Enable Javscript for better performance
cockroaches are being farmed in China to tackle food waste- Dinamani

சுடச்சுட

  

  கரப்பான் பூச்சி பண்ணை, சீனர்களின் வளம் கொழிக்கும் புது முயற்சி!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 19th April 2019 12:35 PM  |   அ+அ அ-   |    |  

  cockroach3

   

  கரப்பான்பூச்சியைக் கண்டால் என்ன செய்வோம் நாம்? ச்சீச்சீ என்று விலகி ஓடுவோம். அல்லது சில தைரியசாலிகள் அதை துடைப்பத்தாலோ அல்லது பேப்பர் பண்டிலாலோ நச்சென்று ஒரே போடாகப் போட்டுக் கொன்று தூக்கி எறிவார்கள். இன்னும் சில அருமைநாயகங்கள் கரப்பான்பூச்சியைப் ‘பணவண்டு’ என்று சொல்லி அதைக் கொன்றால் வீட்டில் பணம் தங்காது என்று தங்களது மூடநம்பிக்கையை பிறருக்கும் பட்டுவாடா செய்வார்கள். இதெல்லாம் நம்மூரில் கரப்பான்பூச்சிகளின் நிலை. ஆனால், சீனாவில் அப்படி இல்லை.

  சீனர்களுக்கு நட்டுவாக்காலி, பூராண், பாம்பெல்லாம் ப்ரியமான உணவுப் பொருட்கள் என்று நமக்குத் தெரியும். அவையெல்லாம் ஊர்வன வகையில், பறப்பன அல்லது பூச்சி வகைகளையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை. அவர்களுக்கு மனிதர்களைத் தவிர்த்து உலகில் அதிகஅளவில் இனப்பெருக்கம் செய்யக்கூடிய அத்தனை உயிரிகளுமே சிறந்த உணவுப் பொருட்கள் தான். அப்படி நினைத்துத் தான் அவர்கள் கரப்பான்பூச்சிகளை வணிக நோக்கில் பெருமளவில் பண்ணைகளில் வளர்த்து வருகிறார்கள்.

  இந்த வணிக உத்தியில் உணவுத் தேவை மட்டுமல்ல மேலும் சில காரணங்களையும் அவர்கள் முன் வைக்கிறார்கள். கரப்பான்பூச்சிகள் அந்நாட்டு மருத்துவத்துறையிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனவாம். வாய்ப்புண், அல்சர், வயிற்றுவலி, சரும காயங்கள், இரைப்பை கேன்சர் உள்ளிட்ட பல நோய்களுக்கான சிகிச்சையில் கரப்பான்பூச்சிகளில் இருந்து தயாரிக்கப்படும் ரசம் பயன்படுத்தப் படுகிறது என்கிறார்கள் அந்நாட்டு மருத்துவர்கள். வணிக ரீதியாக அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் அங்கு கரப்பான்பூச்சிகள் முன்னிலை வகிக்கின்றன.

  அத்துடன் பன்றி மற்றும் மீன் பண்ணைகளுக்கு உணவாகவும் இந்தக் கரப்பான்பூச்சிகள் பயன்படுவதால் இன்றைய தேதிக்கு சீனாவில் கரப்பான்பூச்சிகளைப் பண்ணையில் வளர்த்து விற்பனை செய்வதென்பது மிகச்சிறந்த குடிசைத் தொழிலாகக் கருதப்படுகிறது.

  கரப்பான்பூச்சிகள் வளர்வதற்கு இருளான, வெதுவெதுப்பான இடங்களே ஏற்றவை. அத்துடன் அழுக்கான, ஈரமான இடங்கள் என்றால் அவை அங்கே பல்கிப் பெருகும். எனவே கரப்பான்பூச்சி பண்ணைகள் அமைக்க அப்படிப்பட்ட வாகான இடங்களை சீனர்கள் உருவாக்குகிறார்கள். அந்தப் பண்ணைகளுக்குள் நுழைவதற்கு முன்பு நாம் நமது கண்களையும் மூக்கையும் நன்கு மூடிக் கொண்டால் தேவலாம். ஏனெனில் பண்ணைகளில் மில்லியன் கணக்கில் வளர்த்தெடுக்கப்படும் கரப்பான்பூச்சிகள் கதவைத் திறந்ததும் பறந்து வந்து முகத்தில் மோதக்கூடும். ஒன்றிரண்டு என்றால் சமாளித்து விடலாம். ஆனால் இவை அதிக எண்ணிக்கையிலானவை.

  சீனாவில் இப்போது இது வளம் கொழிக்கும் குடிசைத் தொழிலாக பரிணமித்து வருகிறது.

  சீனா, புறநகர் கிராமங்களில் ஒன்றான சிசூயனைச் சேர்ந்த 47 வயது லீபிங்காய் ஆரம்பத்தில் மொபைல் ஃபோன் விற்பனை அங்காடியொன்று வைத்திருந்தார். பிறகு சீனாவில் அதிகரித்து வரும் கரப்பான்பூச்சி தேவையை முன்னிட்டு மொபைல் ஃபோன் தொழிலுக்கு மூடுவிழா நடத்தி விட்டு 146,300 டாலர்கள் முதலீட்டில் கரப்பான்பூச்சி பண்ணையைத் தொடங்கினார். இப்போது தன்னிடம் வளரும் கரப்பான்பூச்சிகளை சுற்று வட்டாரத்தில் இருக்கும் பன்றிப்பண்ணைகள், மீன் பண்ணைகளுக்கு உணவாக அனுப்புவதுடன் மருந்துக்கம்பெனிகளுக்கு மூலப்பொருளாகவும் விற்பனை செய்து வருகிறார். இன்று அவரது பண்ணையில் சுமார் 3.4 மில்லியன் கரப்பான்பூச்சிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

  நான் இந்தப் பண்ணையைத் தொடங்கும் போது என்னைச் சுற்றியிருந்தவர்கள், இதெல்லாம் ஒரு தொழிலா? என்று ஏளனமாக நினைத்தார்கள், சிலர் அசூயைப் பட்டார்கள். ஆனால் அவர்களுக்குத் தெரியாது இது எத்தனை வளம் கொழிக்கும் தொழில் என்று, நான் அவர்களை எல்லாம் கன்வின்ஸ் செய்ய முயன்று வருகிறேன். இப்போது எனது கிராமத்தில் இரண்டே இரண்டு கரப்பான்பூச்சி பண்ணைகள் தான் இருக்கின்றன. குறைந்தபட்சம் அவற்றை 20 பண்ணைகளாக அதிகரிக்கச் செய்வது தான் எனது இப்போதைய கொள்கையாக இருக்கிறது. கூடிய விரைவில் அது நிறைவேறும் என்கிறார்.

  லீ யைத் தவிர சீனாவைச் சார்ந்த குட் டாக்டர் எனும் நிறுவனமும் கூட கரப்பான்பூச்சி பண்ணையொன்றை உருவாக்கி அதை நிர்வகித்து வருகிறது. இவர்களுக்குச் சொந்தமான ஆய்வுக் கூடத்தில் உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு புதிது புதிதாக கரப்பான்பூச்சிகளின் பயன்களை அறிந்து மக்களுக்குப் பயனுள்ள வகையில் அவற்றை மாற்றுப்பொருளாக்கித் தரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். கரப்பான்பூச்சிகளிடம் இருந்து பெறப்படக்கூடிய சாறு பியூட்டி மாஸ்குகள், டயட் மாத்திரைகள், கூந்தல் உதிர்தல் தொடர்பான பல பிரச்னைகளுக்கு மிகச்சிறந்த நிவாரணம் தரக்கூடியதாக இருப்பதால் சீன மருந்துக் கம்பெனிகள் போட்டி போட்டுக் கொண்டு கரப்பான்பூச்சி வளர்ப்பிலும் அவற்றை விலைக்கு வாங்கும் முயற்சியிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றன.

  இப்படி வளர்க்கப்படுகின்ற கரப்பான்பூச்சிகளின் ஆயுட்காலம் 6 மாதம் மட்டுமே. பிறகு அவற்றின் வாழ்க்கை சுழற்சி முடியும் தருணத்தில் அவை நீராவி கொண்டு சிதறடிக்கப்பட்டு, நன்றாகக் கழுவி உலர்த்தப்பட்ட பின் ஊட்டச்சத்தைப் பிரித்தெடுக்கும் தொட்டிகளுக்கு அனுப்பப் படுகின்றன. ஒருவேளை இந்த நடைமுறையில் சில கரப்பான்பூச்சிகள் தப்பி விட்டாலும் பிரச்னையில்லை. தப்பிய கரப்பான்பூச்சிகளுக்கென்றே ஒரு கண்ணி வைத்திருக்கிறோம். அதில் உள்ள நீரில் மீன்கள் நிரப்பப்பட்டிருக்கும். ஊட்டச்சத்துத் தொட்டியில் இருந்து தப்பி வரும் கரப்பான்பூச்சிகள் இந்த கண்ணியில் இருக்கும் மீன்களின் வாயிலிருந்து தப்புவது கடினம். மீன்கள் கரப்பான்பூச்சிகளை முழுமையாக உண்டு முடிக்கும். என்கிறார்கள் வெற்றிகரமாக இத்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai