Enable Javscript for better performance
Is Smriti Irani the next Sushima Swaraj of BJP?- Dinamani

சுடச்சுட

  

  ஸ்மிருதி இரானிக்கு பாஜகவின் அடுத்த சுஷ்மா சுவராஜாக அமோக வாய்ப்பு!

  By RKV  |   Published on : 27th May 2019 03:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  smirithi_sushma

   

  பாஜகவின் பெண் தலைவர்களில் வலிமை வாய்ந்தவர்களாகவும் அகில இந்திய அளவில் பெயர் சொன்னால் அடையாளம் காணக்கூடிய நபர்களாகவும் விளங்கக்கூடியவர்கள் வெகு குறைவான பெண்களே. ஆண் தலைவர்கள் அவரவர் சார்ந்த கட்சிகளின் பிரபலங்களாக வலம் வருவதில் பெரிய ஆச்சர்யங்கள் ஏதும் இல்லை. ஆனால், பெண்கள் அவ்விதமாக இருப்பதும், செயலாற்றுவதும் எப்போதாவது நிகழக்கூடியது என்பதால் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பாஜகவைப் பொருத்தவரை கடந்த ஆட்சியில் அகில இந்திய அளவில் அறியப்பட்ட முகங்களாக வலம் வந்த பெண் அரசியல்வாதிகள் என்றால் அது வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜ், பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன், ராஜஸ்தான் முன்னாள் முதல்வரான வசுந்தரா ராஜே சிந்தியா, உத்தரப்பிரதேச முன்னால் முதல்வரான உமாபாரதி, விலங்குகள் நலத்துறை அமைச்சரான மேனகா காந்தி, ஜவுளித்துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி மற்றும் தமிழக பாஜக தலைவரான தமிழிசை செளந்திரராஜன் உள்ளிட்டோர் மட்டுமே!  இவர்களில் முன்னவர்கள் இருவரும் அவர்களது அதிரடியான கறார் பேச்சுக்காக எப்போதும் ட்ரெண்டிங்கில் இருப்பார்கள். ஸ்மிருதியும், தமிழிசையும் தங்களது தொடர் செயல்பாடுகளாலும் காண்ட்ரோவர்ஷியல் கருத்துக்களாலும் ஊடகங்களின் செல்லப்பிள்ளைகளாக இருப்பார்கள். 

  தமிழகத்தைப் பொருத்தவரை மோடியையும் தாண்டி பாஜக வை பெண்களிடம் அதிகம் கொண்டு சேர்த்த பெருமை தமிழிசையையே சேரும் என்பதில் தமிழகத்தில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை. தாமரை தமிழகத்தில் மலர்ந்தே தீரும் என்பதில் தனது தூத்துக்குடி தோல்விக்குப் பிறகும் மிக உறுதியாக இருக்கிறார் தமிழிசை, காரணம் கட்சியின் கொள்கை மீதான நம்பிக்கை மட்டுமல்ல அந்த அளவுக்கு தன்னால் களப்பணியாற்றவும் முடியும் என்பதில் அவர் கொண்ட நம்பிக்கையாகவும் நாம் இதைப் புரிந்து கொள்ளலாம்.

  களப்பணியில் தமிழகத்தின் தமிழிசையை பின்னுக்குத் தள்ளிவிடக்கூடிய அளவுக்கு மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன்... தான் போட்டியிட்ட தொகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து இம்முறை காங்கிரஸின் கோட்டையாக இருந்த அமேதியில் வெற்றி வாய்ப்பை அறுவடை செய்திருக்கிறார் ஸ்மிருதி.

  கடந்த 30 ஆண்டுகளாக அங்கு பாஜக வால் காலூன்ற முடிந்ததில்லை. இம்முறை சாத்தியமானதற்குக் காரணம் கட்சித் தலைமையின் திட்டமிடலும், ஸ்மிருதியின் செயல்பாடுகளும் தான். அமேதியில் ஸ்மிருதிக்கு பக்கபலமாக இருந்தவர்கள் பலர். காரணம் ஸ்மிருதியின் பழகும் தன்மை. அடிமட்டத் தொண்டர்கள் வரை அவர்களுக்கு ஒன்று என்றால் உடன் இணைந்து நின்று குரல் கொடுக்க ஸ்மிருதி தயங்கியதே இல்லை. அதிலும் கடந்த முறை காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவராக ராகுலை எதிர்த்து நின்று அமேதியில் தோற்ற பின்பும் கூட ஸ்மிருதி அந்தத் தொகுதியை விட்டு நீங்கிவிட முயற்சிக்கவில்லை. மிகுந்த கணிப்புடன் இம்முறை அத்தொகுதியில் பாஜகவின் வெற்றிக்காக உழைத்தார் ஸ்மிருதி.

  அதற்கான பரிசு, இதோ வெற்றிக்கனி அவர் கையில் தவழ்கிறது. இந்நிலையில் ஸ்மிருதியை ஏன் சுஷ்மாவுடன் ஒப்பிட வேண்டும் என்று தோன்றலாம்.

  ஒப்பீட்டுக்கு காரணம் இன்று ஸ்மிருதி செய்த காரியமொன்றின் அடிப்படையில் தான்.

  சுஷ்மா சுவராஜ் கடந்த காலங்களில் தனது அதிரடியான கமெண்டுகளால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். 

  2004 ஆம் ஆண்டில் சோனியா காந்திக்கு இந்தியப் பிரதமராக ஒரு வாய்ப்பு இருந்த போது, அதை நிர்தாட்சண்யமாக எதிர்த்த எதிர்கட்சித் தலைவர்களில் ஒருவர் சுஷ்மா. கூட்டணி பலத்தில் வென்று பாராளுமன்றத் தேர்தலில் வென்று காங்கிரஸ் அப்போது ஆட்சி அமைக்கவிருந்தது. அன்று, சோனியா, இந்தியப் பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டால் நான் என் தலைமுடியை மழித்துக் கொண்டு விதவைக்கோலம் பூண்டு பாராளுமன்றம் வந்து என் எதிர்ப்பைத் தெரிவிப்பேன் என்று சொன்னவர் சுஷ்மா. அன்று சுஷ்மாவின் இந்த கடும் கண்டன வார்த்தைகளுக்கு மதிப்பளித்தோ என்னவோ சோனியா பிரதமர் ஆகவில்லை. சுஷ்மாவுக்கு அடுத்தபடியாக பொதுவெளியில் நேரு குடும்ப வாரிசுகளின் மீது அதிகப்படியான கேள்விகளை எழுப்பியவர் ஸ்மிருதி இரானியாகத்தான் இருக்கக்கூடும். 

  அமேதியில் களப்பணியாற்றும் போது செய்தியாளர் நிவிகா குமாருக்கு ஸ்மிருதி அளித்த நேர்காணலொன்றில் மிகக்காரமாக ப்ரியங்கா வதேராவையும், ராகுல் காந்தியையும் தமது கேள்விகளால் வறுத்தெடுத்தார். ப்ரியங்கா தனது மூக்கையும், ராகுல் தனது குடும்பப் பெருமையையும் கொண்டு அமேதியில் ஜெயிக்க நினைக்கிறார்கள். உண்மையில் மக்களோடு மக்களாக இங்கே வாழ்ந்து பாராமல் மக்களின் பிரச்னைகள் குறித்து அவர்களுக்கு என்ன தெரியும்? ஏதோ ஓரிடத்தில் நின்று ஏழை எளிய மக்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு, மாண்பு மிகு இந்தியப் பிரதமரை சிறுவர்களைக் கூட்டி வைத்து திருடனென்று கேலி செய்து கோஷம் எழுப்பச் செய்தும் இழிவான அரசியல் செய்கிறார்கள் அண்ணனும், தங்கையும். இது மிகக்கேவலமானது என்றார் ஸ்மிருதி.

  அது மட்டுமல்ல, தற்போது தனது வெற்றிக்கு காரணமாக ஸ்மிருது நம்புவது கூட, தொகுதிப் பணிகளில் ராகுலின் இயலாமையைத் தான். அமேதியில் எந்த ஒரு நபருக்கும் எளிதில் அணுக முடிகிற தலைமையாகத் தன்னால் பணியாற்ற முடியும். அது ராகுலால் முடியாது போனதின் விளைவே தனது பிரம்மாண்ட வெற்றி என்று கூறும் ஸ்மிருதி சமீபத்தில் தனது அனுதாபிகள் திகைக்கும் விதத்தில் மேலுமொரு காரியம் செய்திருக்கிறார்.

  இதை வேறெந்தப் பெண் அரசியல்வாதியும் யோசித்துப் பார்த்திருப்பாரா என்று தெரியவில்லை. ஆனால் ஸ்மிருதி அதைச் செய்து முடித்திருக்கிறார்.

  அமேதியில் ஸ்மிருதியின் வெற்றிக்கு காரணமான ஆதரவாளர்களில் முக்கியமானவர் அமேதியின் சுரேந்திர பிரதாப் சிங், தேர்தல் பணிகளுக்காகவே தான் வகித்து வந்த கிராமத் தலைவர் பதவியைக்கூட ராஜினாமா செய்து விட்டு ஸ்மிருதியின் வெற்றிக்காக உழைத்தவர் அவர். அத்துடன் தேர்தல் நேரத்தில் பெரும் சர்ச்சைக்குள்ளான பாஜக ஷூ விநியோகித்த விவகாத்தில் முக்கிய பங்கு வகித்தவர் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு. இந்நிலையில் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சுரேந்திர சிங் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது கொலை தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக உத்தரப்பிரதேச காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கொலைக்கு அரசியல் தவிர சுரேந்திர பிரதாப் சிங்கின் தனிப்பட்ட எதிரிகளுக்கும் பங்கு உண்டா என்கிற ரீதியில் காவல்துறை விசாரணை நீண்டு கொண்டிருக்கிறது. ஆனால், சுரேந்திர சிங்கின் மகன் அபய்பிரதாப் சிங், தனது தந்தையின் கொலைக்கு காங்கிரஸ் கட்சியினரின் பழிவாங்கல் முயற்சியே காரணம் என காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். ஸ்மிருதியின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் தன் தந்தை நடத்திய மாபெரும் பேரணியைக் கண்டு கொதித்துப் போன காங்கிரஸ் கட்சியினரே இந்தக் கொலைக்கு காரணம் என அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனிடையில் சுரேந்திர சிங்கின் இறுதி ஊர்வலம் அவரது பிறந்த ஊரான பரோலி கிராமத்தின் நடைபெற்றது.

  இதில் பங்கேற்று இரங்கல் செலுத்திய ஸ்மிருதி இரானி, தனது வெற்றிக்காக உழைத்த சுரேந்திர சிங்கின் சடலத்தை தூக்கிச் செல்லும் நால்வரில் ஒருவராகத் தானும் சடலம் சுமந்து தனது ஆதரவாளருக்கான தனது நன்றிக்கடனை செலுத்தினார். தேர்தலில் தனக்காக உழைத்த ஆதரவாளரின் சடலத்தை ஒரு பெண் தலைவர் ஒருவர் சுமந்து சென்று மரியாதை செலுத்தியது இதுவே முதல்முறையாக இருக்கக் கூடும். இத்தகைய செயல்பாடுகள் நிச்சயம் அங்கிருக்கும் மக்களிடையே ஸ்மிருதிக்கு ஆதரவான மனநிலையை வளர்க்க மேலும் உதவலாம்.

  ஸ்மிருதி அதையெல்லாம் எதிர்பார்த்துச் செய்தாரோ, இல்லையோ, ஆனால், இது அரசியல் பார்வையாளர்களால் அப்படியும் பார்க்கப்படலாம் என்பது உறுதி.

  சோனியா பிரதமரானால் விதவைக் கோலம் பூண்டு பாராளுமன்றம் வருவேன் என்றவர் சுஷ்மா, சுடப்பட்டு இறந்து போன தனது தீவிர ஆதரவாளரின் சடலத்தை சுமந்து சென்று மரியாதை செய்தார் ஸ்மிருதி இரானி.

  இரண்டும் வெவ்வேறு விதமான சம்பவங்கள் என்றாலும் இருவருக்கும் அகில இந்திய அளவில் மக்களிடையே கவனத்தைப் பெற்றுத்தந்த சம்பவங்கள் என்ற வகையிலும் பிற பெண் அரசியல்வாதிகளால் யோசிக்கக்கூட முடியாத விஷயங்களை செய்து காட்டியவர்கள் என்ற முறையிலும் இவ்விருவரையும் ஒப்பிட்டதில் தவறில்லையே!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai