குழந்தை சுஜித்! கை நிறைய அள்ளி அணைத்து அழுது ஓயக் கூட வாய்க்கவில்லையடா என் செல்லமே!

ஆனால், அசல் மானுடம் அறிந்தே இருந்தது. தொடர்ந்து 80 மணி நேரங்கள்.. உண்ண உணவின்றி, அசைய இடமின்றி, சுவாசிக்க சொற்பக் காற்றுடன், தன்னை அடைகாத்துப் பாதுகாக்க தாய்கோழி ஏன் இன்னும் வரவில்லையென்ற பரிதவிப்பில்
Rip Sujith
Rip Sujith

ஊடகச் செய்திகளைக் காணக்காண மனம் பிசைகிறது.

அந்தக் குழந்தை அனுபவித்த கொடுமைகளை கற்பனையில் எண்ணிப் பார்க்கவும் நெஞ்சு துணியவில்லை.

இந்த 2019 ஆம் ஆண்டின் தீபாவளி, தமிழகத்தைப் பொருத்தவரை ஒரு கருப்பு நாள்.

மனசாட்சியுள்ள எவரொருவரும் சுஜித்தின் நினைவன்றி இந்த தீபாவளியைக் கடந்திருக்க முடியாது.

தொடர்ந்து 80 மணி நேரங்களுக்கும் மேலாக ஆழ்துளைக் குழாய் கிணற்றில் சிக்கி மீட்க முடியாமல் அத்தனை மீட்பு நடவடிக்கைகளுக்கும் கடும் சவாலாக அமைந்திருந்தது குழந்தை சுஜித் மீட்புப் பணி.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் எங்கெல்லாம் தமிழர்கல் இருந்தார்களோ அங்கெல்லாம் அவனுக்காக, அவனது வெற்றிகரமான மீட்புக்காக கூட்டுப் பிரார்த்தனைகள் நிகழ்த்தப்பட்டன.

முதலில் தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் இணைந்தனர். பின்னர் சென்னை ஐஐடி பேராசியர்கள் மற்றும் மாணவர் குழுவினர் இணைந்தனர். குழந்தையை எப்பாடு பட்டாவது மீட்கத் தன்னார்வலர்கள் தங்களது கண்டுபிடிப்புகளுடன் இணைந்தனர். குழந்தை விழுந்த ஆழ்துளைக் கிணற்றை ஒட்டி சுரங்கம் தோண்டி குழந்தையை மீட்க 8 கோடி ரூபாய் மதிப்பிலான ரிக் இயந்திரம் தருவிக்கப்பட்டது. சுகாதாரத் துறை அமைச்சர் நேரடியாக களத்தில் இறங்கி குழந்தையை மீட்கத் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டார். சுகாதாரத் துறை ஆணையர் அங்கிருந்தார். அவ்வப்போது ஊடகங்களில் குழந்தை மீட்புப் பணியின் நிகழ்ந்து கொண்டிருந்த முன்னேற்றங்களைப் பட்டியலிட்டுக் கொண்டு இவர்கள் எல்லோரும் அங்கே குவிந்திருக்க..

முதலில் 26 அடியில் இருந்த குழந்தை. மீட்டு விடுவோம் என்று வெளியில் இருந்தவர்களுக்கும். மீண்டு விடுவோம் என்று உள்ளே இருந்த சின்னஞ்சிறு பிஞ்சு மனதுக்கும் ஆறுதல் தந்து தோற்றுப்போனது.

நிராசையில் அந்தக் குழந்தை தவித்திருக்கும் தானே!

குழந்தையின் உணர்வுகளை அது பட்ட ரணங்களை நினைக்கும் தோறும் கண்கள் அல்ல மனம் கசிந்து ஆறாத்துயரில் செய்வதறியாது திகைக்கிறது.

என்ன செய்தாய் என் கண்ணே! இப்படியொரு கொடுந்துயரில் மாள? என்று கை நிறைய அள்ளி அவனை நெஞ்சார அணைத்து கதறியழத் துடிக்கிறது மனம். எந்தத் தாய்க்கும் படைத்திடும் இயல்பான மனநிலை அது. ஆனால், பெற்ற தாய்க்கு?! அதற்கும் வாய்ப்பின்றிப் போனது பெருஞ்சோகம்.

இதைத் தொலைக்காட்சி நேரலையில் கண்டு கொண்டிருந்த அத்தனை தாய்மார்களின், தந்தைமார்களின் நெஞ்சமும் கொடும் உளைச்சலில் சிக்கித் தவித்தது. சிறுவர்களும், குழந்தைகளும் ஊடகத்தில் தொடர்ந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சுஜித் மீட்புக் காட்சிகளை கண்டு பயந்து போயிருந்தார்கள்.

அத்தனை பேரையுமே நம்ப வைக்க முயன்று கொண்டிருந்தார்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த அத்தனை தரப்பினரும்.

நேற்று இரவிலும் கூட குழந்தையை உயிருடன் மீட்கும் அரசின் ஆவலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள் அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும்.

உள்ளே குழிக்குள் குழந்தையின் அசைவு கொஞ்சம் கொஞ்சமாக அடங்கத் தொடங்கி இருந்தது. குழந்தையை உயிருடன் மீட்க சகலரும் போராடினார்கள்.

ஆனால், அசல் மானுடம் அறிந்தே இருந்தது. தொடர்ந்து 80 மணி நேரங்கள்.. உண்ண உணவின்றி, அசைய இடமின்றி, சுவாசிக்க சொற்பக் காற்றுடன், தன்னை அடைகாத்துப் பாதுகாக்க தாய்கோழி ஏன் இன்னும் வரவில்லையென்ற பரிதவிப்பில் ஒரு பிஞ்சு மனம் உள்ளே துவண்டு துவண்டு மரண அவஸ்தையில் நினைவு தப்பிக் கொண்டிருந்ததை. ஆயினும் ஒப்புக் கொள்ள மறுத்தது.

‘தன்நெஞ்சறிவது பொய்யற்க, பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்’

இன்று காலை நிகழ்ந்தது அது தான்.

குழந்தையை உயிருடன் மீட்க முடியாது என்று தெரிந்தே தொடர்ந்து மீட்பு முயற்சிகளை மேற்கொண்டிருந்த அத்தனை நெஞ்சங்களும் சுட்டுக் கொண்டிருக்கின்றன.

அந்தக் குழந்தை இன்று நமக்கொரு பாடம்.

இந்திய அளவில் ஆழ்துளைக் குழாய் கிணறு விபத்துகளில் சிக்கி குழந்தைகளை பலிகொடுப்பதில் முதலிடத்தில் இருக்கிறோம் நாம்.

அடுத்த இடம் நம் பாரதப் பிரதமரின் தாய்மண் குஜராத்திற்கு. அதற்குப் பின்னே ஹரியாணாவும், ராஜஸ்தானும் அணிவகுக்கின்றன. 

என்று நாம் இந்தக் கொடுமைகளை முற்றிலுமாக இல்லாமலாக்கப் போகிறோம்?

குழந்தை சுஜித்தின் இழப்பில் இருந்து நாம் கற்க வேண்டியது என்ன?

கவனக்குறைவான பெற்றோரின் பிழைகள் முதல் அரசு இயந்திரத்தின் முறையற்ற கண்காணிப்பு முறைகள் வரை இதில் பலரது தவறுகள் இணைந்திருக்கின்றன.

ஆழ்துளைக் கிணற்றை பாதுகாப்பான முறையில் மூடாமல் விட்டது பெற்றோரின் தவறு. இரண்டு வயதுக் குழந்தையை அந்த இடத்தை நோக்கிச் செல்லும் வரை கவனியாமல் இருந்தது பெற்றோரின் மகாப்பெரிய தவறு. இவர்கள் முறையாக ஆழ்துளைக் கிணற்றை மூடினார்களா? இல்லையா என்பதைக் கண்காணிக்காமல் விட்டது அந்தப் பகுதி கிராமத்தலைவர் மற்றும் வட்டார வருவாய் அதிகாரியின் தவறு. இவர்கள் அனைவரும் இன்று குழந்தை சுஜித்தை இழந்த அதிர்ச்சியில் இருந்தாலும் நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டியவர்களும், தண்டிக்கப்பட வேண்டியவர்களும் தான்.

இழப்பீடுகள் வழங்க இன்று அணிவகுக்கும் அரசியல் கட்சியினரால் என்ன ஆகி விடப் போகிறது?

அவர்களுக்கு எல்லாமும் ஒரு அரசியல் விளையாட்டு! அவர்களால் உத்தரவாதமளிக்க முடியுமா? மீண்டும் இப்படியோர் விபத்து நேரவே நேராது என்று!

சுஜித் விஷயத்தில் அவனுக்காக அனுதாபப்படும் எவராலும் செய்திட முடிந்த ஒரே ஒரு விஷயம்.

அவனை நினைத்து துயர் நிறைந்த மனமுருகி உதிர்த்திட முடிந்த ஒரு சொட்டுக் கண்ணீர்!

அது போதுமா கண்ணே? உன் இழப்புக்கு?

கடைசியில் உன்னைப் பெற்றவளுக்கு... உன்னைக் கை நிறைய அள்ளி அணைத்து மனதாற அழுது ஓயக் கூட வாய்க்கவில்லையடா என் செல்லமே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com