Enable Javscript for better performance
Dr.muthulatchumi reddy's 133 Birth day google wishes through doodle!- Dinamani

சுடச்சுட

  

  ‘வாழ்வில் குழந்தைப் பருவம் முதலே நான் ஒருபோதும் ஆரோக்யமாக இருந்ததே இல்லை’: சொன்னவரே தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்!

  By DIN  |   Published on : 30th July 2019 11:51 AM  |   அ+அ அ-   |    |  

  muthulatchumi

   

  குழந்தைப் பருவம் முதல் எனது வாழ்க்கையில் நான் ஆரோக்கியமாக இருந்ததே இல்லை” என்று தன்னைத்தானே சொல்லிக்கொண்ட அந்தப் பெண்தான்... மருத்துவம் படித்த முதல் இந்தியப் பெண் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. நோய்மையின் அத்தனை குரூரங்களையும் அருகிருந்து மட்டுமல்ல தனக்கத்தானேயும் முற்றிலும் உணர்ந்தவரான அப்பெண்மணி தமிழகத்தின் முதல் பெண் மருத்துவராகும் தகுதி பெற்றது கடவுளின் அனுக்கிரஹத்தால் மட்டுமல்ல தனது விடாமுயற்சி மற்றும் சமூகசேவைக் கண்ணோட்டத்தினாலும் தான்.

  பாதிக்கப்பட்டவர்களுக்குத் தானே தெரியும் என்ன செய்தால் அல்லது எப்படி முயன்றால் அந்த பாதிப்பிலிருந்து வெளிவரமுடியுமென்று?!

  அப்படித்தான் தனது நோய்மையிலிருந்து விடுபட தானே ஒரு மருத்துவராகித் தீர்வது என முடிவெடுத்தார் முத்துலட்சுமி.

  1886 ஆம் ஆண்டு ஜூலை 30 நாள் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் கல்வித்துறை அதிகாரியாக இருந்த நாராயணசாமி - சந்திரம்மாள் தம்பதிக்கு மூத்த மகளாகப் பிறந்தார் முத்துலட்சுமி. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற பழைய பஞ்சாங்கப் பேச்சு கோலோச்சிய அந்தக் காலத்தில் சமூகத்தின் முரட்டுப் பிடிவாத எதிர்ப்புகளுக்கு பலியாகாது நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போட்டு 4 வயதில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தொடங்கி, தனது பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரியில் பயில விரும்பிய முத்துலட்சுமி ரெட்டிக்கு அவரது தந்தையார் மிகுந்த ஊக்கமளித்தார். ஆனால், வெளியூர் கல்லூரிகளில் பெண்கள் தங்கிப் படிக்குமாறு அந்தக்காலத்தில் விடுதி வசதிகள் இல்லை. உள்ளூர் கல்லூரியிலோ பெண்களைச் சேர்ப்பதில்லை என்ற கட்டுப்பாடு இருந்தது.

  இந்தச் சூழலில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர 1904 ஆம் ஆண்டு ஃபிப்ரவரித் திங்கள் 4 ஆம் நாளில் விண்ணப்பித்தார் முத்துலட்சுமி. அப்போது சமஸ்தான ஆட்சியில் இருந்த அதிகாரிகளில், சில பழமைவாதிகள் இதைக் கடுமையாக விமர்சித்ததோடு பிடிவாதமாக எதிர்க்கவும் தொடங்கினர். ஆனால், பெண் கல்வியில் பெரும் ஆர்வமும், ஈடுபாடும், முற்போக்கு சிந்தனையும் கொண்ட அப்போதைய புதுக்கோட்டை மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் எதிர்ப்புகளைச் தூக்கி எறிந்து விட்டு, முத்துலட்சுமிக்கு கல்லூரியில் பயில அனுமதி அளித்தார்.

  அதில் வெற்றி பெற்ற பிறகு, சிறிது காலம் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், கல்வி தடைபட்டது. மேலும், அவரது தாய் சந்திரம்மாள் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். அப்போது தான் நோய் மற்றும் அதன் கொடுமையை நேரடியாகக் கண்டவரான முத்துலட்சுமிக்கு தானும் ஒரு மருத்துவராக வேண்டும் எனும் வைராக்கியம் வலுப்பெற்றது.

  தொடர்ந்து, 1907 ஆம் ஆண்டில் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த நாட்டின் முதல் பெண்ணான முத்துலட்சுமி படிப்பில் சிறந்து விளங்கி, ஒவ்வொரு ஆண்டும் சிறப்புச் சான்றிதழ்களும், தங்கப்பதக்கங்களும் பெற்று 1912 ஆம் ஆண்டில் நாட்டின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றார்.

  இதைத் தொடர்ந்து, அப்போதைய சென்னை மாகாண முதல்வராக இருந்த சுப்பராயலு ரெட்டியின் சகோதரி மகனான மருத்துவர் சுந்தரரெட்டியை 1914 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, மருத்துவத் தம்பதியர் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் 3 ஆண்டுகள் பணியாற்றினர்.

  தொடர்ந்து விடுதலைப் போராட்டத்திலும், மகளிர் உரிமைக்கான இயக்கங்களிலும் முத்துலட்சுமி ரெட்டி ஈடுபாடு கொண்டார். டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையார் இவருக்கு உறுதுணையாக நின்றார்.

  1929 ஆம் ஆண்டில் இந்திய மாதர் சங்கம் பெண்களுக்கு சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் எனப் போராடியதன் விளைவாக, முத்துலட்சுமி ரெட்டி சென்னை சட்டப்பேரவையின் உறுப்பினராகிப் பின் துணைத் தலைவராகவும் ஆனார். இதன் மூலமாக சட்டப்பேரவையில் நுழைந்த முதல் பெண்மணியும், உலகிலேயே சட்டப்பேரவையின் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் இவரே எனும் பெருமைக்குரியவர் ஆனார்.

  அது மட்டுமல்ல, சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டும் கோயில்களில் தேவதாசிகள் என்ற பெயரில் இழிவுபடுத்தப்படுவதைத் தடை செய்யும் சட்டத்தை பெரும் எதிர்ப்புகளுக்கு இடையில் நிறைவேற்றினார். பால்ய விவாகத் தடைச் சட்டம், பாலியல் தொழில் தடைச் சட்டம் போன்ற சட்டங்களைக் கொண்டு வர பெரும் முயற்சிகள் எடுத்தார். 

  தொடர்ந்து, ஆதரவற்ற குழந்தைகள், பெண்களுக்காக சென்னையில் 1930 ஆம் ஆண்டில் ஒளவை இல்லத்தை நிறுவினார். புற்றுநோய்க் கொடுமையில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் 1936 ஆம் ஆண்டில் மாபெரும் இயக்கத்தை நடத்தி, இதற்கென தனி மருத்துவமனையை அமைக்க முயன்று , சென்னை அடையாறில் 1954 ஆம் ஆண்டில் புற்றுநோய் மருத்துவமனையைத் தொடங்கினார்.

  இன்று ஆசியாவிலேயே புகழ்மிக்க புற்றுநோய் மருத்துவமனையாக அது திகழ்கிறது. ஒளவை இல்லம், அடயாறு புற்றுநோய் மருத்துவமனை இவை இரண்டும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மனித இனத்துக்கு விட்டுச் சென்ற மாபெரும் சொத்துக்கள் என்றால் அது மிகையல்ல!

  இன்று டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் 133 ஆவது பிறந்தநாள். அந்த நன்நாளை முன்னிட்டு கூகுள் டூடுல் வெளியிட்டுச் சிறப்பித்திருக்கிறது.

  தமிழகத்தின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் புகழ் மங்காது ஓங்கட்டும். வாழிய அவரது சேவை!
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai