Enable Javscript for better performance
Man VS Wild with Bear Grylls and PM Modi : wait to watch till august 12!- Dinamani

சுடச்சுட

  

  ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ புகழ் பியர் கிரில்ஸுடன் பிரதமர் மோடியின் வனப்பிரவேஷம்!

  By - பிஸ்மி பரிணாமன்  |   Published on : 30th July 2019 01:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi_man_vs_modi

   


  இம்முறை இந்தியப் பிரதமர் மோடிக்கு முக்கியத்துவம் கொடுத்து   தயாரிக்கப்பட்டிருக்கிறது டிஸ்கவரி சானலின்  'மேன்  வெர்சஸ்  வைல்ட்'

  பிரதமர்  மோடி குறித்த  திரைப்படம்   விவேக் ஓபராய் நடித்து சமீபத்தில் வெளியானது. அதைத் தொடர்ந்து, யாரும் நினைத்துப் பார்க்கமுடியாத  விஷயத்தை  பிரதமர்  நரேந்திர  மோடி செய்து முடித்திருக்கிறார்!

  டிஸ்கவரி சானலின்  'மேன்  வெர்சஸ்  வைல்ட்'  (MAN  Vs  WILD)  டிவி நிகழ்ச்சியில்,  மோடி... மோடியாகவே  பங்கேற்றுள்ளார்.     கொடிய  விலங்குகள் வாழும்  அடர்ந்த வனத்தை 360 டிகிரி மோடிக்கு சுற்றிக் காண்பிப்பதுடன் அவரது பாதுகாவலராகவும் 'சாகச வன வீரர்'  பியர் க்ரில்ஸ் மோடியுடன் பயணிக்கிறார்.  
  உலகெங்கும்  பல்லாயிரக்கணக்கானவர்கள்  விரும்பிப் பார்க்கும் சின்னத்திரை நிகழ்ச்சி  'மேன்  வெர்சஸ்  வைல்ட்'. உயிருக்கு ஆபத்தான  அடர்ந்த  வனத்திற்குள்  எதிர் பாராத தருணங்களில்,  கொடிய விலங்குகளிடமிருந்து  எப்படி உயிர் தப்புவது? காட்டு விலங்குகள்  நடமாட்டத்தை எப்படித் தெரிந்து கொள்வது? காட்டினுள்  சிக்கிக் கொள்ளும்  மனிதன் எப்படியெல்லாம் உயிர் வாழ முடியும்? காட்டில்  தனியாக சிக்கிக் கொண்டால் தற்காப்பிற்காக  என்ன செய்ய வேண்டும்? பாதுகாப்பிற்காக ஆயுதங்கள்  கொண்டு போகாத சூழ்நிலையில் காட்டிலிருந்து  தந்திரமாகத் தப்பித்து வருவது  எப்படி? போன்ற சுவாரஸ்யமான கேள்விகளுக்கான பதில்களை பிரதமர் மோடியுடன்  பியர் க்ரில்ஸ் இந்நிகழ்ச்சி மூலமாகப் பகிர்ந்து கொள்கிறார்.

  பியர் க்ரில்ஸ்   தனது   சாகச  நிகழ்ச்சிகளில் மலையிலிருந்து  கீழே குதிப்பது, பாய்ந்தோடும் ஆற்றில்  அட்டகாசமாக நீந்துவது, பசிக்கு  விலங்குகளை வேட்டையாடி உண்பது  போன்றவற்றை படமாக்கியிருப்பார்.  இவரது சாகசங்களைப் பார்க்க பல்லாயிரக்கணக்கானவர்கள்  டிஸ்கவரி சானல் முன் ஆஜராகிவிடுகிறார்கள். இந்த நிகழ்ச்சியில்  நிச்சயம் வன விலங்கு வேட்டையை மோடியின் முன்னிலையில்  பியர் க்ரில்ஸ் நடத்தியிருக்கமாட்டார் என்று நம்பலாம்.

  ஆகஸ்ட் 12, இரவு ஒன்பது மணிக்கு   டிஸ்கவரி சானலில் காண்பிக்கப்படவிருக்கும்  நிகழ்ச்சியின்  முன்னோட்டமாக  டீசர் ஒன்று  நேற்று (ஜுலை 29 ) 'சர்வதேச புலிகள் பாதுகாப்பு தினத்தை' ஒட்டி சமூக தளங்களில்  வெளியாகியுள்ளது.  

   

   

  'இந்தியப்  பிரதமர் மோடி  பங்கேற்கும்  இந்த நிகழ்ச்சி 180 நாடுகளில்  ஐந்து மொழிகளில்  ஒளிபரப்பாகும். இந்த நிகழ்ச்சி மூலம் உலக மக்கள் இதுவரை அறிந்திராத  பிரதமர் நரேந்திர மோடியின்   இன்னொரு பக்கம்  தெரியவரும். வன விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே மோடி  இந்திய வனப்பகுதிக்குள்  சென்று  இயற்கையை தரிசித்து வந்துள்ளார்' என்று   தனது  ட்விட்டர் பக்கத்தில் பியர் க்ரில்ஸ் தெரிவித்துள்ளார். 

  பியர் க்ரில்ஸ் தயாரித்திருக்கும் சாகச  நிகழ்ச்சிகளில், அமெரிக்காவின் முன்னாள் குடியரசு தலைவர் பராக் ஒபாமா, ஆங்கில நடிகை  'டைட்டானிக்' புகழ் கேட் வின்ஸ்லெட், டென்னிஸ் வீரர்  ரோஜர் ஃபெடெரர் போன்றோரும்  பங்கேற்றுள்ளனர். 

  நிகழ்ச்சியில்  வனத்திற்குள்   மோடி  பியருடன் நடைப்பயணம் செய்வதுடன்,  ஆற்றில் தெப்பம்  செலுத்துகிறார். தற்காப்பிற்காக மூங்கிலைப் பயன்படுத்தி  ஈட்டி மாதிரியான ஆயுதம் செய்து கொள்கிறார். நிகழ்ச்சியில், "உங்களுக்காக  இந்த ஈட்டியை நான் ஏந்தி வருகிறேன்"  என்று பியரிடம் மோடி சொல்கிறார். அதற்கு "நீங்கள் இந்தியாவின் வெகு முக்கியமானவர். எனது தலையான வேலை உங்களை பாதுகாப்பதுதான்" என்று பதிலுக்கு பியர் சொல்கிறார்.

  உத்திராகாண்ட் மாநிலத்தில்  இருக்கும் ஜிம் கார்பெட்  தேசிய வனப்பூங்காவில்  இந்தச் சிறப்பு நிகழ்ச்சி  'உள்ளது உள்ளபடி' இயல்பாக படமாக்கப்பட்டுள்ளது. விரல் விட்டு எண்ணக்   கூடிய சிறு படக் குழுவினருடன்  பியர் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார்.

  "இந்த நிகழ்ச்சி, இந்தியாவிலுள்ள அடர்ந்த பசுமையான காடுகள், அழகான மலைகள், ஆர்ப்பரிக்கும் நதிகளை உலக மக்களுக்கு விருந்தாகப் படைத்து இவற்றைக் காண வெளிநாட்டுப் பயணிகளை இந்தியாவிற்கு அழைத்து வரும்" என்கிறார் மோடி.  ரஷ்ய அதிபர் புடின்  இந்த மாதிரியான அதிரடி சாகச  டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இந்த 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சியானது,  வனத்திற்குள்  அலைந்து திரியும் மோடி நல்ல திடகாத்திரமாக இருக்கிறார்  என்பதை  மறைமுகமாகச் சொல்கிறது.  

  "பல ஆண்டுகளாக நான் இயற்கையின் மடியில், அதாவது மலைகளில் காடுகளில்  வாழ்ந்திருக்கிறேன்.  அந்த  வாழ்க்கை என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியலைத் தாண்டி,   'மேன் வெர்சஸ் வைல்ட்'  சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முடியுமா?  என்று அழைப்பு  வந்ததும், வனத்தில்   படம் பிடிக்கப்படும் நிகழ்ச்சி என்பதால்  இயற்கையையே மீண்டும் தரிசிக்க உடனே  ஒத்துக்க கொண்டேன்" என்று பிரதமர் மோடி  தனது  பங்கேற்பு குறித்துச்  சொல்கிறார். 

  சென்ற  பிப்ரவரி 14 ஆம் தேதி புல்வாமாவில் பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தின் மேல்  தாக்குதல் நடத்திய  போது, மோடி ஜிம் கார்பெட்  வனப்  பூங்காவில்  செய்திப் படத்திற்காக படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருந்தது. அந்த  செய்திப் படம்தான்  ஆகஸ்ட் 12  அன்று இரவு ஒளிபரப்பப்படவிருக்கும் 'மேன் வெர்சஸ்  வைல்ட்' என்று சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் முன்னோட்டம் வெளியானதும் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவாகவும் விமர்சித்தும்  அநேக பதிவுகள்  வலைத்தளங்களில்  இடம் பெற்றுவருகின்றன. அதில் சாம்பிளுக்கு ஒன்று. மறைந்த  முன்னாள் பிரதமர் நேரு சொல்வதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. "மோடி என்னுடன் போட்டி போடுகிறாரா? நான் 'டிஸ்கவரி ஆஃப் இந்தியா'  என்ற பெயரில் இந்திய சரித்திரத்தை எழுதினேன். மோடியோ 'டிஸ்கவரி இந்தியா' சானல் நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார்."   

  இந்திய வனப்பகுதியில் பிரதமர் மோடியைக் காண ஆகஸ்ட் 12 இரவிற்காகக் காத்திருப்போம்!

   

  Image Courtesy: Bear Grylls twitter page
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai