Enable Javscript for better performance
Anyway sons or daughters who were gone to abroad for work or study went missing is a painfull dream- Dinamani

சுடச்சுட

  

  கல்வி, வேலை நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்ற பிள்ளைகள் அங்கே பேராபத்தில் சிக்கிக் கொண்டால் இந்தியாவில் பெற்றவர்களின் நிலை என்ன?

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 28th August 2019 12:34 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ujwal_sriharsha_(apn_live)

   


  கடந்த வாரம் தினமணி கதிரில் ஒரு சிறுகதை வெளிவந்திருந்தது. ஞாயிறு தோறும் வெளிவரும் தினமணி கதிரில் இந்த வாரம் சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற சிறுகதைகளில் ஒன்று வெளியாகி இருந்தது. கதைக்கும் இந்தச் செய்திக்கும் ஒரு தொடர்பு இருப்பதால் அதை இப்போது இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

  கதையில் மருத்துவரான அப்பா கதாபாத்திரம் இரவில் போஸ்ட் மார்ட்டம் அறுவை சிகிச்சைகள் பல செய்து முடித்த அலுப்பில் மிக மிகச் சோர்வுடன் வீடு திரும்புவார். அப்போது பார்த்து மனைவி வீட்டில் அழுது கொண்டிருப்பதைக் கண்டதும் அவருக்கு ‘என்னாகி விட்டதோ, ஏதாகி விட்டதோ எனும் பதற்றம் அதிகமாகி எல்லையற்ற துயரத்துடன் மனைவியிடம் விவரம் கேட்பார். அப்போது மனைவி;

  அமெரிக்காவில் மூன்று வருட காண்ட்ராக்டில் வேலை கிடைத்துச் சென்ற தங்களது ஒரே மகன் ராகவ்... அங்கே சீதோஷ்ணமோ அல்லது உணவோ ஏதோ ஒன்று ஒத்துக்கொள்ளாத காரணத்தால் இரண்டு நாட்களாக வயிற்றுப் போக்கினால் அவஸ்தைப்பட்டு இன்று மயக்க நிலைக்குச் சென்று விட்டான் என்று அவனது அறை நண்பன் தொலைபேசியில் அழைத்துச் சொன்னது முதல் தன்னால் நிம்மதியாகவே இருக்க முடியவில்லை என்றும் ஏதாவது செய்து மகனை அங்கிருக்கும் மருத்துவமனையில் உடனடியாகச் சேர்த்து சிகிச்சை அளித்தால் மட்டுமே அவனைக் காப்பாற்ற முடியும் என்றும் சொல்லி அழுவார்.

  மனைவி சொன்னதைக் கேட்டு இடிந்து போகும் கணவர், ஆயினும் மனதை விட்டு விடாமல், மீண்டும் தன் மகனது இருப்பிடத்திற்குத் தொலைபேசியில் அழைத்து அவனது நண்பனையே அவனுக்கு முதலுதவி அளித்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறுவார். 


  ஆனால், அந்தோ பரிதாபம்!  அந்த நாட்டு மருத்துவச் சட்டப்படி, மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுத்திருந்தால் மட்டுமே எவர் ஒருவருக்கும் அந்நாட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பார்கள். இல்லாவிட்டால் எமர்ஜென்ஸி சிகிச்சை பெறக்கூட ஆயிரத்தெட்டு ஃபார்மாலிட்டிகள் உண்டு அங்கே. அதற்குள் கொஞ்சம் கொஞ்சமாக கோமா நிலைக்குச் சென்று கொண்டிருக்கும் மகனுக்கு என்ன வேண்டுமானாலும் ஆகலாம். இந்நிலையில் ஒரு மருத்துவராகவும், பையனின் தகப்பனாகவும் அந்த தந்தையின் மனம் மகனை எப்பாடு பட்டாவது காப்பாற்றி விடத் துடித்து படாதபாடு படுகிறது.

  மகனை அவர்கள் எப்படிக் காப்பாற்றினார்கள் என்பதை அறிந்து கொள்ளும் முன் சற்றுப் பெரிய கதை என்பதால் அக்கதையில் தொடரும் போட்டு விட்டார்கள். இனி அடுத்த வாரம் ஞாயிறு அன்று தான் கதையின் முடிவு தெரியவரும். இந்தக் கதையை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால்?

  தெலுங்கானா பாஜக பிரமுகரும், எம் பியுமான ஒருவரின் மகன் ஆகஸ்டு 21 ஆம் தேதி லண்டனில் காணாமல் போய் விட்டதாகச் செய்தியொன்றைக் காண நேர்ந்தது.

  தெலுங்கானா, கம்மம் பகுதியைச் சார்ந்த  உஜ்வல் ஸ்ரீஹர்ஷா எனும் 23 வயது இளைஞர் கடந்தாண்டு எம் எஸ் பயில்வதற்காக லண்டன் சென்றார். லண்டன் சென்றது முதல் தினமும் தனது குடும்பத்தினருடன் அலைபேசியில் தொடர்பு கொண்டு ஒருமுறையாவது பேசுவது உஜ்வல் ஸ்ரீஹர்ஷாவின் வழக்கம். ஆனால், கடந்த ஆகஸ்டு 21 க்குப் பிறகு அவரிடமிருந்து எந்த ஒரு அழைப்பும் குடும்பத்தினருக்கு வரவில்லை. மறுநாள் முதல் குடும்பத்தினர் அவரது லண்டன் எண்ணுக்கு முயன்ற போதும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என்பதால் ஸ்ரீஹர்ஷாவின் குடும்பத்தினர், மகன் காணாமல் போய் விட்டதாக வெள்ளியன்று லண்டன் போலீஸில் புகார் அளித்தனர். 

  போலீஸாரின் தேடலில் ஸ்ரீஹர்ஷா பயன்படுத்திய பேக் மட்டும் கடற்கரையில் தன்னந்தனியே கிடந்தது கண்டறியப்பட்டது.

  பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களில் மிகச்சிறந்த மாணவனாகத் தேறியிருந்த ஸ்ரீஹர்ஷாவுக்கு தானொரு விஞ்ஞானியாக வேண்டும் என்பதே பெருவிருப்பமாக இருந்திருக்கிறது. அதற்காக சமீபத்தில் கூட ஒரு புராஜெக்ட் வேலைக்காக ஜப்பான் சென்று வந்திருக்கிறார் என்று அவரது அப்பா உதய் பிரதாப் தெரிவித்தார். 

  ஆந்திரமாநிலம் மதனபள்ளியில் இருக்கும் புகழ்பெற்ற ரிஷிவேலி பள்ளியில் பள்ளிப்படிப்பையும், ஹைதராபாத் கல்லூரியொன்றில் பொறியியல் பட்டப் படிப்பையும் முடித்து மெரிட்டில் தேறியவர் ஸ்ரீஹர்ஷா. லண்டனில் காணாமல் போன தெலுங்கானா மாணவரைத் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டியது என் கடமை என ஸ்ரீஹர்ஷாவின் அப்பாவுக்கு  மாநில உள்துறை அமைச்சரன ஜி கிஷன் ரெட்டி வாக்களித்துள்ளார்.

  மேலே குறிப்பிட்ட இரு சம்பவங்களில் ஒன்று கதை... அதிலும் ஒரு அப்பா, தன் மகனைக் காப்பாற்றி விடத் துடிக்கிறார். அதிலாவது மகன் காணாமல் போகவில்லை நோய்வாய்பட்டு ஸ்கைப் வழியாகத் தந்தையின் கண்முன்னே இருக்கிறார். நண்பரும், மருத்துவரான தந்தையும் மனது வைத்து பிரயத்தனப்பட்டால் அவரைக் காப்பாற்றி விட 100 ல் 50 % வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், இரண்டாவது சம்பவம், அப்பட்டமான உண்மை. இச்செய்தியில் இடம் பெற்றிருக்கும் தந்தைக்கு... காணாமல் போன மகனை கண்டு பிடிப்பது மிகப்பெரிய சவால். அதிலும் இந்தியாவில் காணாமல் போயிருந்தால் கூட தனது அரசியல் செல்வாக்கையும், காவல்துறை செல்வாக்கையும் கொண்டு எப்படியாவது மகனை மீட்டு விடலாம் என்று அவர் நம்பிக்கை கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால், இங்கே மகன் காணாமல் போன இடமோ லண்டன்.

  இதில், தெலுங்கானா பிரமுகரின் மகன் திரும்பக் கிடைத்து விட்டால் அவருக்கு மட்டுமல்ல, அது இச்செய்தியை அறிந்து மனம் பரிதவிக்கும் அனைவருக்குமே சுபமான செய்தி. ஆனால், நடுவில் அவருக்காக நடத்தப்படும் தேடுதல் வேட்டை, அப்போது எதிர்கொள்ள நேரும் இரக்கமற்ற கேள்விகள் மற்றும் விசாரணையில் பங்கேற்பது  இத்யாதி, இத்யாதி மன சஞ்சலங்கள் எல்லாம் நரகத்துக்கு ஒப்பானவை. அதைக் கடப்பதென்பது பாறாங்கல்லைச் சுமப்பதற்கு நிகரானது.

  கதையானாலும் சரி, நிஜமானாலும் சரி மகன்களோ, மகள்களோ வெளிநாடுகளில் காணாமல் போய்விட்டாலோ அல்லது அவர்களுக்கு உதவ முடியாத தூரத்தில் பெற்றோர்களானவர்கள் இருக்க வேண்டிய சூழல் நேர்ந்து விட்டாலோ சரி அது மிகப்பெரிய நரகவேதனை. இதைத் தான் புத்திர சோகம் என்கிறார்களோ!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai