என்னது! வேலையில் பிரேக் எடுப்பதா? இதென்ன முட்டாள் தனமான பேச்சு என்கிறீர்களா?

என்னது? வேலையில் பிரேக் எடுப்பதா? இப்படித்தான் முட்டாள்தனமாக அட்வைஸ் செய்வீர்களா என்று உங்களுக்குத் தோன்றலாம். இது அட்வைஸ் அல்ல, அனுபவம். அதைப் பகிர்ந்து கொண்டாக வேண்டிய நேரம் இது. 
என்னது! வேலையில் பிரேக் எடுப்பதா? இதென்ன முட்டாள் தனமான பேச்சு என்கிறீர்களா?

வேலைக்குச் செல்லும் பெற்றோர் VS தனிமையை உணரும் குழந்தைகள்

இரண்டு நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்று நடத்திய பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கான ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொள்ள நேர்ந்தது. அதில் பெற்றோர் ஒரு பக்கம் குழந்தைகள் மறுபக்கம் என அவரவர் குறை, நிறைகளைப் பேச வேண்டும். பெற்றோரைப் பொருத்தவரையில் அம்மா, அப்பா என இருவரும் வேலைக்குச் செல்லக் கூடிய குடும்பங்களில் இன்றைய பெற்றோருக்கு உண்பதற்கும், உடுப்பதற்கும், இரவுகளில் சற்று நேரம் தூங்குவதற்கும் மட்டுமேயான இடமாக வீடுகள் மாறி வரும் நவீன சூழலில் தங்களது குழந்தைகள் மனதார என்ன நினைக்கிறார்கள்? எதை விரும்புகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக அந்த நிகழ்ச்சி அமைந்தது. போலவே குழந்தைகளுக்கும் கூட இரவுகளில் வீடு திரும்பும் தமது பெற்றோர் சில நேரங்களில் சின்னஞ்சிறு விஷயத்திற்கும் கூட தங்களிடம் எரிந்து விழுவது ஏன்? சதா சர்வ நேரமும் படிக்கச் சொல்லி துன்புறுத்துவதோ அல்லது விட்டது தொல்லை என ஸ்மார்ட் ஃபோன்களையோ அல்லது கேட்டது அத்தனையும் வாங்கிக் கொடுத்தோ செல்லம் கொடுத்துக் கெடுப்பதற்கும் காரணம் என்னவாக இருக்கும்? எனத் தெரிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது. 

பெரும்பாலான பெற்றோர் தாம் இல்லாத வெறுமை தங்களது குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது என்று விரும்புகிறார்கள். குழந்தைகளை எல்லா நேரங்களிலும் சந்தோசமாகவே வைத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். ஆனால், நிஜத்தில் பல நேரங்களில் அது முடியாத போது மேற்குறிப்பிட்ட எரிந்து விழும் இயல்பு பெற்றோருக்குத் தானே வந்து விடுகிறது. 

இன்றைய குழந்தைகள் மெச்சூர்டானவர்கள்!

அதே சமயம் குழந்தைகள் தரப்பில், இன்றைய குழந்தைகளைப் பொருத்தவரையில் அவர்கள் எது சரி? தவறு என்பதை மிக நன்றாகவே தெரிந்து, புரிந்து வைத்திருக்கிறார்கள். அப்படி இருந்தும் சில நேரங்களில் அவர்களுக்கு தங்களது பெற்றோருடன் பிணக்குகள் வரக் காரணம்... எத்தனை தான் சமரசம் செய்து கொண்டபோதும் பிறந்தநாள், பள்ளி ஆண்டுவிழாக்களில் தங்களின் பங்களிப்புக்கு பரிசு கிடைக்கும் தருணங்கள், பரீட்சைகளில் வென்று வெற்றிக்கோப்பையுடன் திரும்பும் உன்னதமான நிமிடங்களில் எல்லால் அதைக் குதூகலத்துடனும் பெருமையுடனும் பகிர்ந்து கொள்ள வேலைக்குச் செல்லும் தங்களது அம்மா, அப்பாக்கள் உடனிருக்க முடியவில்லையே என்ற வருத்தம் அவர்களை சோகத்திலும், பிடிவாதத்திலும் தள்ளுகிறது. அதற்கு வடிகால் தேடிக் கொள்ளவே பெரும்பாலான குழந்தைகள் தங்களது பள்ளி நண்பர்களுடன் இணைந்து ஸ்மார்ட் ஃபோன் விடியோ கேம்கள் அல்லது சமூக ஊடகங்களில் மூழ்கிப் போகிறார்கள்.

இரண்டுக்குமே ஒரே தீர்வு தான் இருக்கிறது.

