Enable Javscript for better performance
MISS YOU CRAZY MOHAN!- Dinamani

சுடச்சுட

  
  Crazy_Mohan_MISS_U

   

  இன்று ஒரே நாளில் மூன்று மரணச் செய்திகளை ஒருங்கே கடக்க வேண்டியதாகி விட்டது. அதுவும் அடுத்தடுத்து...

  மூவரில் இருவர் நம் அனைவருக்குமே நன்கு அறிமுகமானவர்கள். ஒருவர் கிரிஷ் கர்னாட், மற்றவர் கிரேஸி மோகன். கிரிஷ் கர்னாட்டைப் பற்றி அடுத்து தனியாகப் பார்ப்போம். இப்போது முதலில் கிரேஸி மோகனைப் பார்க்கலாம். மனிதர், அத்தனை சீக்கிரம் மறந்து போகக்கூடிய அளவிலான நகைச்சுவை நாடகங்களையா நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்! கிரேஸியின் இழப்பு அவரை ரசித்த, ரசிக்கப் போகும், ரசித்துக் கொண்டிருக்கும் அத்தனை பேருக்குமே ஒரு மாபெரும் இழப்பு. தமிழ் நகைச்சுவையாளர்களில் கிரேஸிக்கு ரீப்ளேஸ்மெண்ட்டே கிடையாது. அவருக்கு நிகர் அவர் தான். ஏனெனில் கிரேஸியின் நகைச்சுவை யாரையும் மனம் நோக இடித்துரைத்து பகடி செய்யாத அக்மார்க் சைவ நகைச்சுவை.

  சாம்பிளுக்கு ஒன்று;

  கிரேஸியின் நகைச்சுவை கேரக்டர்களில் ஒன்று கிச்சா, அதை மையமாக வைத்து தீபாவளி சமீபத்தில் ஒரு நகைச்சுவை குறுநாவல் வாசித்தேன், அதில் கிச்சாவின் பாட்டிக்கு ‘மெட்ராஸ் ஐ’ வந்து விடும். பாட்டி, கிச்சாவைத் தேடி தீபாவளிக்கு எண்ணெய்க்குளியல் செய்து வைக்க அவனது இருப்பிடம் வருவாள். அங்கே அவன் தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொண்டிருப்பான். அப்போது அவள் அவர்களையும் தீபாவளிக்கு எண்ணெய்க்குளியல் செய்யச் சொல்லி வற்புறுத்தி கண்ணை உறுத்துப் பார்த்ததில் ஒட்டுமொத்த கும்பலுக்கும் ’மெட்ராஸ் ஐ’ வந்து விடும். இப்படிச் செல்லும் கதை... கதையை வாசித்து முடிக்கும் வரையில் நான் பல முறை உருண்டு, புரண்டு... விழுந்து, விழுந்து சிரிக்கத் தொடங்கியதில் வில்லிவாக்கம் வாடகை வீட்டு மொசைக் தரையில் நான்கைந்து இடங்களில் பள்ளமாகி விட்டது என்று சொன்னால் நீங்கள் நம்பித்தானாக வேண்டும். வாசித்து முடிப்பதற்குள் அப்படியொரு அடைமழைச் சிரிப்பு.

  கிரேஸி மோகனைப் பொருத்தவரை, 

  ‘எல்லோரையும் சிரிக்க வைக்கனும், அது தான் என் நோக்கம். அதுவும் சந்தோசமா பேசிச் சிரிக்கிறவங்களைப் பார்த்தா, நானும் ஜாலியாகிடுவேன். ஜோக் சொன்னா ஆராய்ச்சி செய்யக்கூடாது. புரிஞ்சு அனுபவிக்கனும். - என்பார்.

  மேடை நாடக நகைச்சுவையில் அவரது பங்களிப்பு அலாதியானது. நாடகம் எப்போதுமே அவருக்கு விருப்பமான ஒன்று. ‘ரசிகர்களின் பாராட்டும், ஆரவாரமும், எனக்கு ரொம்பப் பிடிக்கும். மேடை நாடகத்தில் ரசிகர்களின் சந்தோசத்தை நேரடியாகப் பார்க்கறது ஒரு அலாதி த்ருப்தி’ என்பார். கிரேஸியின் மேடை நாடகப் பற்றில் அவரது மாஸ்டர் பீஸ் என்றால் ;சாக்லேட் கிருஷ்ணா’ நாடகத்தைச் சொல்லலாம். அந்த நாடகம் மட்டுமே சுமார் 1000 முறைக்கும் மேலாக மேடையேற்றப்பட்டுள்ளது.

  30 வருடங்களுக்கும் மேலாக மேடை நாடகம், தொலைக்காட்சி காமெடி சீரியல்கள், திரைப்படங்கள் எனக் கொடி கட்டிப் பறந்த கிரேஸி மோகன் நகைச்சுவையில் தனது வெற்றிக்குக் காரணமாகக் கருதியது தொடர்ந்து அப்டேட் ஆகிக் கொண்டே இருந்ததைத் தான். தான் சொல்ல வரும் விஷயத்தை நகைச்சுவை என்ற பெயரில் மக்களுக்கு அலுப்பூட்டும் முறையில் சமைத்துத் தராமல், தினமும், ஒவ்வொரு முறையும் புதிது, புதிதாக யோசித்து வித்யாசமாக நகைச்சுவை செய்வதால் தான் தன்னை மக்கள் எப்போதும் விரும்புகிறார்கள் என்கிறார் கிரேஸி. முன்பு போல தன்னால் ஆக்டிவ்வாக காமெடிக் கதையாடல்களில் பங்கு கொள்ள முடியவில்லையே என்கிற வருத்தம் கடைசி நாட்களில் அவருக்கும் இருந்திருக்கிறது. ஆனாலும், அவர் தான் கிரேஸி மோகன் ஆயிற்றே. இந்தத் தேக்கம் எல்லாம் சகஜம் தான். மீண்டும் பழைய நிலைக்கு வெகு எளிதாக மாறும் காலம் வரும் என்ற நம்பிக்கையும் அவரிடம் இருந்திருக்கிறது. அத்துடன் இன்றைக்கு சினிமா போகும் போக்கில் தன்னுடைய காமெடி ஸ்டைல் சரிப்படுமா? என்றெல்லாம் கூட அவர் யோசித்துக் கொண்டு தான் இருந்திருக்கிறார். ஆனால், அவரை அவர் நம்பினாலும், நம்பாவிட்டாலும் அவரது ரசிகர்கள் என்றும் நம்பாமல் இருந்ததில்லை என்பதற்கு சாட்சியே  ‘நான் ஈ’ திரைப்படம். அந்த திரைப்படத்தின் நகைச்சுவை போர்ஷன்களை எழுத இயக்குனர் ராஜமெளலி நம்பியது கிரேஸியைத் தான். ஆக, தமிழ் சினிமாவுக்கு கிரேஸியின் நகைச்சுவை பாணி என்றுமே சலிப்பதில்லை என்பதே நிஜமாகிறது.

  ஒன்றா, இரண்டா... மாஸ்டர் பீஸ் என்று எதைச் சொல்வது?

  மைக்கேல் மதனகாமராஜன், மகளிர் மட்டும், காதலா காதலா, தெனாலி, பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம், அவ்வை ஷண்முகி, என்று சிரித்துக் களிக்க எத்தனை திரைப்படங்கள்?

  இதில் இந்தத் தலைமுறை குழந்தைகளையும் வெடித்துச் சிரிக்க வைக்கக் கூடிய படம் என்றால் மைக்கேல் மதன காமராஜனைக் கூறலாம். அத்தனை கொண்டாட்டமான வசனங்களுடன் இருக்கும் படம் முழுதுமே!

  கிரேஸியின் நாடகங்கள் அல்லது அவர் ஸ்கிரிப்ட் எழுதக்கூடிய அத்தனை திரைப்படங்களிலும் நாயகியின் பெயர் ஜானகி என்பதாகவே இருக்கும். காரணம் அது அவரது மனைவி அல்லது காதலியின் பெயர் என்று யாராவது கற்பனை செய்து கொண்டிருப்பீர்கள். உண்மை அதுவல்ல. ஜானகி என்பது கிரேஸியின் தமிழாசிரியையின் பெயர். தனது ஆசிரியையின் மீது கொண்ட அபிமானத்தால், தனது பெண் கதாபாத்திரங்களில் பிரதான நாயகிக்கு எப்போதும் ஜானகி என்றே பெயர் சூட்டுவார் கிரேஸி. இதை அவரது நிபந்தனை என்று கூடச் சொல்லலாம்.

  கிரேஸி மோகன் என்று பெயர் வைத்தது யார்?

  கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் நாடக காலங்களில் மோகனின் பெயர்  ர.மோகன் என்பதாகவே இருந்திருக்கிறது அதாவது ரங்காச்சாரி மோகன். முதன்முதலாக 1975 ஆம் ஆண்டு, ஆனந்த விகடன் ஆசிரியர் வீ எஸ் வி கேட்டுக் கொண்டதற்கிணங்க மோகன் ஒரு குட்டி நாடகம் எழுதி அனுப்பி அது ‘கலிகால கரிகாலன்’ என்ற பெயரில் ஆனந்த விகடனில் வெளியாகியிருக்கிறது. விகடனில் தனது பெயரில் ஒரு நாடகம் வெளிவந்திருக்கும் சர்ப்பிரைஸ் அனுபவத்தை அனுபவிப்பதற்காக புத்தகத்தைத் திறந்த மோகனுக்கு மேலுமொரு இன்ப அதிர்ச்சியாக நாடகத்தை எழுதியவரின் பெயர் கிரேஸி மோகன் என அச்சாகியிருந்திருக்கிறது. அன்று முதல் ர. மோகன், கிரேஸி மோகன் ஆனார். அந்த வகையில் சொந்த தாத்தா வைத்த பெயரைக் காட்டிலும் விகடன் தாத்தா வைத்த பெயர் தான் காலத்திற்கும் நிலைத்து விட்டதாக கிரேஸி கருதியதுண்டு.

  கிரேஸியின் வெள்ளித்திரை பிரவேசம்?

  கிரேஸி மோகன் வெள்ளித்திரையில் இயங்கத் தொடங்கியது முதன் முதலாக  ‘பொய்க்கால் குதிரை’ என்ற திரைப்படத்துக்காகத் தான். படம் முழுதுமே சிரிப்பு வெடிகள் கொட்டிக் கிடக்கும். இயக்கம் கே பாலசந்தர். என்றாலும் கிரேஸி டச் படத்தின் வசனங்களில் டப்... டப்பெனப் பிரதிபலிக்கும். திரைப்படங்களில் நகைச்சுவையைக் கையாள்வதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பாணி. அதில் கிரேஸியின் பாணி அசால்டாகப் பேசி அலட்டிக் கொள்ளாமல் விழுந்து விழுந்து சிரிக்க வைப்பது. கிரேஸியின் பூரண நகைச்சுவை இன்பத்தைப் பெற விழைபவர்கள் அவரது முதல் திரைப்படத்தில் இருந்தே தொடங்கலாம். இத்திரைப்படத்தின் வாயிலாக கவிஞர் வாலியை ஒரு நகைச்சுவை நடிகராக முதன் முதலாக தனது கதாபாத்திரங்கள் ஒன்றில் அறிமுகப்படுத்திய பெருமையும் கிரேஸிக்கு உண்டு.

  கிரேஸி மோகனின் நகைச்சுவையில் அப்படி என்ன சிரி(ற)ப்பு? என்று யாரேனும் கேட்டீர்கள் என்றால்; ப்ளீஸ் தயவு செய்து காதலா, காதலா பாருங்கள். அதில் ஒரு வசனம்...

  மறைந்த மூத்தன் நடிகை எஸ் என் லட்சுமி அதில் இஸ்லாமியப் பெண்ணாக நடித்திருப்பார். அவரிடம் மிகப்பெரிய பங்களா ஒன்றை வாடகைக்கு எடுத்திருப்பார்கள் கமல், பிரபு தேவா அன் கோ. வீட்டை விட்டு ஓடி வந்து காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் ரம்பா (ஜானகி), பிரபு தேவா (லிங்கம்) தம்பதியினர். இருவரின் மீதும் பொல்லாக் கோபத்துடன் இருக்கும் பிரபு தேவாவின் மாமனாரான எம் எஸ் வி யை, மனைவி ஸ்ரீவித்யாவுடன் சமாதானப் படுத்தும் முயற்சியாக அவர்களை அந்தப் பங்களாவுக்கு அழைத்திருப்பார்கள். எம் எஸ் வி ஒரு தீவிர முருக பக்தர். முருகன் கனவில் சொன்னான் என்று தான் மகளைப் பார்க்க அந்த பங்களாவுக்கு வருவார். ஆனால் பங்களாவில் ‘நூர்மஹால்’ என்று எழுதி இருக்கும். அதைப் பார்த்து, இதென்ன நூர்மஹால்னு இருக்கு? என்று அவர்கள் நோண்டத் தொடங்கும் போது, உடனே கமல் சிந்தித்து, ‘இந்தம்மா மேல அவங்க புருஷனுக்கு அத்தனை காதல், அதான் அவங்க ஞாபகமா இதே மாதிரி நூறு மஹால் கட்டி அதுக்கு நூர்மஹால்னு பேர் வச்சிருக்காங்க’ என்பார்... பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு சிரித்துச் சிரித்துப் புரையேறும். அது தான் கிரேஸி காமெடியின் சிறப்பு.

  கிரேஸியைப் பொருத்தவரை அவரது மேடை நாடகங்கள் அத்தனையிலும் தம்பி மாது பாலாஜி தான் ஹீரோ. தம்பி மீது கிரேஸிக்கு அத்தனை ப்ரியம். பொதுவாகவே கூட்டுக்குடும்ப பாரம்பரியத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவரான கிரேஸி, தனது மேடை நாடகங்கள் மற்றும் தான் ஸ்க்ரிப்ட் எழுதிய திரைப்படங்களிலும் கூட அதையே பின்பற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரது திரைப்படங்களில் சிங்கிள் ஃபேமிலி என்பதே இல்லை. குறைந்த பட்சம் ‘சதிலீலாவதி’ போல மாமனார் மட்டுமாவது உடனிருப்பார். குடும்பம் என்றால் அப்படித்தான் இருக்க வேண்டும் என்பது கிரேஸியின் நம்பிக்கை & விருப்பம்.

  காமெடி ரைட்டர் மட்டுமா? சிறந்த ஓவியரும் கூடத்தான்!

  கிரேஸியின் காமெடி உலகுக்குள் ரசித்துப் பிரவேசித்துக் கை தட்டும் அத்தனை பேருக்கும் தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை அவர் மிக அருமையான ஓவியரும் கூட என்பது. ஓவியங்கள் ஒவ்வொன்றிலும் கிரேஸியின் குட்டிக் குட்டி நகைச்சுவைப் பட்டாசுகள் இலவச இணைப்பாக மிளிர்கின்றன.

  கமல்ஹாசனின் இரங்கல்...

  எத்தனை விதமாக கிரேஸி மோகன் குறித்தான ஞாபகங்களை நாம் தேடி எடுத்து பதிவு செய்தாலும் அவரது இழப்பு நகைச்சுவை உலகுக்கு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பு என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அதைத்தான் அவருடன் இணைந்து பணியாற்றிய காமெடி ஜாம்பவான்கள், இயக்குனர்கள் மற்றும் நடிகர், நடிகைகளும் கூட அவருக்கான இரங்கலாகப் பதிவு செய்துள்ளனர்.

  • கிரேஸி மோகன் ஒரு நகைச்சுவை ஞானி, அவரது நகைச்சுவையால் என்றும் ரசிகர்களின் இதயத்தில் வாழ்வார். மக்களுக்கு ஏற்றவகையில் ஜனரஞ்சகமாக வசனம் எழுதியவர், அவருடன் கொண்ட நட்பின் அடையாலமாக அவரது நெற்றியில் கை வைத்து பிரியா விடை அளிக்கிறேன் என நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.
  • மேடை நாடக உலகுக்கு இன்றைய தினம் கருப்பு தினம் - மோகன் ராம்
  • கிரேஸி மோகனின் இழப்பு நகைச்சுவை உலகுக்கு பேரிழப்பு - கோவை சரளா
  • தமிழ் மக்களின் இதயத்திற்கு சிரிப்பு மருந்து கொடுத்தவர் கிரேஸி மோகன் - இயக்குனர் சரண்

  கிரேஸி மோகனின் இணையதள முகவரி http://www.crazymohan.com/ -

  இதில் மேலும் பல சுவாரஸியங்களைக் கொட்டி வைத்திருக்கிறார். விருப்பமிருப்பவர்கள் ஒருமுறை உள்ளே நுழைந்து சுற்றி விட்டு வாருங்கள். வெளியில் வரும் முன் நிச்சயம் சிலமுறை மனம் விட்டுச் சிரித்திருப்பீர்கள்.

  நானொரு ஹாஸ்திகன்!

  கிரேஸி மோகனுக்கான இரங்கல் உரையில் அவரை ஒரு சிறந்த ஆன்மீகவாதி என்றார் நடிகர் எஸ் வி சேகர். கிரேஸியே தன்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டது கிட்டத்தட்ட அதற்கு சற்று மாறானது. கிரேஸி நாஸ்திகவாதி இல்லை. அதே சமயம் தீவிர ஆஸ்திகவாதியும் இல்லை. தானொரு ஹாஸ்திகவாதி என்று தன்னைப் பற்றி தானே சுயபகடி செய்து கொள்ளும் வழக்கம் கிரேஸிக்கு இருந்திருக்கிறது. இதை அவரது தீட்டு சிறுகதை மூலமாக உணர்ந்து கொள்ள முடியும்.

  கதையின் முடிவில் அவர் பரிந்துரைக்கும் வரிகள் ப்ரவசனம் ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மாவுடையது... என்றாலும் அவர் அதைச் சொன்னது ஆஸ்திகன், நாஸ்திகனுக்கு மட்டுமல்ல, இடைப்பட்ட ஹாஸ்திகர்களான நம் எல்லோருக்குமானது.

  ‘அனுஷ்டானங்களில் நெறி இருக்கலாம், ஆனால், அந்த நெறி, வெறி ஆகக்கூடாது’ என்று. அப்படித்தான் வாழ்ந்திருக்கிறார் கிரேஸி என்பதை அவரது இந்தக் கட்டுரை சொல்கிறது. இதில் தனது தீட்டுப் படாமல் வாழ விரும்பும் தனது அனுஷ்டான நெறி தவறா மாமா ஒருவரைப் பற்றி கிரேஸி, தன் பாணியில் பதிவு செய்திருக்கிறார். சிரித்துச் சிரித்து வாசித்துக் கடக்கையில் கடைசி வரி நச்சென்று உச்சந்தலையில் குட்டுகிறது.

  ரியலி மிஸ் யூ கிரேஸி! சென்று வாருங்கள்...

  ‘வேலை முடிந்தால் போய் விட வேண்டியது தானே’ என்று சொல்லும் அளவுக்கு வாழ்க்கை புரிந்த ஒரு யதார்த்த கலைஞரை இழந்த வேதனை என்றும் எங்களுடன் நீடித்திருக்கும். :(


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai