‘உருவக்கேலி முதல் தெலுங்கானா கவர்னர் வரை’ தமிழிசையின் அரசியல் ராஜபாட்டை!

தமிழகத்தில்...  தமிழிசை என்றாலே உடனடியாக கவனத்துக்கு வரக்கூடியவை தாமரையும், பாஜகவும் அல்ல, களை கட்டும் மீம்ஸுகளும், ட்ரால்களும் தான்.
‘உருவக்கேலி முதல் தெலுங்கானா கவர்னர் வரை’ தமிழிசையின் அரசியல் ராஜபாட்டை!

‘என் அப்பா.. அந்தக் காலத்துலயே எனக்கு தமிழிசைன்னு அழகான தமிழ்ப்பெயரைத் தேர்ந்தெடுத்து சூட்டியிருக்கிறார், ஆனால், இந்த மீம்ஸ் போடறவங்களப் பார்த்தீங்கன்னா, என் பெயரை இஷ்டத்துக்கும் டுமீலிசைன்னு மாத்தி கலாய்க்கறாங்க’

அது மட்டும் தான் என்னைப் பாதிக்கிற மீம்ஸுன்னு நான் சொல்வேன். மத்தபடி என்னைப் பத்தி வர்ற சில மீம்ஸ்களைப் பார்த்து நானே கூட கை கொட்டிச் சிரிச்சிருக்கேன். எல்லாத்தையும் பாசிட்டிவ்வா எடுத்துக்கனும்ங்கறது என்னோட கொள்கை. 

யூடியூப் சேனல் ஒன்றுக்கு தமிழிசை அளித்த நேர்காணலில் அவரே பகிர்ந்து கொண்டது மேற்கண்ட தகவல்.

தமிழகத்தில் பெண் அரசியல் தலைவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். அவர்களில் ஜெயலலிதா, வானதி ஸ்ரீநிவாசன், ஜெயந்தி நடராஜன், குஷ்பு உட்பட பலரும் அவர்களது அரசியல் செயல்பாடுகளுக்காக மட்டுமல்ல புறத்தோற்றத்துக்காகவும் கூட மக்களால் பல சந்தர்பங்களில் போற்றிப் புகழப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் எவரொருவரும் தமிழிசை அளவுக்கு உருவக் கேலிக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள். 

கூந்தல் முதல் உடையலங்காரம் வரை தமிழிசை பல சந்தர்பங்களில் பலரால் கேலி செய்யப்பட்டார். அவர் அரசியலில் காலடி எடுத்து வைத்த ஆரம்ப காலங்களில் இருந்தே இம்மாதிரியான பகடிக்கு ஆளானாரா? அல்லது  தீவிர அரசியலுக்கு இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் தன் தந்தையை எதிர்த்து பாஜகவில் இணைந்து தீவிர அரசியலுக்கு வந்த பிறகு தான் இப்படியான கேலிகளுக்கு ஆளானாரா? என்பதைப் பிரித்துப் பார்ப்பது கடினம்.

ஏனெனில் தமிழகத்தில்...  தமிழிசை என்றாலே உடனடியாக கவனத்துக்கு வரக்கூடியவை தாமரையும், பாஜகவும் அல்ல, களை கட்டும் மீம்ஸுகளும், ட்ரால்களும் தான்.

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீருமென்றால் உடனடியாகப் பறக்கும் மீம்ஸ்களும் ட்ரால்களும் தமிழிசையின் பெயர் சொல்லும்.

பிறந்தநாளுக்கு கேக் வெட்டி தொண்டர்களுக்கு ஊட்டினால் அதற்கும் மீம்ஸ் போட்டே கொல்வார்கள்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் சக பயணியாக வந்த மாணவி சோபியா, தமிழிசையை விமர்சித்தாலும் சரி, தமிழிசை அந்த மாணவியைப் பற்றி புகார் அளித்தாலும் சரி பறக்கும் மீம்ஸ்கள், ட்ரால்களும் குறி வைப்பது தமிழிசையைத்தான்.

ஒரு கட்டத்தில் தமிழிசை என்ன செய்தாலும் குற்றம், யாரைப் பற்றி பேசினாலும் குற்றம், அவர் அரசியலில் நுழைந்ததே குற்றம், என்று மீம்ஸ் கிரியேட்டர்கள் வரிந்து கட்டிக் கொண்டு சமூக ஊடகங்களில் அவரைச் சகட்டு மேனிக்குப் போட்டுத் தாக்க, பொட்டுக் கலக்கமில்லை தமிழிசையிடம்.

அவர் கூலாக யூ டியூப் சேனலொன்றில் ‘ஹேண்ட் பேக் சீக்ரெட்ஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது ஹேண்ட் பேக்கை தொகுப்பாளரிடம் திறந்து காட்டிக் கொண்டிருந்தார். உள்ளே பார்த்தால் தொகுப்பாளருக்கு அதிர்ச்சி, காரணம் தமிழிசையின் ஹேன்ட் பேக்கில் ஒரு தாமரைப்பூ இருந்தது. தொகுப்பாளர் நக்கலாக, ‘மேம், தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்னு சொல்றீங்களே, அப்புறம் ஏன் நீங்க தலையில மல்லிகைப்பூவுக்கு பதில் இந்த தாமரையை வச்சுக்கக் கூடாது? என்று கேட்டு வைக்க, அதற்கும் அசராமல் அதிரடியாக இப்படி பதில் சொன்னவர் தமிழிசை.

‘ஏங்க நான் என்ன லூஸா? தாமரைப்பூவை தலையில வச்சுட்டு சுத்த, தலையில என்ன பூவெல்லாம் வைக்கலாமோ, அதைத்தான் வச்சுக்க முடியும். தாமரைப்பூ நான் சார்ந்திருக்கும் கட்சியின் சின்னம், அந்த ஞாபகார்த்தமா, அதை ஹேண்ட் பேக்ல வச்சிருக்கேன். அதுக்காக அதைத் தலையில் வச்சிக்கனும்னு இல்லையே!’ என்றாரே பார்க்கலாம். அது தான் தமிழிசை! 

இடக்கு மடக்கான கேள்விகளின் போது அவர் எப்போதும் தன் உணர்வுகளை வெளிப்படையாகக் காட்டத் தயங்கியதே இல்லை.  

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழகத்தின் சிறந்த பேச்சாளருமான குமரி அனந்தனின் மகள்களில் ஒருவரான தமிழிசைக்கு சிறுவயது முதலே தன் தந்தையைப் போலத் தானும் மிகச்சிறந்த பேச்சாளராக வேண்டும் என்ற ஆவல் இருந்திருந்தால் அதைத் தவறென்று சொல்ல முடியுமா? ஏனெனில் வளர்ந்த சூழல் அப்படியானது. ஆயினும் குமரி அனந்தனுக்கு தன் மகள் அரசியலில் ஈடுபடுவதில் சுத்தமாக விருப்பமிருந்ததில்லை என்கிறது தமிழிசையில் வாழ்க்கைக் கதை. காரணம் என்னவாக இருந்திருக்கக் கூடுமோ? ஆனால் வெளியில் சொல்லப்பட்டது... வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காக விருப்பமின்றி குமரி அனந்தன், தன் மகள் தமிழிசையையை காங்கிரஸில் வளர்த்து விடவோ, தன்னுடைய வாரிசாக அடையாளம் காட்டவோ விரும்பியதில்லை என செய்தியாளர்களுக்கும், பொது மக்களுக்கும் சொல்லப்பட்டது.

இப்போது குமரி அனந்தன் மட்டுமல்ல யாராலுமே அசைத்துப் பார்க்க முடியாத ஓரிடத்தில் நிலை கொண்டு விட்டார் தமிழிசை.

தமிழிசையை தமிழக பாஜக தலைவராக கட்சியின் உயர்மட்டம் நியமித்த போது அக்கட்சியின் உள்மட்டத் தலைவர்களில் பலருக்கே கூட அதில் பலத்த கருத்து வேறுபாடு இருந்தது.

‘தமிழக பாஜக என்ன செய்து கொண்டிருக்கிறது? டெல்லியில் இருந்து யாராவது வந்தால், அவர்களை ரிசீவ் செய்து ஸ்டார் ஹோட்டல்களில் தங்க வைத்து மீடியாக்களில் பேட்டி அளிக்க வைத்து, ஊடகங்களுக்குச் சிரித்து போஸ் கொடுத்து அனுப்புவது தான் இவர்களது வேலையா? ஆக்கப்பூர்வமாக, அதிகார மையமாக தமிழகத்தில் பாஜகவை நிலைக்க வைக்க இவர்கள் என்ன முயற்சி செய்கிறார்கள்? முதலில் தமிழக பாஜக தலைமையை மாற்ற வேண்டும். அப்போது தான் தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியும்’ என்று தனது அதிருப்தியை மிகக்கடுமையாகப் பலமுறை பாஜக மூத்த தலைவரான சுப்ரமண்யம் சாமி கூட ஊடகங்களில் முன் வைத்தார். அதற்கெல்லாம் தமிழிசை கலங்கியதாகத் தெரியவில்லை. 

தமிழிசை 2000 ஆம் ஆண்டு வாக்கில் தீவிர அரசியலில் இறங்கியிருந்தாலும் அதற்கு முன்பே 1996 ஆம் ஆண்டுத் தேர்தலில் தன் தந்தை குமரி அனந்தனுக்காக கன்யாகுமரித் தொகுதியில் தேர்தல் வேலைகளில் ஈடுபட்ட போதே அவருக்கு பாஜக தொண்டர்களின் அரசியல் செயல்பாடுகள் மீது பேரார்வமும், பிடிப்பும் ஏற்பட்டு விட்டதாகச் சொல்கிறார்கள் இன்று தமிழிசையின் அரசியல் வரலாற்றைப் பொது ஊடகங்களில் பகிரும் அரசியக் நிபுணர்கள் பலர். பாஜகவின் மீது பிடிப்பு இருந்த போதும் ஆர் எஸ் எஸ் அமைப்பின் மீது கொஞ்சம் பயமும் வெறுப்பும் எப்போதும் இருந்து வந்த சூழ்நிலையில் அதை மாற்றிக் கொள்ளவும் கிடைத்த ஒரு வாய்ப்பாக ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்திருக்கிறார் தமிழிசை. தமிழிசை தஞ்சை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது, அங்கே திடீரென ஒரு எமர்ஜென்ஸி நோயாளிக்கு ரத்தம் தேவைப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட வகை ரத்தம் உரிய நேரத்தில் கிடைக்கா விட்டால் நோயாளி மரணமடைவது உறுதி என்றிருந்த நிலையில் வார்ட் பாய் ஒருவர் தமிழிசையிடம், ‘இந்த மாதிரி சூழலில் நமக்கு உடனடியாகக் கை கொடுக்க கூடியவர்கள் ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் மட்டுமே, அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள் டாக்டர்’ என்றிருக்கிறார்.

தமிழிசை சஞ்சலத்துடன் தான் வார்ட்பாய் சொன்ன வார்த்தைகளை நம்பி ஆர் எஸ் எஸ் தொண்டர்களைத் தொடர்பு கொண்டிருக்கிறார். ஆனால், விளைவோ வெகு அற்புதமான பலனை அளித்திருக்கிறது. அவசரசிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நோயாளிக்கு உடனடியாக குறித்த நேரத்தில் வேண்டிய ரத்தவகை கிடைத்து அவர் உயிர் பிழைத்தது தமிழிசையைப் பொருத்தவரை அதிசயம். ஏனெனில், ஒரு மருத்துவருக்கு மட்டுமே தெரியும் ‘கோல்டன் ஹவர்ஸின்’ முக்கியத்துவம். அப்படி நெருக்கடி நிலையில் ஒரு மருத்துவராக தனது கடமையை ஆற்றி வெற்றி இலக்கை எட்ட உதவியவர்கள் ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் எனும் வகையில் அவர்கள் மீதான வெறுப்புணர்வும், அவநம்பிக்கையும் நீங்கி முறைப்படி பாஜகவில் இணையும் துணிவு தனக்கு ஏற்பட்டதாக தமிழிசையே நேர்காணலொன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். ஆர் எஸ் எஸ் அபிமானத்திற்கு காரணம், அதன் உறுப்பினர்களிடையே இருக்கும் கட்டுப்பாடும், ஒழுங்கும், உதவும் மனப்பான்மையும் தான் என்கிறார் தமிழிசை.

அப்பா, காங்கிரஸில் பிரதானத் தலைவர்களில் ஒருவராக இருந்து வருகையில் மகள் பாஜகவில் சேர்வதென்பது குடும்ப அளவில் தமிழிசைக்கு மிகப்பெரிய பின்னடைவைத் தந்திருக்கிறது. அப்பா குமரி அனந்தன், மகளிடம் 7 மாதங்கள் வரை எந்தப் பேச்சு வார்த்தையும் வைத்துக் கொள்ளவில்லை என்கிறார் தமிழிசை. அப்போதெல்லாம் தமிழிசைக்கு பக்கபலமாக இருந்தது அவரது கணவர் செளந்திர ராஜன் தான். இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்த போது அது தமிழகத்தின் தலைப்புச் செய்தியானது எப்படி தெரியுமா? குமரி அனந்தன் காங்கிரஸில் பெரிய தலைவர் என்பதால் அவரது மகளான தமிழிசையின் திருமணத்திற்கு பக்தவத்சலம், அன்றைய முதல்வர் எம்ஜிஆர், எதிர்கட்சித் தலைவர் கருணாநிதி எனப்பலரும் வந்து அதிகாலைத் திருமணத்தில் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார்கள். விழாவில் மைக் பிடித்த அன்றைய முதல்வர் எம் ஜி ஆர், மாப்பிள்ளையான செளந்திர ராஜனிடம் வைத்த வேண்டுகோள். வீட்டுப் பொறுப்புகள் மட்டுமல்ல, மணமகளான தமிழிசை சமூகப் பணிகளில் ஈடுபட்டாலும் சரி அவரை ஊக்குவித்து திருமண வாழ்வில் சம உரிமை கொடுத்து மதித்து நடந்து இணைந்து வாழ வேண்டியது முக்கியம் எனும் பொருள்படப் பேசினார். அதை அன்று முதல் இன்று வரையிலும் கைவிட்டாரில்லை செளந்திர ராஜன் என்று தான் சொல்ல வேண்டும். 

இல்லையேல்;

நீங்க கட்சியப் பார்த்தது போதும், முதல்ல குடும்பத்தை பாருங்க! - மகன் சுகநாதன் விமான நிலையத்தில் வைத்து தமிழிசையிடம் மனஸ்தாபம் கொண்ட செய்தி ஊடகங்களில் வெளிவந்தபோது, அதை ஊடகங்கள் பூதாகரமாக்காமல் நீர்த்துப் போகச் செய்யவும், மீண்டும் தமிழிசை தொடர்ந்து இயங்கவுமான உந்துசக்தியாகச் செயல்பட்டவர் செளந்திரராஜனன்றி வேறு யாராக இருக்க முடியும்?!

இதெல்லாம் இருக்க, பாஜகவில் தமிழிசையைக் காட்டிலும் ஆக்டிவ்வாகச் செயல்பட்ட தலைவர்கள் பலரிருக்க பாஜக தலைமை தமிழக பாஜக தலைவராக தமிழிசையைத் தேர்ந்தெடுத்தது ஏன்? என்ற கேள்விக்குப் பதிலாக தமிழிசையின் கடந்த நான்கு ஆண்டுகால செயல்பாடுகளைக் கூறலாம். தமிழகத்தில் பாஜக பல்லாண்டுகளாக தேசியக் கட்சிகளில் ஒன்றாக நிலைபெற்றிருந்த போதும் ஊடகங்களில்; பாஜகவைத் தூக்கிப் பிடித்தது தமிழிசையே. தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழிசை தான் பாஜகவின் முகம். மற்றை தலைகள் எல்லோரும் கொஞ்சம் ஃபேட் அவுட் ஆகி விட்டதான உணர்வு. காரணம், தமிழிசை தலைவராக இருந்த கடந்த ஆண்டுகளில் தினம் தினம் பாஜக குறித்த ஏதோ ஒரு செய்தி ஊடகங்களில் பிரதானமாக வெடிப்பது வாடிக்கையானது. 

அதெல்லாம் சரி ஆனால். நரேந்திர மோடி, அமித் ஷாவின் குட்புக்கில் தமிழிசை இடம்பெற்றது எப்படி?

இருக்கிறார்களே... இங்கேயும் இல கணேசன், பொன் ராதாகிருஷ்ணன், சி பி ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலர்! அவர்களுக்கெல்லாம் கிடைக்காத வாய்ப்பு தமிழிசைக்கு கிடைத்ததெப்படி?

பாஜகவினரைக் கேட்டால், குஜராத் கலவரத்தின் போது தமிழகம் சார்பாக சிகிச்சையளிக்கச் சென்ற குழுவில் இடம்பெற்றிருந்த டாக்டர் தமிழிசையின் செயல்பாடு மோடி, அமித்ஷா அன்கோவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அதில் அவர்கள் எதிர்பார்த்த அர்ப்பணிப்பு உணர்வு இருந்ததால் தமிழக பாஜகவின் முதல் பெண் தலைவராக தமிழிசை நியமிக்கப்பட்டார் என்றும் கூறுவார்களாயிருக்கும்.

அப்படியுமிருக்கலாம், அதையும் தாண்டி ஓட்டு அரசியல் என்றொரு மாபெரும் வியூகமும் இதில் உண்டென்பது தீவிர அரசியல் கண்காணிப்பாளர்களுக்குப் புரிந்திருக்கும்.

எது எப்படியோ? தமிழகத்தில் மிகக்கடுமையாக உருவக்கேலிக்கு உருவான தமிழிசை இன்று தெலுங்கானா மாநில கவர்னர். 

‘தெலுங்கானாவைப் பொருத்தவரை பெரிதாக எந்தப் பிரச்சினைகளும் இல்லாத அமைதியான மாநிலங்களில் ஒன்று, அங்கே கவர்னராகச் செயல்பட தமிழிசைக்குப் பெரிதாக எந்த ஒரு சிரமமும் இருக்கப்போவதில்லை. எனவே தெலுங்கானா கவர்னராக தமிழிசை மிக அமைதியான சூழலில் செயல்படுவார் என்று எதிர்பார்ப்பதாக’ பத்திரிகையாளர் மாலன் குறிப்பிட்டிருந்தார். அது மட்டும் பலித்தால் நிச்சயம் தமிழிசைக்குப் போரடிக்கலாம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பரபரப்பு அரசியலுக்குப் பெயர் போனவர் தமிழிசை!

தெலுங்கானாவில் தாமரையை மலரச் செய்விக்கும் முயற்சியிலும் இனி ஈடுபட முடியாது. ஏனெனில் கவர்னர் பதவி என்பது நடுநிலைத் தன்மை கொண்டது.

பார்க்கலாம், ஒரு கவர்னராக இனி ஊடகங்களில் நடுநிலைத் தமிழிசையின் பேச்சு எப்படிப்பட்டதாக இருக்கும் என?!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com