காந்தியின் சர்ச்சைக்குரிய ‘பிரம்மசர்ய சோதனை’ குறித்து நேர்மையான விளக்கங்களைப் பெற உதவக் கூடும் இப்புத்தகம்!

இப்படி சாவதானமாக விரியும் மனுவின் டைரிக்குறிப்பில் இரு நபர்களது மரணத் தருணங்கள் மிகப்பெரிய சோகம் பூசிக் கொள்கின்றன. அந்த இருவரில் ஒருவர் காந்தியின் மிக நெருங்கிய உதவியாளராக இருந்த மகா தேவ் தேசாய்
காந்தியுட நடைபயிலும் மனு காந்தி
காந்தியுட நடைபயிலும் மனு காந்தி

மனு காந்தி... தேசப்பிதாவின் கடைசித் தருணங்களின் சாட்சி!

இந்தப் பெண்ணின் தோளில் சாய்ந்தவாறு தான் தேசப்பிதா உயிர்நீத்தார்.. 

இன்று நம் தேசப்பிதாவின் 150 வது பிறந்தநாள். இந்நாளில் அவருடைய மரணத்தறுவாயிலும் உடனிருந்த மனு காந்தி குறித்தும் நாம் பேசியாக வேண்டும்.

1947, மே மாதத்தில் ஒருநாள் திடீரென காந்தி, தனது ஒன்று விட்ட பேத்தியும், உதவியாளருமான மனு காந்தியிடம், தான் தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொள்ளும் போது அதற்கொரு மெளன சாட்சியாக மனு இருக்க வேண்டும் எனத் தான் விரும்புவதாகத் தெரிவித்திருந்தார்.

காந்தியின் விருப்பத்தை மனு ஏற்றாரோ இல்லையோ கடவுள் ஏற்றார் என்று தான் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. ஆம். 1948, ஜனவரி 30 ஆம் தேதி, அதே மனுவின் தோளில் சாய்ந்தவாறு தான் தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார் காந்தி.

அன்றைய தினம் டெல்லியின் பிரசித்தி பெற்ற தொழிலதிபர் ஒருவரது இல்லத்தில் தங்கியிருந்த காந்தி, மாலையில் வழக்கம் போல பிரார்த்தனைக் கூடத்திற்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து வெளியேறி அதே வளாகத்தில் இருந்த தோட்டப்பகுதிக்கு நடந்து செல்லத் தொடங்கினார். 

வயோதிகத்தின் காரணமாக உருவம் தான் சற்றுத் தளர்ந்திருந்ததே தவிர காந்தியின் நடையில் எவ்விதச் சுணக்கமுமில்லை. எப்போதும் போல ஆதரவாக பேத்திகள் மனு, ஆபா வின் புஜங்களைப் பற்றிக் கொண்டு மெல்லிய குரலில் பேசியவாறு விரைந்து நடந்து செல்லும் காந்தியை அங்கு திரண்டிருந்தவர்கள் கண்டனர்.

மனு மற்றும் ஆபா வுடன் காந்தி...
மனு மற்றும் ஆபா வுடன் காந்தி...

அப்போது தான் அது நடந்தது...

கூட்டத்திலிருந்து காக்கி உடையுடன் திடீரென ஒரு மனிதன் வெளிப்பட்டான்.. காந்திக்கு அருகில் நடந்து கொண்டிருந்த மனுவை அப்பால் தள்ளிய அவன் கையில் திடீரென பிஸ்டல் முளைத்தது. அதிலிருந்து சட்டென விடுதலையான மூன்று குண்டுகள் காந்தியின் மார்பிலும், அடிவயிற்றிலும் பாய்ந்தன.

எல்லாமே கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்து முடிந்திருந்தன.

தரையில் வீழ்ந்த தேசப்பிதா... ‘ஹே ராம், என்னைச் சுட்டவனை மன்னித்து விடுங்கள்...’ என்று சொல்லி தன்னைத் தாங்கிக் கொண்டிருந்த மனுவின் தோளில் உயிர் நீத்தார். 

காந்தி சுடப்பட்டு வீழ்ந்த போது... 
காந்தி சுடப்பட்டு வீழ்ந்த போது... 

ஆம், எந்தப் பெண்ணை தனது நம்பிக்கைக்குரியவராக காந்தி கருதினாரோ, எந்தப் பெண்.. காந்தியின் இறுதிக்காலம் வரையிலும் அவருக்கு உதவியாக இருந்து வந்தாரோ, எந்தப் பெண்.. காந்தியின் சிக்கலும், கொந்தளிப்புமான இறுதிநாட்களில் அவரது வரலாற்றைப் பதிவு செய்யும் ஆசிரியராகவும் செயல்பட்டுக் கொண்டிருந்தாரோ.. அதே மனு காந்தியின் தோளில் சாய்ந்தவாறு தான்... காந்தியின் இறுதி மூச்சு அடங்கியது.

மனு காந்திக்கு, காந்தியுடன் இணைந்த ஆரம்ப காலம் தொட்டே டைரி எழுதும் பழக்கம் இருந்து வந்தது. இந்தப் பழக்கத்தை ஆரம்பித்து வைத்ததும் கூட காந்தி என்றே சொல்லலாம். 14 வயதில் மனு, காந்திஜியின்  சுதந்திர வேட்கையால் ஈர்க்கப்பட்டு காந்தி தம்பதியினரிடம் வந்து சேர்ந்தார். அப்போது வெள்ளையனே வெளியேறு கோஷம் தீவிரமடைந்திருந்த காலகட்டம். மக்களை பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராகத் தூண்டி விட்ட காரணத்துக்காக காந்திஜி சிறையில் அடைக்கப்பட்டார். காந்தியுடன் அந்தப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த அனைவருமே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 14 வயது இளம் கைதியாக மனுவும் இருந்தார். அந்த வகையில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்ற இளம் கைதிகளில் ஒருவர் என்ற பெருமை மனுவுக்கு உண்டு. 1943 முதல் 44 வரை சுமார் ஒரு வருடத்தை மனு சிறையில் கழித்தார்.

அப்போது தான் மனு டைரி எழுதப் பழகினார்.

ஓராண்டு முடிந்ததும் சிறையில் இருந்து விடுதலையான மனு, அதன் பின்னர் நான்காண்டு குறுகிய இடைவெளியிலேயே சிறந்த எழுத்தாளராகி மாறியிருந்தார்.

காந்தி சுடப்பட்ட அன்றும் கூட அவரது கையில் டைரி இருந்ததாகக் குறிப்பிடுகிறார்கள். 

காந்தி மற்றும் டைரியுடன் மனு...
காந்தி மற்றும் டைரியுடன் மனு...

மனு காந்தி எழுதிய டைரிக் குறிப்புகளின் 12 தொகுதிகள் இப்போதும் இந்திய அரசின் ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ரூல்டு நோட்டுக்களில் குஜராத்தி மொழியில் எழுதப்பட்டுள்ள அந்த டைரிகளில் இருப்பது மனுவின் சொந்தக் கையெழுத்து. அவற்றில் காந்தியின் உரைகள் (அவர் சொல்லச் சொல்ல நேரிடையாக மனு பதிவு செய்தது), காந்தியின் கடிதங்கள் மற்றும் மனுவின் ஆங்கில வொர்க் புக்கும் கூட உண்டு.

அவை அனைத்துமே தற்போது காந்தியவாதியும், காந்திய வாழ்க்கை முறையில் ஆர்வம் கொண்டவருமான திரிதீப் சுஹ்ருத் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு முதன்முறையாக புத்தக வடிவம் பெற்றிருக்கின்றன.

இப்படி மனு காந்தியின் கைகளில் நீங்காத துணையாக இடம்பெற்றிருந்த டைரி, காந்தி சுடப்பட்ட அன்றும் கூட  அவரது கைகளில் தான் இருந்திருக்கிறது. அதை நழுவ விட்டுவிட்டுத்தான் அவரால் காந்தியை தாங்கிப் பிடிக்க முடிந்திருக்கிறது. காந்தியின் மரணத்தின் பின், ஒரு தோழனைப் போல அதுவரை உடனிருந்து வந்த டைரி எழுதும் பழக்கத்தை நிறுத்தி விட்டு, அதற்குப் பதிலாக புத்தகங்களை எழுதத் தொடங்கி இருக்கிறார்.

அதுமட்டுமல்ல, அதன் பின்பு.. தான் உயிருடன் இருந்தவரை அதாவது 1969 ஆம் ஆண்டில் தனது 42 ஆம் வயதில் தான் இறக்கும் வரை.. எங்கு பேச அழைத்தாலும் காந்தியைப் பற்றி  உரையாற்றும் வழக்கத்தை மனு கடைபிடித்து வந்தார். 

மனுவின் கையெழுத்தில் பதிவு செய்யப்பட்ட அவரது டைரிக்குறிப்பின் முதல் தொகுப்பானது காந்தியுடன் சிறை வாசமிருந்த நாட்களை விவரிக்கிறது. அதில் அவரது எழுத்தாற்றல், முதன்முறை சிறை வாசத்தை அனுபவிக்கும் ஒரு சிறுமியின் மனநிலையில் அன்றாட சிறை நிகழ்வுகளை ஆர்வத்துடன் பதிவு செய்யும் விதத்தில் அமைந்திருப்பது சுவாரஸ்யம்.

தனது டைரிக்குறிப்புகள் வாயிலாக, மனு, தனக்கு.. காந்தியின் மனைவியான அன்னை கஸ்தூர்பா காந்தியுடன் இருந்த அந்நியோன்யமான நேசத்தையும் வெளிப்படுத்தி இருந்தார். கஸ்தூர்பா காந்தியின் உடல்நிலை அப்போது நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே இருந்தது. மனு, அவரை அயராது கவனித்துக் கொண்ட போதும் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. தொடர்ந்து அதலபாதாளத்துக்குச் சென்று கொண்டிருந்தது காஸ்தூபா காந்தியின் உடல்நிலை.

முதல்தொகுப்பு இப்படித் தொடங்கிய போதும், அதில் ஒரு சிறுமியின் தினசரி வாழ்க்கையில் அவள் செய்து வந்த வேலைகளைப் பற்றிய பகிர்வுகளும் இல்லாமலில்லை. தினமும் காய்கறிகள் நறுக்குவது, உணவு தயாரிப்பது, கஸ்தூர்பாவுக்கு மசாஜ் செய்வது, அவரது தலைமுடிக்கு எண்ணெயிட்டு நீவுவது, கை ராட்டையில் நூல் நூற்பது, தினசரி பிரார்த்தனைகளில் பங்கேற்பது, பாத்திரங்களைத் துலக்குவது. நடு நடுவே குறிப்பிட்ட இடைவெளிகளில் தன்னைத்தானே கருத்தியல் ரீதியாக எடை போட்டுக் கொள்வது இப்படிச் சென்றது அந்தச் சிறுமியின் வாழ்க்கை.

ஆனால், இதில் நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இத்தனை நிகழ்வுகளின் போதும் இவர்கள் மூவரும் சிறையில் இருந்தார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. சிறையில் இருப்பவர்களுக்கான அன்றாட வேலைகளையும் கூட அவர்கள் அப்போது நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். அந்தச் சூழலில் தான் இச்சிறுமி காந்தியின் மேற்பார்வையில் பின் நாளைய ஆசிரம வாழ்க்கைக்குண்டான கட்டுப்பாடான வாழ்க்கை முறையைக் கற்றுக் கொண்டாள். இதை காந்தி, அவளுக்கு ஆணையிட்டோ அல்லது கைபிடித்து வழிநடத்தியோ கற்றுத் தந்தார் என்று சொல்ல முடியாது. காந்தியின் கட்டுப்பாடான வாழ்க்கைமுறையை உடனிருந்து கண்ட வகையில் மனு தானே கற்றுக் கொண்டாள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த கற்றுக் கொள்ளல் ஆச்சர்யமும், புதுமையுமாக அவளது முதலாம் டைரிக் குறிப்பு மொத்தமும் கொட்டிக் கிடக்கிறது.

மொத்தம் 12 தொகுதிகளாக காந்தியுடனான தனது நினைவுகளை சுவாரஸ்யமாகப் பதிவு செய்திருக்கும் மனு காந்தி, முறையாகக் கல்வி கற்றவரில்லை. பள்ளிக்குச் சென்றிருந்தால் தானே முறையான கல்வி பெற முடியும்?! மனு கற்றதெல்லாம் காந்தியின் வழிகாட்டுதலின் கீழ் மட்டுமே.

காந்தியிடம் தான் அவர் ஆங்கிலம், இலக்கணம், ஜியோமெட்ரி (வடிவியல்) மற்றும் புவியியல் என அனைத்துப் பாடங்களையும் கற்கத் தொடங்குகிறார். இந்து மத காவியங்களையும், வேதங்களையும் கூட அவள் காந்தியின் வாயிலாகவே கற்கத் தொடங்குகிறாள். காந்தி அளித்த இந்திய வரைபடத்தை ஆராய்ந்து கொண்டிருக்கையில் அவளுக்கு இந்தியாவில் நிகழ்ந்த போர்களைப் பற்றி அறியும் ஆர்வம் பிறந்து அதைப்பற்றிய கேள்விகள் முளைக்கத் தொடங்குகின்றன. இப்படியாக அவளது அறிவின் எல்லைகள் விரிவு பட விரிவு பட அவள் தனது டீன் ஏஜ் பருவத்திலேயே மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் பற்றியும் படிக்கத் துவங்குகிறாள்.

சிறையில், காந்தியிடம் மனு ஜியோமெட்ரி கற்றுக் கொண்டதற்கான ஆதாரம்..
சிறையில், காந்தியிடம் மனு ஜியோமெட்ரி கற்றுக் கொண்டதற்கான ஆதாரம்..

மனுவைப் பொருத்தவரை இலக்கணப் பாடங்களைக் கற்கத்தான் அதிக நேரம் தேவைப்படுவதாக இருந்தது. இன்று நான் சேஞ்சிங் மற்றும் அன்சேஞ்சிங் அட்ஜெக்டிவ்கள் பற்றிப் படிக்கத் தொடங்கி இருக்கிறேன். பிரிடிகேட்டிவ், சப் பிரிடிகேட்டிவ் அட்ஜெக்டிவ்களைப் பற்றியும் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று நீள்கின்றன மனுவின் டைரிக்குறிப்புகள்..

இப்படியாக  மனு..  காந்தி மற்றும் அவரது தோழர்களுடன் சிறையில் கழித்த நாட்கள் மொத்தமும் படிப்பு, அன்றாட வேலைகள், பிரார்த்தனை என்று சலிப்படையச் செய்யும் வகையில் மட்டுமே கழிந்து கொண்டிருக்கவில்லை.

கிராமஃபோன் இசைத்தட்டுகளில் பாடல்களைக் கேட்பது, நீண்ட தூரம் வாக்கிங் செல்வது. காந்தியுடன் பிங் பாங் (டேபிள் டென்னிஸ்) ஆடுவது, அன்னை கஸ்தூர் பாவுடன் கேரம் ஆடுவது, சாக்லேட் செய்யக் கற்றுக் கொள்வது போன்ற சுவாரஸ்யமான தருணங்களுக்கும் அப்போது பஞ்சமிருந்ததில்லை. 

சில நேரங்களில் காந்தியின் தோழர்கள் மற்றும் உதவியாளர்கள், தங்களது போராட்டத்தின் ஒரு பகுதியாக  ரூஸ்வெல்ட், சர்ச்சில், மேடம் சியாங் கை ஷேக் போன்றவர்களைப் போல மாறுவேடமிட்டுக் கொண்டு நடிக்கலாம் என்று திட்டமிடுவார்கள். அதற்கான முன் தயாரிப்புகள் எல்லாம் அவர்கள் பக்காவாகத் திட்டமிட்டு விடுவார்கள். ஆனால் இறுதியில் காந்தியிடம் அனுமதிக்காக வருகையில் அவர், அதை நிராகரித்து விடுவார். அவருக்கு அதில் எல்லாம் பெரிதாக விருப்பம் இருந்ததில்லை.

இப்படி சாவதானமாக விரியும் மனுவின் டைரிக்குறிப்பில் இரு நபர்களது மரணத் தருணங்கள் மிகப்பெரிய சோகம் பூசிக் கொள்கின்றன. அந்த இருவரில் ஒருவர் காந்தியின் மிக நெருங்கிய உதவியாளராக இருந்த மகா தேவ் தேசாய், மற்றொருவர் அன்னை கஸ்தூர் பா.

முன்னவர் காந்தியின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி பதிவு செய்த மாபெரும் வரலாற்றுப் பேராசிரியராகப் போற்றப்படுபவர். இரண்டாமவர் காந்தியின் சகதர்மிணி.

மனைவி கஸ்தூரி பா இறந்த நிலையில்  அவரது தலைமாட்டில் அமர்ந்திருக்கும் காந்தி..
மனைவி கஸ்தூரி பா இறந்த நிலையில்  அவரது தலைமாட்டில் அமர்ந்திருக்கும் காந்தி..

இதில் கஸ்தூரி பாவின் இறப்பு மனதை நொறுங்கச் செய்யும் அளவுக்கு சோகமயமானது.

1944 ஆம் ஆண்டு, ஃபிப்ரவரி மாதத்தில் ஒரு நாளிரவு, கஸ்தூரி பா, தன் கணவரை அருகழைக்கிறார்.

அருகில் அமர்ந்த காந்தியிடம், நான் மிக மிக வேதனையாக உணர்கிறேன். என்னால் இந்த வலியைத் தாள முடியவில்லை. இதுவே எனது இறுதி மூச்சாக இருக்கலாம்.. என்று வேதனை பொங்க அந்தத் தாய் தனது வலியைப் பகிர...

காந்தியோ அவரது கரங்களை ஆதரவாகப் பற்றிக் கொண்டு... ‘போ, ஆனால் நிம்மதியாகப் போ, கேட்பாயில்லையா? என்கிறார். 

இம்மாதிரியான அந்தரங்கத் தருணங்களை எல்லாம் பதிவு செய்ய மனுவால் மட்டுமே முடிந்திருக்கிறது. ஏனெனில் அவர் மட்டுமே காந்தியுடன் அவரது இறுதி வரை இணைந்திருந்தார்.

இப்படியாக, ஒரு குளிர்கால மாலையில் கஸ்தூரிபா காலமான போது, கணவரான காந்தி, வேதனை தாளாமல் தனது கண்களை மூடிக்கொண்டு.. மனைவியின் உடல் மீது தனது நெற்றியை வைத்து அழுத்திக் கொள்கிறார். இந்தச் செய்கைக்கு ஆயிரம் அர்த்தங்கள் இருக்கலாம். காந்தியுடன் அவரது அத்தனை போராட்டங்களின் போதும் கஸ்தூரி பா உடனிருந்தார் என்ற போதும் அவருக்குத் தனது கணவர் மீது ஆயிரம் மனஸ்தாபங்கள் இருந்திருக்கக் கூடும். அதை காந்தியும் உணர்ந்தே இருந்தார். அதனால் தான் மனைவியுடனான அவரது இறுதி விடைபெறல் ஒரு மன்னிப்புக் கோரலைப் போல நிகழ்ந்து முடிந்தது எனப் பதிவு செய்திருக்கிறார் மனு.

மனு வளர்ந்து இளம்பெண்ணானதும், அவரது டைரிக் குறிப்புகள் இப்போது அர்த்தம் பொதிந்தவையாகவும், ஆழமான சிந்தனைக்கு உரியவையாகவும் மாறி இருப்பதைக் காண முடிகிறது.

அதிலொன்று தான் காந்தியின் மிகவும் சர்ச்சைக்குரிய மற்றும் புரிந்து கொள்ள முடியாத பரிசோதனை பற்றிய பதிவு.

மனு மிக நேர்மையாக அதைத் தனது டைரிக்குறிப்புகளில் பதிவு செய்திருப்பதாகக் கூறுகிறார் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா.   

1946 டிசம்பரில் ஒருநாள், காந்தி, பாலியல் ஆசைகளைத் துறந்து தன்னால் கட்டுப்பாடாக இருக்க முடியும் என்பதை சோதனை மூலம் நிரூபிக்க  பேத்தியான மனுவைத் தன்னுடன் ஒரே படுக்கையில் இணைந்து படுக்குமாறு கேட்டுக் கொள்கிறார். இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் காந்தி மிக இளமையில் சொல்லப்போனால் 13 வயதுச் சிறுவனாக இருந்த போதே திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்தவர். தமது 38 வது வயதில் நான்கு குழந்தைகளுக்குத் தந்தையான பின் பிரம்மச்சரிய விரதத்தில் இறங்கி விட்டதாக அறிவித்தவர். அவர் ஏன் இப்படியொரு பரிசோதனையில் இறங்கினார்? உலகுக்கு எதை நிரூபிக்க இந்தச் சோதனைகளை எல்லாம் நிகழ்த்தினார்? என்பதை மனு தனது அடுத்தடுத்த டைரிக்குறிப்புகளில் மிக நேர்மையாக விவரித்திருக்கிறார்.

இப்படியாக மனு,  காந்தியுடன் இருந்த போதிலான வாழ்க்கைப் பகிர்வுகள் அத்தனையும் வேறெவருக்கும் கிடைக்காத வாழ்வியல் அனுபவங்களைக் கொண்டவையாக இருந்தன என்பது மட்டும் நிஜம். யோசித்துப் பார்க்கையில் அது அப்படியொன்றும் எளிதான காரியமில்லை என்று தான் தோன்றுகிறது. சின்னஞ்சிறுமியாக 14 வயதில் தேசப்பிதாவுடன் தன் வாழ்வையும், வாழ்வின் வண்ணங்களையும், சுவாரஸ்யங்களையும் பிணைத்துக் கொண்ட அந்தப் பெண், பின் தனது ஒட்டுமொத்த வாழ்வையும் காந்தி மற்றும் அவரது மனைவிக்காக சுஷ்ருசைகளில் ஈடுபடுத்திக் கொள்கிறார். முடிவில் காந்தி குறித்த அத்தனை தகவல்களையும் பதிவு செய்யும் தகுதி வாய்ந்த ஒரு வரலாற்று ஆசிரியராகவும் உருவெடுக்கிறார். இவரைத் தவிர வேறு யார் பதிவு செய்திருந்தாலும் அதில் காந்தியின் வாசம் இத்தனை அழுத்தமாக பதிந்திருக்க  வாய்ப்பில்லை.

உதாரணமாகச் சொல்வதென்றால், சர்ச்சில் குறித்து காந்தி, மனுவிடம் பகிர்ந்து கொண்டவை;

சர்ச்சில் என்னைத் தனது மிக வலிமையான எதிரியாகக் கருதுகிறார். நான் சிறைக்குள் இருந்தால் மட்டுமே, வெளியே மக்களுடைய சுதந்திர தாகத்தையும், கிளர்ச்சியையும், போராட்டங்களையும் கட்டுப்படுத்தி விடலாம் என நம்புகிறார் அவர், ஆனால் , அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, மக்களது போராட்டதிற்கான வலு என்பது நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது, அது நான் எங்கு இருக்கிறேன் என்பதைப் பொருத்தது அல்ல, நான் எங்கிருந்தாலும் என்னால் ஊட்டப்பட்ட சுதந்திர தாகத்தின் மீதான நம்பிக்கை அவர்களை அதற்காகத் தொடர்ந்து போராடச் செய்து கொண்டே தான் இருக்கும்... மக்களின் சுதந்திர தாகத்தின் சக்தியை  சர்ச்சில் உணரவில்லை. என்று சொன்னார் காந்தி.

அவர் சொன்னது எத்தனை நிஜம்!

ஆம், இந்தியா சுதந்திரம் பெற்றது. அவர் அதைச் சொல்லி முடித்த மூன்று வருடங்களின் பின் இந்தியாவை சுதந்திர நாடாக அறிவித்து விட்டு பிரிட்டிஷ் அரசு வெளியேறியது.

இப்படியாக காந்தி குறித்து மனு காந்தி பதிவு செய்துள்ள முக்கியமான சம்பவங்கள் பல உள்ளன மனு காந்தியின் டைரிக் குறிப்பை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ள புத்தகத் தொகுப்புகளில்.

அவற்றில் காந்தி ஏன் பிரம்மசரிய சோதனையை மேற்கொண்டார் என்பதற்கு மனு அளிக்கும் விளக்கங்கள் வரவிருக்கும் தொகுதியில் இடம்பெறவிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் திரிதீப் சுஹ்ருத்.

புத்தகம் காந்தி குறித்து நாம் மேலும் பல உண்மைகளை அறிந்து கொள்ள உதவலாம். ஏனெனில் இதுவரை குஜராத்திகள் மட்டுமே வாசித்தறிய முடிந்திருந்த மனு காந்தியின் டைரிக்குறிப்புகள் முதன்முறையாக ஆங்கிலத்தில் புத்தகமாக்கப்பட்டிருப்பதால் மீண்டும் காந்தி குறித்த சர்ச்சைகள் வெடிக்கவும் வாய்ப்புகள் உண்டு. 

Image courtesy: BBC & Google

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.