ஷி ஜின்பிங், மாமல்லை நிலவொளியில் செறிந்திருக்கும் யாளி சிற்பங்களைக் கண்டு என்ன நினைத்திருப்பார்?!

யாளிகள் தான் டிராகன்களின் ரிஷி மூலங்கலாம். இருக்கலாம். அந்தக்காரணத்தை முன்னிட்டும் கூட சீன அதிபரை இங்கு வைத்துச் சந்திக்க இந்தியப் பிரதமர் எண்ணியிருக்கலாம்..
ஷி ஜின்பிங், மாமல்லை நிலவொளியில் செறிந்திருக்கும் யாளி சிற்பங்களைக் கண்டு என்ன நினைத்திருப்பார்?!

மாமல்லபுரத்தின் ஐந்து ரதம் அல்லது பஞ்ச பாண்டவர் ரதச் சிற்பங்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. இந்தியக் கட்டடக்கலையின் சிறப்பை உலகுக்கு எடுத்தியம்பும் மகிஷாசுரமர்த்தினியின் புடைப்புச் சிற்பம் இங்கு தானிருக்கிறது. இங்கிருக்கும் ஐந்து ரதங்களும் ஒற்றைக் கல்லால் செதுக்கப் பட்ட கற்கோயில் வடிவங்களுக்கு மாதிரிகள், பஞ்ச பாண்டவர்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாவிட்டாலும் பல்லவர் காலக் கட்டிடக் கலைக்கு பிரமிப்பூட்டும் உதாரணங்களாய் அன்றும், இன்றும்.. என்றென்றும் விளங்கும் இவை தன்னிகரிலாதவை. தர்ம ராஜ ரதத்தில் செதுக்கப் பட்ட சிவனின் அர்த்தநாரீஸ்வர வடிவம் கோயில் சிற்பக் கலைக்கு பெருமைக்குரிய ஒன்றென அங்கிருக்கும் குறிப்புகள் சொல்கின்றன. ஐந்து ரதங்களுமே விமான அமைப்பில் மாறுபடுகின்றன. ஒற்றைக் கல் யானை, ஒற்றைக் கல் சிம்மம் என பிரமிப்பில் ஆழ்த்தும் பல்லவப்படைப்புகள். மகிஷாசுர மர்த்தினி மண்டபம், ராஜ சிம்மன் எழுப்பிய புலிக்குகை, இப்படி நிதானமாய் பார்த்து ரசிக்க வேண்டிய சிற்பங்கள் நிறைய உண்டங்கு.

சிம்ம ரூபங்கள் சிற்பங்களாக வேறெங்கேயும் விட இங்கே கனத்த கம்பீரம் காட்டுகின்றன. யானைகள் நிஜ யானைகளைக் காட்டிலும் அழகு,ஏனெனில் இவை பாகனுக்குப் பயந்து பிச்சைக்குப் பழக்கப் படவில்லை பாருங்கள்... யாளிகளும் சில இடங்களில் சிலா ரூபமாய், இந்த யாளிகள் தான் டிராகன்களின் ரிஷி மூலங்கலாம். இருக்கலாம். அந்தக்காரணத்தை முன்னிட்டும் கூட சீன அதிபரை இங்கு வைத்துச் சந்திக்க இந்தியப் பிரதமர் எண்ணியிருக்கலாம் என யாராவது புரளி கிளப்பாமல் இருந்தால் சரி.

இப்படி காலம் காலமாகப் பல்லவர் பெருமை பேசி நிற்கும் ஐந்து ரதப்பகுதியில் இரு நாட்டுத் தலைவர்களுக்கென இருக்கைகள் இடப்பட்டிருந்தன. அங்கு துவிபாஷிகளுடன் (மொழிபெயர்ப்பாளர்களுடன் அமர்ந்து இரு நாட்டுத் தலைவர்களும் உரையாடினர். மாமல்லையின் பெருமைகளை எல்லாம் மோடி சொல்லச் சொல்ல சீன அதிபர் தலையாட்டிக் கேட்டுக் கொண்டார். மாமல்லபுரம் பல்லவர்களின் மிகச்சிறந்த துறைமுக நகரம். இங்கிருந்து தான் உலகின் பலநாடுகளுடனுடம் அவர்கள் வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்தனர். அத்தகைய சிறப்பு மிக்க மல்லை கடற்புரத்தில் கடற்கோயிலுக்கு அருகில் சீன அதிபரை மகிழ்விக்கவும் இந்தியக் கலாச்சாரப் பெருமையை அவருக்கு எடுத்துரைக்கவுமாக இந்த பின்மாலை நேரத்தில் கலை நிகழ்ச்சிகள் களை கட்டத் தொடங்கின.

ஐந்துரதப் பகுதியில் அமர்ந்து சற்று நேரம் உரையாடிய தலைவர்கள் பிறகு எழுந்து காலாறப் பேசியவாறு கடற்கோயில் வளாகத்துக்குச் சென்று விட்டனர். அங்கு கோயில் வளாகத்தில் நின்றவாறு கடற்கோயில் சிறப்புகளைப் பற்றி இந்தியப் பிரதமர், சீன அதிபருக்கு விவரித்தார்.

இரவு 7 மணியளவில் சென்னை, கலாஷேத்ரா குழுவினர் வழங்கவிருக்கும் கண்கவர் பாரம்பர்ய கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. ஷி ஜின்பிங்குக்கு சென்னை முதல் மாமல்லபுரம் வரை அளிக்கப்பட்ட கலாசார வரவேற்பு நிகழ்வுகளில் அவரால் ஆற அமர அமர்ந்து பார்த்து ரசிக்க முடிந்தது இதுவாகத்தான் இருந்திருக்க முடியும்.

இப்படியாக முடிந்த முதல் நாள் சந்திப்பின் இறுதியில் சீன அதிபருக்கு, இந்தியப் பிரதமர் மோடி நாச்சியார் கோயில் அன்னவிளக்கு, நடனமாடும் சரஸ்வதியின் தஞ்சாவூர் ஓவியம் மற்றும் தமிழகத்தின் கைவினைப்பொருட்களை அன்புப்பரிசாக வழங்கி நிறைவு செய்தார்.

இருவரும் இணைந்து அருந்திய இரவு உணவில் சீன அதிபருக்கு மெல்லிய நூடுல்ஸ், சோயா மசாலா, சிக்கன் டிக்கா, சிக்கன் சூப், கார்ன் சூப் உள்ளிட்ட ஆறு வகை சூப்புகளும் பிரதமர் மோடிக்கு ரொட்டி தால் மக்கனி, தால் ப்ரை உள்ளிட்ட உணவுகளும் பரிமாறப்பட்டன. மேலும் தென்னிந்திய உணவுகளான தோசை, இட்லி, மூன்று வகை சட்னி, பொங்கல், மெதுவடை, சாம்பார், தக்காளி சூப், காய்கறி சூப், பழங்கள், அல்வா, தேநீர், போன்ற உணவுகளும் அந்த விருந்தில் இடம்பெற்றன.

சந்திப்பின் முடிவில் ஜின்பிங் மீண்டும் சென்னை திரும்பினார். அவருக்கு ஐடிசி கிராண்ட் சோழாவில் தங்குவதற்கான இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

பிரதமர் மோடி மாமல்லபுரத்தில் இருந்து 10 நிமிடத் தொலைவில் இருக்கும் கோவளம் கடற்கரையின் தாஜ் ஃபிஷர்மேன் கோவ் நட்சத்திர விடுதியில் தங்கினார்.

மீண்டும் அடுத்தநாள் காலையில் இருநாட்டுத் தலைவர்களும் ஃபிஷர்மேன் கோவ் விடுதியின் கண்ணாடி அறையில் அமர்ந்து தனிப்பட்ட முறையில் தங்களது பேச்சு வார்த்தைகளைத் தொடங்கினர். அப்போது அவர்களுடன் மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே உடனிருந்தனர். இருவரும் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதற்கான அதிகாரப் பூர்வ தகவல்கள் பின்னர் இருநாட்டு வெளியுறவுத் துறை அதிகாரிகள் மற்றும் பிரதமர் அலுவலகம் வாயிலாக வெளிப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com