‘டீன் ஏஜ் பிராப்ளம்’ பள்ளிப் பருவத்தில் காதல் வயப்படுதல்.. நல்லதா/ கெட்டதா?

‘மஞ்சு நீ ஒரு ரோஜா மொட்டுஅதன் மேல் நானொரு பன்னீர் சொட்டுநீ எப்போதும் போகாதே என்னை விட்டுமொத்தத்தில் எனக்கு உன் மீது காதல் பித்து’ 
‘டீன் ஏஜ் பிராப்ளம்’ பள்ளிப் பருவத்தில் காதல் வயப்படுதல்.. நல்லதா/ கெட்டதா?

 ‘ம்மா நேத்து எங்க ஸ்கூல்ல லீடர்ஸ் மீட் நடந்துச்சு...’

‘ஓ... எப்பவும் நடக்கறது தானடா? புதுசா என்ன?’

‘இல்ல லீடர்ஸ் மீட்ன்னா, ஸ்கூல்ல எங்களுக்குத் தேவையான வசதிகள், எங்களுக்கு என்னென்ன இடைஞ்சல்கள் இருக்கு? எதையெல்லாம் எப்படியெல்லாம் ஷார்ட் அவுட் பண்றது? இப்படித்தான் பேச்சு போயிட்டு இருக்கும். ஆனா, நேத்து அதைப் பத்தி ஆரம்பிச்சுட்டு அப்புறம் அப்படியே விஷயம் வேற பக்கமா போயிடுச்சு...’

‘அப்படி என்ன பேசினீங்க, சொல்லு...’

‘ஹெச் எம் மேம், உங்க கிளாஸ்ல ஏதாவது டிஸ்டர்பன்ஸ் இருந்தா சொல்லுங்க லீடர்ஸ்ன்னு கேட்டாங்க, உடனே தர்ஷிணி எழுந்து, ‘மேம், இந்த 10 E மதுமிதா அடிக்கடி எங்க கிளாஸ் ரூம் முன்னாடியே நின்னுட்டு இருக்கா, ஏன் வர்றான்னே தெரியல. ஒருநாளைக்கு 10 தடவையாவது இந்தப் பக்கமா ரோமிங்லயே இருக்கா. அவ இந்தப் பக்கம் வந்தாலே பாய்ஸ்ல சிலர் கோரஸா கத்தறாங்க. இது நல்லா இல்லை. கிளாஸ்ல தமிழ் டீச்சர் பாடம் நடத்தும் போது பாடத்துல ’மது’ன்னு வந்தாக்கூட மதுமிதா... மதுடா, தேமதுர மதுடான்னு ஆரம்பிச்சிடறாங்க, 

அதே போல... இந்த 9 D காருண்யா வேற, அவளும் எதுக்கு இந்தப் பக்கம் அடிக்கடி ரோமிங்ல இருக்கான்னு தெரியல, பயாலஜி  டீச்சர்  ‘கார்னியா’ ன்னு பாடம் எடுக்க ஆரம்பிச்சா உடனே பாய்ஸ் காருண்யாடான்னு ஆரம்பிச்சிடறாங்க.. அதுக்கப்புறம் ஏது கிளாஸ்... அது பாடத்துல இருந்து டைவர்ட் ஆகி வேற வேற ஆர்கியூமெண்ட்ஸ்ல போயிடுது. மறுபடியும் டீச்சர் & ஸ்டூடண்ட்ஸ்  ஃபார்முக்கு வர கஷ்டப்பட வேண்டியதா இருக்கு.  தினமுமே இது எங்களுக்கு ரொம்பப் பெரிய டிஸ்டர்பன்ஸா இருக்கு.. ஏதாவது செஞ்சு இதை ஸ்டாப் பண்ணனும் மேம்’ ன்னு நீட்டி முழக்கி ஒரு கம்ப்ளெயிண்ட் ரெய்ஸ் பண்ணா, அதுக்கு சட்டுன்னு ஹெச் எம் மேம் ஒரே வார்த்தையில பதில் சொல்லிட்டாங்க.’

‘ம்ம்... என்னன்னு அந்தப் பொண்ணுங்கள கூப்பிட்டு வார்ன் பண்றோம்னா?’

‘ப்ச்சு.. இல்லம்மா, அருண் & மாதேஷ் உங்க கிளாஸ்ல தான் இருக்காங்களான்னாங்க, நாங்க யெஸ்ன்னு சொன்னோம்... உடனே அவங்க, அப்போ அந்த கேர்ள்ஸ் அப்படித்தான் ரோமிங் பண்ணுவாங்க, டோண்ட் வொர்ரி பார்த்துக்கலாம் சில்ட்ரென்ஸ்ன்னு சொல்லிட்டு ஒரு நிமிஷம் ஏதோ யோசிச்சாங்க அப்புறம் நெக்ஸ்ட் பிராப்ளம் என்னன்னு எங்கள டைவர்ட் பண்ணிட்டாங்க. எனக்கு ரொம்ப கோபமாயிடுச்சு. ப்ராப்ளம் சொன்னா கூப்பிட்டு கண்டிக்காம, இவங்களும் ஏன் பிரச்னைய டைவர்ட் பண்றாங்கன்னு தெரியல.’

‘சரிடா, ஹெச் எம் மேம்க்கு தெரியாதா என்ன? அவங்கள எப்போ, எப்படி கண்டிக்கனும்னு, விட்றா குட்டி, இதெல்லாம் உன் பிரச்னை இல்லை. அதனால இதையெல்லாம் உன் தலைக்குள்ள ஏத்திக்காத நீ. ஃப்ரெஷ் அப் ஆயிட்டு  உன் ஹோம் வொர்க் ஃபினிஷ் பண்ணு முதல்ல’ 

- என்றவாறு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

எனக்குப் புரிந்திருந்தது, கூப்பிட்டுக் கண்டித்தால் உடனே சட்டென்று திருத்திக் கொள்ளக் கூடியதல்ல இந்தப் பிரச்னை, கூப்பிட்டுச் சொன்னால் உடனே சரி என்று ஒப்புக் கொள்ளக்கூடிய வயதுமில்லை   இது! என்பதெல்லாம் ஹெச் எம்முக்குத் தெரியாதா என்ன? அவர் இந்தப் பிரச்னையை பெரிது படுத்தாமல் வேறு விதமான உபாயங்களில் எப்படிக் கண்டிக்க வேண்டும் என்பதை அறிந்தவராக இருந்தது ஒருவகையில் ஆறுதலான விஷயமே!

இப்படி மகளை சமாதானப்படுத்தி விட்டேனே தவிர, பள்ளிக்காலத்தில் காதல் வயப்படும் சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் குறித்த யோசனையிலிருந்து என்னால் அவ்வளவு சீக்கிரம் விடுபட முடியவில்லை. எனக்குள்ளிருந்து என் பள்ளிக்கால நினைவுகள் எல்லாம் கரை புரண்டு ஓடத் துவங்கின. அன்று எங்களுக்கு ‘ராட்சஸி’ திரைப்படத்து ‘கீதாராணி’ போன்றதொரு அருமையான டீச்சர் வாய்த்திருக்கவில்லை. குறைந்தபட்சம் இன்று என் மகளது ஹெச் எம் மேம் போலக்கூட அனுசரணையான டீச்சர்கள் அந்தக் காலத்தில் அமையாமல் போனது யாருடைய குற்றமெனத் தெரியவில்லை. 

1995 ஆம் வருடம் தேனி, என் ஏ கொண்டுராஜா நினைவு உயர்நிலைப்பள்ளி.. 10 ஆம் வகுப்பு அ பிரிவு, அன்று வகுப்பறைக்குள் நுழைந்ததுமே அங்கே பெரிதாக ஏதோ பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தது. பையன்களில் சித்திக் ராஜா, தலையில் கை வைத்து டெஸ்கில் கவிழ்ந்து கொண்டவனாகத் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தான். அவனைச் சுற்றி நின்று கொண்டு கோமதியும், காமாட்சியும், குமாரும், டேவிட்டும் தேற்றிக் கொண்டிருந்தார்கள். என்ன இது என்று பதறிப் போய் விசாரித்ததில், ‘ஆனந்த் தற்கொலை செய்து கொண்டான்’ அவனும், இவனும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் ஆச்சே, அதான் அழுதுட்டு இருக்கான். யாராலயும் அவனைத் தேற்றவே முடியல என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

‘ஆனந்த் தற்கொலையா?

ஏன்?’ எனக்கது பேரதிர்ச்சியாக இருந்தது. 

என் சித்தப்பா வீட்டுக்குப் பக்கத்தில் தான் அவன் வீடும். என்னைப் பொறுத்தவரை அவன் நல்ல நண்பன். வார இறுதியில் சித்தப்பா வீட்டுக்குச் செல்லும் போது சேர்ந்து கேரம் ஆடுவோம். சைக்கிள் விடுவோம், சமயங்களில் இன்னும் சில நண்பர்கள் சேர்ந்தால், பெரியவர்கள் யாரும் எங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டால் 7 ஸ்டோன்ஸ் கூட ஆடுவோம். எப்போது விளையாடக் கூப்பிட்டாலும் உடனே வருவான். அவனுக்குப் படிப்பு தான் வராதே தவிர மற்றபடி ரொம்ப அமைதியான பையன். அவன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?’ என்று எனக்கு குழப்பமாக இருந்தது. அந்தக் குழப்பத்துடனே அன்று நேரம் கழிந்து கொண்டிருந்தது.

மதிய உணவு நேரத்தில் ஜெயா வந்து சொன்னபிறகே தெரிய வந்தது. ஆனந்த் தற்கொலை செய்து கொண்டது காதல் தோல்வியினால் என்று.

இவனா? காதலித்தானா? யாரை? இப்படி அடுகடுக்காக முளைத்த கேள்விகளுக்கு ‘ஆமாம், இவனே தான், காதலித்த பெண் அவனது அத்தை வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருப்பவள், வேறு ஏதோ பள்ளியில் 8 ஆம் வகுப்புச் சிறுமி என்று பதில்கள் கிடைத்தன.

பள்ளிப் பருவத்தில் எனக்குத் தெரிய வந்த முதல் காதல் கதை இவனுடையது தான். அது மரணத்தில் முடிந்தது பெருந்துயரம்.

சில வாரங்களுக்கு அவனது இழப்பு எங்கள் வகுப்பை சுற்றிச் சுழன்று கொண்டிருந்து விட்டு பிறகு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பரபரப்பில் கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போனது.

இது ஒரு வகைக் காதல்.

மற்றொன்று மஞ்சுளாவுக்கு நேர்ந்த காதல்...

தன் தோழிகளுடன் வீட்டிலிருந்து நடந்தே பள்ளிக்கு வரக்கூடியவள் தான் மஞ்சு. அவளுக்கு யார் மீதும் காதலெல்லாம் இருந்ததில்லை. அவள் மீது தான் இடமால் தெருவில் ஃபேன்ஸி கடை வைத்திருந்த சுப்ரமண்யத்துக்கு காதல். அவன் +2 தாண்டவில்லை. படிப்பு ஏறவில்லையா.. சரி கடையைப் பார்த்துக் கொள் என்று அவனைத் தூக்கி ஃபேன்ஸி கடையில் உட்கார வைத்து விட்டார் அவனது அப்பா. மஞ்சுளா அவனது கடையைத் தாண்டித்தான் தான் படித்த இந்து நாடார் உறவின் முறை மகளிர் மேல் நிலைப்பள்ளிக்குச் சென்றாக வேண்டும். கடை பள்ளிக்கு வெகு அருகில் என்பதால் ஸ்டேஷனரி பொருட்களை அங்கே தான் வாங்குவது வழக்கம். அந்த சாக்கில் அவளைத் தன் கடையில் பார்த்துப் பழக்கப்பட்டவனுக்கு அவள் மேல் காதல் கரை புரண்டு ஓட ஒரு சுபயோக சுபதினத்தில், மஞ்சுவுடன் நடந்து வரும் தோழிகளில் ஒருத்தியிடம் லவ் லெட்டர் கொடுத்து அனுப்பினான் சுப்ரமண்யம்.

‘மஞ்சு நீ ஒரு ரோஜா மொட்டு
அதன் மேல் நானொரு பன்னீர் சொட்டு
நீ எப்போதும் போகாதே என்னை விட்டு
மொத்தத்தில் எனக்கு உன் மீது காதல் பித்து’ 
- என்றெல்லாம் பிதற்றி ஒரு கவிதை எழுதி அனுப்பி இருந்தான்.

இவளோ ஒரு பயந்தாங்கொள்ளி. அந்த லெட்டரை அப்படியே கொண்டு போய் அவளது அப்பாவிடம் கொடுத்து விட்டாள். அப்பாவோ, இவளைக் காட்டிலும் பெரிய பயந்தாங்கொள்ளியாக இருந்திருப்பார் போலும், அவர் ஓரிரு மாதங்களில் மகளைப் பள்ளியில் இருந்து நிறுத்தினார். 9 ஆம் வகுப்பு இறுதி அது. ஆண்டு முழுத்தேர்வைக்கூட எழுத விடவில்லை. மஞ்சு நன்றாகப் படித்துக் கொண்டிருந்த பெண். வகுப்பில் முதல் ஐந்து ரேங்குகளுக்குள் வந்து விடுவாள். அப்படிப்பட்டவளை படிப்பை நிறுத்தி சொந்தத்தில் ஒரு மாப்பிள்ளைக்கு பால்ய விவாகம் செய்து வைத்து விட்டார்கள். மஞ்சுவுக்கு அப்போது வயது 15 தானிருக்கும். மாப்பிள்ளைக்கு எப்படியும் 27 அல்லது 29 இருக்கலாம். மஞ்சுவின் கதை இப்படியானது.

இவள் விஷயத்தில் சுப்ரமண்யத்தின் காதல் இவளது படிப்புக்கு எமனானது. மஞ்சு எந்தத் தவறும் தனதல்லாமலே பள்ளிப் பருவத்துக்குக் காதலுக்கு பலிகடாவானாள்.

+2 வில் ஜான்ஸி என்றொரு சினேகிதி இருந்தாள் எனக்கு. அவளுக்கு எல்லாவற்றிலும் த்ரில் வேண்டும். அவள் எங்கள் பள்ளியின் ஸ்போர்ட்ஸ் ஸ்டார். எல்லா விளையாட்டுக்களும் அவளுக்கு அத்துப்படி. ஸ்போர்ட்ஸ் டே அன்று பார்க்க வேண்டும் அவளது அதகளத்தை. அவளது அம்மாவே, எங்கள் பள்ளியில் PET டீச்சர் என்பதால் டீச்சர் மகள் என்ற சலுகையில் அவள் ரொம்பவும் சுதந்திரமாகத் திரிந்து கொண்டிருந்தாள். பக்கத்து கிராமத்திலிருந்து பஸ்ஸில் தான் பள்ளிக்கு வர வேண்டும். அப்படி வரும் போது உசிலம்பட்டி கல்லூரி மாணவன் ஒருவனுடன் அவளுக்குக் காதல் அரும்பியது. அப்புறம் பிளஸ் 2 வாவது ஒன்றாவது என்று அவள் பாட்டுக்கு அவன் நினைவில் படிப்பைக் கோட்டை விடத் தொடங்கினாள். அம்மாவும், பிற டீச்சர்களும் எத்தனை அறிவுரை சொல்லியும் பயனிருந்ததாகத் தெரியவில்லை. விளைவு பரீட்சையில் ஃபெயில் ஆனாள். அத்துடனாவது நிறுத்தி விட்டு மேலே டுடோரியலுக்குப் போயிருந்தால் ஒருவேளை உருப்பட்டிருப்பாளோ என்னவோ?! ஆனால், அவள் அப்படி உருப்பட விருப்பமின்றி அம்மா, அப்பாவின் கனவில் மண்ணைத் தூவி விட்டு அந்தக் கல்லூரி மாணவனுடன் ஊரை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டாள்.

இப்போதும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாள். எங்கேயோ ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் அரசு வேலை பெற்று சுமுகமாக வாழ்ந்து கொண்டிருக்க வேண்டியவள் இன்று திருப்பூர் பனியன் கம்பெனி ஒன்றில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்துக் கொண்டிருப்பதாகத் தகவல். கணவனும் அங்கேயே ஏதோ ஒரு சாதரண வேலையில் இருப்பதாகத் தெரிந்தது.

வாழ்க்கையை மனம் போன போக்கில் வாழத்துடித்ததற்கான விலையை இன்று அவள் கொடுத்துக் கொண்டிருக்கிறாளோ என்று சில நேரம் தோன்றுவதுண்டு.

இவள் விஷயத்தில் சரி, ஆனால், மஞ்சு என்ன செய்தாள்? அவள் வாழ்க்கை ஏன் அப்படி ஆனது? என்று நீங்கள் கேட்கலாம். பள்ளிப் பருவத்தில் யாருக்கு யார் மீது காதல் வந்தாலும் பிரச்னை இரண்டு தரப்புக்கும் தான் என்பதை மஞ்சுவின் கதையிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும். அவளது அப்பாவுக்கு மகள் குறித்த பயம் ஏன் வந்தது? அத்தனை அவசர, அவசரமாக ஏன் அவளுக்குத் திருமணம் செய்து வைத்தார்? என்பதையெல்லாம் யோசித்தால் இந்தச் சமூகத்தின் மீதும் பல நேரங்களில் கோபம் வரத்தான் செய்கிறது. மகளுக்கு யாரோ ஒரு ஊர், பேர் தெரியாத பையன் லவ் லெட்டர் கொடுத்தால், அதையும் அவளது தவறாக இந்த உலகம் கற்பிதம் செய்து கொள்ளக் கூடுமோ என்ற  பயம் தான் அவரை அப்படிச் செய்யத் தூண்டியிருக்கக் கூடும். கல்யாணம் தான் அதற்கான ஒரே தீர்வு என்று அவர் நினைத்தது வேதனையின் உச்சம்.

மஞ்சுவுக்கு இன்று தோளுக்கு உயர்ந்த இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். வீட்டில் கணவர் மற்றும் மகன்களின் டாமினேஷன் தான் அதிகம். இவள் அவர்கள் கேட்டதைச் செய்து கொடுத்து விட்டு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க வேண்டிய ஹைடெக் வேலைக்காரியாகிப் போனாள்.

எங்கே தொட்டு எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்று பாருங்கள்... சரி இப்போது சொல்லுங்கள் பார்க்கலாம்...

அப்படியே நல்லதாக இருந்தாலும் காதலின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளும் பக்குவம் அந்த வயதுக்கு உண்டா? என்ற கேள்வியை நாம் புறக்கணிக்க முடியாது.

ராட்சஸியின் கீதாராணி சொல்லும் பதில் தான் இதற்குப் பொருத்தமானது.

பள்ளியில் புதிதாகக் காதல் வயப்படவிருக்கும் மேல்நிலைப்பள்ளி மாணவியொருத்திக்கு ஹெச் எம் கீதாராணி சொல்லும் அறிவுரை;

‘நீ ஒரு இலக்கை நோக்கி போய்க்கொண்டிருக்கிறாய். அந்த இலக்கை எட்டினால் உனக்கு மிகப்பெரிய புதையல் காத்திருக்கிறது. அதற்கான பயணத்தில் இருக்கும் போது இடையிடையே உன் காலில் சிறு சிறு நகைகள் இடறுகின்றன. அவற்றைப் பார்க்கும் போது நிச்சயம் மனம் தடுமாறும் தான். இவற்றையும் எடுத்துக் கொண்டால் என்ன என்று பேராசை வரும். அப்படி எடுக்கத் தொடங்கினால் மனம் இதில் லயித்து இதிலேயே திருப்தி கண்டு விடும். பிறகு உனக்காகக் காத்திருக்கும் பெரும் புதையலை நீ புறக்கணித்தவனாகி விடுவாய். இப்போது சொல் உனக்குத் தேவை பெரும் புதையலா? இல்லை அடிக்கடி காலை இடறும் சிறு சிறு நகைகளா?!’

-என்று கேட்பார்.

அதற்கு அந்த மாணவி சொல்லும் பதில்;

நான் நாளையிலருந்து வேற பஸ்ல வரப்போறேன் டீச்சர். 

- என்பதாக இருக்கும்.

இதே முடிவு தான் எல்லா விதமான பள்ளிப் பருவத்துக் காதல்களுக்கும் பொருத்தமானது... 

காதல் இனிமையானது... காதல் புனிதமானது, உலகின் மகத்தான உணர்வு காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் தான்.

ஆனால், அதை எங்கே, எப்படி, எப்போது வெளிப்படுத்த வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்ற மன முதிர்ச்சி நம் சிறுவர், சிறுமிகளுக்கும், இளைஞர், இளம்பெண்களுக்கும் இயல்பில் வர வேண்டும்.

ஆணோ, பெண்ணோ, அவர்கள் படிப்பது பள்ளியிலோ, கல்லூரியிலோ எங்கே வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், இந்த ‘வயசுக் கோளாறு’ என்கிறார்களே அது எல்லோருக்கும் பொது. இன்று பெரியவர்களாகவும், பெற்றோர்களாகவும், ஆசிரியர்களாகவும் இருக்கக் கூடிய, இயங்கக் கூடிய நம் எல்லோருமே அதைத் தாண்டித்தான் வந்திருப்போம். ஆக, அந்த உணர்வுகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கான தீர்வும், பதிலும் நமக்குள்ளே தான் இருக்கிறது.

சிலர் அதைத் தவறுதலாக புரிதலற்றுக் கையாண்டு தங்களை அறியாமலே ஆனந்த் போன்ற இளங்கன்றுகளை தற்கொலை வரை செல்லத் தூண்டி விடுகின்றனர்.

சிலரோ மஞ்சுவின் அப்பா போல எல்லாத் தவறுகளுக்கும் (!) தங்களையே பொறுப்பாக்கிக் கொண்டு தங்களுக்குக் கிடைத்திருக்க வேண்டிய குறைந்த பட்ச நல்வாழ்க்கையைக் கூட  புறக்கணித்தவர்களாகி விடுகிறார்கள்.

இன்னும் சிலரோ ஜான்ஸி போல எல்லாவற்றையும் மிகத் திறமையாகக் கையாளக் கூடிய வல்லமை படைத்தவர்களாக் இருந்தும் சிற்றின்ப மோகத்தில் சிக்குண்டு மொத்த வாழ்வும் திசை மாறிச் செல்ல அனுமதித்து விடுகிறார்கள்.

எனவே பள்ளிப் பருவத்தில் வரும் காதல் மாயை என்றோ, பொய்யானது என்றோ, உருப்படாதது என்றோ எந்த முடிவுக்கும் வருவதை விட்டு விட்டு. அதன் சந்தோஷத்தை மனதிற்குள் ரகசியமாக ரசிக்கக் கூடியவர்களாக மட்டுமே இருந்து விடுவது நிம்மதி.

அந்த வயதில் அதற்கான எல்லை அவ்வளவாகத்தான் இருக்க வேண்டும்.

நம் திரைப்படங்களில் காட்டப்படும் காதலன், காதலி போல பள்ளிப் பருவத்தில் சிறுவர், சிறுமியர் தம்மைக் கற்பனை செய்து கொண்டு வாழ முற்படும் போது தான் அவர்கள் வாழ்வின் இடியாப்பச் சிக்கல்களுக்குள் விரும்பித் தலைகொடுத்து மாட்டிக் கொண்டவர்களாகிறார்கள். இதிலிருந்து மாணவ, மாணவிகளை ரட்சிக்கும் பெரும் பொறுப்பு அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரிய, ஆசிரியர்களுடையதாகிறது. அவர்களையும், பிள்ளைகளின் தோழன், தோழிகளையும் தாண்டித்தான் மாணவ, மாணவிகளின் காதல் விஷயம் பெற்றோர்களை அடைகிறது. எனவே இரண்டும் கெட்டான் வயதென்று சொல்லக்கூடிய டீன் ஏஜ் மாணவ, மாணவிகளைக் கையாளும் ஆசிரிய, ஆசிரியர்கள் ராட்சஸி கீதாராணி போலவோ அல்லது சாட்டை படத்தின் தயாளன் சார் போலவோ கொஞ்சம் மெச்சூர்டாக நடந்து கொண்டால் தேவலாம்.

அப்படியான டீச்சர்கள் நம்மிடையே பலர் இருக்கிறார்கள். 

அவர்களது அறிவுரையை அல்லது ஆலோசனையை ஏற்று  காதல் விஷயத்தில் பொறுமையைக் கையாண்டு வாழ்வில் முன்னேறியவர்கள் எவரேனும் இருப்பின்...

உங்களது பள்ளிப் பருவத்துக் காதலை நீங்கள் வெற்றிகரமாகக் கையாண்டு எப்படி சாத்தியமாக்கிக் கொண்டீர்கள் அல்லது எப்படி அதைப் புறக்கணித்து வாழ்வில் ஜெயித்தீர்கள் போன்ற அனுபவங்களை தினமணி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இரு தரப்பாகப் பிரிந்து நின்று கூட இந்த விஷயத்தை அணுகலாம்.

பள்ளிப் பருவத்துக் காதலுக்கு ஆயுள் குறைவு!

பள்ளிப்பருவத்துக் காதலுக்கு ஆயுள் நெடிது!

என்று பிரிந்து நின்று கூட வாதிடலாம்.

ஆரோக்யமான விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளைவு... மாணவ, மாணவிகளுக்கு காதல் குறித்தான புரிதல்கள் மேம்பட வேண்டும் என்பதே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com