Enable Javscript for better performance
பாகிஸ்தானின் ஏழை கிறிஸ்தவ இளம்பெண்களைக் குறிவைக்கும் சீன மணமகன்கள்!- Dinamani

சுடச்சுட

  

  பாகிஸ்தானின் ஏழை கிறிஸ்தவ இளம்பெண்களைக் குறிவைக்கும் சீன மணமகன்கள்!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 10th May 2019 03:18 PM  |   அ+அ அ-   |    |  

  pak_china

   

  சீனாவில் தற்போது நாமிருவர், நமக்கொருவர் பாலிஸி பின்பற்றப்படுகிறது. இதனால் ஜனத்தொகையில் உலகில் முதலிடத்தில் இருக்கும் சீனாவின் குழந்தைப் பிறப்பு விகிதம் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் ஆண்குழந்தைகளுக்கு நிகரான பெண் குழந்தைகள் விகிதம் சராசரியாகக் குறைந்து கொண்டே வருவதாக புள்ளி விவரக் கணக்கொன்று கூறுகிறது. இந்தியாவிலும் இந்தப் பிரச்னை உண்டு. இதில், இந்தியா இந்தப் பிரச்னையை எப்படிச் சமன் செய்யப்போகிறது என்பதைக் காட்டிலும் சீனா இதை எப்படிக் கையாண்டு கொண்டிருக்கிறது என்பதை அறிய நேர்ந்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. 

  இப்போது சீனாவில் மணப்பதற்கு பெண் கிடைக்காத மணமகன்கள் பாகிஸ்தானை நோக்கி படையெடுக்கத் துவங்கி இருக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம். பாகிஸ்தானின் கிறிஸ்தவக் குடும்பங்களைக் குறி வைக்கும் இந்த மணமகன்கள் நேரடியாக பெண் வீட்டாரை அணுகுவதில்லை. அங்கிருக்கும் சர்ச்சுகளை அணுகி, கிளெர்க்குகளை ஏஜண்டுகளாகப் பயன்படுத்திக் கொண்டு வறுமையில் தவிக்கும் கிறிஸ்தவ குடும்பங்களைக் குறிவைக்கின்றனர். சீனர்களிடம் பெரும் பணம் கரந்துகொண்டு கிளெர்க் ஏஜண்டுகள் அவர்களுக்குத் தகுதியான பாக் கிறிஸ்தவ மணமகள்களை அடையாளம் காட்டுகிறார்கள் என்பதாகத் தகவல். இப்படி, இதுவரை பல பாகிஸ்தானிய கிறிஸ்தவப் பெண்கள், சீன ஆண்களுக்கு மணமுடிக்கப்பட்டு சீனாவுக்கு கடத்தப்பட்டுள்ளார்கள். அங்கே அவர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது என்றாலும் கூட அந்தப் பெண்களின் பெற்றோருக்கு நிம்மதியாக இருந்திருக்கக் கூடும். ஆனால், அங்கே தான் பெரும் சோகம். 

  இப்படி சீன மணமகன்களுக்கு திருமணம் முடித்து அனுப்பப்படும் பெண்களில் பலரும் மிகப்பெரிய அளவில் குடும்ப வன்முறைகளுக்கு ஆளாக்கப்படுவதாக சீனாவில் இயங்கும் பாகிஸ்தான் தூதரகம் சமீபத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து சீனாவுக்கு திருமணமாகிச் செல்லும் பெண்களில் பலருக்கு சீனர்களின் மொழி புரிவதில்லை. ஒரு டம்ளர் தண்ணீர் வேண்டுமென்றாலும் அவர்களால் அதை சீனர்களுக்குப் புரியும் விதத்தில் சொல்வதற்குள் உயிர் போய் உயிர் வரும் நிலை. அத்துடன் அந்நிய தேசத்துப் பெண்களை மணந்து செல்லும் சீன ஆண்கள் அவர்களை பரிவுடன் நடத்துவதில்லை. ஊரை விட்டு ஒதுக்குப்புறமான இடங்களில் வீடுகளை எடுத்து அவர்களைத் தங்க வைத்து குடும்பம் நடத்தும் போது அந்தப் பெண்களை மிகப்பெரிய அளவிலான கொடுமைகளுக்கு உட்படுத்துகிறார்கள் என்று இதுவரை பல்வேறு புகார்கள் பதிவாகியுள்ளன. இத்தனைக்கும் காரணம் பாகிஸ்தானிய கிறிஸ்தவர்களின் வறுமையே! அந்த வறுமையை, உள்நாட்டு சர்ச் ஏஜண்டுகள் மற்றும் பேராசை கொண்ட பாதிரியார்களில் சிலர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அங்கிருக்கும் வறிய கிறிஸ்துவ குடும்பங்களை மூளைச்சலவை செய்து, உங்கள் பெண், சீன மணமகனை மணந்து கொண்டால், அங்கே அவளுக்கு வளமான வாழ்க்கை காத்துக் கொண்டிருக்கிறது’ என நம்பச் செய்து ஏராளமான பாகிஸ்தானிய கிறிஸ்தவ இளம்பெண்களை திருமணம் என்ற பெயரில் வெகு எளிதாகப் படுகுழியில் தள்ளுகின்றனர்.

  திருமணமாகி சீனாவுக்குச் செல்லும் பெண்களில் பலரும் சில மாதங்களிலேயே சுவரில் அடித்த பந்தாக பாகிஸ்தானுக்கு திரும்பி விடுகின்றனர். இது தொடர்பான புகார்கள் பாகிஸ்தான் தூதரகத்தில் குவியத் தொடங்கவே, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை சீன அரசை இவ்விஷயத்தில் கேள்வி கேட்டது. முதன்முறை இந்தக் குற்றச்சாட்டை மறுத்த சீன அரசு தொடர்ந்து பாகிஸ்தானிய  வெளியுறவுத்துறை அமைச்சகம் சான்றுகளுடன் கேள்வி கேட்டதும்  இரு நாட்டு அமைச்சகமும் இணைந்து செயலாற்றி இப்படியான குற்றங்களைத் தடுக்க ஆவண செய்யலாம் எனும் முடிவுக்கு ஒப்புக் கொண்டுள்ளது.

  சீன மணமகன்களின், கிறிஸ்தவ மணமகள் தேவை எனும் டிமாண்ட் பாகிஸ்தானில் இளம்பெண் கடத்தலுக்கு பெருமளவில் துணை போவதாகவும் சமீபகாலமாக ஒரு அதிர்ச்சிகரமான ரிப்போர்ட் வெளியாகியிருக்கிறது. இம்மாதிரியான குற்றப்பின்னணிகளின் முதன்மைக் காரணமாக கண்டறியப்பட்டிருப்பது என்ன தெரியுமா? பெண் வீட்டாரின் பேராசை தான். பாகிஸ்தானின் வறிய கிறிஸ்தவ குடும்பங்கள் பணக்கார சீன மாப்பிள்ளைகளுக்கு( கிறிஸ்தவராக மதம் மாறிய) சர்வ சாதாரணமாக விலை போகின்றன. பெரும்பாலான திருமணங்களில் மணப்பெண்ணின் விருப்பமின்மையோ, எதிர்ப்போ ஒரு பொருட்டாக கருதப்படுவதே இல்லை. பெற்றோரின் இந்த அறியாமையும், பேராசையுமே அப்பெண்களின் எதிர்காலம் நாசமாவதற்குப் பெருமளவில் காரணமாகி விட்டதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் கூறி வருகின்றன.

  பெரும்பாலான திருமணங்களில் மணப்பெண்களின் வயது, மணமகன்களின் வயதில் பாதி கூட இருப்பதில்லை.  சமீபத்தில் தன்னை விட இருமடங்கு வயதுடைய ஒரு சீன மாப்பிள்ளையை மணந்து சீனாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு கொடுமை தாங்காமல் மீண்டும் பிறந்தகத்துக்கு தப்பி வந்த முஹாதஸ் அஷ்ரஃப்பின் வயது வெறும் 16. இந்தப் 16 வயதுக்குள் அவள் திருமணம் என்றாலே வெறுத்து, மிரண்டு ஓடச்செய்யக்கூடிய வகையிலான அனுபவங்கள் பலவற்றை  அடைந்தாயிற்று! முஹாதஸ் தற்போது கர்ப்பிணி என்பது கூடுதல் தகவல். 

  இத்தகைய எல்லைமீறல்களை பாகிஸ்தான் மீது சீனா நடத்தும் மனிதக்கடத்தல் என்று தான் வகைப்படுத்த வேண்டும் என்கிறார் பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் மாகாணத்துக்கான மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரான இஜாஸ் அலாம் அஹஸ்டின்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai