப்பு துவையல், கானத் துவையல் (குதிரை சாப்பிடுமே கொல்லு அது தான் கானப் பயிர்) இப்படி சகல வீடுகளிலும் போடப்படும் எல்லா உணவுகளையும் ஒரு பெரிய பாத்திரத்தில் சேகரம் பண்ணிக் கொண்டு ஊரின் எல்லாத் தெருக்களையும் பாட்டுப் பாடிக் கொண்டே கொண்டாட்டமாக சுற்றி வருவார்கள்.

  கடைசியில் இந்தக் கூட்டம் ஒரு வழியாக கம்மாய்க்கரையை அடைந்ததும் சேகரித்த உணவுகளை எல்லாம் கைகளால் அள்ளி அள்ளி எல்லோரும் உண்பார்கள், சில ஊர்களில் தேங்காய்ச் சிரட்டை, அரச இலைகளில் கூட பங்கிட்டு உண்பார்கள். சாப்பிட்டு முடித்ததும் கை கழுவுகிறோம் எனக் கம்மாயில் இறங்கி நன்றாகத் துழாவிக் குளித்து விட்டு சரியாகக் காய்ந்தும் காயாத ஈர உடைகள் மற்றும் ஈரத் தலைமுடிகள் சிலும்பிக் கொண்டு காற்றில் ஆட சாயங்கால வேளைகளில் வீடு திரும்புவார்கள் .

  இதற்கும் கோபால் தாத்தாவுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? மழைக் கஞ்சி எடுக்கும் போதெல்லாம் எங்கள் ஊரில் கோபால் தாத்தா தான் தலைமை தாங்குவார். (ஹா..ஹா...ஹா ...இந்த மழைக் கஞ்சி கூட்டத்தில் தலைமை தாங்குவது என்பது கெத்தாக அரசியல் மேடைகள் அல்லது லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் கூட்டங்களில் பேசுவதைப் போல அல்ல... 

  வீடு வீடாகப் போய்...

  "வான கெஞ்சி பொய்யண்டி" என்று கெத்துப் பாராமல் பெரிய அண்டாவை ஏந்திச் சென்று ‘பகவதி பிச்சாந்தேஹி’ கேட்க வேண்டும். அது தான் இந்த விழாவின் தலைவர் ஏற்க வேண்டிய அதிமுக்கியமான பொறுப்பு. கோபால் தாத்தா அந்தப் பொறுப்பை செவ்வனே செய்வார் மூன்று நான்கு வருடங்களுக்கு ஒருமுறை.

  வானம் பார்த்த பூமி அந்தக் கிராமம் .நல்ல வெயில் காலங்களில் பொழுது போகவில்லை என்றால் இப்படி குளு குளுவென மழைக் கஞ்சி எடுக்க ஆரம்பித்து விடுவார்கள் அப்போதெல்லாம்.

  கூடுதல் எஃபெக்டுக்காக மழை வேண்டி உருவ பொம்மை எரிக்கும் வேடிக்கையான சம்பிரதாயமும் அப்போது அங்கு வழக்கத்தில் இருந்தது. உருவ பொம்மை என்பது வைக்கோல் திணிக்கப்பட்ட கழனிக்காட்டு பொம்மை தான்.

  வாழை என்றொரு மனிதர் இருந்தார். அவரது மனைவி என அந்த உருவ பொம்மையைக் கற்பிதம் செய்து கொண்டு, இறந்த மனைவியை பாடையில் ஏற்றி ஊர்வலமாக கொண்டு செல்கிறோம் என்று ஊர் முழுக்க மனிதர்களைத் திரட்டி பொம்மையைச் சுமந்து சென்று ஊர் மந்தையில் எரித்து விட்டு, வான கெஞ்சியைக் கம்மாய் கரையில் சாப்பிட்டு முடித்து ஏப்பம் விடும் வழக்கமும் அன்று இருந்தது.

  இவற்றையெல்லாம் செய்து முடிப்பதால் வருண பகவான் உடனே மனமிரங்கி மழை கொட்டோ கொட்டென்று கொட்டி விடும் என்றொரு நம்பிக்கை... இது ஊர் ஐதீகம். அந்நாட்களில் சிலமுறை மழைக் கஞ்சி கொண்டாட்டங்கள் முடிந்ததும் அகஸ்மாத்தாக மழை கொட்டியும் இருக்கிறது 

  இன்றைக்கு "மழைக் கஞ்சி" என்ற சொல்லே பலருக்கு மறந்திருக்கலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai