Enable Javscript for better performance
Water management: Mulching prevents the water evaporation in the soil!- Dinamani

சுடச்சுட

  

  நிலத்திற்கு ‘மூடாக்கு’ எனும் நீர் மேலாண்மை சார் விவசாயத்தைக் கற்றுக்கொண்டால் ஒரே கல்லில் ஐந்து மாங்காய்!

  By சாந்தலக்‌ஷ்மி துரைசாமி, கல்வியாளர்  |   Published on : 22nd April 2019 11:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  00000_mulching_nila_mudaku

   

  நீர், மண், காற்று ஆகிய உயிர் வாழத் தேவையான ஆதாரங்கள் நம் பூமியில் மட்டுமே உள்ளன. மனிதனின் நாகரீக வளர்ச்சியும், புத்திசாலித்தனமும் இவற்றின் பயனை பன்மடங்காக்கி மானுடம் பயனுறச் செய்ததுள்ளன. நம் பூமியின் அளவு எப்படி ஒரு எல்லைக்கு உட்பட்டதோ, அதேபோல் அதில் உள்ள எல்லா வளங்களும் ஒரு எல்லைக்கு உட்பட்டதே. தற்பொழுது உலகின் ஜனத்தொகை 7.7 பில்லியனாக பெருகியுள்ளது (1 பில்லியன்= 100 கோடி). ஆனால், அதற்கு ஈடாக பூமியின் அளவோ, அதன் வளங்களோ பெருகாது என்பது மறுக்க முடியாத உண்மை. முக்கியமாக, நம் பூமியின்  மிகச்சிறந்த வளமான  நீர் வளத்தை நாம்  திறம்பட மேலாண்மை செய்வது மண் வளத்திற்கும் மானுட வளத்திற்கும் இன்றியமையாத தேவை என்பதை நாம் உணர வேண்டிய நேரமிது!
   
  வரவேற்க முடியா மரபு :
      
  மனிதர்களான நாம் பொதுவாக நமது குழந்தைகளுக்கும், பேரக்குழந்தைகளுக்கும் சிறந்த கல்வி, நகை, பணம், நிலம், வீடு என்ற சொத்துக்களை சேர்ப்பதே வழக்கம். அதில் நம் வாழ்நாள் முழுவதும் முடிந்து விடுவது மறுக்க முடியாத உண்மை. ஆனால், இந்த சொத்துக்களை அனுபவிக்க நல்ல ஆரோக்கியத்தோடு பூமியில் வாழும் தகுதியையும் அவர்களுக்கு கொடுப்பது இக்கணத்தில் “எமர்ஜென்சி” தேவை. தற்பொழுது உயிர்  வாழ  தேவையான ஆதாரங்களாகிய நீர், நிலம், காற்று மற்றும் அந்நிலத்தில் விளைந்துவரும் உணவு ஆகியவை மாசடைந்தும், மலிந்தும் வருகின்றன. வருங்கால சந்ததியினருக்கு  நாம் நீர்வளம் இல்லா நிலத்தையும், நுகர்வதற்கு ஏற்பில்லாத காற்றையும், உணவு விளைவிக்க முடியாத அளவுக்கு நஞ்சு கலந்த மண்ணையும், எவ்வுயிரும் வாழத் தகுதியில்லா வெப்பமடைந்த பூமியையும் விட்டுச் செல்லாமலிருப்பது அவசியம்.

  நீர் மேலாண்மை:

  “நீர் இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் 
  வான் இன்று அமையாது ஒழுக்கு”     

  குறள்:  20    
  அதிகாரம்: வான் சிறப்பு,   
  திருக்குறள்.

      

  உலக அளவில் கிட்டத்திட்ட மூன்று சதவிகிதமே உள்ள சுத்தமான நீர், நிலத்தடி நீராக ஒரு சதவிகிதமும், பனிப்பாறைகளாக ஒரு சதவிகிதமும், கண்களுக்கு தென்படும் ஆறு, குளம், ஏரியாக ஒரு சதவிகிதமும் உள்ளது. 

  நாகரீக வளர்ச்சியோடு மனிதனின் பேராசையும் கலந்து அனைத்து உயிர்களுக்கும் உயிர் ஆதாரமாகிய நீர் நிலைகள் உபயோகப்படுத்த முடியாத அளவிற்கு களங்கப்படுத்தப்பட்டுள்ளது. 
      
  ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் 2050-ம் ஆண்டில் இந்தியாவில் தண்ணீர் தட்டுப்பாடு தீவிரமடையும் என்று எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அதே அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில தீர்வுகளில் ஒன்று, சிறந்த நீர் மேலாண்மை சார்ந்த விவசாயம்.

  ஒவ்வொரு வருடமும் வெயில் காலத்தில் வீட்டுத் தோட்டத்திற்கு நீர் பாசனம் செய்வதற்கே தண்ணீரை  விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மழை பொய்த்தால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இருக்கும் நீரை பாசனம் செய்தபின் வெயிலும், காற்றும் அதனை விரைவில் நீராவி ஆக்கிவிடுகிறன. இது போன்ற  குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இயற்கை வேளாண்மையில், மண் மற்றும் நீர் வளத்தை பாதுகாக்க  கடைபிடிக்கப் படும் ஒரு நுட்பம், நிலத்திற்கு மூடாக்கு (போர்வை) போடுவது. 

  பூமிக்குப் போர்வை:

  கால நிலைக்கு ஏற்ப பூமித்தாய் போர்வை போர்த்திக்கொள்வதை தற்பொழுது காடுகளில் மட்டுமே பார்க்க முடிகிறது. மனிதர்கள் முற்றிலும் ஆக்ரமிப்பு செய்யாததால், இலை, குச்சி, பூ, காய், பட்டை, கனிகளால் ஆன இந்த போர்வை கலைக்கபடாமல் உள்ளது. இயற்கை வேளாண்மையில் இந்த போர்வையை ‘மூடாக்கு’ என்றே கூறுவர். இதன் ஆங்கில பெயர், "மல்ச்சிங்" என்பதாகும். 

  ஜப்பான் விஞ்ஞானி  புக்கோகோ, நெல்லை அறுவடை செய்தபின் வைக்கோலை அடுத்த நடவுக்கு மூடாக்காக போர்த்தி அதிக விளைச்சல் கண்டார். ஆரோவில் (புதுச்சேரி) விஞ்ஞானி பெர்னார்டு நெல், சோளம், உரச்செடிகள் ஆகிய மூன்று பயிர்கள் சுழற்சியைக் கடைப்பிடித்து நிலத்திற்குப் போர்வையிட்டார். அறிஞர் பாஸ்கர் சாவே தென்னந்தோப்பிலும், சப்போட்டா மரத் தோப்பிலும் அந்தந்த மரக்கழிவுகளை நிலத்திற்கு போர்வையாக்கி மிகுந்த விளைச்சல் கண்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் கரும்பு வெட்டிய பின் மிஞ்சியிருந்த கரும்புத் தோகையைக் கொண்டு மூடாக்கு போடுகிறார்கள். இதன் மூலம் 24- வது கட்டை கரும்பை வெட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது ஒருமுறை விதைத்து பலமுறை அறுவடை செய்யும் நல்வாய்ப்பு மூடாக்கு போடுவதன் மூலம் கிடைக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டம் மற்றும் கோவை மாவட்ட விவசாயிகள் இந்த வழிமுறையைப் பின்பற்றுகிறார்கள். 

  இயற்கையின் சுழற்சியை மதித்து காப்போம்:
      
  இலை, தழை போன்ற கரிம கழிவு பெரும்பாலும் எரியூட்டப்பட்டு கரியமில வாயு உமிழ்வை அதிகரிக்கச் செய்கிறது. நாம் புத்திசாலிதனமாக இத்தகைய கரிமக் கழிவை மூடாக்காகப் பயன்படுத்தினால் “ ஒரே கல்லில் இரண்டு (இல்லை) ஐந்து ‘மாங்காய்’ அடிக்கலாம். அதாவது கரிம கழிவு  வீணாக எரிக்கப்படாமல் கரியமில வாயு உமிழ்வைத் தடுக்கலாம் (புவி வெப்பமடைதலுக்கு இதுவும் ஒரு காரணம்); நிலத்திற்கு போர்வையாகி நீர் சேமிப்புக்கு வழி வகுக்கிறது; மண்புழு மற்றும் நுண்ணுயிர் பெருக்கத்திற்கு உதவி செய்து மண் வளத்தைப் பெருக்குகிறது; காலப்போக்கில் மண்ணில் மக்கி எருவாகி, மண்வளத்தைக் கூட்டுகிறது;  அதிக விளைச்சல் கொடுக்கிறது. அதாவது மண்ணில் உருவாகிய இலை, தழைகள் மீண்டும் மண்ணாகி தன் சுழற்சியை நிறைவு செய்கிறது; உயிர் வாழத் தேவையான ஆதரங்களாகிய நீர், மண், காற்று ஆகிய மூன்றும் மூடாக்கு போடுவதால் பாதுகாக்கப்படுகிறது.

  இதுபோலவே, மரங்களில்  இருந்து வெளியேறும் நீராவி, மழையாகப் பொழிந்து நீரின் சுழற்சியை நிறைவு செய்கிறது. இன்று மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் அழிக்கப்படுவதாலும், காடுகளின் பரப்பும் அதில்  உள்ள மரங்களின் இலை பரப்பும் குறைவதாலும்,  கரிமக் கழிவுகளை முறையாக பயன்படுத்தாதலாலும்  இயற்கையின் சுழற்சி தடைபடுகிறது. இதனால் தடுமாறி அழிவை நோக்கிப் போவது மானுடத்தோடு அவனை சார்ந்துள்ள அப்பாவி பல்சார் உயிர்களுமே! மண்ணையும், மரத்தையும் கப்பாற்றினாலே மானுடம் காப்பற்றப்படும் என்பதை உணர்ந்து நம் வாழ்க்கை முறையிலும், நீர் மேலாண்மை முறையிலும்  சில மாறுதல்களை இன்றே செய்து நம் சந்ததியினருக்கு ஒரு பாதுகாப்பான பூமியை ஒப்படைப்போம்!

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai