கவனித்தீர்களா? சின்னத்திரை சீரியல்களில் தொடர்ந்து பின்பற்றப்படும் இந்த முறைகெட்ட வழக்கத்தை!

டி ஆர் பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் மெகா சீரியல்களான செம்பருத்தி, யாரடி நீ மோகினி, திருமணம், அரண்மனைக் கிளி உள்ளிட்ட தொடர்களில் ஒரு விஷயத்தைக் கவனித்தீர்களா?
கவனித்தீர்களா? சின்னத்திரை சீரியல்களில் தொடர்ந்து பின்பற்றப்படும் இந்த முறைகெட்ட வழக்கத்தை!

இந்தக் காலத்தில் இப்படி ஒரு பேச்செடுக்கவே சற்று யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது.

டேட்டிங் கலாசாரம் முடிந்து லிவிங் டுகெதர் வரை வந்து விட்ட நமக்கு இதெல்லாம் ஒரு வரம்பு மீறிய செயலாகக் கண்ணில் படாதது ஆச்சர்யமொன்றுமில்லை.

ஆனாலும் பாருங்கள், வீட்டின் நடுக்கூடம் என்ற எல்லை தாண்டி இப்பொதெல்லாம் ஜியோ ஃபோன், ஸ்மார்ட் டிவி என்று படுக்கையறை வரை வந்து விட்டன தொலைக்காட்சி சீரியல்கள். பெண்களிடையே அவற்றின் வீச்சு யாராலும் தடுக்க முடியாததாக இருக்கிறது. அப்படியான சூழலில் இதைப் பற்றி நாம் பேசித்தான் ஆகவேண்டியதாயிருக்கிறது.

தமிழ் கலாசாரத்தை இன்றளவும் தூக்கிப் பிடிக்க விரும்பும் நாம் தான் சீரியல்களின் இந்த முறைகெட்ட வழக்கத்தையும் கூட எவ்வித ஆட்சேபமும் இன்றி அனுமதித்துக் கொண்டிருக்கிறோம். 

அடடா... சும்மா சும்மா முறைகெட்ட வழக்கம் என்கிறீர்களே? அது என்ன வழக்கம் அதை முதலில் சொல்லித் தொலையுங்களேன் என்கிறீர்களா?

இதோ வந்து விட்டோம் விஷயத்துக்கு;

டி ஆர் பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் மெகா சீரியல்களான செம்பருத்தி, யாரடி நீ மோகினி, திருமணம், அரண்மனைக் கிளி உள்ளிட்ட தொடர்களில் ஒரு விஷயத்தைக் கவனித்தீர்களா?

மாப்பிள்ளைகளும் அவர்களை மணந்து கொள்ள விரும்பும் மணப்பெண்களும் ஒரே வீட்டில் வாழ்ந்து கொண்டிருப்பது போலவே கதையமைப்பு இருக்கிறது.

நம் அம்மாக்கள், பாட்டிகள் காலத்தில் எல்லாம் மாப்பிள்ளைகளை திருமண நாளன்று கழுத்தில் தாலி ஏறும் போது கூட நிமிர்ந்து பார்க்க வெட்கப்பட்டுக் கொண்டு மணப்பெண்கள் வாழ்ந்து வந்த காலமெல்லாம் இப்போது மலையேறிப் போய்விட்டது. இப்பொதெல்லாம் இருவருமே திருமணத்திற்கு முன்பே வாழ்வது கூட ஒரே வீட்டில் தான் என்றாகி விட்டதா நம் கலாசாரம்? அல்லது இந்த சீரியல் இயக்குனர்கள் தங்களது பட்ஜெட்டைக் குறைக்க இப்படியெல்லாம் திட்டமிட்டு கதையமைக்கிறார்களா? என்று புரியவில்லை.

சும்மாவே லிவிங் டுகெதர் கலாசாரத்தை.. உடலாலும், மனதாலும் சேர்ந்து வாழ்வோம், பிடித்திருந்தால் தொடர்வோம், இல்லாவிட்டால் பிரிந்து விடுவோம் என்று தப்பர்த்தம் செய்து கொண்டு சுற்றுகிறார்கள் பெரும்பாலான இன்றைய இளைய தலைமுறையினர். அவர்கள் இந்த மெகா சீரியல்களைப் பார்த்தே வளர்ந்து வரக்கூடியவர்கள்.. (தமிழ் சீரியல் எல்லாம் பார்ப்பதில்லை, அதுக்கெல்லாம் நோ டைம் என்பதெல்லாம் வெறும் பம்மாத்து, இவர்களில் பலர் பல விதமான ஜானர்களில் வெப் சீரிஸ் பார்த்து விட்டு அதையே தங்களுக்கான வாழ்க்கைப்பாடங்களாக்கிக் கொண்டு கெட்டுச் சீரழிவதும் ஒருபக்கம் நடந்து கொண்டு தான் இருக்கிறது) 

கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று தெரியாமல் எதிர்கால வாழ்வை அதிகம் சிக்கலுக்கு உள்ளாக்கிக் கொண்டு உழன்று கொண்டிருக்கும் இன்றைய தலைமுறையினருக்கு இந்த சீரியல்கள் எல்லாம் மேலும் வாழ்வை இன்னும் எந்தெந்த வழிகளில் எல்லாம் நாறடிக்கலாம் என்று கற்றுத் தந்து கொண்டிருக்கின்றன. மேற்கண்ட வழக்கத்தை அப்படித்தான் கருத வேண்டியதாயிருக்கிறது. 

ஏனெனில், ஒருபக்கம் இந்தியாவில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையே சிதைந்து விட்டது,  எல்லோருமே தனித்தனி தீவுகளாகி விட்டோம் என்று கூவிக்கொண்டே சீரியல்களில் மட்டும் ஒரே வீட்டுக்குள் வண்டி வண்டியாக கூட்டுக் குடும்பங்கள் அதிலும் கொஞ்சமும் லாஜிக்கே இல்லாமல் பெரும்பாலான சீரியல்களில் நாயகனும், நாயகியும் திருமணத்திற்கு முன்பிருந்தே ஒரே வீட்டுக்குள் தான் வாழ்ந்து வருகிறார்கள் போல் காட்டுவதெல்லாம், ஐயோடா... தாங்கவில்லை இந்த சின்னத்திரை கதாசிரியர்களின் அழும்பு! 

ஐயா/அம்மா கதாசிரியர்களே! கதாசிரியைகளே! தயவு செய்து கொஞ்சம் நியாயமாக யோசியுங்களேன்.

உங்கள் வீடுகளில், உங்களது குடும்பங்களில் இப்படிப்பட்ட நடைமுறைகளைத் தான் மேற்கொண்டு வருகிறீர்களா?

இதை விட இன்னொரு மிகப்பெரிய லாஜிக் பொத்தல் நம் தமிழ் மெகா சீரியல்களில் தொடர்ந்து பார்ப்போர் கண்களை உறுத்தி வருகிறது. (ஏன் பார்க்க வேண்டும் என்று முட்டாள் தனமாக கேட்டு வைக்காதீர்கள்? வீட்டம்மிணிகள் அப்புறம் சீரியல் பார்க்க விடாத குற்றத்திற்காக போஜனத்தில் எலி மருந்து கலந்து வைத்து விடுவார்கள்! பல விஷயங்கள் கண்களையும், மூளையையும் உறுத்தினாலும் சீரியல் பார்ப்பதை மட்டும் விட்டொழிக்க மாட்டார்கள் நன்மக்கள்!)

சரி அதென்ன உறுத்தல் என்று பார்த்து விடலாம்.

முறைமாமன், முறை மாப்பிள்ளை என்றெல்லாம் உறவு முறைகளை மையப்படுத்தி சினிமா எடுத்து வந்த நம் படைப்பாளிகளுக்கு இப்போது உறவு முறைகளில் என்ன பஞ்சம் வந்ததோ தெரியவில்லை. சின்னத்திரை உறவுமுறை குழப்பக் கூத்துக்களில் இப்போது அண்ணன் முறை உள்ளவர், தங்கை முறை உள்ளவரைத் திருமணம் செய்து கொள்வது, காதலில் விழுவது, காதலிக்க மறுத்தால் கொலைத்திட்டம் தீட்டுவது என்றெல்லாம் காட்சியமைப்புகள் வழக்கமாகி வருகின்றன. சீரியல் ரசிகர்கள் இந்தக் குழப்பங்களை எல்லாம் பொருட்படுத்த மாட்டார்கள் என்று நினைத்து விட்டார்களோ என்னவோ?

ஆனால், அண்ணன் முறை உள்ளவர், தங்கை முறை கொண்ட ஒரு பெண்ணைக் காதலிப்பது பற்றியோ, திருமணம் செய்து கொள்வது பற்றியோ யோசித்துப் பார்க்க இன்றும் லஜ்ஜையாகத்தானே இருக்கிறது. கதையமைப்பில் எத்தனை பெரிய ஓட்டை இருந்தால் என்ன? கதையே இல்லாமலிருப்பதற்கு இது பரவாயில்லை என்று சமாதானம் செய்து கொள்ள இது ஒன்றும் உப்பு, சர்க்கரை இல்லை நம் வாழ்க்கைமுறை. 

உங்களுக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? சீரியல்களைப் பார்த்து தான் நம் மக்கள் வாழ்கிறார்கள் என்கிறீர்களா? சுத்த ஹம்பக்! என்று அசட்டையாகத் தோள் குலுக்கி நகர்ந்து விடத் தேவையில்லை.

சீரியல்களில் காட்டப்படும் எதைத்தான் நாம் இன்னும் பின்பற்றாமல் விட்டு வைத்திருக்கிறோம்?

பதில் எனக்குச் சொல்ல வேண்டியதில்லை.

உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்.

மிக முக்கியமாக கண்ணாடி முன் நின்று கொண்டு உங்களுக்கு நீங்களே பதில் சொல்லிக் கொள்ளுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com