Enable Javscript for better performance
DOES NEET COACHING SPOIL THE REGULAR SYLLABUS OF PLUS 2 STUDENTS?!- Dinamani

சுடச்சுட

  

  நீட் ஸ்டூடண்ட்டா, அப்போ ரூட்டை மாத்து! ஸ்கூலுக்கே வரவேண்டாம், நீட் பயிற்சி வகுப்புகள் மூலம் கல்லா கட்டும் தனியார் பள்ளிகள்!

  By RKV  |   Published on : 12th June 2019 02:38 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  neet

   

  தனியார் பள்ளிகளின் நீட் மோகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எந்த அளவுக்கு என்றால், அரசு பாடத்திட்டங்களையே புறக்கணித்து விட்டு ஒட்டுமொத்தமாக நீட் தேர்வுக்காக மட்டுமே முழு ஆண்டும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் நீட் பயிற்சி வகுப்புகளுக்கான முக்கியத்துவம் சமீப ஆண்டுகளில் கவலைக்குரிய வகையில் பெருகி வருகிறது. இதைக் கருத்தில் கொள்ளும் தனியார் பள்ளி நிர்வாகங்கள், அதிக கட்டணம் வசூலிக்க இதையும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. தமிழகம் முழுதுமே இப்படிப்பட்ட பள்ளிகள் பெருகி விட்ட போதும், வழக்கம் போல ஈரோடு, நாமக்கல் பகுதியைச் சார்ந்த பள்ளிகளின் மீது தான் அழுத்தமான குற்றச்சாட்டுகள் பதிவாகி வருகின்றன. 

  நாமக்கல் பள்ளிகளைப் பொருத்தவரை மதிப்பெண்களை மட்டுமே முதல் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் விதத்தில் அவற்றின் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், அவர்கள் தங்கள் கற்பித்தல் முறைகளை மாற்றிக் கொள்வதாக இல்லை. ‘அப்பா’ உள்ளிட்ட திரைப்படங்கள் அப்பட்டமாக தோலுரித்திக் காட்டியும் கூட அவர்கள் மீண்டும் அதே விதமான கற்பித்தல் முறைகளையே கையாண்டு வருவதுடன் இப்போது நீட் தேர்வை மையமாக வைத்து புதியதொரு கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்தி பிளஸ் 1, பிளஸ் 2 இரண்டு ஆண்டுகளிலும் மாணவர்கள் தமிழக அரசின் முறையான கல்வித்திட்டத்தைப் பெறுவதற்கு தடைக்கல்லாகவும் மாறி வருகின்றனர். நாமக்கல் பள்ளிகள் மட்டுமல்ல சமீப காலங்களில் இப்படியொரு குற்றச்சாட்டு தமிழகத்தின் பிரபல தனியார் பள்ளிகள் பெரும்பாலானவற்றின் மீதும் வைக்கப்படுகிறது.

  உதாரணத்திற்கு;

  கடந்த ஜனவரி மாதம்; விருத்தாசலத்தில் இயங்கி வரும் ‘ஜெயப்ரியா வித்யாலயா சி பி எஸ் சி மேல்நிலைப்பள்ளி’ புதிய கல்விமுறையைப் புகுத்துவதாகக் கூறி கற்பித்தல் முறைகேட்டில் ஈடுபடுவதாகக்கூறி குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இவர்களது புதிய கல்வித்திட்டத்தின் படி இங்கு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வரத் தேவையில்லை. தமிழக பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டத்தை பின்பற்றவோ, கற்றுக்கொள்ளவோ தேவையில்லை. அதற்கு பதிலாக நெய்வேலியில் தாங்கள் ஏற்பாடு செய்துள்ள ‘செட்’ எனும் நீட் பயிற்சி மையத்திற்கு சென்று அங்குள்ள பாடத்திட்டத்தின் படி பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இங்கு பயில்வோர் பள்ளிக் கட்டணத்துடன் சேர்த்து நீட் தேர்வுக்காகவும் கூடுதலாக 1 லட்சத்து 50, 000 ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அங்கு பயிலும் மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த மாணவர்கள், தினமும் பள்ளி செல்லாமல் செட் பயிற்சி மையத்திற்குச் சென்று நீட் பயிற்சி பெறுவதை மறைத்து இவர்கள் தினமும் பள்ளிகளுக்கு வந்து செல்வது போலக்காட்ட போலி வருகைப் பதிவேடு ஒன்றும் இந்தப்பள்ளி நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டிருப்பதும் பின்னர் தெரிய வந்திருக்கிறது.

  செட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் மாணவர்கள், பள்ளிகளுக்குச் செல்ல வேண்டியதில்லை. அவர்களது ஒரே வேலை, பயிற்சி மையத்தில் ஆசிரியர்கள் தரும் நீட் பயிற்சி வினாக்களை தொடர்ந்து வொர்க் அவுட் செய்வது மட்டும் தான். காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இரண்டு ஷிஃப்டுகளாக இங்கே பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுக் கொண்டிருந்தன. இங்கே பயிற்சி பெறும் மாணவர்கள் பொதுத்தேர்வு நேரத்தில் மட்டும் அவரவர் பயிலும் பள்ளிகளில் சென்று தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழக அரசின் பள்ளிக்கல்வித்திட்டத்தின் விதிமுறைகளின் படி செயல்பட வேண்டிய இந்தப் பள்ளி நிர்வாகம், அவை எதையும் பின்பற்றாமல் தங்களுக்கென ஒரு புதிய கல்வித்திட்ட முறையைப் பின்பற்றி மாணவர்களின் எதிர்கால வாழ்வை கேள்விக்குறியாக்கும் விதத்தில் முறைகேடாக நீட் தேர்வுக்குத் தயாராகும் விதத்தில் மட்டுமே முற்றிலும் வகுப்புகளைத் திட்டமிட்டு நடத்தி வருவதென்பது கண்டனத்திற்குரியது எனக் கருதி இப்பள்ளியின் மீது மாவட்ட கல்வி நிர்வாகத்துக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன் விளைவாக வடலூர் வட்டார கல்வி அதிகாரி அந்தப் பள்ளி நடத்தும் பயிற்சி மையத்தில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது, அங்கு ஜெயப்ரியா வித்யாலயா பள்ளி மாணவர்கள் தவிர சென்னை கோவூரிலிருக்கும் தனியார் பள்ளி மாணவர்கள் உட்பட சுமார் 200 பேர் நீட் பாடத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருவது தெரிய வந்தது.

  இது கல்வித்துறையை முழுமையாக ஏமாற்றுவதற்குச் சமம் என்பதோடு அல்லாமல் கற்பித்தல் முறைகேடும் கூட! எனவே இவர்களால், நீட் தேர்வுக்குத் தயாராகும் பிற பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக மாவட்ட கல்வி அதிகாரிக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்த பள்ளி நிர்வாகத்துக்கு அழைப்பு அனுப்பப்பட்டதாகத் தகவல். பள்ளி நிர்வாகத்துடனான சந்திப்பில், தங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு பொய் என அவர்களால் நிரூபிக்க முடியாமல் போனால், அவர்கள் நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தி வரும் செட் பயிற்சி மையைத்தை மூட மாவட்ட ஆட்சித் தலைவரின் ஆணையை நாடவிருப்பதாக மாவட்ட கல்வி அதிகாரி அறிவித்தார். இது கடந்த ஜனவரி மாத நிகழ்வு. இன்றும் அந்தப் பள்ளி, அதே விதமான பாடத்திட்டத்தைத் தான் பின்பற்றி வருகிறதா? என்பது குறித்த ஃபாலோ அப்  தகவல்கள் எதுவும் இதுவரை கிடைத்தபாடில்லை.

  நீட் தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்யவும், நீட்டைக் காரணமாக வைத்து மேலும் அதிகப்படியான வருமானம் ஈட்டவும் ஜெயப்ரியா வித்யாலயா பள்ளி பின்பற்றி வந்த இந்த முறைகேட்டை தமிழகத்தில் மேலும் பல தனியார் பள்ளிகள் அரங்கேற்றிக் கொண்டு தான் இருக்கின்றன. அவர்களின் முதல் டார்கெட் பெற்றோர். பெற்றோரைச் சரிக்கட்டி, நீட், ஐ ஐ டி பேட்சுகள் என புதிய பாடத்திட்ட முறைகளை புகுத்தி அதில் சேர்ந்து பயில விரும்பும் மாணவர்களை பிற மாணவர்களிடமிருந்து தனித்துப் பிரித்து தனி செக்‌ஷன்களில் அமர்த்தி அவர்களுக்கு மட்டும் புதியதொரு பாணியில் பாடங்களை நடத்தி வருகின்றனர். பெரும்பாலும் நோட்ஸ் எழுத வேண்டிய கட்டாயமே இல்லாத இந்தப் புதிய பாடத்திட்ட முறையில் மாணவர்கள் முற்றிலுமாக ஒருவரிக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதத்தில் தயார் செய்யப்படுகின்றனர். ஒருவேளை அத்தனை பணம் கட்டி இந்தப் புதிய பாடத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் மாணவர்களில் சிலரால் நீட் தேர்வில் தொடர்ந்து வெல்ல முடியாமல் போனால் பண விரயம் மற்றும் கால விரயத்துடன் அவர்களது எதிர்காலமும் வீணடிக்கப்படுவது கண்கூடான ஒன்றாகி வருகிறது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பகுதி நேரமாக நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் சூழ்நிலையில் தனியார் பள்ளிகள் பெற்றோரின் கனவைப் பயன்படுத்தி இப்படி மாணவர்களின் பல்துறை வித்தகத் தன்மைக்கு குண்டு வைத்துத் தகர்த்தி அவர்களை பிராய்லர் கோழிகளைப் போல நீட் தேர்வுக்கான பயிற்சிகளில் மட்டும் முழு வருடத்திற்கும் ஆழ்த்துவது என்பது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

  இத்தனைக்கும் காரணம் பெற்றோர்களின் பேராசையும், மாணவர்களின் தெளிவற்ற இலக்கும் தான்.

  தம் பிள்ளைகளை மருத்துவக் கல்லூரியில் சேர்க்க விரும்பும் பெற்றோர், அதற்காக அவர்களை முறையான வழியில் தயார்படுத்தாமல் தனியார் பள்ளிகள் விரிக்கும் நீட் பயிற்சிக்கான பாடத்திட்டம் எனும் சதி வலையில் சிக்கிக் கொள்கிறார்கள். இதிலிருந்து வெற்றிகரமாக மீளக்கூடியவர்கள் வெகு சிலரே!

  இந்த ஆண்டு நீட் தேர்வில் வென்ற மாணவர்கள் எண்ணிக்கை ஏறத்தாழ 54,000 பேர். நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் முதலில் இந்த  54,000 மாணவர்களின் அப்ளிகேஷன் பார்ம்களும் பெறப்பட்டு ஜாதி அடிப்படையில் அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் தயாராகும். தரவரிசைப் பட்டியல் வெளியான பின்பே, ஜாதிவாரியாக யாருக்கு முன்னிலை, யாருக்கு பின்னிலை என்பது தெரியவரும். இதில்;

  ஆல் இந்தியா கோட்டா
  ஸ்டேட் கவர்ன்மெண்ட் கோட்டா
  ஈ எஸ் ஐ மெடிக்கல் கோட்டா
  தனியார் கல்லூரிகளுக்கான பேமண்ட் கோட்டா என்று பல்வேறு கோட்டாக்களின் கீழ் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும். இதில் ஆல் இந்தியா கோட்டாவின் கீழ் மாணவர்கள் ஒரு கல்லூரியைத் தேர்வு செய்து விட்டால் பிறகு அவர்கள் வேறு கோட்டாக்களுக்கு மாற்றிக் கொள்ள முடியாது எனப் பல விஷயங்கள் இருக்கின்றன. இதெல்லாம் நீட் தேர்வில் வென்ற மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

  ஒருவேளை நீட் தேர்வுக்கான கல்வித்திட்ட முறையில் சேர்ந்து பயின்று விட்டு அதில் வெல்ல முடியாமல் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களின் கதி என்னவாகும்?

  அவர்கள் வேறு ஏதேனும் கோர்ஸில் சேர வேண்டும். அல்லது மீண்டும் நீட் தேர்வு எழுத வேண்டும். பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லாமல் நீட் தேர்வை வெற்றிகரமாக எழுத முடியாது என்று உடனிருப்பவர்கள் அறிவுறுத்துவார்கள். உடனே மீண்டும் தனியார் பயிற்சி வகுப்புகள் மூலம் மீண்டும் கடந்தாண்டு பெற்ற நீட் பயிற்சியையே மீண்டும் பெறத்தொடங்க வேண்டும். இந்த முறை வெற்றி பெற்று விட்டால் தேவலாம். ஒருவேளை வெற்றி கிடைக்கா விட்டால், அந்த மாணவர்களின் இரண்டு வருட உழைப்பு வீண். நீட்டில் அதிக மதிப்பெண்கள் பெற முடியவில்லை என்பதால் அவர்களது அறிவுத்திறன் குறைவு என்று சொல்லி விட முடியாது. ஆனால், அது போன்றதொரு மனப்பான்மையை சம்மந்தப்பட்ட மாணவரிடத்தில் ஏற்படுத்த வல்லது இந்த தோல்வி. இது தேவையா? பிளஸ் 2 படிக்கும் எல்லா மாணவர்களுமே டாக்டர்களாகத்தான் ஆவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பரீட்சைக்கு உழைப்பதால் தான் இந்தக் கஷ்டமெல்லாம் நேர்கிறது.

  இந்த நேரத்தில் தான் பெற்றோர், தம் பிள்ளைகளிடத்தில் டாக்டர், இஞ்ஞினியரிங் தவிர இன்னும் வேறு என்னென்ன விதமான படிப்புகள் எல்லாம் இருக்கின்றன என்ற தேடலைத் தொடங்க ஊக்குவிக்க வேண்டும். அவர்களிடத்தில் இந்த சமூகம் உருவாக்கி வைத்துள்ள... எம் பி பி எஸ், பி இ இரண்டையும் விட்டால் வேறு ஒன்றுமே மதிப்பிற்குரிய படிப்புகள் இல்லை எனும் மாயத்தோற்றத்தை உடைக்க வேண்டும். எத்தனையோ படிப்புகள் இருக்கின்றன. இன்று நம்முன் இருக்கும் அறிவுஜீவிகளான பிரபல அரசியல்வாதிகள் கல்லூரியிலும், பல்கலைக்கழகங்களிலும் கற்றுத்தேர்ந்தது எம் பி பி எஸ்ஸும், பி இ யும் அல்ல. ஆங்கிலம், வரலாறு, புவியியல், புள்ளியியல், கணிதம், விஷுவல் கம்யூனிகேஷன், பொருளாதாரம், வணிகவியல்,  என எந்தப் பாடமானாலும் முழு ஈடுபாட்டுடன், விருப்பத்துடன் கற்றுத் தேர்ந்தால் அந்தத் துறைகளிலும் டாக்டருக்கு இணையான சம்பளமும், புகழும், சமூக அங்கீகாரமும் பெற முடியும் என்பதை மாணவர்களிடத்தில் பெற்றோர் தான் உருவாக்க வேண்டும். அப்படித் தான் மாணவர்களிடத்தில் ஒரு தெளிவான கண்ணோட்டத்தை நாம் உருவாக்கியாக வேண்டும்.

  முடிவாக ஒரு விஷயம்...

  நடப்பில் இருக்கும் நமது கல்வித்திட்டம் மற்றும் கல்வி முறை குறித்தே நமக்கு ஆயிரம் அதிருப்திகள் உண்டு.

  அவற்றில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்யாமல், நீட் தேர்வுக்காக பிளஸ் 1, பிளஸ் 2 இரு ஆண்டுகளுக்கான கல்வித்திட்ட முறைகளைப் புறக்கணித்து முழுமனதாக நீட் தேர்வுக்காக தயாராகும் விதத்தில்  மட்டுமே மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தால் அந்த இரண்டு ஆண்டுக் கல்வியும் முழுமையடையாமல் ஆகி விடும். அரைகுறையாகப் பாடங்களைக் கற்கும் மாணவர்கள் நீட்டிலும் தோல்வி எனில் குழம்பித் தவிப்பார்கள். அந்த நிலையை அவர்களுக்குப் பரிசளிக்க விரும்புகிறோமா நாம்?

  அதற்காக நீட் தேர்வுப் பயிற்சி வகுப்புகளை குறை சொல்வது தான் கட்டுரையின் நோக்கம் என்பதல்ல. தனியா பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு பகுதி நேர நீட் பயிற்சி அளிக்கலாம். அந்தப் பகுதி நேரமும் பள்ளி நேரத்துடன் ஒத்துப் போவதாக இருக்க வேண்டும். அப்போது தான் ஆரோக்யமான கற்றல் திறனை ஊக்குவிக்க முடியுமே தவிர மாணவர்களை வாட்டி வதைப்பதின் மூலம் அல்ல. இது கடைசியில் எப்படிப் புரிந்து கொள்ளப் படுகிறதென்றால், நீட் தேர்வில் கிடைக்கும் வெற்றிகள் அத்தனையும் தனியார் பள்ளிகளின் அடுத்தாண்டு மாணவர் சேர்க்கைக்கான விளம்பரமாகப் பயன்படுத்திக் கொள்ளப் படுகின்றன என்றும் அவர்களது ஒரே நோக்கம் நீட்டை காரணமாக வைத்து பெற்றோரிடம் மேலும் அதிக கட்டணம் வசூலிக்க ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளலாம் என்றுமே புரிந்து கொள்ளப்படுகின்றன.

  சிலர் கேள்வி எழுப்பலாம், அரசின் தேர்வு முறை நீட்டை மையப்படுத்தி இருந்தால் பிறகு பெற்றோர் என்ன செய்வார்கள்? தனியார் பள்ளிகள் தான் என்ன செய்யும்? அங்கு பயிலும் மாணவர்கள் தான் என்ன செய்வார்கள்? என.

  இதற்கான ஒரே பதில்;

  வழக்கமான கல்வித்திட்ட முறையிலேயே நீங்கள் பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியுமெனில், பகுதி நேரமாக நீட் பயிற்சி வகுப்பில் இணைந்து படித்தாலும் போதும் நிச்சயமாக நீட் தேர்விலும் உங்களால் அதிக மதிப்பெண்கள் பெற முடியும். நடுவில் தேவையற்ற குழப்பங்கள் அனாவசியமானவை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai