இன்று வரையிலும் இத்தகைய கொடூர சம்பவங்களுக்கு ஒரு முடிவுரை எழுத முடியவில்லையே?!

மேற்கண்ட மூன்று சம்பவங்களிலும் நாம் கண்ட ஒற்றுமை. மூவருமே ஏழைகள். இலவச ஆம்புலன்ஸ் வசதி இவர்களைப் போன்றவரக்ளுக்கு அன்றி வேறு யாருக்காக இயக்கப் படுகிறது?
man carry his wifes deadbody
man carry his wifes deadbody

தெலுங்கானா, பொத்தம்பள்ளி மாவட்டத்தில் கூனூர் என்றொரு கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத். அவரது ஏழு வயது மகள் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். உயிரிழந்த மகளை வீட்டுக்குச் எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸைத் தேடினார் சம்பத். அரசு ஆம்புலன்ஸ் கிடைக்காத நிலையில் தனியார் ஆம்புலன்ஸுக்கு கட்டணம் செலுத்தக் கையில் காசில்லை சம்பத்திடம். இந்நிலையில் மகளின் சடலத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்ல வகையின்றி சுமார் இரண்டு மணிநேரம் மருத்துவமனை வளாகத்தில் பெரும் துயரத்துடன் அழுது கொண்டே காத்திருந்த சம்பத் ஆம்புலன்ஸ் கிடைக்க வகையேயில்லை என்று உணர்ந்து பிறகு அங்கிருந்த ஆட்டோ ஸ்டாண்டில் மகளின் சடலத்தை தனது ஊருக்கு எடுத்துச் செல்ல உதவி செய்யுமாறு கேட்டிருக்கிறார்.

மகளின் சடலத்துடன் சம்பத்..
மகளின் சடலத்துடன் சம்பத்..

அங்கேயும் அவரைப் பலர் நிராகரித்தனர். ஆயினும் சிறுது நேரப் போராட்டத்தின் பின் இரக்கம மனமுள்ள டிரைவர் ஒருவர் சிக்கினார். அவரது உதவியுடன் தனது மகளது சடலத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்றார் சம்பத். அரசு மருத்துவமனைகளில் இப்படியான நிலைகள் நீடிப்பது புதிதில்லை. ஆயினும் பெற்ற தகப்பன், தனது மகளின் சடலத்தை எடுத்துச் செல்ல வழியின்றி, பிணத்தைத் தூக்கிச் சுமந்து கொண்டு அலைந்து வாகனத்துக்காகக் காத்திருந்த அவலம் அங்கிருந்த மக்களை வேதனையில் ஆழ்த்தியது. இது நடந்தது கடந்த செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி.

இந்த வருடம் மட்டுமல்ல, கடந்த வருடத்திலும் இதேமாதிரியான சம்பவம் ஒன்று ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்திருக்கிறது. அங்கு அரசு மருத்துவமனையொன்றில் ஆம்புலன்ஸ் சேவை மறுக்கப்பட்டதால் தனது குழந்தையின் சடலத்தை பேருந்தில் வைத்து எடுத்துச் சென்ற கொடூர சம்பவம்  நடந்தேறியது. கிஷ்த்வார் பகுதியில் உள்ள குச்சால் கிராமத்தைச் சார்ந்த முகமது சுல்தான் ஒரு கூலித்தொழிலாளி. இவரது 2 வயது ஆண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் சிகிச்சைக்காக குழந்தையை கிஷ்த்வார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு குழந்தைக்கு நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டது. நிமோனியாவுக்கு சிகிச்சை அளிக்கும் அளவுக்கு அங்கு மருத்துவ வசதிகள் பற்றாத நிலையில் அங்கிருந்து குழந்தையை ஜம்முவிலிருக்கும் வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறித்தினர் மருத்துவர்கள்.

மகனது சடலத்துடன் சுல்தான்..
மகனது சடலத்துடன் சுல்தான்..

சுல்தான், உடனடியாகத் தன் குழந்தையை ஜம்முவில் இருக்கும் குழந்தைகள் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

சுல்தானின் குழந்தை விஷயத்தில், முதலில் அட்மிட்டான மருத்துவமனையில் இருந்து குழந்தையை ஜம்முவில் இருக்கும் மருத்துவமனைக்கு மாற்ற முதலில் ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. இரண்டு மருத்துவமனைகளுக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 230 கிலோமீட்டர்கள். அவசர சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய குழந்தையை கையில் சுமந்தவாறு இலவச ஆம்புலன்ஸுக்காக சுல்தான் போராடியிருக்கிறார். அரசு மருத்துவமனை நிர்வாகமோ, இலவச ஆம்புலன்ஸுக்கான எரிபொருளுக்கு உரிய பணத்தைச் செலுத்தினால் தான் ஆம்புலன்ஸை அனுப்ப முடியும் என்று கண்டிப்பாகக் கூறி விட்டது. இதனால் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலமாக நிதி திரட்டி ஆம்புலன்ஸ் கட்டணத்தை அளித்த பின்னரே அரசு ஆம்புலன்ஸ் வசதி சுல்தானுக்கு கிடைத்தது. இப்படியே நேரம் கழிந்து கொண்டிருந்ததில் குழந்தையின் நிலை மிகவும் மோசமாகி விட்டது.

இந்நிலையில் ஜம்மு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்து விட்டது. அதுவே பெருஞ்சோகம். சுல்தானும், அவரது உறவினரும் அந்தச் சோகத்தில் இருந்தே மீண்டு வரமுடியாத நிலையில் மேலுமொரு கொடுமையும் அங்கு அவர்களுக்கு நிகழ்ந்தது. உயிருள்ள குழந்தையை ஆம்புலன்ஸில் அழைத்து வரவே சிரமப்பட்ட நிலையில் தற்போது இறந்து விட்ட குழந்தையின் சடலத்தை ஊருக்குக் கொண்டு செல்ல சுல்தானுக்கு இலவச ஆம்புலன்ஸ் கிடைக்கவே இல்லை. 6 மணி நேரங்கள் ஆம்புலன்ஸுக்காக காத்திருந்து கிடைக்காத நிலையில் வேறு வழியின்றி  இறந்த குழந்தையின் உடலில் போர்வையைச் சுற்றி தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு அரசுப் பேருந்தில் ஊர் வந்து சேர்ந்தார் சுல்தான்.

இத்தகைய சம்பவங்களைக் கேள்வியுறுகையில், என்ன மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? இங்கே ஏழைகளைக் காப்பாற்ற எந்த தேவதூதரும் இல்லையா? அவர்களது நிலை இப்படிச் சீரழிந்து கிடக்கிறதே என்று ஆற்றாமையாக இருக்கிறது.

மேலே குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களுக்குச் சற்றும் சளைத்ததல்ல நேற்று விழுப்புரத்தில் நடந்த சம்பவம்;

அங்கு உறவினா் சடலத்தை கைவண்டியில் பெண் தள்ளிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே உள்ள ஒழுந்தியாப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் மல்லிகா, அவருக்கு வயது 62. இவா் புதுவை மாநிலம், திருக்கனூா் அருகே உள்ள சுத்துக்கேணியில் உள்ள செங்கல் சூளையில் தங்கி வேலை செய்து வருகிறார். இவரது தங்கை பவுனு(60). அவரது கணவா் சுப்பிரமணி (65). இவா்கள் இருவரும் ஒழிந்தியாப்பட்டு கிராமத்திலேயே வசித்து வந்தனா். சில தினங்களுக்கு முன்பு மல்லிகாவைப் பார்க்க கணவா் சுப்பிரமணியுடன் சுத்துக்கேணிக்கு பவுனு வந்தார். அங்கு சுப்பிரமணிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. வறுமை காரணமாக உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லவில்லை. இதனால், சுப்பிரமணியின் உடல்நிலை மேலும் மோசமனது. 

உறவினர் சடலத்தை சுமந்து செல்லும் விழுப்புரம் பெண்..
உறவினர் சடலத்தை சுமந்து செல்லும் விழுப்புரம் பெண்..

அவரை கடந்த 30-ஆம் தேதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடிவெடுத்தனா்.

 அவா்கள் இருக்கும் பகுதியில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலுள்ள காட்டேரிக்குப்பத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் செல்ல வாகன வசதி எதுவும் இல்லை. இதையடுத்து, செங்கல் சூளையில் செங்கல்களை அடுக்கி எடுத்துச் செல்ல பயன்படுத்தும் கை வண்டியில் சுப்பிரமணியை படுக்கவைத்து மல்லிகாவும், அவரது உறவினா் ஒருவரும் தள்ளிச் சென்றனா். செல்லும் வழியில் இதைப் பார்த்த யாரும் அவா்களுக்கு உதவ முன்வரவில்லை.

 ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சுப்பிரமணியை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். 

சுப்பிரமணியின் சடலத்தை அவரது சொந்த ஊரான ஒழிந்தியாப்பட்டுக்கு கொண்டு செல்ல அவசர ஊா்தி உதவியை மல்லிகா நாடிய போது, தமிழகப் பகுதிக்கு புதுவை அரசு அவசர ஊா்தி மறுக்கப்பட்டது. இதையடுத்து, மீண்டும் கைவண்டியில் சுப்பிரமணியின் சடலத்தை வைத்து, தள்ளிக் கொண்டு மல்லிகா புறப்பட்டார். 

இதுகுறித்து தகவலறிந்த காட்டேரிக்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முருகானந்தம் விரைந்து வந்து விசாரித்தார். பின்னா், கோட்டக்குப்பத்தில் உள்ள எஸ்டிபிஐ நிர்வாகிகளைத் தொடா்பு கொண்டு, இலவச அவசர ஊா்தி மூலம் சுப்பிரமணியின் சடலத்தை ஒழிந்தியாப்பட்டுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார். அங்கு சுப்பிரமணியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதெல்லாம் சமீபத்திய சம்பவங்கள், இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் விதமாக 2016 லும் இப்படியான சம்பவமொன்று நிகழ்ந்தேறியிருக்கிறது.

மனைவியின் சடலத்துடன் ஒதிசா மனிதர்.. 
மனைவியின் சடலத்துடன் ஒதிசா மனிதர்.. 

2016 ல் ஒதிசா மாநிலத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி ஒருவரின் மனைவி டி பி நோயால் தாக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் அரசு மருத்துவமனையொன்றில் இறந்திருக்கிறார். இறந்த மனைவியை ஆம்புலன்ஸ் வைத்து வீட்டுக்கு எடுத்துச் செல்லப் பணமும், வசதியும் இன்றி அந்த மனிதர், தன் மனைவியைத் தோளில் சுமந்தவாறே சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்திருக்கிறார். இந்த விஷயம் ஊடகங்களில் வெளியாகி மனித உரிமை கமிஷன் வரை சென்றது. ஆயினும் இன்று வரை இத்தகைய சம்பவங்களுக்கு ஒரு முடிவுரை எழுத வகையில்லை.

மேற்கண்ட நான்கு சம்பவங்களிலும் நாம் கண்ட ஒற்றுமை. மூவருமே ஏழைகள். இலவச ஆம்புலன்ஸ் வசதி இவர்களைப் போன்றவரக்ளுக்கு அன்றி வேறு யாருக்காக இயக்கப் படுகிறது. இவர்களிடமும் கட்டணமின்றி வாகனம் தர முடியாது என அரசு மருத்துவமனைகள் நிபந்தனை இடுவது என்ன கணக்கு? இவர்களுக்கு உதவ முடியாத ஆம்புலன்ஸ் சேவையை வேறு யாருக்காகப் பயன்படுத்தப் படுகிறது? இவர்களைப் பலமணி நேரம் பிணத்துடன் அலைய விட்ட சோகத்திற்கு யார் பொறுப்பேற்பது? மாநில மருத்துவத்துறையா? மாநில அரசா? மத்திய அரசா?!

இனிமேலும் இப்படியான சம்பவங்கள் நடவாமலிருக்க அரசும், மாநிய அரசின் பொது சுகாதாரத்துறையும் ஏதேனும் நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றனவா?

ஏனெனில், வறுமையினால் சிகிச்சை அளிக்க முடியாமல் உயிரிழப்பு ஏற்படுவதே மிகப்பெரிய சோகம். அந்த சோகத்திற்கு மேலும் அழுத்தம் கூட்டும் வண்ணம் இறந்த சடலங்களை வைத்துக் கொண்டு அவற்றை வீடு சேர்க்க வகையின்றி உரியவர்கள் பல மணி நேரங்கள் சாலைகளில் அலைந்து திரிவதெல்லாம் மிகக்கொடூரமான அநியாயங்கள். நிச்சயம் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்னைகளில் இதை முதலாவதாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com