கோத்ரேஜ் குடும்ப நிலம் தொடர்பான சர்ச்சை!

இப்போது கோத்ரேஜ் குழுமத்தில் சர்ச்சை வெடித்திருப்பது ஜாம்ஷெட் கோத்ரேஜின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலத்தை அடிப்படையாகக் கொண்டு தான். 
கோத்ரேஜ் குடும்ப நிலம் தொடர்பான சர்ச்சை!

கோத்ரேஜ் குடும்பத்தின் ‘குழுமத் தொழில் வணிக வாரியக் குழுவிற்கு’ தலைவராக இருந்து வழிநடத்தி வருகிறார் கோத்ரேஜ் சகோதரர்களில் மூத்தவரான ஆதி கோத்ரேஜ். இந்தக் குழுமத்தில் இவருடன் இணைந்து செயல்படுகிறார்கள் ஆதி கோத்ரேஜின் சகோதரர் நாதிர் கோத்ரேஜ் மற்றும் உறவினர் ஜாம்ஷெட் கோத்ரேஜ்.

கோத்ரேஜ் குழுமத் தொழில் வரலாறு!

1897 ஆம் ஆண்டு அர்தேஷிர் கோத்ரேஜால் நிறுவப்பட்டது தான் இன்று நாம் காணும் கோத்ரேஜ் பூட்டு தயாரிப்புக் கம்பெனி. அன்று அர்தேஷிட் கோத்ரேஜ் பல்வேறு விதமான வணிகங்களில் ஈடுபட்டு கடைசியில் எதுவுமே உருப்படியில்லாது போகவே கடைசியில் துவங்கியது தான் கோத்ரேஜ் பூட்டு தயாரிப்புக் கம்பெனி. கோத்ரேஜ் பூட்டுக்களுக்கு இந்தியச் சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கவே அதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக 1918 ஆம் ஆண்டு வாக்கில் குளியல் சோப் தயாரிப்புத் தொழிலில் இறங்கியது கோத்ரேஜ் நிறுவனம்.

கோத்ரேஜ் குழும நிறுவனங்களின் தொழில் திறன் மற்றும் நிர்வாகத் திறனைக் கண்டு வியந்த மும்பை அரசு (அன்றைய பாம்பே) 1943 ஆம் ஆண்டு வாக்கில் விக்ரோலி கிராமத்தை பிரோஜ்ஷா கோத்ரேஜுக்கு ஏலத்தில் எடுத்துக் கொள்ள அனுமதி அளித்தது.

அதைத் தொடர்ந்து நிகழ்ந்த கோத்ரேஜ் குழும நிறுவனங்களின் வளர்ச்சியின் அடுத்தகட்டமாக 1990 ஆம் ஆண்டு வாக்கில் கோத்ரேஜ் பிராப்பர்ட்டீஸ் என்ற பெயரில் ரியல் தொழிலில் இறங்கியது கோத்ரேஜ் குழும நிறுவனம். வளர்ச்சியின் அடுத்த கட்டமாக 1991 ஆம் ஆண்டில் கோத்ரேஜ் அக்ரோவெட் குழுமம் தொடங்கப்பட்டு விவசாயத்துறையில் கால் பதித்தது கோத்ரேஜ் நிர்வாகம்.

வளர்ச்சியின் உச்சகட்டமாக 2014 ஆம் ஆண்டு வாக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்புவதற்கான ஆராய்ச்சியில் கைகோர்த்தது கோத்ரேஜ் குழுமம்.

இந்நிலையில் நிர்வாகக் குழப்பங்களைத் தவிர்க்கும் நோக்கில் கோத்ரேஜ் பாய்ஸ் கம்பெனியானது இரண்டாகப் பிரிக்கப்பட்டு 

  • கோத்ரேஜ் கன்ஸ்யூமர் (GCPL)
  • கோத்ரேஜ் பிராப்பர்ட்டீஸ் லிமிடெட்
  • கோத்ரேஜ் அக்ரோவெட் 

எனும் மூன்று குழுமங்களும் ஆதி மற்றும் நாதிர் கோத்ரேஜின் கட்டுப்பாட்டில் வந்தன.

கோத்ரேஜ் பாய்ஸ் கம்பெனியானது சகோதரர்களின் நெருங்கிய உறவினரான ஜாம்ஷெட் கோத்ரேஜின் நிர்வாகத்தின் கீழ் சென்றது. இவருக்கு கோத்ரேஜ் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்தில் 4.64% பங்குகளும், GCPL (கோத்ரேஜ் கன்ஸ்யூமர்) ல் 7.34% பங்குகளும் கூட ஒதுக்கப்பட்டன.

சர்ச்சைக்குரிய நிலம்...

இப்போது கோத்ரேஜ் குழுமத்தில் சர்ச்சை வெடித்திருப்பது ஜாம்ஷெட் கோத்ரேஜின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலத்தை அடிப்படையாகக் கொண்டு தான். 

கோத்ரேஜ் பாய்ஸ் கம்பெனிக்கு சொந்தமாக 3,400 ஏக்கர் நிலம் மும்பையில் இருக்கிறது. அந்த நிலத்தில் கட்டுமானங்களை மேற்கொண்டு வரும் கோத்ரேஜ் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம், தங்களுக்குக் கிடைக்கும் வருவாயில் இருந்து திட்ட வருவாய்த்தொகை என  10 முதல் 15% தொகையை கோத்ரேஜ் பாய்ஸுக்கு வழங்கி வருகிறது. இந்த நிலத்தை அடிப்படையாகக் கொண்டு தான் தற்போது கோத்ரேஜ் குடும்பத்தில் சர்ச்சை வெடித்திருக்கிறது. பிரச்னை நிலம் தொடர்பானது என்றாலும் கூட எந்த விதத்தில் மேற்கண்ட மூன்று நபர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் இருந்த காரணத்தால் கோத்ரேஜ் குழும நிலத்தகராறு சர்ச்சை பூடகமாக இருந்து வந்தது. கோத்ரெஜ் குழும நிர்வாகிகளும் தங்களுக்குள் நிலத்தகராறு என்ற பேச்சையே மறுத்து வ்ந்தனர்.

வெளிப்புற மத்தியஸ்தர்கள்...

தற்போது சகோதரர்களுக்கிடையிலான பிரச்னையின் மூலம் கண்டறியப்பட்டு அதை பேசிச் சரி செய்ய மூவர் கிளம்பியுள்ளனர். அவர்கள் யாரெனில், 
கோடக் மஹிந்திரா வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான உதய் கோடக், JM ஃபினான்ஸியல் நிறுவனத் தலைவர் நிமேஷ் கம்பானி, சிரில் அமர்சந்த் மங்கள்தாஸ் நிறுவனத்தைச் சார்ந்த சிரில் ஷ்ராஃப் உள்ளிட்ட மூவரும் மத்தியஸ்தர்களாகச் செயல்பட்டு கோத்ரேஜ் குடும்பத்திற்குச் சொந்தமான நிலப்பிரச்னையைத் தீர்த்து வைக்கவ்விருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com