Enable Javscript for better performance
‘பிரியங்கா’ ஏன் இந்திரா ஆக வேண்டும்?!- Dinamani

சுடச்சுட

  

  ‘பிரியங்கா’ ஏன் ‘இந்திரா’ ஆக வேண்டும்?!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 20th April 2019 07:44 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Priyanka-Gandhi

   

  வெள்ளியன்று உத்தரப்பிரதேசம் கான்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி பேசும் போது அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் பிரியங்காவை, இந்திரா காந்தியுடன் ஒப்பிட்டு வாழ்த்தினர்.

  அப்போது மக்களிடையே பேசத் துவங்கிய பிரியங்கா, ‘நான் இந்திரா இல்லை, அவரோடு ஒப்பிடுகையில் அவருக்கு முன் நான் ஒன்றுமே இல்லாதவளாகக் கூட இருக்கலாம், ஆனால், அவரை அடியொற்றி நானும் தேச சேவைக்கு அவர் அளித்த கடுமையான உழைப்பை அளிக்க ஒருபோதும் தவற மாட்டேன். இந்திராவின் மனதில் நிலைபெற்றிருந்த தேச சேவைக்கான ஆசையும், விருப்பமும் என் மனதிலும், என் சகோதரர் மனதிலும் நிலைபெற்றிருக்கிறது. எங்களிடமிருந்து அந்த உணர்வை எவராலும் அழித்து விட முடியாது. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நாங்கள் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து இந்த நாட்டுக்காக சேவை செய்து கொண்டே இருப்போம். என்ற வாசகங்களுடன் தனது பிரச்சாரத்தைத் துவக்கினார்.

  தொடர்ந்து கான்பூரில் அவர் நடத்திய சாலைப்பிரச்சாரத்தில், கான்பூர் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வாலை ஆதரித்து திறந்தவெளி வாகனத்தில் அமர்ந்து பொதுமக்களிடையே வாக்குச் சேகரிப்பிலும் ஈடுபட்டார். அப்போது அவர் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் ஏழைகளுக்கு வருடா வருடம் 72,000 ரூபாய் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்ற வாக்குறுதி குறித்து ஆளும் பாஜகவினர், அதெல்லாம் சாத்தியமே இல்லை’ என்று பகடி செய்து வருகின்றனர். அப்படிச் சொல்பவர்களிடம் ஏழைகளுக்காகச் செலவிடத்தான் பணம் இல்லையே தவிர தொழிலதிபர்களுக்காகவும், மீடியா விளம்பரங்களுக்காகவும் செலவிட எப்போதுமே பணம் கொட்டிக் கிடக்கிறது. இது தான் இந்த நாட்டின் தலை எழுத்து என்றும் குறிப்பிட்டு பாஜக தலைமையை விமர்சித்தார். 

  மோடியின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி எஸ் டி வரிவிதிப்பு எனும் இரு பிரம்மாஸ்திரங்கள் கடந்த ஆண்டுகளில் மக்களை மிக மிகத் துயரமான காலகட்டத்திற்குத் தள்ளின. அந்தத் துன்பங்களில் இருந்து இன்னும் கூட அவர்களில் பலர் மீண்டு வர முடியாத சூழலே இப்போதும் நிலவுகிறது. இப்படி ஒரு ஆட்சி மக்களுக்குத் தேவையா? அரசு நடத்துவதில் இரண்டு வகை உண்டு. ஒன்று மக்களுக்காக ஆட்சி நடத்துவது, அவர்கள் மக்கள் நலன்களை மட்டுமே முன்னெடுப்பார்கள், இரண்டாவது வகை தங்களையும் தங்களது கட்சியையும் பிரபலப்படுத்தி பப்ளிசிட்டி தேடிக் கொள்ள மட்டுமே அரசு நடத்துவது. அதைத்தான் தற்போது மோடி தலைமையிலான பாஜக செய்து வருகிறது. 

  மோடி ஒரு பலவீனமான தலைவர், அவரால் எப்போதுமே தனக்கு எதிர்ப்பாக வரக்கூடிய குரல்களை சகித்துக் கொள்ளவே முடிந்ததில்லை. மக்களே, இந்தத் தேர்தலில் உங்கள் முன் நிற்கும் இரு தலைமைகளையும் நன்கு உற்றுப் பாருங்கள், இருவரில் ஒருவர் எப்போதுமே எதிர்ப்புக் குரலை விரும்புவதே இல்லை, சகிப்பதும் இல்லை. ஆனால், ராகுல், எப்போதும் தன்னை நோக்கி வீசப்படும் விமர்சனங்களை சகித்துக் கொண்டு பதில் அளிக்கப் பழகியவர், இங்கு எதிர்கட்சிகள் எப்போதுமே ராகுலை நோக்கி அவரது அம்மா, சகோதரி, பாட்டி, தந்தை என அனைவரைப் பற்றிய விமர்சனங்களையும் அள்ளி வீசுகிறார்கள். அதற்காகவெல்லாம் அவர் மனம் நொந்து விடவில்லை. சகித்துக் கொண்டு அத்தனை விமர்சனத்திற்கும் பொறுமையாகப் பதில் சொல்லப் பழகி இருக்கிறார். குளிர்ந்த புன்னகையுடன் தன்னை நோக்கி வரும் விமர்சனக் கற்களை பொறுமையுடன் எதிர்கொள்ளும் ராகுலிடம் இருப்பது தான் அரசியல் மாண்பு, அரசியல் திடம். இது தானே ஒரு நல்ல தலைவருக்கு அத்யாவசியமானது.’ என்று நீள்கிறது ப்ரியங்காவின் காரசாரமான பிரச்சார உரை.

  47 வயதாகும் பிரியங்காவின் பிரச்சார எல்லைகளுக்குள் மோடி போட்டியிடும் வாரணசியும், உத்தரப்பிரதேச இந்நாள் முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிடும் கோரக்பூரும் அடங்கும். நிச்சயம் பிரியங்கா அவர்களையும் வறுத்தெடுக்கத் தயங்கமாட்டார் என்பதையே அவரது கான்பூர் உரை காட்டுகிறது.

  ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலின் போதும் பிரியங்காவை அடுத்த இந்திரா காந்தியாகவும், அடுத்த பிரதமராகவும் ஆக்க நினைக்கும் காங்கிரஸ் அபிமானிகளின் கனவு புத்துயிர் பெறும். தேர்தலில் வென்றாலும் கூட அவர் பிரதமராக முடியுமோ இல்லையோ ஆனால் காங்கிரஸ்காரர்களின் கனவு மட்டும் ‘இந்திராவுக்கான மாற்று பிரியங்காவே’ எனும் கனவு மட்டும் தொடர்ந்து கனவாகவே நீடித்து வருகிறது.

  மக்களே இப்போது நீங்கள் சொல்லுங்கள், பிரியங்காவிடம் உங்களில் எவருக்கேனும் அப்படியான நம்பிக்கையோ அல்லது எதிர்பார்ப்போ எப்போதாவது இருந்தது உண்டா? மறைந்த இந்திராவுக்கு பிரியங்கா மாற்றாகும் காலம் வருமா?

  பிரியங்காவால்... இந்திரா ஆக முடியுமா?!

  இந்தக் கேள்வியை பத்திரிகையாளர் பர்காதத் 2009 ஆம் ஆண்டு வாக்கில் ஒரு நேர்காணலின் போது பிரியங்காவிடம் முன் வைத்திருக்கிறார். அப்போது அவர் அளித்த பதில்;

  என் 14 ஆவதுவயதிலேயே மக்கள் என்னை அடுத்த இந்திராவாக கொண்டாடத் தொடங்கி விட்டார்கள். அப்போது என்னைக் கண்ட மாத்திரத்தில் மலரும், கொண்டாடும் ஜனத்திரள் கண்டு அரசியல் தான் எனக்கு உகந்த இடம் என்று நான் கருதியிருந்தேன். ஆனால், 1999 ஆம் ஆண்டு தேர்தலின் போது என் மனம் மாறி விட்டது. அரசியல் எனக்கான இடமல்ல என்று நான் உணர்ந்தேன், தேச சேவையில் ஈடுபட வேண்டுமென்றால் அதற்கு அரசியலில் இறங்க வேண்டும் என்பதில்லை. வெளியில் இருந்து கொண்டும் மக்கள் சேவை செய்யலாம் என்று நான் முடிவு செய்தேன். ஏனென்றால் முதலில் நான் எடுத்த முடிவு, பிரியங்காவான நான், நானாக எடுத்த முடிவு அல்ல, மக்கள் என்னைக் கொண்டாடினார்கள், என்னை இந்திரா என்றார்கள், அதையே தொடர்ந்து கேட்க நேரும் போது எனக்கு குழப்பமாகி விட்டது, நான் யார்? உண்மையில் எனக்குள் இருக்கும் பிரியங்கா எதை விரும்புகிறார்? என்ற கேள்விகள் எல்லாம் எனக்குள் எழத் தொடங்கின. அப்போது என்னைச் சுற்றி நிகழ்ந்த மாற்றங்கள், இழப்புகள் என்னைப் பாதித்தன. வாழ்க்கையா? அரசியலா? எதற்கு முன்னுரிமை அளிப்பது எனும் இடைவிடாத மனப்போராட்டத்தின் பின் தொடர்ந்து விபாசனா பயிற்சியில் கலந்து கொண்டதன் பலனாக எனக்கு நேரடி அரசியல் வேண்டாம் என்ற தீர்மானமான முடிவுக்கு வந்தேன்’ என்று பர்காவுக்கு பதிலளித்துள்ளார் ப்ரியங்கா.

  இந்த நேரடியான பதிலைப் பெற்ற பின்னும் பர்கா மீண்டும் அதே கேள்வியைச் சற்று மாற்றி ப்ரியங்காவிடம் கேட்கிறார்;

  ஒருவேளை இப்போது அரசியலில் ஈடுபாடு இல்லையென்றாலும் ஒருவேளை நாளை குழந்தைகள் வளர்ந்த பின்னர் ஒருவேளை ப்ரியங்கா நேரடி அரசியலில் இறங்குவார் என நம்பலாமா? என்று கேள்வியெழுப்பினார். ஏனென்றால், இதுவரை ஒருமுறை கூட தேர்தலில் போட்டியிடாதவர் ப்ரியங்கா, அப்படி இருந்தும் ஒவ்வொரு பொதுத்தேர்தலின் போதும் அவரது அரசியல் பங்களிப்பு குறித்த கேள்விகள் அரசியல் களத்தில் முன் வைக்கப்படுகின்றன என்பதால்;

  இதற்கு ப்ரியங்கா அளித்த பதில்;

  ‘ஒரு அம்மாவாக நான் எதிர்கொள்ளும் பிரச்னைகள் வேறு மாதிரியானவை. அப்படிப் பட்ட சூழலில் எதைப்பற்றியும் உறுதியாக ஒரு பதிலை இப்போதே என்னால் சொல்லி விடமுடியாது’ என்பதே;

  இந்திய விடுதலைக்குப் பின் இந்தியா முதன்முதலாகச் சந்தித்த பொதுத்தேர்தலில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலுமே காங்கிரஸுக்கு அபிரிமிதமான ஆதரவு இருந்தது. அந்த ஆதரவு அடுத்தடுத்த தேர்தல்களில் நசியத் தொடங்கியது. காரணம் இந்திரா முன்னெடுத்த எமர்ஜென்ஸி நடவடிக்கைகளால் மட்டும் அல்ல. காங்கிரஸ் எதிர்கொள்ள நேர்ந்த ஊழல் குற்றச்சாட்டுகளாலும் தான். மக்களுக்கு காங்கிரஸின் மீதான நம்பிக்கை குறையத் தொடங்கியது. மக்களிடம் காங்கிரஸ் இழந்து விட்ட நம்பிக்கையை ப்ரியங்காவைக் கொண்டு மீட்டெடுக்க நினைத்தது காங்கிரஸ் தலைமை. அந்த எதிர்பார்ப்பை 1999 ல் நிராகரித்தார் ப்ரியங்கா.

  இனி வரும் தேர்தல் காலங்களிலேனும் அதற்கான வாய்ப்புகளுண்டா? என்பதை அறியும் முன்.

  ப்ரியங்கா குறித்து இன்னும் சற்று அதிகத் தகவல்களை அறிந்து கொள்வோம் வாருங்கள்.

  • ப்ரியங்கா காந்தி வதேரா, ராஜிவ் மற்றும் சோனியா காந்தி தம்பதியின் மகளான இவர் தனது அண்ணன் ராகுலை விட 2 வயது இளையவர். பிறந்த தேதி: 12.01.1972.
  • ப்ரியங்கா தனது பள்ளிப்படிப்பை டெல்லி மாடர்ன் ஸ்கூலிலும், சைக்காலஜி இளநிலைப் பட்டப் படிப்பை டெல்லி ஜீசஸ் & மேரி கல்லூரியிலும், பெளத்தத்தில் முதுகலை பட்டப்படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்திலும் முடித்தார்.
  • பாட்டி இந்திரா படுகொலையான பின் ப்ரியங்கா கல்லூரிக்கும், பல்கலைக்கழகத்துக்கும் சென்று கல்வி பெறத் தடை ஏற்பட்டது. எனவே பாதுகாப்புக் காரணங்களுக்காக அவருக்கு வீட்டிலேயே கல்வி கற்பிக்கப்பட ஏற்பாடுகள் ஆயின. எப்போதும் பாதுகாவலர்கள் முன்னிலையில் கல்வி கற்கவும், வாழவும் பழகிக் கொண்டார் ப்ரியங்கா.
  • குழந்தையாய் இருக்கையில் ப்ரியங்கா அனேக நேரம் பாட்டி இந்திராவுடனே நேரம் கழிப்பது வழக்கம். பேத்தி தோற்றத்தில் மட்டுமல்ல குணநலன்களிலும் தன்னைப் போலவே இருப்பதாக இந்திரா நினைத்திருக்கலாம். அதனால் அவருக்கு ப்ரியங்கா மீதான ப்ரியம் பன்மடங்காக இருந்தது. அதனால் தான் பாட்டியின் தலைமைப் பண்பு பேத்தியிடமும் இருக்கக் கூடும் என தீவிர காங்கிரஸ் அபிமானிகள் பலர் நம்பத் தொடங்கினர். இந்திராவைப் போன்றே ப்ரியங்காவும் அச்சமற்ற சுபாவம் கொண்டவர். தேவைப்படும் நேரங்களில் எல்லாம் தனது அச்சமற்ற சுபாவத்தை வெளிப்படுத்த ப்ரியங்கா தயங்கியதில்லை எனவும் கூறப்படுகிறது.
  • இதைப் பற்றி ப்ரியங்காவே பலநேரங்களில் பேசி இருக்கிறார். வடமாநிலத் தேர்தல் பிரச்சார காலங்களில் தன் அம்மாவுக்காகவும் சகோதரருக்காகவும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கிருக்கும் மக்களோடு மக்களாக இரண்டறக் கலக்க நினைக்கும் ப்ரியங்கா, மக்களுடன் மேலும் நெருங்கும் முகமாக முன் வைக்கும் சொற்கள் இவையே; ‘எனக்கும், என் பாட்டிக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. அதில் உருவ ஒற்றுமை அலாதியானது. என் பாட்டியைப் பார்த்திராதவர்கள், இப்போது என்னைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம் அவர் எப்படி இருந்திருப்பார் என’ என்று அடிக்கடி ப்ரியங்கா சொல்வதுண்டு.
  • இந்திராவுக்கு நீண்ட கூர்மையான நாசி ஸ்பெஷலான விஷயம். அவரது மன உறுதிக்கும், பிடிவாதத்துக்கும் அடையாளமாகக் கூறப்படுபவை அவை. ப்ரியங்காவுக்கும் தன் பாட்டி இந்திராவைப் போன்றே நீண்ட கூர்மையான நேரான நாசி உண்டு. அத்துடன் பாட்டியின் மீதான அதிகப்படி அன்பில் அவர் மறைந்த பின்னரும் கூட அவர் பயன்படுத்திய புடவைகளில் சிலவற்றை அவர் நினைவாக எடுத்து வைத்துக் கொண்டு அவ்வப்போது அதை உடுத்திக் கொண்டு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது ப்ரியங்காவின் வழக்கம். அப்படியான சந்தர்பங்களில் காங்கிரஸ் அபிமானிகள் ப்ரியங்காவை இளைய இந்திரா என்ற கோஷமெழுப்பி வாழ்த்தத் தவறியதில்லை.
  • ஒரு தேர்ந்த அரசியல் குடும்ப வாரிசாக ப்ரியங்கா தனது கன்னி உரையை வழங்கும் போது அவருக்கு வயது 16 என்கின்றன ப்ரியங்கா குறித்த தகவல்களைத் தாங்கிய அரசியல் பதிவேடுகள்.
  • புத்தமதத்தைப் பின்பறும் ப்ரியங்கா அதன் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு ஏற்ப தன் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் ஒழுக்கத்திற்கே முன்னுரிமை அளிக்கிறார். கடந்த 12 ஆண்டுகளாக விபாசனா எனும் தியான முறையைப் பின்பற்றி வருகிறார். அத்துடன் பெர்சனல் தகவல்களை ஊடகங்களில் பகிர்வதில்லை என்பதில் பல ஆண்டுகளாகத் தன் தாய் சோனியாவைப் பின்பற்றுகிறார்.
  • நிகழ்ச்சிநிரல்களை ஒழுங்குபடுத்தும் விஷயத்தில் ப்ரியங்கா கைதேர்ந்தவர். அது அரசியல் என்றாலும் சரி சொந்த வாழ்க்கை என்றாலும் சரி அவரால் ஒரே நேரத்தில் இரண்டையும் திறம்பட நிர்வகிக்க முடியும் என்ற பாராட்டுகளுக்கு உரியவர் ப்ரியங்கா.
  • 1997 ஃபிப்ரவரி 18 ஆம் தேதி தனது பள்ளிக்கால நண்பரான ராபர்ட் வதேராவைத் திருமணம் செய்து கொண்டார் ப்ரியங்கா. ராபர்ட்டின் தங்கை மிச்செலும், ப்ரியங்காவும் பள்ளித்தோழிகள். இருவரும் ஒரே வகுப்பு என்பதால் அடிக்கடி அவரது அண்ணனைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து இறுதியில் அது காதலில் முடிந்தது. இவர்களது திருமணம் பாரம்பரிய இந்து திருமண முறைப்படி டெல்லியில் இருக்கும் 10 ஜன்பத் சாலையில் உள்ள நேரு குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. கணவர் ராபர்ட் வதேரா டெல்லியைப் பூர்வீகமாகக் கொண்ட தொழிலதிபர்.
  • ராபர்ட் மற்றும் ப்ரியங்கா திருமணத்திற்குப் பின் வதேரா குடும்பத்தில் நிகழ்ந்த துரதிருஷ்டம் என்னவென்றால் ப்ரியங்கா அந்தக் குடும்பத்தில் இணைந்த சில காலங்களில் ராபர்ட்டின் தந்தை மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் இன்னமும் அறியப்படவில்லை. தந்தை மட்டுமல்ல ராபர்ட்டின் சகோதரர் மற்றும் சகோதரியும் கூட இன்னதென்று அறிந்து கொள்ள முடியாத வகையில் மர்மமான முறையில் மரணத்தைத் தழுவினர் என்கிறது ப்ரியங்கா மற்றும் ராபர்ட் வதேரா குறித்த பதிவுகள்.
  • பிரியங்காவின் முக்கியமான பொழுதுபோக்குகள் புகைப்படம் எடுப்பதும், கணவர் மற்றும் குழந்தைகளுக்காகச் சமைப்பதும் புத்தகம் வாசிப்பதுமாகும்.
  • பிரியங்காவின் குழந்தைகள் ரயான் மற்றும் மிரயா தங்கள் அம்மாவைப் பற்றிச் சொல்வது என்ன தெரியுமா? அம்மா எங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது ரொம்ப ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆனால் எங்களுக்காகச் சமைக்கும் போது மட்டும் அப்படியே பாசத்தில் உருகி கொஞ்சம் மெல்ட் ஆகி விடுவார் என்பது தான்.ஆம், தன் குழந்தைகளுக்கு கப் கேக் என்றால் மிகப்ரியம் என்று... அவர்கள் பள்ளி விட்டு வீடு திரும்பும் நேரத்தில் அவர்களுக்காக சர்ப்ரைஸாக கப் கேக் செய்து வைத்து விட்டுக் காத்திருப்பாராம் பிரியங்கா. பிறகு ஒரு வழக்கமான அம்மாவாக அவர்களது வீட்டுப்பாடங்களில் துணை செய்வதும் பிரியங்காவுக்கு பிடித்த வேலை,
  • பிரியங்கா காந்தி, தன் அம்மா சோனியாவுக்காக 2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் காலத்தில் பிரச்சார மேலாளராகப் பணிபுரிந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் தனது சகோதரர் ராகுல் காந்திக்கு மிகச்சிறந்த தோழியாக இருந்து வழிகாட்டவும், குறைகளைச் சுட்டிக்காட்டி நேர்ப்படுத்தவும் எப்போதுமே அவர் தயங்கியதுமில்லை, தவறியதுமில்லை. அத்துடன் ராகுலின் நம்பிக்கைக்குகந்த ஃபிலாசபராகவும் பிரியங்காவே இந்நாள் வரை நீடித்துக் கொண்டிருக்கிறார்.
  • 2008 ஆம் ஆண்டு வாக்கில் பிரியங்கா ஒருமுறை சென்னை வந்து இங்கு புழல் சிறையில் அடைபட்டிருக்கும் ராஜிவ் கொலைக்குற்றவாளி நளினியை நேரில் சந்தித்துப் பேசியதாகத் தகவல். அந்தச் சந்திப்பு மிக மிக ரகசியமாக இருந்தது. அத்துடன்  ‘என் தந்தையை ஏன் கொன்றீர்கள்?’ என்ற கேள்வியை அவர் நளினியிடம் அப்போது முன் வைத்ததாகவும் தகவல்கள் உண்டு.

  இதெல்லாம் ப்ரியங்கா குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்...

  இந்த லிஸ்டில் இனி அடுத்ததாக பிரியங்கா இந்தியாவின் ஏதேனும் ஒரு மாநிலத்தின் ஏதேனும் ஒரு தொகுதியில் இந்திராவின் பேத்தியாகவும்... இந்தியாவின் மகளாகவும் வேட்பாளராக நின்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ராகுல் காந்தி அமேதியை விட்டு விட்டு கேரள வயநாட்டில் வந்து போட்டியிடுவார் என்று எதிர்பார்த்திருந்தோமா என்ன? அப்படித்தான் இதுவும். பிரியங்கா நேரடி அரசியலில் ஈடுபடலாம், படாமலும் போகலாம். ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும் பிரியங்காவை அடுத்த இந்திராவாக்கும் காங்கிரஸின் கனவுக்கு மட்டும் முடிவென்பதே இல்லை என்பது மட்டுமே இப்போதைய நிதர்சனம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai