Enable Javscript for better performance
அந்த 23 ஐ இவர் விடமாட்டார் போல இருக்கே! என்ன செய்யப் போகிறார் சந்திரபாபு நாயுடு?!- Dinamani

சுடச்சுட

  

  அந்த 23 ஐ இவர் விடமாட்டார் போல இருக்கே! என்ன செய்யப் போகிறார் சந்திரபாபு நாயுடு?!

  By RKV  |   Published on : 15th June 2019 02:56 PM  |   அ+அ அ-   |    |  

  andra_assembly_clash

   

  ஆந்திர சட்டசபையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?

  புதிய முதலமைச்சர் பதவியேற்றிருக்கிறார். பழைய முதலமைச்சர் இப்போது எதிர்கட்சித் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். நடுவே ஆளும்கட்சியில் முக்கியப்பொறுப்பில் இருக்கும் எம் எல் ஏ ரோஜா வேறு சட்டசபை நிகழ்வுகளில் தவறாது பங்கேற்கிறார்.

  ரோஜாவுக்கும், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் தீராப்பகை உண்டு. அதை மனதில் வைத்துத் தான் கடந்த தேர்தல்களில் தெலுங்கு தேசம் கட்சிப் பிரமுகர்களுக்கு எதிராக மிகத்தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு அயராது உழைத்து ஒய் எஸ் ஆர் காங்கிரஸின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிக்கு தானும் ஒரு காரணமானார் ரோஜா. 

  சரி இவர்கள் முதன்முறை ஆளும்கட்சியாக சட்டசபைக்குள் நுழைகிறார்கள். அப்படி என்ன தான் விவாதிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ஆந்திர சட்டசபைக்குள் நுழைந்தோம்.

  சபாநாயகராக தம்மினேனி சீதாராமை நியமித்திருக்கிறார்கள். சபாநாயகர் நியமனத்துக்குப் பின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஒரு வரவேற்புரை நிகழ்த்தினார். அதில்,

  சோம்நாத சட்டர்ஜி உட்பட திறம்பட சபை நிகழ்வுகளைக் கையாண்ட பிரபல சபாநாயகர்கள் பெயர்களையெல்லாம் குறிப்பிட்டு, அவர்களைப்போல நீங்களும் பாரபட்சம் காணாமல் இந்தச் சபையை நடத்திச் செல்ல வேண்டும் என்ற நம்பிக்கையில் நாங்கள் உங்களை சபாநாயகராகத் தேர்ந்தெடுத்து அமர வைத்திருக்கிறோம். எங்கள் நம்பிக்கையை காப்பாற்றுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார்.

  இதில் ஒரு விஷயம் இடறியது;

  ஜெகன் மோகன் ரெட்டியின் மனதில் ஒரு தீரா வடு இருக்கும் விஷயம் ஊருக்கே தெரியும். அது என்னவென்றால், கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலின் போது, ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு ஜெயித்த எம் எல் ஏக்களில் 23 பேரையும், எம் பிக்கள் 3 பேரையும் விலைக்கு வாங்கி அரசியல் சாசனச் சட்டத்திற்குப் புறம்பாக தெலுங்கு தேசம் கட்சியில் இணைத்துக் கொண்டதோடு அவர்களை பதவி விலகச் சொல்ல வேண்டும் எனும் எதிர்க்கட்சியினரின் கோரிக்கையை குப்பையில் போட்டு விட்டு சபாநாயகர் பதவியை டம்மியாக்கி தானே முடிவுகளை எடுத்து, எதிர்கட்சியினராக அமர வேண்டியவர்களை ஆளுங்கட்சி மந்திரிகளாக்கி அரசியல் சாசனச் சட்டத்தின் விதிமுறைகளைக் கேலிக்குள்ளாக்கியவர் சந்திரபாபு நாயுடு. 

  இந்தக் குற்றச்சாட்டை ஜெகன் எப்போதும் மறப்பதாயில்லை, மன்னிப்பதாகவும் இல்லை  என்பது ஆந்திர சட்ட சபை நடவடிக்கைகளில் இருந்து கண்கூடாகத் தெரிகிறது.

  என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது. 

  தனது ஆட்சியில் புதிய மாற்றங்களைக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கும் இளம் முதல்வர், இப்படி சபையிலும் கூட கீறல் விழுந்த ரெகார்டு போன்று பேசிய விஷயத்தையே பேசிக் கொண்டிருப்பது அவரது அரசியல் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்து வருபவர்களிடையே  சலிப்பை ஏற்படுத்தக்கூடும். இதை ஜெகன் உணர்வாரா  எனத் தெரியவில்லை.

  சட்டசபையில் முதல்வர் ஜெகன் பேசி விட்டு அமர்ந்ததும், அவருக்குப் பதில் சொல்லும் முகமாக எழுந்த சந்திரபாபு நாயுடு;

  நீங்களும் அரசியல் பாரம்பர்யம் நிறைந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் தான். உங்கள் அப்பா ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி நாடறிந்த அரசியல் தலைவர். அவர் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராகச் செயலாற்றிக் கொண்டிருந்த போது நீங்கள் இப்போது எங்கள் மீது வைத்தீர்களே, அதே போன்றதொரு குற்றத்தை அவர் சார்ந்த கட்சியும் தான் செய்தது. அதெல்லாம் உங்களுக்குத் தெரியாதா? தேர்தல் வெற்றிகள் முன் பின்னாக இருக்கலாம். அதைத் தீர்மானிப்பது மக்கள். இன்று உங்களுக்குக் கிடைத்த வெற்றியும், எங்களது தோல்வியும், அன்று எங்களுக்குக் கிடைத்த வெற்றியும் கூட மக்கள் அளித்தது தான். அதை நாம் உணர்ந்திருக்க வேண்டும். ஏதோ நாங்கள் தான் இப்படி முதல்முறை செய்தது போல குற்றம் சாட்டக் கூடாது என்றார்.

  சந்திரபாபு நாயுடு சொன்ன பதிலைக் கேட்டு மீண்டும் கொதித்தெழுந்த ஜெகன் மோகன் ரெட்டி;

  ‘ஊர் உலகத்தில் நிறைய கொலைகள் நடக்கின்றன, அதனால் இந்தக் கொலையைப் பெரிது படுத்தாதீர்கள் என்பது போலிருக்கிறது உங்களது வாதம். செய்த தவறை இப்போதும் நீங்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அதைத் திருத்திக் கொள்ளும் எண்ணமோ, தவறை ஒப்புக் கொள்ளும் எண்ணவோ உங்களுக்கு இல்லை. அதற்கு  ஆண்டவன் அளித்த தண்டனை தான் இன்றைய உங்களது 23 எம் எல் ஏக்கள், 3 எம் பி வெற்றி. இதைப் பார்த்தாவது திருந்த வேண்டாமா?

  - என்று கூறவே, சபை அமளி துமளிப்பட்டது. அப்போது உடனே ஜெகன் மோகன் ரெட்டி;

  இன்று உங்கள் பக்கம் நீங்கள் வைத்திருக்கும் 23 எம் எல் ஏக்களில் பலரை பதவி ஆசை காட்டி  எங்களால் விலைக்கு வாங்க முடியாதா என்ன? அப்படி வாங்கினால் பிறகெப்படி நீங்கள் எதிர்கட்சித் தலைவராக அமர முடியும்? அரசியல் சாசன சட்டத்திற்குப் புறம்பாக அப்படி நாங்கள் செய்ய மாட்டோம். இப்போது எதிர்கட்சித் தலைவராக நீங்கள் அமர்ந்திருப்பதே எங்களது முடிவு தான். அதை நீங்கள் மறக்கக்கூடாது என்றார்.

  இப்படியாக அன்றைய விவாதத்தில் பெரும்பகுதி நேரமும் இந்த 23 ல் தான் கழிந்தது.

  ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஒரு கோரிக்கை. உங்களது அரசியல் வெற்றி பலரால் ரசிக்கப்பட்டது. சிலருக்கு வயிற்றெரிச்சலைக் கிளப்பியது. ஆந்திர அரசியலில் உங்களது தந்தையைப் போலவே நீங்களும் மக்களால் விரும்பப்படும் தலைவனாக  உருவாவீர்கள் எனும் நம்பிக்கை அரசியல் ஆர்வலர்கள் பலரிடமும் எழுந்திருக்கும் இவ்வேளையில் நீங்கள் செல்லுமிடமெங்கும் மீண்டும் மீண்டும் கீறல் விழுந்த ரெக்கார்டு போல அந்த 23 ஐப் பற்றி மட்டுமே அழுத்தம் கொடுத்துப் பேசிக் கொண்டே இருப்பது உங்களது நேர்மையான அரசியல் நிகழ்ச்சிகளை உற்றுக் கவனிக்கும் ஆர்வம் கொண்டவர்களிடையே பெரும் சலிப்பைத் தூண்டுவதாக உள்ளது.

  எனவே, அந்த 23 ஐ விட்டு விட்டு சபையில் வேறு ஆக்கப்பூர்வமான விஷயங்களைப் பற்றி விவாதியுங்களேன் என்று சொல்லத் தோன்றியது.

  நல்ல வேலை, இதையே தான் சபாநாயகர் தம்மினேனி சீதாராமும் எடுத்துரைத்தார்.

  அரசியல்வாதிகள் தேர்தல் வெற்றிகளைப் பொருத்து பதவிக்காக கட்சி தாவும் நடத்தைகள் இங்கும் நடந்திருக்கின்றன. வேறு மாநிலங்களிலும் நடந்திருக்கின்றன. அதற்காக அதை நியாயப் படுத்த முடியாது. அப்படி இனி நடக்கக் கூடாது என்பது தான் ஆளும்கட்சியின் விருப்பமும், உங்கள் விருப்பமுமாக இப்போது இருக்கிறது.

  'சபை நடவடிக்கைகளில் முற்றிலும் மாற்றத்தைக் கொண்டு வர விரும்பும் இவ்வேளையில் இப்படியான பேச்சுக்களும், எதிர்ப்பேச்சுகளும் இரு தரப்பாரிடையே வேண்டியதில்லை. ஒரு கட்சியின் சார்பாகத் தேர்தலில் நின்று போட்டியிட்டு வென்று விட்டு, பின்னர் தேர்தலில் பெரும்பான்மை பெறவில்லை பதவி கிடைக்கவில்லை என்பதற்காக ஆளுங்கட்சியிடம் விலை போய் கட்சி தாவும் அரசியல்வாதிகளின் பதவியைப் பறிக்கத்தக்க  (Anti Defection Law) சட்ட மசோதா ஒன்றைக் கொண்டு வந்து இந்தியாவிலேயே பிற மாநிலங்களுக்கெல்லாம் ஒரு முன்னோடியாக நாம் விளங்கப் போகிறோம். அதையெல்லாம் இனி வரும் காலங்களில் இந்தச் சபையில் விவாதிப்போம். அதுவரை சபையின் நேரத்தை அதன் உறுப்பினர்கள் குறுக்கிட்டுப் பேசி வீணாக்காமல் ஆக்கப்பூர்வமான விஷயங்களைப் பற்றி இங்கு விவாதிப்போம் என்று முடித்தார்.

  ஆந்திர அரசியலை தொடர்ந்து கவனித்து வருபவர்கள் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்து ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் கூர்ந்து நோக்கி வருகிறார்கள் என்பது உண்மை. தேர்தல் வெற்றிக்குப் பின்னான முதல் நேர்காணலில் என் டி டி வி யின் ராஜ்தீப் சர்தேசாயுடனான உரையாடலின் போது ஜெகன் சொன்னது இது தான்;

  ஒரு வருடம் கழித்து, இதே நாள், இதே நேரத்தில் எனது அரசியல் செயல்பாடுகளைக் கண்டு, எனது நலத்திட்ட அறிவிப்புகளைக் கண்டு, நான் ஆந்திரத்தில் கொண்டு வந்திருக்கும் வரவேற்கத் தக்க மாற்றங்களைக் கண்டு, வெல்டன் ஜெகன் என்று நீங்கள் என் தோள் தட்டி பாராட்டுவீர்கள்’ 

  - அந்த வார்த்தைகளை ஜெகன் காப்பாற்ற வேண்டுமெனில் இந்த 23 ஐ கொஞ்சம் விட்டு விடலாம் என்று தோன்றுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai