2000 வருட சீனர் - தமிழர் உறவு! 1956ல் தமிழகம் வந்த சீன பிரதமர் வருத்தம் தெரிவித்தது எதற்குத் தெரியுமா?

இந்திய பிரதமர் மற்றும் சீன அதிபர் சந்திப்பை நமது நாட்டின் தலைநகரமான டெல்லியில் வைக்காமல் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் வைத்திருப்பது வரலாற்று சிறப்பு மிக்கது
2000 வருட சீனர் - தமிழர் உறவு! 1956ல் தமிழகம் வந்த சீன பிரதமர் வருத்தம் தெரிவித்தது எதற்குத் தெரியுமா?


இந்திய பிரதமர் மற்றும் சீன அதிபர் சந்திப்பை நமது நாட்டின் தலைநகரமான டெல்லியில் வைக்காமல் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் வைத்திருப்பது வரலாற்று சிறப்பு மிக்கது மட்டுமின்றி தமிழகத் தொன்மை வரலாற்றையும் தமிழர்களின் கடல் வாணிபத் தொடர்பையும், கடல்கடந்து பல நாடுகளுடன் தமிழக அரசர்கள் கொண்டிருந்த அரசியல் தொடர்பையும் நன்கறிந்தே மாமல்லபுரத்தை தேர்வு செய்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

தமிழர்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பல நாடுகளுடன் கடல் கடந்து சென்று தங்களது பரவல்களை ஏற்படுத்தினர். குறிப்பாக சீன நாட்டுடன் பல நூற்றாண்டுகளாக நட்புறவுடன் விளங்கியிருந்தனர். சீனர்கள் உற்பத்தி செய்த பட்டுத்துணிகள் மேலை நாடுகளுக்கு இந்தியக் கிழக்குக் கடல் வழியாகவே சென்றன, எனவே தமிழ் மன்னர்களுடன் சீன அரசும் நட்புறவைப் பாராட்டின. காவேரிப்பூம்பட்டினத் துறைமுக நகரத்தைப் பற்றி விரிவாகப் பேசும் பட்டினப்பாலை என்னும் இலக்கியத்தில் சீனர்களின் பெருங்கப்பல்கள் தமிழகக் கடற்கரைத் துறைமுகங்களில் நங்கூரம் இட்டிருந்தமையைக் குறிப்பிடுகிறது. இக்கப்பல்கள் தூங்கு நாவாய் என வழங்கப்பட்டன.

கி.மு. 100-ம் ஆண்டில், சீனாவின் கான்-டோ-ஓ-வில் இருந்து கப்பல் மூலம் இரண்டு மாதங்கள் பயணம் செய்தால், காஞ்சி நாட்டை அடையலாம்; காஞ்சி பரந்தும் மக்கள் மிகுந்தும் பலவிதமான பொருள்களோடு முத்தும் மணி வகைகளும் நிரம்பித் திகழும் நாடு; பேரரசர் வான் கி.மு 140 - 86 காலம் முதல் அந்நாட்டுடன் வாணிபம் செய்து வருகின்றார்கள் என்று காஞ்சியைப் பற்றி சீனப்பயணி பான்-கோ எழுதி இருக்கின்றார்.

கி.மு 10-ல், கிரேக்க நாட்டு ஸ்டிராபோ என்ற வரலாற்று ஆசிரியர், தமிழகக் கடற்கரைப் பட்டினத்திலிருந்து பரிசுகளோடு அனுப்பி வைத்த தூதுவர்கள் அகஸ்டஸ் சீசரிடம் வந்தார்கள் என்கிறார். கி.பி 550 - 600 சீன வரலாற்று ஆசிரியர் மா-டவான் லி அவர்கள், தமிழர்கள் எழுதப்பட்ட இலக்கியங்கள் மட்டும் அல்லாமல், வானவியல் அறிவும் பெற்றுள்ளார்கள்; ஆடவர்கள் எல்லோரும் ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்ட சித்தாந்தம் என்ற வழிகாட்டும் நூலைக் (திருக்குறள்) கற்கின்றார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

பாஹியான் (Fa-Hien  கிபி 337 – கி. 422)
பாஹியான்  சீனாவைச் சேர்ந்த பௌத்தத் துறவி. இவர் கி.பி. 399 - 412 காலப்பகுதியில் பௌத்த நூல்களைத் தேடி நேபாளம், இந்தியா, மற்றும் இலங்கைக்கு இந்தியப் பெருங்கடல் வழியாகப் பயணம் மேற்கொண்டமைக்காக அறியப்படுகிறார். புத்தரின் பிறப்பிடமான லும்பினிக்கு சென்றமைக்காகவும், காஞ்சி வந்ததாகவும் இவர் அறியப்படுகிறார்.

யுவான்சுவாங் (602-664)
யுவான்சுவாங்  சீன நாட்டைச் சேர்ந்த புத்தத் துறவி. இவர் மிகச் சிறந்த கல்வியாளர்! மேதை! துறவி! இந்த மிகச் சிறந்த கல்வியாளர் பயணம்செய்வதில் மிகவும் விருப்பம் உள்ளவர்! மொழிகள் கற்பதிலும், கற்றவற்றை மொழி பெயர்ப்பதிலும் ஆர்வம் உள்ளவர். இவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் கூட!

இவர் புத்தத் துறவி ஆனதால் புத்தர் பிறந்த இடத்தை நேரில் பார்ப்பது, புத்தருடைய கொள்கைகளை விரிவாக ஆராய்ந்து அறிவது என்ற உயர்ந்தநோக்கங்களுடன் பல நாடுகள், பயங்கரக் காடுகள், பாலைவனங்கள், மலைகள் என பல இடங்களைக் கடந்து நடைப்பயணமாக இந்தியாவுக்கு வந்தவர்! தமிழகத்தின் காஞ்சிபுரம் வரை வந்துள்ள இவர், தான் பார்த்த, அறிந்து கொண்ட பல்வேறு தகவல்களையும் குறிப்புகளாக எழுதி வைத்து, பின்னாளில் தொகுத்து நூலாக வெளியிட்டார்!

ஹியூன்-ஸங்
கி.பி.640ல் வந்த சீனப்பயணி. இவர் இந்தியா வந்தபொழுது வட இந்தியாவில் ஹர்ஷன் பேரரசனாக இருந்தான்.  ஹியூன்-ஸங் அவனது ஆதரவில் இருந்து வட இந்தியா முழுவதும் பார்வையிட்டார். பிறகு இவர் தென்னாட்டை அடைந்து, சாளுக்கியன் விருந்தினராகத் தங்கி இருந்தார். அப்பொழுது சாளுக்கியப் பேரரசனாக இருந்தவன் இரண்டாம் புலிகேசி என்பவன். ஹியூன் ஸங் அங்கிருந்து பல்லவ நாட்டை அடைந்தார். இவர் காஞ்சி மாநகரில் நரசிம்மவர்மன் விருந்தினராகத் தங்கி இருந்தார். இவர் காஞ்சிக்கு வந்தது ஏறத்தாழ கி.பி. 640இல் எனலாம். இவர் காஞ்சியைப் பற்றியும் அதனைச் சுற்றியுள்ள நாட்டைப் பற்றியும் எழுதியிருப்பவற்றுள் குறிக்கத்தக்கவை.

பல்லவர்கள் சீனா, எகிப்து, ரோம் போன்ற பேரரசுகளுடன் வாணிபம் செய்ததற்கான சான்றுகளுக்கு, மாமல்லபுரம் கிருஷ்ணர் மண்டபத்தில் செதுக்கப்பட்டுள்ள சிற்பம் சாட்சியாக விளங்குகிறது. பல்லவர்களின் சிங்கம், எகிப்தியர்களின் மனித முகம் சிங்க உடல் அமைப்பு கொண்ட ஸ்பிங்ஸ், சீனர்களின் டிராகன், ரோமர் சிங்கம் போன்ற பேரரசுகளின் வீரத்தின் அடையாளங்களாகச் செதுக்கி வைத்துள்ளனர்

தொடர்ந்து சீனக் கப்பல்கள் பல்லவர், சோழர், பாண்டியர், விஜயநகரப் பேரரசுகளின் காலத்திலும், தமிழகத் துறைமுகங்களுக்கு வந்து நங்கூரமிட்டிருந்தன. விஜயநகரப் பேரரசின் புகழ்பெற்ற மன்னன் கிருஷ்ண தேவராயர் காலத்தில் சென்னைக்கு அருகில் உள்ள பழவேற்காடு துறைமுகத்திற்கு சீனக்கப்பலான தொங்கு கப்பலில் இருந்து பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டு அவற்றிற்கு வரி விதிக்கப்படுகிறது. தமிழில் தூங்கு நாவாய், தொங்கு கப்பல் என்பது சீனர்களின் புகழ்பெற்ற பெரிய கப்பல்களான ‘சுங்’ வகை சரக்குக்கப்பல்களாகும்.

