உயிர்பலி வாங்கிய ‘பெயின் கில்லர்’!

குமார் மயங்கி விழுந்தது வலி நிவாரணி இஞ்செக்‌ஷன் எடுத்துக் கொண்ட பிறகே என்பதாலும், குமாருக்கு அந்த இஞ்செக்‌ஷனைப் போட்டு விட்டது அவர் மருந்து வாங்கிய மருந்தக உரிமையாளர் என்பதாலும் அவரைக் கைது செய்திருக்
உயிர்பலி வாங்கிய ‘பெயின் கில்லர்’!

இன்று நேற்றல்ல அலோபதி மருத்துவம் சரளமாகப் புழக்கத்துக்கு வந்த நாள் முதற்கொண்டே நம் மக்கள் வலி நிவாரணிகளை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துவதை பழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். காய்ச்சலா ஒரு பாராசிட்டமால் போட்டுக்கங்க, தலைவலின்னா மெட்டாஸின், அனாஸின் போதும். உடல் வலியா... மளிகைக்கடையில் சாரிடான் கிடைக்கும் வாங்கிப் போட்டுக்கிட்டு போர்த்திப் படுங்க. 1 மணி நேரத்துல விட்டுடும். இப்படித்தான் அறிவுரைகள் சர்வசாதாரணமாக வழங்கப்படும். இந்த அறிவுரைகளை நாம் தலைமுறை தலைமுறைகளாக கடத்திக் கொண்டிருப்பது தான் வேடிக்கை. அந்த வேடிக்கை சில நேரங்களில் உயிர்ப்பலியில் கொண்டு விட்டுவிடும் போது தான் அந்தப் பழக்கத்தின் அபத்தம் சுடுகிறது.

எத்தனை பட்டும் திருந்தாவிட்டால் எப்படி?

இதோ நேற்றுக்கூட அம்பத்தூரில் குமார் என்ற 43 வயது இளைஞர் ஒருவர் ஒரே வாரத்தில் ஓரிரு நாட்கள் இடைவெளிவிட்டு விட்டு வலிநிவாரணி மருந்தை இஞ்செக்சன் மூலமாக தொடர்ந்து 3 முறை எடுத்துக் கொண்டதில் இசகு பிசகாகி அது மாரடைப்பில் கொண்டு விட்டுள்ளது.

சிகிச்சைக்காக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது குமார் ஏற்கனவே இறந்து விட்டார் என்று அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். பிரேதப் பரிசோதனையின் பின்னரே குமாரின் மரணத்திற்கான காரணம் என்னவென்பது தெரிய வரும்.

ஆயினும் குமார் மயங்கி விழுந்தது வலி நிவாரணி இஞ்செக்‌ஷன் எடுத்துக் கொண்ட பிறகே என்பதாலும், குமாருக்கு அந்த இஞ்செக்‌ஷனைப் போட்டு விட்டது அவர் மருந்து வாங்கிய மருந்தக உரிமையாளர் என்பதாலும் அவரைக் கைது செய்திருக்கிறது காவல்துறை. காரணம் குமாருக்கு போடப்பட்ட இஞ்செக்‌ஷன் மருந்தின் வீரியம் அவருக்கு மருத்துவர் பரிந்துரைத்த அளவைக் காட்டிலும் அதிகம் என்பதால். 

மருந்தக உரிமையாளர் இப்படிச் செய்திருக்கக் கூடாது. சட்டப்படி அது தவறு. 

மருத்துவர் மருந்துச்சீட்டில் பரிந்துரைத்த மருந்தையே நோயாளிகளுக்கு விற்பதாக இருந்தாலும் கூட ஒரே வாரத்தில் அந்த மருந்தை 3 முறை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது மருந்தாளுனருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும், அப்படி இருக்கும் பட்சத்தில் நோயாளி வலி தாங்காமல் எத்தனை தூரம் வற்புறுத்திய போதும் கூட அந்த மருந்தாளுனர் கண்டிப்பாக மறுத்திருக்க வேண்டும். மருந்தின் வீரியம் பற்றிய பொறுப்புணர்வு இன்றி விற்பனை செய்ததால் அவர் தனது கடமையில் இருந்து தவறியவர் ஆகிறார். எனவே காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரித்திருக்கிறார்கள்.

விசாரணையின் போது, குமார் தோள்பட்டை மற்றும் கழுத்து வலியால் தொடர்ந்து அவஸ்தப்பட்டு வந்ததனால் தனது மருந்தகத்துக்கு வந்து வலிநிவாரணை மருந்துகளை வாங்குவதும், இஞ்செக்‌ஷன் போட்டுக் கொள்வதும் வழக்கம் தான் என்றும் சம்பவ தினத்தன்று மருந்தின் வீரியம் குறித்து தான் எடுத்துச் சொல்லியும் கூட கேட்காமல் இஞ்செக்‌ஷன் போடச்சொல்லி வற்புறுத்தியதால் வேறு வழியின்றி தான் அவ்விதமாகச் செய்ததாகவும் இதில் தன் தவறு எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், வலி நிவாரணை இஞ்செக்‌ஷன் எடுத்துக் கொண்டதும் சில நிமிடங்களில் குமார் மயங்கி விழுந்தது இவரது மருந்தகத்தில் தான் என்பதால் குமாரின் குடும்பத்தார் மருந்தக உரிமையாளரின் மீது புகார் அளித்ததில் இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் மருந்தக உரிமையாளரான பாஸ்கரன்.

இதில் தவறு இரண்டு பக்கமும் இருந்த போதும் குமார் இப்போது உயிருடன் இல்லை என்பதால் மருந்தக உரிமையாளர் பாஸ்கரன் மீதான கோபம் குமார் குடும்பத்தாருக்கு அதிகரித்திருக்கிறது.

இந்த வழக்கின் விசாரணை எப்படிச் செல்லும் என்பதை கிடைக்கக் கூடிய ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் தீர்மானிக்கும். எனினும் மருந்தாளுனர் பாஸ்கரனுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. 

மருந்தகம் நடத்துவதற்கான தகுதி பெற டி.ஃபார்ம் அல்லது பி ஃபார்ம் படித்திருக்க வேண்டும். மருந்துகளை கையாள்வதற்கான இந்த டிகிரி இருந்தால் மட்டுமே மருந்தகம் நடத்துவதற்கான உரிமம் அரசால் வழங்கப்படும். ஆனால் நம் நாட்டில் அப்படி முறைப்படி உரிமம் பெற்றவர்கள் மட்டும் தான் மருந்துக்கடைகளை நடத்துகிறார்களா? என்றால்? இல்லை என்பதே பதில்.

அரசை ஏமாற்றி உரிமம் பெறுவதற்காக டி ஃபார்ம், பி ஃபார்ம் படித்தவர்களின் சான்றிதழ்களை இரவல் பெற்று அவர்களையும் மருந்தகத்தில் ஒரு கூட்டாளியாக்கி முதலில் கடையைத் தொடங்கி விட்டு பிறகு தாங்களே சுயமாக மருந்தகங்களை நிர்வகித்து வருபவர்கள் கணிசமானோர் இங்கிருக்கிறார்கள். தவறான மருந்துகள் அளித்து பெரிய அளவில் பிரச்னைகள் எழாதவரை அவர்கள் குறித்தான புகார்கள் எழுப்பப்படுவதில்லை. அதனால் தான் நம் நாட்டில் போலி மருந்தாளுனர்கள் மேலும் மேலும் அதிகரித்து வருகிறார்கள். இவர்களால் உயிர்பலிகள் ஏதும் நிகழாத வரை மக்கள் விழிப்புணர்வு அடைவதே இல்லை. 

இந்த அம்பத்தூர் சம்பவத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மருந்தக உரிமையாளர் பாஸ்கரன் வெறும் +2 தான் படித்திருக்கிறார். ஆனால், ஒரு மருத்துவரைப்போலவோ அல்லது மருத்துவம் அறிந்த கம்பவுண்டர் போல தன்னை எண்ணிக் கொண்டு நோயாளிக்கு இஞ்செக்‌ஷன் போட்டிருக்கிறார். அதையும் அவர் முழு விவரத்துடனோ அல்லது பொறுப்புணர்வுடனோ செய்ததாகத் தெரியவில்லை. இப்படியான குற்றங்கள் எல்லாம் நடக்காமல் தடுக்க வேண்டும் எனில் தமிழ்நாட்டில் நகரங்கள் மட்டுமல்ல கிராமங்களில் உள்ள மருந்தகங்களின் உரிமங்களும் கூட அடிக்கடி சரிபார்க்கப்பட வேண்டும். மருந்தாளுனர்களின் தகுதியும் அடிக்கடி ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். தகுதியற்ற மருந்தக உரிமையாளர்கள், போலி டாக்டர்களைக் கண்டறிய இந்த கள ஆய்வுகள் உதவும்.

இதெல்லாம் போலி மருந்தாளுனர்கள் மற்றும் மருந்தகங்களை ஒழிக்கப் பயன்படலாம். அதைத்தாண்டி இவர்களால் உயிர்ப்பலி நேராமல் தடுக்க வேண்டுமெனில் மக்களுக்கு வலி நிவாரணிகள் குறித்த விழிப்புணர்வு கட்டாயம் தேவை. எடுத்ததெற்கெல்லாம் வலி நிவாரணிகளைத் தேடாமல் முறையான சிகிச்சை முறைகளைப் பின்பற்றும் நிதானம் தேவை. ஏனெனில், உடனடி நிவாரணம் தரக்கூடிய வலி நிவாரணிகளை டாக்டர்களின் ஆலோசனை இன்றி நாமே எடுத்துக் கொள்ளத் தொடங்கினோம் என்றால் சில சமயங்களில் அது மாரடைப்பில் கொண்டு நிறுத்தும் என அயல்நாட்டு ஆய்வு முடிவொன்று கூறுகிறது.

சமீபத்தில் இது குறித்து அமெரிக்காவின் மான்ட்ரீயல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் குழு ஆய்வொன்றை நடத்தி, முடிவுகளை வெளியிட்டனர்.

அந்த முடிவானது ’வலி நிவாரணிகளை, அளவுக்கு அதிகமாக நாம் எடுத்துக் கொள்ளத் தொடங்கினால், நாளடைவில் மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகம் என்று கூறுகிறது. NSAID அல்லது ஸ்டீராய்ட் மாத்திரைகள், மருந்துகள் உள்ளிட்ட அனைத்திலுமே காக்ஸ் 2 என்ற வேதிப்பொருளை அதிகளவு உள்ளது. இவற்றால், நம் உடலின் ரத்த அழுத்தம் பன்மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமுண்டு. இறுதியாக இது மாரடைப்பில் கொண்டு விட 50 % வாய்ப்புகள் உண்டு என அந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே இது போன்ற விபரீதமுடிவுகளைக் கண்ட பிறகாவது பொதுமக்களிடையே வலி நிவாரணிகளைப் பயன்படுத்துவது குறித்தான தெளிவு மேம்பட வேண்டும். இனியும் சாதாரண ஜலதோஷம், தலைவலி, முதுகுவலிக்கு வலிநிவாரணிகளை நாடும் போக்கு குறைய வேண்டும். அத்துடன் மருந்தாளுனர்களை அல்லது மருந்தகவம் வைத்திருக்கும் சாமான்யர்களைக் கூட மருத்துவராக எண்ணிக் கொண்டு கண்ட கண்ட வலி நிவாரணிகளை வாங்கி விழுங்கி வைக்கும் போக்கும் குறையவேண்டும்... இந்த விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே இத்தகைய விபரீதங்களைத் தடுக்க முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com