28 நாட்கள், நடுக்கடல், உடைந்த படகு, துண்டில் பிழிந்த மழைநீரை குடித்து உயிர்பிழைத்த சாமானியன்!

கடலில் மழை பெய்யும் போதெல்லாம் தனது துண்டில் மழை நீரைச் சேமித்தேன் என்கிறார். அந்தத் துண்டைப் பிழிந்து அதில் கிடைத்த தண்ணீரைக் குடித்தும், அது கிட்டாத நாட்களில் வேறு வழியின்றி கடல் நீரையும் கூட
Amrith kujur
Amrith kujur

மனிதர்களின் தலைவிதி எத்தனைக்கெத்தனை குரூரமானதோ அத்தனைக்கு அத்தனை இரக்கமானதும் கூட. சில நேரங்களில் அப்படித்தான் தோன்றச் செய்கிறது நம்மைக் கடந்து போகும் நிகழ்வுகள்.

இந்தச் சம்பவத்தை அறிய நேர்ந்த போது அந்தமானைச் சேர்ந்த அம்ரித் குஜூரின் அதிர்ஷ்டத்தை எண்ணி பிரமிப்பாக இருந்த அதே நேரம், இந்த அதிர்ஷ்டம் மிகக் கொடுமையான துரதிர்ஷ்டமாக மாறுவதற்கான 99% வாய்ப்புகளைத் தாண்டித்தான் அவர் இன்று உயிருடன் மீண்டு வந்துள்ளார் என்பதை எண்ணும் போது நொடியில் மயிர்கூச்செரிகிறது.

நட்ட நடுக்கடல், ஒன்றல்ல, இரண்டல்லா மொத்தம் 28 நாட்கள் சிதிலமாகிப் போன தனது படகைப் பற்றிக் கொண்டு மிதந்து கொண்டிருந்தார் அமிர்த் குஜூர். சும்மா இல்லை, வெகு அருகில் தன்னைப் போலவே உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தன் சகாவை வெகு விரைவில் சாகக் கொடுத்து விட்டு அந்தப் பிணத்தையும் எப்படியேனும் கரை சேர்க்கப் போராடி அதில் தோற்றுப் போய் அழுகிய பிணத்தை கடலில் தூக்கிப் போட்டு விட்டு மரண பீதியில் உறைந்து தான் மீள்வோமா, மாட்டோமா? எனும் பெருந்துயரில் உழன்று கொண்டு வெறும் கடல் நீரை மட்டுமே உயிர் காக்கும் மருந்தெனக் குடித்துக் கிடந்து ஒருவழியாக சிலிகாவில் கரை சேர்ந்தார் அமிர்த் குஜூர். 

அந்தமானைச் சேர்ந்த அமிர்த் குஜூர், தன் நண்பரான திவ்யரஞ்சனுடன் இணைந்து கடலில் வியாபாரம் செய்து வந்தார். தங்களுடைய சிறு மரப்படகில் தண்ணீர் கலன்கள், கப்பலிலிலும், சிறு படகுகளில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்குத் தேவையான மளிகை சாமான்கள் மற்றும் இன்ன பிற பொருட்களை வைத்து விற்பனை செய்து அதில் ஈட்டும் பணத்தைக் கொண்டு வாழ்ந்து வந்தவர் அமிர்த். அன்றும் அப்படித்தான் சுமார் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்கள் மற்றும் தண்ணீர் கலன்களை ஏற்றிக் கொண்டு அந்தமான் தீவிலிருந்து ஒதிசா கடற்பகுதியை நோக்கித் தன் சகாவுடன் புறப்பட்டார். பயணம் தொடங்கிய சிலமணி நேரங்களில் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் ஒதிசாவிலிருந்து சுமார் 750 நாட்டிகல் மைல் முதல் 1300 நாட்டிகல் மைலில் அமிர்த் குஜூர் மற்றும் அவரது நண்பர் பயணித்துக் கொண்டிருந்த கடல்பகுதி  கொந்தளிக்கத் தொடங்கியது. அவர்களது சரக்குப் படகு பெரும் புயலில் சிக்கிக் கொள்வதற்கான அறிகுறிகள்  தோன்றத் தொடங்கின.

புயலில் இருந்து எப்படியாவது தப்பித்து விடப் போராடினார்கள் இரு சகாக்களும்.

முதலில் படகில் ஓட்டை விழுந்து சிதிலமாகத் தொடங்கியது. கடல்நீர் படகில் ஏற ஏற படகு மூழ்காமல் இருக்க வேண்டுமெனில் படகின் எடையைக் குறைத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருவருமாகச் சேர்ந்து மனதாற தாங்கள் ஏற்றி வந்த 5 ரூபாய் மதிப்பிலான சரக்குகளை நடுக்கடலில் வீசி எறிந்தனர். இதெல்லாம் தப்பித்தலுக்கான முயற்சிகளே அன்றி, அவர்களைச் சூழத் தொடங்கியிருந்த ஆபத்திலிருந்து முற்றிலும் மீண்டார்களில்லை இருவரும். சரக்கைப் பறிகொடுத்தாலும் கடலில் அப்பகுதியில் வரக்கூடிய வேறு ஏதேனும் கார்கோ கப்பல்கள் மற்றும் படகுகளிலுக்கு தகவல் அனுப்பி, உதவி பெற்றுக் கொள்ளலாம் என்று நம்பிய அவர்களது நம்பிக்கையில் மண் விழுந்தது. சிதிலமாகத் தொடங்கியிருந்த அமிர்த் குஜூரின் படகில் தகவல் தொடர்பு சாதனங்கள் முற்றிலுமாகப் பழுதாகி, படகில் இருந்த எரிபொருளும் தீரத் தொடங்கியது. இருவரும் மரண பீதியில் மூழ்கினர். வெகு அருகில் கடந்து சென்ற பிற கப்பல்கள் கூட இவர்களது இருப்பை அடையாளம் கண்டதாகத் தெரியவில்லை. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மணித்துளிகளை, நிமிடங்களை எண்ணிக் கொண்டு  இவர்கள் காத்திருக்க ஒருவழியாக பர்மாவில் இருந்து வந்து கொண்டிருந்த கடற்படை கப்பலொன்றின் பார்வையில் பட்டு அவர்களது உதவி இவர்களுக்குக் கிடைத்தது. பர்மிய கடற்படை அதிகாரிகள் குஜூரின் படகுக்கு 260 லிட்டர் எரிபொருளை அளித்ததுடன் அவர்கள் செல்ல வேண்டிய ஆபத்தில்லாத திசையையும் அடையாளம் காட்டி விட்டு நகர்ந்தனர். 

ஒருவழியாக உயிர் தப்பினோமே என்று ஆசுவாசத்துடன் கடலில் தங்கள் படகுடன் நகரத் தொடங்கியவர்களுக்கு மீண்டுமொரு பேராபத்து காத்திருந்தது. ஆம், மீண்டுமொரு பெரும்புயலில் சிக்கிக் கொண்டார்கள். பயணத்தின் நடுவில் நடுக்கடலில் நங்கூரம் பாய்ச்சி படகை நிறுத்தியே ஆக வேண்டிய கட்டாயம். அந்தோ பரிதாபம்! நங்கூரம் பாய்ச்சத்தான் முடியவே இல்லை. நங்கூரக் கயிற்றை அறுத்துக் கொண்டு பாய்ந்தோடியது புயல். புயலில் வெறி கொண்டு சீறிப்பாய்ந்த ஆழிப்பேரலைகள் நூற்றுக்கணக்கான கலன் கடல் தண்ணீரை அமிர்த் குஜூரின் படகுக்குள் செலுத்து படகைச் சிதைத்து சுக்குநூறாக்கத் திட்டமிட்டது. நல்ல வேளை அப்படியேதும் நடந்து விடவில்லை.. .புயலிலே சிக்கிய தோணியில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அரை மயக்க நிலையில் இருந்தனர் அமிர்தும் அவரது சகாவும். எரிபொருள் தீரும் வரையிலும் படகு கடலில் மூழ்கவில்லை. அதன் பாட்டில் கடலில் அலை இழுத்த இழுப்புக்கெல்லாம் சுற்றி அலைந்து கொண்டிருந்தது. ஒரு நாளா, இரண்டு நாட்களா? நாட்கள் வாரங்களாயின. ஒரு வாரம், இரண்டு வாரமெனக் கடந்து தொடர்ந்து மூன்றாவது வாரமாகக் குடிக்கத் தண்ணீர் இல்லை, உண்ண உணவில்லை. சாதாரண மனிதர்களால் நிச்சயம் தாக்குப்பிடித்திருக்க முடியாது தான். அமிர்தின் சகாவான திவ்யரஞ்சன் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் ஒடுங்கத் தொடங்கினார். பசி மயக்கத்திலும் நீரற்று வற்றிப் போன உடலுமாகத் தன் சகா, தன் கண் முன்னே இறந்து கொண்டிருப்பதை அறிந்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அமிர்த். அவர் இறப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அமிர்த்  பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒருநாளில் திவ்ய ரஞ்சன் உயிரிழந்தார். அவரது சடலத்தையாவது கரைக்கு கொண்டு சென்றே தீருவது என்று முடிவெடுத்த அமிர்த்துக்கு அதற்கும் வாய்ப்பின்றிப் போனது. சில நாட்களிலேயே சடலம் அழுகத் துவங்க, வேறு வழியின்றி மனதைக் கல்லாக்கிக் கொண்டு சடலத்தை கடலில் வீசி எறிந்தார். பின்னரும் இந்த மனிதர் எப்படி மீண்டார் என்பது திகிலான கதை தான்.

கடலில் மழை பெய்யும் போதெல்லாம் தனது துண்டில் மழை நீரைச் சேமித்தேன் என்கிறார். அந்தத் துண்டைப் பிழிந்து அதில் கிடைத்த தண்ணீரைக் குடித்தும், அது கிட்டாத நாட்களில் வேறு வழியின்றி கடல் நீரையும் கூட குடித்துக் குடித்தே தன் சிற்றுடலில் உயிரைத் தேக்கி வைக்க பிரும்மப் பிரயத்தனப் பட்டிருக்கிறார் அமிர்த்.

மேலும் நாட்கள் கடந்து கொண்டிருந்தன... கடலில் இறங்கிய 28 ஆம் நாளில் ஒருவழியாகக் கரையொதுங்கியது அமிர்தின் சிதிலமான படகு. உள்ளே ஆள் இருப்பதற்கான எந்த அடையாளங்களும் இல்லை. ஏனெனில், படகு கரை சேர்ந்த தருணத்தில் மிகப்பெரிய ராட்சத ஆமை போல குப்புறக் கவிழ்ந்திருந்தது. கரை தட்டிய படகைக் காணும் எந்த முயற்சியும் அந்தப் பகுதி மக்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால், கரையொதுங்கிட படகில் சிறு அசைவைக் கண்டதும்;

ஒதிசாவின் கடற்கரை கிராமமான ஹிரிசாகி கடந்த வெள்ளியன்று தனது தூங்குமூஞ்சித் தனத்தை விட்டு சற்று அதிகமான பரபரப்பில் விழித்துக் கொள்ளத் தொடங்கியது அன்று புயலில் கரையொதுங்கிய சிறு படகில் இருந்து குற்றுயிரும் குலையுயிருமான வெளிவந்த மனிதனொருவன் அரைமயக்கத்தில் கிராமத்தை நோக்கி நடந்து வருவதைக் கண்டவர்கள் ஓடிச் சென்று அவனை மீட்டனர். அந்த மனிதன் வேறு யாரும் அல்ல, அந்தமானில் சிதறிக் கிடக்கும் சின்னஞ்சிறு தீவுகளில் ஒன்றான ஷாகித் தீவைச் சார்ந்த அமிர்த் குஜூர் தான் அது. கடந்த 28 நாட்களாக வங்காள விரிகுடாவின் நட்ட நடுக் கடல் மடியில் தஞ்சமடைந்து பிழைப்போமா? கரை காண்போமா? என்று எவ்வித நம்பிக்கையும் இன்றி நீர் சுழற்சிக்கு ஏற்ப மிதந்து மிதந்தே தன் சிதிலமான படகில் சுற்றிக் கொண்டிருந்த அதே மனிதன் தான் இவன். 

இதையெல்லாம் சொல்லும் நிலையில் அமிர்த் இல்லை. தற்போது சிகிச்சையில் இருக்கும் அமிர்த் சார்பாக இந்த விஷயங்களைச் சேகரித்து ஊடகங்களுக்கு அளித்திருப்பது பூரி மாவட்டத்தின் கிருஷ்ணபிரசாத் காவல்நிலையத்தைச் சார்ந்த காவல் ஆய்வாளரான அபிமன்யூ நாயக். அமிர்த்தின் குடும்பத்தினருக்கு அவர் மீட்கப்பட்டு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருவது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன என்றும் ஓரிரு நாட்களில் அவர்கள் ஒதிசாவைச் சென்றடைவார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அமிர்த் குஜூர் உயிர் தப்பியது தெய்வச் செயல். இப்படியான எளிய மனிதர்கள் கடற்புயலில் சிக்கி நடுக்கடலில் மாட்டிக் கொண்டு தத்தளித்து உயிர் பிழைப்பது இங்கு புதிதில்லை. ஆனால், அவர்கள் உயிர் பிழைத்த கதைகள் தான் கேட்கக் கேட்க திகிலூட்டக் கூடியவையாக உள்ளன.

இந்திய அரசு இவர்கள் விஷயத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதல் அக்கறை காட்டினால் என்ன?

ஏனெனில் இப்படி கடும் புயலில் சிக்கி மீளக்கூடியவர்கள் வெகு சொற்பமானவர்களே! எஞ்சிய மீனவர்கள் மற்றும் அமிர்த் குஜூர் போன்ற கடல் பயணிகளை நம்பி வியாபாரம் செய்து வரும் உள்ளூர் சாமானியர்களின் உயிருக்கு உத்தரவாதமே இல்லை. பலர் மரித்திருக்கிறார்கள். அவர்களது எண்ணிக்கை கூட பாதுகாக்கப்படுகிறதா? அல்லது கடலில் காணாமல் போனவர்களென கணக்குக் காட்டப்படுகிறதா? என்று தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com