பெற்றோர், தங்களது பிள்ளைகளின் மீதான பாசத்தையும், நேசத்தையும் சதா தங்கள் குழந்தைகளுக்கு உணர்த்திக் கொண்டே இருந்தாக வேண்டும். தன்னுடைய அம்மாவோ அல்லது அப்பாவோ தன்னை அலட்சியப் படுத்துவதாக ஒரு குழந்தை எப்போதும் உணரக்கூடாது. அப்படி உணரும் குழந்தைகள் தான் பெரும்பாலும் மூர்க்கத்தனத்துடன் வளர்கின்றனர். இதைச் சொல்லும் போது, இன்னொரு விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. குழந்தைகளிடம் நேசத்துடனும், பாசத்துடனும் இருக்கலாமே தவிர ஓவராய் கொஞ்சி செல்ல மழை பொழிந்து அவர்களை குட்டிச்சுவராக்கி விடவும் கூடாது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல குழந்தைகளின் எதிர்பார்ப்பு ஒன்றே ஒன்று தான். குழந்தைகள் அன்பைப் பகிர்ந்து கொள்ள பெற்றோரைத் தேடும் தருணங்களில் எல்லாம் அவர்கள் வேலைகளில் மூழ்கிப் போய் குழந்தைகளான தங்களை அலட்சியப் படுத்தாமல் இருந்தால் போதும் என்கிறார்கள். 

அதே போல பெற்றோரின் எதிர்பார்ப்பு என்னவென்றால், தாங்கள் பட்ட கஷ்டங்களை எல்லாம் தாம் பெற்ற குழந்தைகள் பட கூடாது என்பதற்காகத் தானே பெற்றோர் வேலைக்குச் செல்வது என முடிவெடுத்தது, அதைக் குழந்தைகள் கொஞ்சம் புரிந்து கொண்டால் தேவலாம், குற்ற உணர்ச்சியின்றி வேலை பார்க்கலாம், என்று எதிர்பார்க்கிறார்கள். 

இரு தரப்பு எதிர்பார்ப்புகளுமே மிக, மிக சிறியவை. கொஞ்சம் சிரமம் பாராமல் முயன்றால் அதை மிக எளிதாக நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

வேலைக்குச் செல்லும் பெற்றோர் தமது நிலையை நிர்வாகத்திடம் எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க முயற்சிக்க வேண்டும்!

வேலைக்குச் செல்லும் பெற்றோர், வேலைத்தளத்தில் தமது நிறுவனங்களில் தாம் எத்தனை பெரிய அல்லது எத்தனை சிறிய பொறுப்பில் இருந்த போதிலும், பெற்ற குழந்தைகளுக்குத் தங்களது அருகாமை தேவை என்று வந்தால், எந்த வேலையாக இருந்தாலும் அதைச் சற்று ஒதுக்கி வைத்து விட்டோ அல்லது மாற்று ஏற்பாடுகள் செய்து வைத்து விட்டோ தங்களது குழந்தைகளுடன் இருந்து அவர்களது சந்தோசத்தையோ அல்லது துக்கத்தையோ பகிர்ந்து கொண்டு அந்த நேரத்திற்கான முக்கியத்துவத்தை அளிக்கத் தவறக்கூடாது என உறுதியாக முடிவெடுக்க வேண்டும். இது நடைமுறையில் மிக மிகக் கடினமான காரியம் தான். ஆனால், நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் உங்களுக்கு மேலதிகாரியாக இருப்பவரிடமோ அல்லது உங்களது அலுவலக H R மேலாளரிடமோ உங்களது நிலையை எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க முயற்சிக்க வேண்டும். நிர்வாகத்தின் ஒத்துழைப்பு இருந்தால், நீங்கள் பார்க்கும் வேலைக்கு குந்தகம் விளைவிக்காமல், வேலைக்கும் பங்கம் ஏற்படாமல் உங்களது குடும்பம் மற்றும் பிள்ளைகளுக்கான தருணங்களையும் உங்களால் சரியாகக் கையாள முடியும் எனும் நம்பிக்கையையும், உத்தரவாதத்தையும் பழுதின்றி உங்கள் நிர்வாகத்துக்கு ஏற்படுத்த முயற்சியுங்கள். இதனால் உங்களுக்கு வேலைத்தளத்தில் கிடைக்கும் சிறு சுதந்திரக் காற்றின் மூலம் வீடு, வேலை எனும் இரட்டைக் குதிரைச் சவாரியை உங்களால் ஒரே நேர்கோட்டில் சீரான வேகத்தில் செலுத்தி வெற்றி காண முடியும்.

புரிந்து கொள்ளாத நிர்வாகம் என்றால் வேலைக்குச் சில காலம் பிரேக் விடுங்கள்!

இல்லை, நிர்வாகத்திடம் உங்களது கோரிக்கை செல்லுபடியாகவில்லை என்றால், தயவு செய்து சில காலம் உங்களது பிள்ளைகளுக்காக உங்களது வேலைக்குப் போகும் கனவை ஒத்திப் போடுங்கள். இன்றைக்கு குழந்தைப் பருவம் என்பது ஒன்றாம் வகுப்பில் காலடி எடுத்து வைக்கும் வரை தான். சுமார் 5 வருடம் போதும். எம் பி பி எஸ் படிக்க 5 வருடங்களை ஒதுக்குவதில்லையா? அப்படித்தான், உங்களது குழந்தைகளை, நீங்கள் இல்லாமலும் தனித்து இயங்கச் செய்ய தயார் செய்வதற்கான காலகட்டமாக அந்த வருடங்களை எண்ணிக் கொள்ளுங்கள். அப்படி நினைத்துக் கொண்டு உங்களது வேலையில் சின்ன பிரேக் எடுத்துக் கொண்டு குழந்தைகள் வளரும் போது அவர்களுடன் இருக்க உங்களை நீங்கள் பக்குவப் படுத்திக் கொள்ளுங்கள்.

என்னது? வேலையில் பிரேக் எடுப்பதா? இப்படித்தான் முட்டாள்தனமாக அட்வைஸ் செய்வீர்களா என்று உங்களுக்குத் தோன்றலாம். இது அட்வைஸ் அல்ல, அனுபவம். அதைப் பகிர்ந்து கொண்டாக வேண்டிய நேரம் இது. ஏனெனில், எல்லாவற்றைக் காட்டிலும் நாம் முதலிடம் தர வேண்டியது நமது குழந்தைகளுக்காக. அவர்களை எச்சூழலிலும் தனித்தியங்கக் கூடியவர்களாக, தன்னம்பிக்கை மிக்கவர்களாக, மன உறுதி கொண்டவர்களாக வளர்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோரான நமக்கு இருக்கிறது. எனவே அதற்கான புத்திக்கொள்முதலாக குழந்தைகள் பிறந்து வளரும் அந்த முதல் 5 வருடங்களை நாம் எண்ணிக் கொள்ள வேண்டும். அதை மட்டும் சாதித்து விட்டோமென்றால் அப்புறம் திறந்து கிடக்கிறது இந்த பூமி. நிதானமாகத் திட்டமிட்டு எங்கு வேண்டுமானாலும் சுற்றிப் பறந்து திரிந்து வேலை பார்த்து சம்பாதிக்கலாம். 

பெற்றோரை பிளாக் மெயில் செய்யும் குழந்தைகளின் பழக்கம் பஸ்மாசுரன் கதையாகி விடக்கூடாது!

குழந்தைகளைப் பொருத்தவரையில், பெற்றோர், தம்மை வீட்டில் தனியாக விட்டு விட்டு வேலைக்குச் செல்கிறார்கள் என்பதை, ம்மா/ப்பா நீங்க தான் எங்களைத் தனியா வீட்ல விட்டுட்டு வேலைக்குப் போய்டறீங்களே, நாங்க எப்படி சும்மா வீட்ல இருக்கறது, எங்களுக்கு 50 இஞ்ச் ஸ்மார்ட் டிவி வேணும், ஆப்பிள் ஐ போன் வேணும், அன்லிமிடெட் நெட் ஃபெஸிலிட்டி வேணும், லேப் டாப் வேணும் எனத் தங்களது தனிமையை எச்சூழலிலும் தங்களது பெற்றொரிடையே குற்ற உணர்வைத் தூண்டி அதன் மூலமாக ஆடம்பர அற்ப ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் ஒரு வாய்ப்பாக ஆக்கி விட முயலக்கூடாது. ஏனெனில் இந்த அற்ப ஆசைகள் அனைத்துமே பஸ்மாசுரன் கதை ஆகி விடக்கூடும்.

ஆம், மணிகண்டன் அவதாரக் கதையில் மகாவிஷ்ணு, மோகினி ரூபமெடுத்து சிவ பெருமானைக் காக்க வருகையில், அவரைக் கண்டு மோகித்து தன் தலையில் தானே கை வைத்து பஸ்மாகி விடுவாமே பஸ்மாசுரன் அவனைப் போல ‘நமது ஆசைகளே நமக்கான அழிவுப்பாதைகளுக்கு வழி காட்டி விடக்கூடாது’. 

எல்லாம் சுபமே!

எனவே பெற்றோரும் சரி, பிள்ளைகளும் சரி ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு அல்லது புரிந்து கொள்ள முயன்று இரு சாரரது எதிர்பார்ப்புகளையும், குறை, நிறைகளையும் மனம் விட்டுப் பேசி அவ்வப்போது நிறைவேற்றியும், பிரச்னைகளைக் களைவதையும் வழக்கமாக்கிக் கொண்டால் பிறகு குற்ற உணர்வுக்கு இடமேது?

எல்லாம் சுபமே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com