சீனர்களுக்கும் தமிழ் மன்னர்களுக்கும் தமிழ் வணிகர்களுக்கும், சீன வணிகர்களுக்கும் உள்ள தொடர்பு மிக மிகத் தொன்மை வாய்ந்தது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சீன அரசர் வீ என்பவர் காலத்தில் இந்தியாவுடன் சீனர்களுக்கான தொடர்பு சிறப்புற்று இருந்தது. முதலாம் நூற்றாண்டைச் சார்ந்த சீன இலக்கியமான “சூ யின் ஹன் சூ” என்ற நூல் தமிழகத்தில் பல்லவர் தலைநகரமாக விளங்கிய காஞ்சீபுரத்தை ‘ஹுவாங் சீ’ என வழங்குகிறது. காஞ்சீபுரம் பல்லவர் தலைநகரமாக விளங்கியிருந்தாலும் மாமல்லபுரம் அவர்களது கடற்கரைத் துறைமுகமாக அக்காலத்தில் சிறப்புற விளங்கியது. சீனப்பயணி யுவாங் சுவாங் காஞ்சீபுரத்திற்கு மாமல்லபுரம் துறைமுக நகரத்திற்குக் கப்பலில் வந்திறங்கி ஆற்று வழியாகப் படகில் காஞ்சீபுரத்தைச் சென்றடைந்ததாகக் குறிப்பிடுகிறார்.

காஞ்சீபுரத்தில் ஆட்சி புரிந்த அரசர்களுக்கு சீன அரசர் பரிசுப் பொருள்களை தங்களது தூதர்கள் மூலம் அனுப்பியுள்ளனர் என்பதை சீன ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. இதே போன்று சீன அரசுக்கு தங்களது தூதர்களை அனுப்பியதாக பல்லவர் ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. மாமல்லபுரம் அருகிலுள்ள வாயலூர் என்னும் ஊரிலுள்ள கல்வெட்டில் சீனர்களுக்கான தொடர்பு குறிக்கப்பட்டுள்ளது. 

சீனர்களிடமிருந்து பட்டு நெசவுத் தொழிலை தமிழர்கள் அறிந்து கொண்டனர். காஞ்சீபுரம் பட்டு உற்பத்தியில் மிகச் சிறந்த நகரமாக விளங்கத் தொடங்கியது. தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் சீனர்களின் பழமையான புகழ்பெற்ற மட்கல வகையான செலடன் எனப்படும் மட்கல வகை கிடைத்துள்ளது. அத்துடன் சீனக் காசுகளும் கிடைத்துள்ளன.

காஞ்சீபுரம் பவுத்த மதத்தின் மடாலயங்களைக் கொண்டிருந்தது. இங்கிருந்த பல்கலைக்கழகத்தில் பல அயல் நாட்டினர் படித்தனர். காஞ்சீபுரத்தைச் சார்ந்த தர்மபாலர் என்பவர் நாளாந்தா பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக நியமனம் பெற்றார். இப்பல்கலைக்கழகத்தில் சீனர்கள் பலர் கற்றனர். இவர்கள் வழியாக தமிழகத்தின் பெருமை சீனாவில் பேசப்பட்டது. 

காஞ்சியிலிருந்து போதிதர்மர் சீனாவிற்குச் சென்று வர்மக்கலையை சீனர்களுக்குக் கற்றுத் தந்ததாகக் கருதப்படுகிறது. இந்தியக் கலைகள் பல இக்காலத்தில் சீனாவிற்குச் சென்றன. சீன அரசர் நாகப்பட்டினத்தில் சீனர்கள் வழிபடுவதற்காக பவுத்தப்பள்ளி ஒன்றைக் கட்ட பல்லவர்களின் அனுமதியைக் கோரினர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று பல்லவ மன்னன் நாகப்பட்டினத்தில் பவுத்தப்பள்ளி அமைக்க அனுமதி வழங்கினார். 

பல்லவர்கள் கால வணிகர்களும் சீனாவின் பல நகரங்களில் கோவில்கள் பல கட்டினர். சீனாவிற்கும், தமிழ் நாட்டிற்கும் உள்ள தொடர்பு சோழர் காலத்திலும் நீடித்தது. தமிழ் வணிகர்கள் குழுக்களாக சீனாவில் குடியேறினர்.

சீனர்களின் “சுங்ஷிஹ் சுங் ஹுய் யவோ” என்னும் ