முகப்பு லைஃப்ஸ்டைல் செய்திகள்
நட்ட நடுக்கடல், பெரும்புயல்... 5 நாட்கள் மழைநீரை மட்டுமே அருந்தி உயிர் தப்பிய மீனவர்!
By RKV | Published On : 15th July 2019 02:52 PM | Last Updated : 16th July 2019 05:48 PM | அ+அ அ- |

ஜோ டி குரூஸின் ‘ஆழிசூழ் உலகு’ நாவல் வாசித்திருக்கிறீர்களா? மிகச்சரியாக அந்த நாவலின் க்ளைமாக்ஸை ஒத்திருக்கிறது இந்தச் செய்தி. இதை வாசிக்கும் போது எனக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது. கடலன்னைக்கு தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கும் மீனவர்கள் வாழ்வில் ஒருமுறையேனும் இத்தகைய அனுபவங்களைச் சந்திப்பது வழக்கமென்றாலும் அந்த பயங்கர அனுபவத்திலிருந்து மீண்டு வந்தவர்களைக் கணக்கிட்டால் சிலர் மட்டுமே எஞ்சுவார்கள். சரி இந்தப் பீடிகை எல்லாம் வேண்டாம், நான் நேராக விஷயத்துக்கு வருகிறேன்.
வங்காள விரிகுடாவில் கடந்த 5 நாட்களாக உயிர் காக்கும் லைஃப் ஜாக்கெட் இல்லாமல், உண்பதற்கு உணவில்லாமல் வெறும் மழைநீரை மட்டுமே அருந்தி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தப்பிப் பிழைத்திருக்கிறார் மீனவர் ஒருவர். அவரது பெயர் ரபீந்திரநாத் தாஸ் (தமிழில் நாம் ‘வ’ போடும் இடங்களில் எல்லாம் வங்காளிகள் ‘ப’ போட்டுக்கொள்வார்கள்)
வெறும் மூங்கில் கழியைப் பற்றிக் கொண்டு எல்லையற்றுப் பரந்து விரிந்து கிடக்கும் பெருங்கடலில் மழை பெய்தால் மட்டுமே கிடைக்கும் நன்னீரை அருந்திக் கொண்டு 5 நாட்களாக கடல்நீரில் ஊறிக் கொண்டு உயிர்த்தவம் இருந்து ஒரு மனிதன் தப்பிப் பிழைப்பதெல்லாம் தெய்வச் செயல். அந்த வகையில் ரபீந்திர தாஸால், தானொரு அதிர்ஷ்டசாலி என்று சந்தோஷிக்கவும் முடியவில்லை. காரணம் ரபீந்திர தாஸின் மருமகன்
அதே கடல் விபத்தில் ரபீந்திரா காப்பாற்றப்படுவதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்பாக கடலில் மூழ்கி இறந்துவிட்டார். இப்போது தான் காப்பாற்றப்பட்டதற்காக சந்தோஷப்பட முடியாமல் மிக நொந்து போய் மருமகனின் இழப்பு குறித்துப் பகிர்ந்து கொண்டார் ரபீந்திரா,
‘அவனிடம் லைஃப் ஜாக்கெட் இருந்தது, ஆனாலும், அவன் மிகவும் பயந்து போயிருந்த காரணத்தால் அவனால் கடலில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. நான் பலமணி நேரம் அவனைச் சுமந்து கொண்டே கடலில் மிதந்த போதும் கூட அவனால் நீடிக்க முடியாமல் மூழ்கி விட்டான், என்னையும் கூட இப்போது என்னைக் காப்பாற்றிக் கரை சேர்த்த வங்க தேசக் கப்பலானது, முதல்முறை அணுகிய போது தவற விட்டு விட்டது. பிறகு மீண்டுமொரு முயற்சியில் தான் என்னைக் கண்டுபிடித்து அருகில் வந்து காப்பாற்றியது’ என்கிறார்.
உயிர் பிழைத்த ரபீந்திரா தாஸ் ஜூலை 10 அன்று வங்கக் கடலில் புயலில் சிக்கிக் கவிழ்ந்த FB நயன் - I எனும் மீன்பிடிப் படகின் தலைவனாகக் கடலிறங்கியவர். ஜூலை 4 ஆம் தேதி 14 மீனவர்களுடன் ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற இவர்களது சிறிய படகு புயலில் சிக்கிச் சின்னாபின்னமானதுடன் இவருடன் பயணித்த 13 பேரும் தாக்குப்பிடிக்க முடியாமல் மரணிக்க உயிர் தப்பிய ஒருவராக ரபீந்திரா தற்போது கொல்கத்தா மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ரபீந்திராவைக் காப்பாற்றியது சிட்டகாங் கடற்கரையோரம் பயணித்துக் கொண்டிருந்த வங்கதேசக்கப்பல். கடலில் புயல் சீற்றம் தொடங்கியதுமே படகு கவிழ்ந்தது முதலில் மூன்று பேர் மாட்டிக் கொண்டனர். பிறகு சிறிது நேரத்தில் அனைவருமே கடலில் குதித்துத் தப்ப வேண்டிய சூழல் நேரிட்டது. ரபீந்திராவின் படகில் பயணித்த அனைவருமே மன உறுதியை சிறுகச் சிறுக இழந்து கடலுக்குள் மூழ்கிப் போக கடைசி வரை ஒரு சிறு மூங்கில் கழியைப் பற்றிக் கொண்டு அவ்வப்போது பெய்யும் மழைநீரை மட்டுமே உணவாகக் கொண்டு ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 5 நாட்கள் அத்துவானக் கடலில் மிதந்து குற்றுயிரும், குலையுயிருமாக உயிர் தப்பியிருக்கிறார் ரபீந்திரா.
இப்போது அவரிடம் நிகழ்ந்த விபத்து குறித்து கேள்வி எழுப்பினால், ‘எனக்கு கடலில் புயல் வந்து நாங்கள் அனைவரும் படகிலிருந்து குதித்தது தான் நினைவிருக்கிறது. மற்றபடி என் மருமகனையும், மற்றவர்களையும் காப்பாற்ற முடியவில்லையே என்கிற வருத்தம் பெரிதாக இருக்கிறதே தவிர நிகழ்ந்த பயங்கரமேதும் நினைவில் இல்லை என்கிறார்.
செய்தியளவில் ரபீந்திர தாஸ் தப்பியதை நாம் கடந்து விடலாம். ஆனால் கட்டுரையில் முதலில் குறிப்பிட்டதைப் போல இந்தச் சம்பவத்தை அப்படியே நேரில் கண்டது போலவே ஜோ டீ குரூஸ் தனது ஆழி சூழ் உலகில் விவரித்திருப்பார். வாசிக்கும் போதே மனம் பதறிக் கொண்டே இருக்கும். அதில் வரும் சூஸையைப் போலத்தான் இப்போது ரபீந்திர தாஸ் தப்பிப் பிழைத்திருக்கிறார்.
மீனவர்களின் வாழ்வில் மிக துயரக்கேடான இந்த விபத்துக்களைத் தடுக்க அரசு மேலும் பாதுகாப்பான முயற்சிகளை மேற்கொண்டால் தேவலாம்.