அனாமத்தா 3 லட்சம் ரூபாயைப் பாதையில கண்டெடுத்தா நீங்க என்ன செய்வீங்க?!

ஆத்திச்சூடியில் அறம் செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல், ஈவது கைவிடேல் வரிசையில்  ‘நேர்பட ஒழுகு’ என்றொரு ஒழுக்கநெறியும் போதிக்கப்பட்டிருக்கும்.
அனாமத்தா 3 லட்சம் ரூபாயைப் பாதையில கண்டெடுத்தா நீங்க என்ன செய்வீங்க?!

நீதிக்கதைகள் கேட்ட காலம் போய் தாங்களே நீதிக்கதைகளின் நாயகர்களாகும் பிஞ்சுகள்!

ஆத்திச்சூடியில் அறம் செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல், ஈவது கைவிடேல் வரிசையில்  ‘நேர்பட ஒழுகு’ என்றொரு ஒழுக்கநெறியும் போதிக்கப்பட்டிருக்கும். இந்த நேர்பட ஒழுகு எனும் வாக்கியம் வரும் வரையில் ஆத்திச்சூடியை முழுமையாகக் கற்றவர்கள், கற்றதை மனதில் நிற்க வைத்திருப்பவர்கள் நம்மில் எத்தனை பேர்?! 

கணக்கெடுத்தால் வெகு சொற்பமானவர்களே மிஞ்சக் கூடும். அப்படிப் பட்டவர்களில் சில நல்லுதாரணங்களைப் பற்றித்தான் இப்போது நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

சம்பவம் 1:

காவல்துறை அதிகாரியிடம் பணத்தை ஒப்படைக்கும் மாணவி ஜீனத் ராபியா
காவல்துறை அதிகாரியிடம் பணத்தை ஒப்படைக்கும் மாணவி ஜீனத் ராபியா

மதுரை மாவட்டம், பேரையூரில் இயங்கும் தொடக்கப்பள்ளி ஒன்றில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார் மாணவி ஜீனத் ராபியா. இவர் சாலையில் நடந்து வரும் போது 2500 ரூபாய் பணத்தைக் கண்டெடுத்தார். பள்ளிக்குச் செல்லும் பாதையில் கிடைத்த அப்பணத்தை உடனடியாக மாணவி ராபியா தனது ஆசிரியரிடம் ஒப்படைத்து விட்டு அதைத் தான் சாலையில் கண்டெடுத்த தகவலையும் கூறினார். மாணவியின் நேர்மையை எண்ணி வியந்த ஆசிரியர், மாணவியையும் அழைத்துக் கொண்டு பேரையூர் காவல்நிலையம் சென்றார். அங்கு உதவி ஆய்வாளர் மகேந்திரன் அவர்களிடம் இருவரும் இணைந்து மாணவி கண்டெடுத்த பணத்தை ஒப்படைத்தனர். அப்போது அங்கிருந்த காவல்நிலைய போலீஸார் மாணவியின் நேர்மையை எண்ணி வியந்து பாராட்டினர்.. பின்னர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர கலந்தாய்வு கூட்டத்தில் மதுரை சரக காவல்துறைத் துணைத் தலைவர் ஆனி விஜயா ஐ பி எஸ் சிறுமியின் நேர்மையை பாராட்டி அவரது தாயாரின் முன்னிலையில் சிறுமிக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கி கெளரவித்தார்.

சம்பவம் 2:

கண்டெடுத்த பணத்தை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கும் பள்ளி மாணவிகள் மதுஸ்ரீ & கனிஷ்கா
கண்டெடுத்த பணத்தை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கும் பள்ளி மாணவிகள் மதுஸ்ரீ & கனிஷ்கா

சாலையில் கிடந்த 50 ஆயிரத்தை ஆசிரியரிடம் கொடுத்த மாணவிகள், அறம் காக்கும் தமிழ்க் குழந்தைகள்

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியத்தைச் சார்ந்தது  உங்கள் ஊர் கிராமம். இங்கு 68 ஆண்டுகளாக இயங்கி வரும் அரசு புனித வளனார் தொடக்கப் பள்ளியில்  இலவச வாகன வசதி இருப்பதால், சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை, இங்கு படிக்க வைக்கிறார்கள்.
அப்படி இங்கே பயிலும் வாய்ப்பைப் பெற்றவர்களே... பள்ளியிலிருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேலக்காடு தாயனூர் கிராமத்தைச் சேர்ந்த கல்லுடைக்கும் தொழிலாளி அர்ஜுனன் - ராஜலெட்சுமி ஆகியோரின் மகள் மதுஶ்ரீ மற்றும் பெயின்டர் ராமன் - நல்லம்மாள் ஆகியோர் மகளான கனிஷ்கா உள்ளிட்டோர். இவர்கள் இருவரும் இந்தப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

நேற்று ஆசிரியர் தினம் என்பதால், பள்ளி நிர்வாகத்தினர், மக்களுக்கு தூய்மை பாரத இயக்கம் மூலமாக பொது சுகாதாரம் பற்றிய  ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டனர்.  ஆசிரியர்கள், மாணவர்களை வரிசையாக அழைத்துச் சென்று விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டனர். மாணவர்கள் வகுப்பு வாரியாக வரிசையில் சென்று, சுகாதாரம் மற்றும் தூய்மை குறித்த விழிப்புணர்வு வாசகங்களை முழங்கியபடி நடந்து சென்றனர். பேரணி தொடங்கிய கொஞ்சம் தூரத்தில் மாணவிகள் கனிஷ்கா மற்றும் மதுமிதா ஆகியோர் சாலையோரத்தில் 500 ரூபாய் பணக்கட்டு ஒன்று கிடப்பதைப் பார்த்தனர். உடனே அந்தப் பணத்தை எடுத்த மாணவிகள் அதை ஆசிரியை கிறிஸ்டியிடம் ஒப்படைத்தனர்.

500 ரூபாய் தாள்கள் அடங்கிய அந்தப் பணக் கட்டில் 50,000 ரூபாய் இருந்ததை எண்ணிப் பார்த்து தெரிந்து கொண்ட ஆசிரியை அப்பணத்தை அப்பகுதியில் உள்ள கனரா வங்கியிலிருந்து எடுத்துச் செல்லும்போது யாரோ தவற விட்டிருக்கக் கூடும் என ஊகித்தார். எனவே,  இதுகுறித்த தகவலை பள்ளியின் தலைமை ஆசிரியை மெட்டில்டா ஜெயராணியின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்.

தொடர்ந்து பணத்தைப் பள்ளியின் தாளாளர் செபாஸ்டின் மற்றும் தலைமையாசிரியையிடம் மாணவிகள் மதுஶ்ரீ மற்றும் கனிஷ்கா ஆகியோர் ஒப்படைத்தனர்.தகவலறிந்த பலரும் மாணவிகளை நேரில் வந்து பாராட்டி வருகிறார்கள்.  உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மருதநாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்து மாணவிகளுக்கு சால்வையணிவித்து கௌரவப்படுத்தினார்கள்.

``மிகவும் கஷ்டப்படும் குடும்பச் சூழ்நிலையை கொண்ட அந்த மாணவிகள், கீழே கிடந்த பணத்தை எடுத்து ஆசிரியர்களிடம் ஒப்படைத்தது மிகப் பெரிய விஷயம். அவர்களின் நேர்மை எங்களைப் பெருமை அடைய வைத்துள்ளது. அந்தப் பணத்தை மாவட்ட கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க இருக்கிறோம். கடந்த 68 வருடங்களாக இதுபோன்ற ஒழுக்கம் உள்ள மாணவர்களை நாங்கள் உருவாக்கி வருகிறோம் என நினைக்கும்போது மனநிறைவாக உள்ளது” என்றார் பள்ளியின் தலைமையாசிரியர் மெட்டில்டா ஜெயராணி,.

``பணம் கிடந்ததைப் பார்த்ததும், யாரோ ஒருத்தர் பணத்தை தவறவிட்டுட்டாங்கனு மட்டும் தோணுச்சு. பணத்தை தொலைச்சிட்டு அவங்க மனசு என்ன பாடுபடும். உடனே அந்தப் பணத்தை எங்க டீச்சரிடம் கொடுத்து உரியவரிடம் கொடுத்துடணும்’னு மட்டும் தோணுச்சு. அதான் பணத்தை எடுத்த நாங்கள் உடனே டீச்சர்க்கிட்ட கொடுத்தோம்” என்றார்கள் மாணவிகள்..

சம்பவம் 3:
 
 

கண்டெடுத்த பணத்தை ஒப்படைக்கும் சிறுவன் யாசின் 
கண்டெடுத்த பணத்தை ஒப்படைக்கும் சிறுவன் யாசின் 

50 ஆயிரம் பணத்தை அப்படியே ஒப்படைத்த பள்ளி சிறுவன்...

அரசுப் பள்ளியில் படிக்கும் 2-ம் வகுப்பு சிறுவர் ஒருவர் சாலையில் 50,000 ரூபாயை கண்டெடுத்து அதனை உடனே பாதுகாப்பாக போலீசாரிடம் ஒப்படைத்தார்.

ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர்குளம் பகுதியை சேர்ந்தவர் பாட்ஷா. இவரது மனைவி அப்ரோஸ்பேகம். இவர்களுக்கு 7 வயதில் மகன் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் முகமதுயாசின். இவர் சேமூரில் உள்ள அரசுப் பள்ளியில்  இரண்டாம்  வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் பள்ளிக்கு செல்லும் வழியில் முகமதுயாசின் சாலையோரம் ரூ50,000 ரூபாயுடன் கூடிய பையொன்றைக் கண்டெடுத்தார். பயில் பணமிருப்பதை அறிந்ததுமே அதனை பத்திரமாக எடுத்துச் சென்று  தனது பள்ளி ஆசிரியர்களிடம் ஒப்படைத்தார். ஆசிரியர் மூலம் அந்தப் பணம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திகணேஷ் வசம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது. பணத்தை பத்திரமாக சேர்க்க உதவிய சிறுவருக்கு காவலர்கள் தங்களது பாராட்டினை தெரிவித்தனர்.

சம்பவம் 4:

கண்டெடுத்த 3 லட்சம் ரூபாய் பணத்தைக் காவல்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கும் இளைஞர்கள்
கண்டெடுத்த 3 லட்சம் ரூபாய் பணத்தைக் காவல்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கும் இளைஞர்கள்

சாலையில் கிடந்த ரூ.3 லட்சம் பணத்தை போலிஸில் ஒப்படைத்த இளைஞர்களுக்கு குவியும் பாராட்டு!
 
சென்னையில் சாலையோரம் கிடந்த 3 லட்சம் மதிப்புள்ள பணத்தை எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடாமல் போலிஸாரிடம் இரு இளைஞர்கள் ஒப்படைத்துள்ளனர்.

சென்னை க்ரீம்ஸ் சாலையில் முருகேசன் நாயக்கர் காம்ப்ளக்ஸ் அருகே ரூ.3 லட்சம் மதிப்புள்ள பணம் கேட்பாரற்று கிடந்துள்ளது. இதனைக் கண்ட வியாசர்பாடியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அரி நாராயணன் (21), மத்திய கைலாஷ் பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் (24) ஆகிய இரு இளைஞர்களும் ஆயிரம் விளக்கு பகுதி காவல் நிலையத்தில் அந்த பணத்தை ஒப்படைத்துள்ளனர்.

பணத்தை பிரித்துக்கூட பார்க்காமல் போலிஸாரிடம் ஒப்படைத்த இரண்டு இளைஞர்களையும் காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டியதோடு விட்டுவிடாமல் கெளரவிக்கவும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சாலையில் கிடந்த பணம் யாருடையது என்றும், சட்டத்துக்கு புறம்பானதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிற்க!

மேற்கண்ட நான்கு சம்பவங்களிலும் குறிப்பிடப்படும் சிறுவர், சிறுமியர் மற்று இளைஞர்கள் இருவரும் கூட நம்மிடையே இதே சமூகத்தில் வாழ்ந்து வருகிறவர்களே! அவர்கள் தாம் வரித்துக் கொண்ட நேர்மையின் காரணமாக இன்று நம் முன்னே மிகச்சிறந்த வாழ்வியல் உதாரணங்களாகி நிற்கிறார்கள்.

இரவுகளில் குழந்தைகளுக்கு நீதிக்கதைகள் சொல்லும் பழக்கம் கொண்டவர்கள், இனி இந்தச் சிறுவர், சிறுமியரின் பேராசையற்ற, ஒழுக்கம் தவறா குணங்களைப் பற்றிய கதைகளை கோர்வையாக உருவாக்கி அதைத் தமது குழந்தைகளுக்குச் சொல்லலாம்.

என்னடா உலகம் இது? எங்கு பார்த்தாலும் பொய்யும், புரட்டும், களவும், கொலை, கொள்ளையுமாக உலகமே சீர்கெட்டு விட்டது என்று புலம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு... வறுமையிலும் நேர்மை தவறா இச்சிறுவர், சிறுமியரின் நேர்மை நிச்சயம் ஆறுதலோடு சேர்த்து உலகப்போக்கின் மீதான நம்பிக்கையையும் உறுதிப் படுத்தலாம்.

அது தானே நமது இப்போதைய முக்கியத் தேவை!

எனவே நாமும் நம் குழந்தைகளின் மனதில் பதிய வைக்கத் தொடங்குவோம்...

அது ஐந்து பைசாவாகவே இருந்தாலும் சரி அல்லது 5 லட்சம் ரூபாய்களாகவே இருந்தாலும் சரி நாம் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்தால் மட்டுமே அது நம்முடைய பணமாக இருக்க முடியும். அனாமத்தாக எது கிடைத்தாலும் சரி, அல்லது எத்தனை கோடி ரூபாய் கிடைத்தாலும் சரி அது உரியவர்களிடம் சேர்ப்பிக்கப்பட்டே ஆகவேண்டும் எனும் மன உறுதியையும் பக்குவத்தையும் மிக இளம் வயதிலேயே நம் குழைந்தைகளின் மனதில் புகுத்துவோம் எனும் மன உறுதியை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com