Enable Javscript for better performance
Demanding dowry, Starved by husband and in-laws ... kerala woman died!- Dinamani

சுடச்சுட

  

  வரதட்சிணை பாக்கிக்காக பட்டினி போட்டு கொல்லப்பட்ட இளம்பெண்! கணவன், மாமியார் கைது!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 02nd April 2019 02:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  thushara

   

  கேரளா, கொல்லம் மாவட்டம் ஒய்யூரைச் சேர்ந்தவர் 30 வயது சந்துலால். இவரது மனைவி துஷாரா கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிருக்கு ஆபத்தான மோசமான நிலையில் கொல்லம் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். எலும்பும், தோலுமாக நினைவற்ற நிலையில் இருந்த துஷாராவைச் சோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக அறிவித்தனர். இயற்கைக்குப் புறம்பான வகையில் இளம்பெண் ஒருவர் உடல் மெலிந்து காய்ந்து வற்றிப்போய் கிள்ளக்கூட சதையற்ற நிலையில் மரித்தது மருத்துவர்களிடையே ஆச்சர்யத்தையும், சந்தேகத்தையும் எழுப்பியது. இருப்பினும் முதற்கட்டமாக துஷாராவின் மரணத்தை இயற்கைக்கு மாறானது என்று மட்டும் பதிவு செய்தனர்.

  பின்பு துஷாராவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு உள்ளானது. அப்போது கிடைத்த முடிவுகளைக் கண்டு பிரேதப் பரிசோதனையில் ஈடுபட்ட மருத்துவர்கள் அதிர்ந்தனர். இளம்பெண்ணும், இரண்டு ஆண்  குழந்தைகளுக்குத் தாயுமான துஷாரா தனது கணவர் மற்றும் மாமியாரால் தொடர்ந்து பல மாதங்களாகப் பட்டினி போடப்பட்டிருக்கிறார். துஷாராவை வீட்டின் ஒரு அறையில் அடைத்து வைத்து முறையான உணவேதும் தராமல் அவ்வப்போது பற்றியும், பற்றாமலும் வெறும் சர்க்கரைத் தண்ணீரும், ஊற வைத்த பழைய சோறும் மட்டும் அளித்து வந்திருக்கிறார்கள் அவர்கள். இதனால் துஷாராவின் உடல் மெலிந்து நாளுக்கு நாள் ஷீணமடைந்து வந்திருக்கிறது. இதைப்பற்றிய கவலைகள் ஏதுமின்றி அவரது மாமியாரும், கணவரும் துஷாராவை வரதட்சிணை பாக்கிக்காக அடித்துத் துன்புறுத்தியும் வந்திருக்கிறார்கள். இத்தனை பயங்கரம் நிகழ்ந்தும் இவையனைத்தும் அண்டைவீட்டாருக்குத் தெரியாமல் போனதற்கு காரணம் துஷாராவின் வீட்டைச் சுற்றி சந்தேகத்திற்கிடமான வகையில் அலுமினிய ஷீட்டுகள் கொண்டு வீடு கவர் செய்யப்பட்டிருந்தது என்கிறார்கள் அக்கம்பக்கத்தார். அதுமட்டுமின்றி, துஷாராவின் மாமியார் கீதா, கணவர் இருவருக்குமே அமானுஷ்ய பிளாக் மேஜிக் விவகாரங்களில் ஆர்வமும் இருந்து வந்திருக்கிறது. தங்கள் வீட்டின் முன் இருக்கும் கோயிலில் அமர்ந்துகொண்டு அவர்கள் இருவரும் அத்தகைய நடவடிக்கைகளுடன் தொடர்பு கொண்டவர்களை அடிக்கடி வரவழைத்து பயிற்சிகளில் ஈடுபடுவதை அண்டை வீட்டுக்காரர்கள் அடிக்கடி பார்த்திருக்கின்றனர். அதன் காரணமாகவும் அவர்களிடம் அணுகிப்பேச பலர் பயந்திருக்கிறார்கள்.

  துஷாராவின் மரணத்தின் பின், காவல்துறையில் அவரது அண்டைவீட்டுக்காரர்கள் பலர் தற்போது சந்துலால் மற்றும் கீதாவின் மீது பலமான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். அதன் அடிப்படையில் துஷாராவின் கணவரும் மாமியாரும் தற்போது கைது செய்யப்ப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். துஷாராவின் இரு குழந்தைகளும் அரசு குழந்தைகள் காப்பகத்தின் பொறுப்பில் விடப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான வகையில் மரணம் என்றிருந்த வழக்கு தற்போது வரதட்சிணை கொடுமையின் கீழான கொலையாக பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

  துஷாராவின் கொலை குறித்து அவரது பிறந்த வீட்டு மனிதர்களிடம் விசாரணையில் இறங்கிய போது, காவல்துறைக்கு மேலும் அதிர்ச்சியான தகவல்களே கிடைத்துள்ளன. துஷாரா, திருமணமான புதிதில் வெறும் ஓரிரு மாதங்கள் மட்டுமே தனது பிறந்தகத்துடன் தொடர்பில் இருந்துள்ளார். அதற்குள் அவரிடம் இருந்த அலைபேசி பறிமுதல் செய்யப்பட்டதோடு இனிமேல் பிறந்தகத்தோடு தொடர்பு கொள்ளக்கூடாது என்ற கட்டுப்பாடும் அவருக்கு விதிக்கப்பட்டதாக துஷாராவின் தம்பி துஷாந்த் கூறியுள்ளார். துஷாரா கருவுற்றிருந்த நாட்களில் கூட தனது சகோதரியைச் சென்று பார்க்கவோ, பேசவோ அவளது புகுந்த வீட்டினர் தங்களை அனுமதிக்கவில்லை என்கிறார் துஷாந்த். கடைசியாக அவர்கள் துஷாராவைப் பார்த்தது ஒன்றரை வருடங்களுக்கு முன்பு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் துஷாராவுக்கு எத்தனை மோசமான கட்டுப்பாடுகளை அவரது கணவரும், மாமியாரும் விதித்திருக்கிறார்கள் என்பதை.

  இந்நிலையில் துஷாராவின் திருமணத்திற்குப் போடப்பட்ட நகைகளுடன் இணைந்து 2 லட்சம் ரூபாய் ரொக்கம் தருவதாகவும் அப்போது ஒப்புக்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அந்தப் பணத்தை அளிக்க துஷாரா வீட்டினர் தவணை கேட்டிருந்திருந்திருக்கின்றனர். அந்தப் பணம் இன்று வரை சந்துலால் கைக்கோ அவரது அம்மா கீதாவின் கைக்கோ கிடைக்காதா காரணத்தால் அவர்களுக்கு துஷாராவின் மீதான ஆத்திரம் அதிகரித்திருக்கிறது. அத்துடன் இவர்கள் முன்வே அமானுஷ்ய பயிற்சிகளில் ஈடுபாடு கொண்டவர்கள் என்பதால் கொடூரத்தனமும் மூளைக்குள் குடியேறி இருக்கிறது. அதன் விளைவு தான் ஒரு அப்பாவி இளம்பெண் பட்டினி போட்டு கொல்லப்பட்ட அவலம்!

  நம் நாட்டில் வரதட்சிணை கொலைகள் ஒன்றும் புதிதில்லை.

  வரதட்சிணை கொடுமை தலைவிரித்தாடிய காலகட்டங்களில் எல்லாம் அனேக வீடுகளில் ஸ்டவ்கள் வெடித்திருக்கின்றன. திருமணமாகி கைக்குழந்தையுடனிருக்கும் பெண்கள் தங்கள் குழந்தைகளை அனாதைகளாக்கி விட்டு அரளி விதைகளை அரைத்துக் குடித்து மாண்டிருக்கிறார்கள். பலர் தூக்கில் தொங்கியும் இருக்கிறார்கள். இன்னும் பலப்பலர் பாழுங்கிணற்றில் விழுந்து மாண்டு போவதும் கூட வரதட்சிணைக் கொடுமை வரலாற்றில் புதிதில்லை. ஆனாலும் துஷாராவின் மரணம் புதிது. சாகும் போது அந்தப் பெண் வெறும் 20 கிலோ எடை மட்டுமே இருந்திருக்கிறார். உடலில் கிள்ளி எடுக்கச் சதை இல்லை. அத்தனை கொடூரப் பட்டிணி.

  கணவன் சந்துலால் மற்றும்  மாமியார் கீதா

  இரு கொடூர மனங்களின் சதியாலும் அரக்கத்தனத்தாலும் ஒரு இளம்பெண் பட்டினி போடப்பட்டு கொலை என்பது நம் சமூகம் வெட்கப்பட வேண்டிய செயல். துஷாராவின் மரணத்துக்கு அவளது கணவரும், மாமியாரும் கைது செய்யப்பட்டு விட்டாலும் கூட அந்தக் கொலையில் அவளது பிறந்தகத்திற்கும், அண்டைவிட்டாருக்கும், கூட பங்கிருக்கிறது எனறு தான் சொல்ல வேண்டும். இந்த உலகில் எங்கெல்லாம் கொடூர மரணங்கள் நிகழ்கின்றனவோ அங்கெல்லாம் அவை குறித்த சந்தேகங்கள் நிச்சயம் அக்கம்பக்கத்தாருக்கு தோன்றியிருக்கவே கூடும். ஆயினும் ஏன் வம்பு? எதற்காக இப்படிப்பட்ட அநீதியான, இயற்கைக்குப் புறம்பான மனிதர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆயாஸமும், பயந்து போதலுமே துஷாரா போன்ற ஒரு இளம்பெண்ணை இழந்ததற்கான முக்கிய காரணமாக ஆகிறது. அத்துடன் துஷாராவின் பிறந்த வீட்டு மனிதர்களைப் பற்றியும் பேசியாக வேண்டும்.

  எந்த நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம். இம்மென்றால் இணையத்தில் சகலரையும் தொடர்பு கொள்ள முடிகிற ஒரு யுகத்தில் வாழ்ந்து கொண்டு உடன் பிறந்த சகோதரியை அவளது கணவரும், மாமியாரும் தொடர்பு கொள்ள அனுமதிக்கவில்லை என்ற நொண்டிச்சாக்கைக் குறிப்பிட்டு தொடர்ந்து ஓராண்டுக்கும் மேலாகச் சென்று சந்திக்காமலும் அவளது நலனை விசாரிக்காமலும் இருந்தது எந்த வகையில் நியாயம்? புகுந்த வீட்டுக்காரர்கள் எப்படிப்பட்ட மனிதர்களாக இருந்த போதும் பிறந்தகத்தார்க்கு தங்களது வீட்டுப் பெண்ணின் பாதுகாப்பு முக்கியமானதா? இல்லையா? அவளைக் கண்ணிலேயே காட்ட விரும்பாத நிலையில் சகோதரிக்கு என்ன ஆனதோ? ஏதானதோ? என்ற பதட்டம் துஷாந்துக்கு வந்திருக்க வேண்டும். அது வராமல் போனது அவர்களது விட்டேற்றியான மனப்பான்மையையே காட்டுகிறது. திருமணம் ஆகி விட்டதல்லவா! இனிமேல் உன்னைப் பற்றி எங்களுக்கு என்ன கவலை? உன் பொறுப்பு உன் கணவர் வீட்டாருடையது. அவர்கள் அடித்தாலும், உதைத்தாலும் நீ அங்கேயே கிட. எங்களை உதவி கேட்டு உபத்திரவம் செய்யாமலிருக்கும் வரை பிரச்னை இல்லை. எனும்படியான மனப்பான்மையே இதில் தெரிகிறது.

  எது எப்படியோ... துஷாராவின் பட்டினி மரணம் கேரளாவில் அதிர்ச்சி அலைகளை எழுப்பி வருவது உண்மை. பெண்களின் பாதுகாப்பிற்காக, நல்வாழ்விற்காக அரசும், பெண்ணுரிமை அமைப்புகளும் எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆயினும் அதையெல்லாம் ஃப்பூவென ஊதித்தள்ளி விட்டு சில ஓநாய்கள் தங்களிஷ்டத்துக்கு சில பயங்கரத்தை நிகழ்த்தி பெண்ணுலகை நொடிக்கு நொடி மூச்சுத்திணறச் செய்து விடுகிறார்கள் என்பதே உண்மை!


  Image courtesy: GOOGLE

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai