கார்ப்பரேட் நண்பனா/எதிரியா?!

நாம் ஒரு நல்ல திறமை வாய்ந்த தொழில்முனைவோர் ஆவதால் குறைந்தது 2 பேரில் தொடங்கி 2,00,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியும். நம்மால் 20 லட்சம் பேரை வாழவைக்க முடியும்.
கார்ப்பரேட் நண்பனா/எதிரியா?!


இணையதளம் இளைஞர்களுக்கு மன ரீதியான குழப்பங்களை ஏற்படுத்துவது உண்மை தான். குழப்பங்களின் வரிசையில் கார்ப்பரேட் குறித்த குழப்பமும் உள்ளது. குறிப்பாக முகநூல் போன்ற சமூக வலைதலங்களின் தாக்கத்தாலோ ஏனோ இன்றைக்கு பல இளைஞர்களின் மனதில் கார்ப்பரேட் என்ற விஷயம் எதிரியாகவே சித்தரிக்கப் பட்டு விட்டது. அது என்னவென்றே தெரியாமல் சினிமா அல்லது அரசியல்வாதிகளின் உணர்ச்சி தூண்டுதலால் எதிர்க்கிறோம், கார்ப்பரேட் முதலாளிகள் நம்மை ஏமாற்றி சுகம் காண்பதாக சித்தரிக்கப்பட்டுவிட்டது. ஆனால் நம்மால் இயங்கும் கூகுளில் இருந்து நாம் உபயோகிக்கும் கார், பைக் வரை அத்தனையும் கார்ப்பரேட்தான் என்பதை நாம் உணரவில்லை.  கொஞ்சம் முதலீட்டு அறிவும், தொழில்நுணுக்கமும் தெரிந்தால் கார்ப்பரேட்டைப் புரிந்துகொள்ளலாம். ஏன் நாமேகூட நாளை ஒரு கார்ப்பரேட் முதலாளி ஆகலாம். 

முதலாளித்துவம், அடக்குமுறை என்ற வசனத்திற்கெல்லாம் இடம் கொடுக்காமல் நாம் எப்படி அதுபோல் ஆவது? நாமும் அதுபோல் முதலாளி ஆக வழி என்ன? என்று பாதையை மாற்றிப் பாருங்கள். கார்ப்பரேட் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். எந்த கார்ப்பரேட் முதலாளியும் ஒரே நாள் இரவில் முதலாளி ஆகவில்லை. தொழில் சார்ந்த நுணுக்கங்களும், தேர்ந்தெடுத்த தொழிலுக்கான பாதையை வகுக்கத்தெரிந்த பட்டறிவும் இருந்தாலே போதுமானது. நாமும் நல்ல முதலாளிதான். 

நாம் ஒரு நல்ல திறமை வாய்ந்த தொழில்முனைவோர் ஆவதால் குறைந்தது 2 பேரில் தொடங்கி 2,00,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியும். நம்மால் 20 லட்சம் பேரை வாழ வைக்கமுடியும். வேலை தேடுவதை விட்டுவிட்டு வேலை கொடுப்பதைப் பற்றியும், கொடுப்பதற்காக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதைப் பற்றியும் யோசிக்க வேண்டும். எந்த தொழிலானாலும் சரி, நம் தொழில் சார்ந்த வளர்ச்சியை நிரூபித்தால், நம்மை நம்பி முதலீடு செய்ய வரிசை கட்டி நிற்க ஆட்கள் உண்டு. தொழில் தொடங்கும் எண்ணம்தான் இன்றைய பட்டதாரிகளிடம் ஏனோ இல்லாமல் போயிற்று. 

கார்ப்பரேட்டை எதிர்க்கும் நாம்தான்.. நாம் படித்த பட்டத்தை கொண்டு இன்னொரு கார்ப்பரேட்டின் வாசலில் வேலைக்காக நிற்கிறோம். சொந்த முதலீடுகளால் எந்த நிறுவனமும் வளரவில்லை, எல்லா கார்ப்பரேட் நிறுவனத்திற்கும் பின்னால் பெரிய அளவிலான எண்ணிக்கையில் முதலீட்டாளர்கள் உள்ளனர். கார்ப்பரேட் என்றால் அரசிடம் கடன் வாங்கியோ அல்லது அவனது சொந்த பணத்தை முதலீடு செய்து லாபத்தை அனுபவிக்கிறான் என்றுதான் பலரின் எண்ணமும். கார்ப்பரேட்டை கண்மூடித்தனமாக புரிந்துகொண்டதன் விளைவு தான் இது. 

அம்பானி, ஜியோ நெட்வொர்க்கில் செய்த முதலீடு ஒரு லட்சம் கோடி. அது அவர் சொந்தப் பணமோ, வங்கிக் கடனோ இல்லை. இவ்வளவு பெரிய தொகையை எந்த அரசும் கடன் தராது. முழுதும் மக்கள் (முதலீட்டாளர்கள்) அவரை நம்பி, அதாவது அவரது தொழில் வளர்ச்சியில் உள்ள நம்பிக்கையில் இட்ட முதலீடு. அதில் வரும் லாபமும் முதலீட்டின் அடிப்படையில் பிரிக்கப்படும். மேலும் அந்த முதலீட்டின் மீதான பங்குகள் மூலம் நிறுவனத்தின் மதிப்பும் கூடும். ஆக தொழில் வளர்ச்சி பெறும், தொழில் வளர்ச்சியால் நிறுவனத்தின் மதிப்பு உயர உயர முதலீட்டின் மதிப்பும் உயரும். அந்த நிறுவனம் மற்றும் முதலாளியின் வளர்ச்சியால் முதலீட்டாளர்களும் வளர்கிறார்கள், தவிர அந்த நிறுவனத்தை நம்பி இருக்கும் தொழிலாளர்கள் என கிட்டத்தட்ட பல குடும்பங்கள் வாழ்க்கை காணும்.

எடுத்துக்காட்டாக டி.வி.எஸ். (TVS)  கம்பெனியின் வருமானம் (2019 Apr) ரூ.20,160 கோடி. லாபம் மட்டும் ரூ.725 கோடி. அந்த கம்பெனியின் பங்குகள் மொத்தம் 475,087,114. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பெரிய கம்பெனி, பெரிய அளவில் முதலீடு என்பதல்ல விஷயம்.. அதற்கான காரணம் என்ன என்பதை அறிந்தால் விஷயம் புரிந்துவிடும். 

Anti Business Mind தான் கார்ப்பரேட்டை புரிந்துகொள்ள எத்தனிக்காத காரணம். கார்ப்பரேட் முதலாளிகளை எதிரியாக நினைப்பது, தோற்றவர்களை நல்லவர் என்றும், துறையில் சிறந்து விளங்கி ஜெயித்தவர்களை தவறானவர் என்ற புரிதலில்தான் உள்ளது நம் எண்ணங்கள். நிறுவனத்தின் வளர்ச்சி, அதன் தொழில் மீதான நம்பிக்கை, வெற்றிகரமாகத் தொழில் தொடங்கும் புத்திசாலித்தனம், நிர்வாக திறமை இவற்றை நம்பியே முதலீடுகள் பயணம் செய்கின்றன. 

இதனால் ஏற்படும் நன்மைகள்..

முதலீட்டாளர்களின் லாபம் மட்டுமன்றி நாட்டின் பொருளாதார சூழ்நிலைகளையும் மாற்றவல்லவை.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், நாட்டிற்கு வரியும் கிடைக்கும்.

ஆக, பொருளாதாரம் சார்ந்த அறிவும் தேர்ந்தெடுக்கும் தொழிலில் துறை சார்ந்த நுணுக்கங்களையும் அறிந்தாலே போதும். எவரொருவரும் சிறந்த முதலீட்டாளனாகவோ அல்லது தொழில்முனைவோனாகவோ ஆகலாம்.

தொழில்முனைவோன் ஆவதும் தொழில் அதிபர் ஆவதும் சுலபமான விஷயம் இல்லைதான். என்றாலும், எல்லாவிதமான வாய்ப்புகளையும் பெற்ற நாம் ஏன் இன்னொரு கார்ப்பரேட் நிறுவனத்திடம் வேலைக்கு நிற்க வேண்டும்?

நாமே கார்ப்பரேட் ஆகலாமே!

நான் சொல்வது சரியா? இல்லையா என்பதைக் கொஞ்சம் சிந்தித்துத்தான் பாருங்களேன். 

Image Courtesy: entrepreneurshipforathletes.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com