Enable Javscript for better performance
From Railway station singer to Bollywood Singer - Ranu maria mondal's exciting talent!- Dinamani

சுடச்சுட

  

  ட்ரெயின்ல பிச்சை எடுக்கற மாதிரி பாடாதன்னு இனிமே யாரையாவது கிண்டல் பண்ணீங்கன்னா தெரியும் சேதி! 

  By சரோஜினி  |   Published on : 30th August 2019 04:02 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ranu_maria_mandal

   

  இந்தியாவில் திறமையானவர்களுக்குப் பஞ்சமே இல்லை. அவர்கள் எங்கெங்கும் நிறைந்திருக்கிறார்கள். சில சமயங்களில் குப்பை வண்டிகளைத் தள்ளிக் கொண்டும், ரயில்வே ஸ்டேஷனுக்கு வெளியே பழம் விற்றுக் கொண்டும், வயல்களில் கை, கால் விரலிடுக்கில் சேற்றுக்கரை படியப் படிய விவசாயம் செய்தவாறு உற்சாகமாகப் பாடிக் கொண்டும் இந்தியா முழுதுமாக நிறைந்திருக்கிறார்கள். என்ன ஒரு பரிதாபம் என்றால், அவர்களுக்கான வாய்ப்புகள் அனைத்தும் மிக மிக அரிதாகவே அடையாளம் காணப்படுகின்றன என்பது தான். 

  கடந்தாண்டில் கேரளாவைச் சார்ந்த விவசாயி ஒருவர், கமலின் ‘விஸ்வரூபம்’ படத்தில் இடம் பெறும், உன்னைக் காணாமல் நானும் நானில்லையே’ பாடலை அசலாக அதைப் பாடியவரான சங்கர் மகாதேவனைக் காட்டிலும் மிக அருமையாகப் பாடி வாட்ஸப்பில் வெளியிட அது இந்தியா முழுதும் வைரலாகி... இறுதியில் சங்கர் மகாதேவனே, அந்தப் பாடகரது விடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டு நெக்குருகிப் பாராட்டும் அளவுக்குச் சென்றது. கமல் கூட அவரை தனது ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு வரவழைத்து பாராட்டி அனுப்பினார். 

  அவர் மட்டுமல்ல, ஜீ தமிழ் சூப்பர் சிங்கர் போட்டியில் கலந்து கொண்டு பாடி அசத்திய ரமணி அம்மாள் எனும் வயதான பெண்மணியும் கூட விளிம்பு நிலைக் குடும்பத்திலிருந்து தனது பாட்டுத் திறமையால் வெளி உலகில் அடையாளம் காணப்பட்டவரே. வீட்டு வேலை செய்து தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்த ரமணி அம்மாள் அந்த சீசன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போது ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு கிடைத்த அருமையான எண்டர்டெயினராக இருந்தார். போட்டியில் அவர் டைட்டில் வென்று பரிசும் பெற்றார். 

  இந்த வரிசையில் இப்போது கொல்கத்தாவில் ஒரு பாடகி கடந்த வாரம் இணையத்தில் வைரலானார். அவர் பெயர் ரானு மரியா மண்டல்.

  கொல்கத்தா ரணகாட் ரயில்வே ஸ்டேஷனுக்கு வெளியே லதா மங்கேஷ்கரின் மாஸ்டர் பீஸ் பாடல்களில் ஒன்றான ‘ஏக் பியார் க்க நாக்மா’ பாடல் ஒலிக்கத் தொடங்கினால் அங்கே உடனடியாக அவசரக் கூட்டம் கூடி விடுகிறது. ஸ்டேஷனில் காத்திருப்போர் அனைவரும் பாடலினால் ஈர்க்கப்பட்டு அந்த இடத்தில் திரண்டு விடுகிறார்கள். அங்கே பாடிக் கொண்டிருப்பது லதா மங்கேஷ்கர் அல்ல, மிக மிக சாதாரணத் தோற்றம் கொண்ட ரானு மண்டல் எனும் அப்பாவிப் பெண் ஒருவர் என்று தெரிந்ததும் மக்கள் ஆச்சர்யத்தின் உச்சத்திற்குச் சென்று விடுகிறார்கள். ஏனெனில், ஒரிஜினலாக அந்தப் பாடலைப் பாடிய லதா மங்கேஷ்கரின் குரலுக்கு எந்த விதத்திலும் சளைத்ததாக இல்லை இந்தப் பெண்ணின் குரல்.

  இவர் மட்டும் பாலிவுட் தொலைக்காட்சி சேனல்களில் நடத்தப்படும் சூப்பர் சிங்கர் போட்டிகளில் கலந்து கொண்டாரென்றால் இப்போது லைம்லைட்டில் படு பிஸியாகப் பாடிக் கொண்டிருக்கும் பல டாப் பாடகிகளை எல்லாம் சட்டெனப் பின்னுக்குத் தள்ளி விடுவார் என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள் நெட்டிஸன்கள்.

  புகழ் வெளிச்சத்துக்கு வந்த பிறகு ரானு மண்டலைப் பாராட்டாதாவர்கள் குறைவு. எவரொருவரும் அவரது பாடலைக் கேட்டமாத்திரத்தில் ரசிகர்களாகி விடுகிறார்கள். அந்தக் கூட்டத்தில் சல்மான்கான் கூட இருக்கிறார். சல்மான், வெறும் ரசிகராக மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் ரேணு மண்டலுக்கு 55 லட்சம் மதிப்புள்ள வீடு ஒன்றையும் வாங்கி பரிசளித்திருக்கிறார், தனது டபாங் 3 படத்திலும் பாடுவதற்கு வாய்ப்பளித்திருக்கிறார் என்றெல்லாம் கூட இணையத்தில் செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை. ஏனெனில், சல்மானிடம் இருந்து இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

  ரானு... சல்மான் படத்தில் பாடுவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லையெனினும் ஹிமேஷ் ரேஷம்மியாவின் அடுத்த படத்தில் ரானு பாடுவது உறுதியான செய்தி, பாடலுக்கான ரெகார்டிங் கூட முடிவடைந்து விட்டது என்கிறார்கள்.

  இது உறுதியான செய்தி தான் ஏனெனில், இது குறித்து ஹிமேஷ்...  தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராமில்... வரவிருக்கும் தனது புதிய திரைப்படமான ஹேப்பியில் ‘தெரி மேரி கஹானி’ எனும் பாடலுக்கான ட்ராக்கை ரானு மண்டலை வைத்து பாட வைத்திருப்பதாக புகைப்படத்துடன் செய்தி பகிர்ந்திருக்கிறார். 

  சரி திறமை எங்கிருந்தால் என்ன? அது அடையாளம் காணப்பட வேண்டும் என்பது தானே முக்கியம்.

  எத்தனை காலம் தான் ஆனாலென்ன? திறமை இருந்தால் கண்டிப்பாக ஒரு நாள் அடையாளம் காணப்படுவோம் என்பதற்கு ரானு மண்டல் தற்போது ஒரு உதாரணமாகியிருக்கிறார்.

   

  Image Courtesy: your story.com

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai