வேண்டாம் என்று சொன்னவர்களை திரும்பிப் பார்க்க வைத்த தங்க மகள்! நெகிழ்ச்சியான வெற்றிக் கதை!

வேண்டாம்' என்று பெயர் சூட்டப்பட்ட மகள் பொறியியல் படிப்பு மூலம் ஜப்பான் மென்பொருள் நிறுவனம்
வேண்டாம் என்று சொன்னவர்களை திரும்பிப் பார்க்க வைத்த தங்க மகள்! நெகிழ்ச்சியான வெற்றிக் கதை!

'வேண்டாம்' என்று பெயர் சூட்டப்பட்ட மகள் பொறியியல் படிப்பு மூலம் ஜப்பான் மென்பொருள் நிறுவனம் நடத்திய கல்லூரிவளாக நேர்காணலில் ஆண்டுக்கு ரூ.22 லட்சம் ஊதியத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் 'பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் - பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' என்ற திட்டத்தின் தூதுவராகவும் அப்பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போதைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டு வருகிறது. பெண் குழந்தைகள் என்றால் வளர்ந்ததும் திருமணம் செய்து வைக்க நகை, சீர்வரிசை, வரதட்சணை என நிறைய செலவு செய்ய வேண்டியுள்ளதே என்ற கவலை பெற்றோர்களுக்கு உள்ளது. இதனால் பெண் சிசுக்களை கருவிலேயே அழிக்கும் செயல்களும் நடைபெற்றது. 

எனினும், பெண் குழந்தைகள்தான் வருங்காலத்தில் பெற்றோருக்கு பாதுகாப்பாக உள்ளனர். பலர் அதை உணராமலேயே இருந்து வருகின்றனர். இதற்கும் ஒருபடி மேல் அடுத்தடுத்தது பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களுக்கு 'வேண்டாம்' என்று பெயர் சூட்டும் வழக்கமும் மக்களிடையே இருந்து வருகிறது. 

உதாரணமாக, திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாராயணபுரத்தைக் குறிப்பிடலாம். இது 150 குடியிருப்புகளைக் கொண்ட கிராமமாகும். இந்த கிராமத்தில் பெண் குழந்தைகள் பிறந்தால் "வேண்டாம்' என பெயர் சூட்டும் வினோத பழக்கம் இருந்து வருகிறது. 

அவ்வாறு 'வேண்டாம்' என்று பெயர் சூட்டப்பட்ட இளம் பெண் ஒருவர் கல்லூரிப் படிப்பின் இறுதி ஆண்டிலேயே வளாக நேர்காணல் மூலம் ஜப்பான் மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குத் தேர்வாகியுள்ளார். ஆண்டுக்கு ரூ.22 லட்சம் சம்பளத்திற்குத் தேர்வாகி பெண்கள், ஆண்களுக்கு இணையானவர்கள்தான் என்பதை நிரூபித்துள்ளார். தனக்கு 'வேண்டாம்' என்று பெயர் சூட்டிய ஏழைப் பெற்றோருக்கு வாழ்வு தேடி வரச் செய்துள்ளார். 

நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த அசோகன்-கெளரி தம்பதியர். விவசாயக் கூலி வேலை செய்வதோடு கறவை மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகின்றனர். மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்த தம்பதியருக்கு ஏற்கெனவே ஷன்மதி, யுவராணி என்ற இரு பெண் குழந்தைகள் பிறந்தன. அதன் பின் 3-ஆவதாகவும் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்குதான் 'வேண்டாம்' என பெயர் சூட்டினர். இவ்வாறு செய்வதன் மூலம் அடுத்து ஆண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில் அப்படிச் செய்தனர். இதேபோல் அந்த கிராமத்தில் மட்டும் 8 பெண் குழந்தைகளுக்கு 'வேண்டாம்' என பெயர் சூட்டப்பட்டு அதே பெயரில் திருமணம் செய்து கொண்டு புகுந்து வீடு சென்றுள்ளனர். 

அதேபோல், அசோகன் தம்பதியின் மகளான 'வேண்டாம்', தொடக்கம் முதல் மேல்நிலை வரையில் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்தார். மேல்நிலைப் படிப்பில் 1095 மதிப்பெண்கள் பெற்றார். அதிக மதிப்பெண்கள் எடுத்த காரணத்தால் சிஐடி-யில் (சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி) கல்வி உதவித்தொகை பெற்று பொறியியல் படிப்பில் சேர்ந்து படித்தார். அவரது பிறப்புச் சான்று முதல் பள்ளிச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை வரை 'வேண்டாம்' என்ற பெயரே இடம்பெற்றுள்ளது. தற்போது, பொறியியல் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறார். இதில் திறமையானவர்களைக் கண்டறிந்து புரொஜக்ட் தயாரிப்பதற்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். 

அவ்வாறு தேர்வு செய்யப்படட 11 பேரில் 9 பேர் ஆண்கள். இரண்டு பேர் மட்டுமே பெண்கள். அவர்களில் "வேண்டாம்' ஒருவர். தற்போது இறுதியாண்டு படித்து வரும் அவர், ஜப்பான் மென்பொருள் நிறுவனம் நடத்திய வளாக நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஆண்டுக்கு ரூ.22 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 'வேண்டாம்' என பெயர் சூட்டிய பெற்றோருக்கு அவர் பெருமையும், புது வாழ்வும் தேடித் தந்துள்ளார்.

இதுகுறித்து வேண்டாமின் தந்தை அசோகன் கூறியதாவது:

'எனக்கு ஷன்மதி, யுவராணி என ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே 3ஆவதாகவும் பெண் குழந்தை பிறந்தது. எங்கள் கிராமத்தில் பெண் குழந்தைக்கு வேண்டாம் என பெயர் வைத்தால் அடுத்த குழந்தை ஆணாக பிறக்கும் என்பது நம்பிக்கை. அதன்படி, எங்களுக்கு மூன்றாவதாகப் பிறந்த குழந்தைக்கு எனது பெற்றோர் வேண்டாம் என பெயர் வைக்கச் சொன்னார்கள். அதேபோல், வேண்டாம் என பெயர் சூட்டினோம். 

எனினும், கிராம மக்களின் நம்பிக்கைக்கு மாறாக, எனக்கு நான்காவதாகவும் பெண் குழந்தைதான் பிறந்தது. எனது குழந்தைகள் 4 பேரையும் பட்டப்படிப்பு வரை படிக்க வைத்துள்ளேன். இதில் வேண்டாம்தான் சென்னை சிஐடி (C.I.T) கல்லூரியின் கல்வி உதவித் தொகை பெற்று படித்தார். தற்போது அவர், இறுதியாண்டு படித்து வரும் நிலையில், ஜப்பான் மென்பொருள் நிறுவனம் நடத்திய வளாக நேர்காணலில் பணிக்கு தேர்வாகியுள்ளார். அதுவும் ஆண்டுக்கு ரூ.22 லட்சம் சம்பளத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்' என்றார். 

வேண்டாம்(22) கூறியது:

எனது பெற்றோருக்கு 4 பெண் குழந்தைகள். அதில் நான் மூன்றாவது மகளாகப் பிறந்தேன். ஆரம்பப் பள்ளி முதல் உயர் நிலைக் கல்வி வரையில் வேண்டாம் என்ற பெயராக இருப்பதால் பலர் என்னைக் கிண்டல் செய்வார்கள். அப்போது எல்லாம் கஷ்டமாக இருக்கும். எனினும், நாம் கஷ்டப்படுவது எல்லாம் திறமையை வெளிப்படுத்தவே என்று மனதைத் தேற்றிக் கொள்வேன். அதையெல்லாம் தாங்கிக் கொண்டு மேல்நிலைக் கல்விக்கு முன்னேறினேன். தற்போது சி.ஐ.டியில் இறுதியாண்டு படித்து வருகிறேன். 

அத்துடன், பாதுகாப்பு மற்றும் தற்காப்பு மையமாக வைத்து ஸ்மார்ட் கார்டு வசதியுடன் தானியங்கி கதவு குறித்த புராஜெக்ட் தயார் செய்தோம். அப்போது, ஜப்பானைச் சேர்ந்த 'ஹியூமன் ரெய்சோ' என்ற மென்பொருள் நிறுவனத்தினர் எங்கள் கல்லூரியில் வளாக நேர்காணல் நடத்தினர். அப்போது நான் தயாரித்து வைத்திருந்த தானியங்கிக் கதவுகளால் தற்காப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த செயல் விளக்கம் குறித்து கேட்டார்கள். அது தொடர்பாக விளக்கமாக பதில் அளித்தேன்.

அதைத் தொடர்ந்தே அந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.22 லட்சம் ஊதியத்தில் பணியாற்ற நான் தேர்வு செய்யப்பட்டேன். பெற்றோரால் வேண்டாம் என பெயர் சூட்டிய நிலையில் வேண்டும் என்ற அளவுக்கு வாய்ப்புகளை வழங்கியதற்கு சிஐடி-யின் துணைத் தலைவர் ஜானராம் மற்றும் நிர்வாகம்தான் காரணம். இறுதியாண்டு படிப்பை நிறைவு செய்து விட்டு அடுத்த ஆண்டில் ஜப்பான் செல்ல உள்ளேன். 

இதற்கிடையே ஓராண்டுக்கு 'பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் - பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற மத்திய அரசின் திட்டத்தின் திருவள்ளூர் மாவட்டத் தூதராக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் என்னை நியமித்துள்ளார். அதனால், பெண் குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்தும் அவர்களுக்குக் கற்பிப்பிப்பது குறித்தும் பள்ளி, கல்லூரிகளுக்கும், கிராமங்களுக்கும் நேரில் சென்று பொதுமக்கள் மற்றும் மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவேன்' என்று அவர் தெரிவித்தார்.
- எஸ்.பாண்டியன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com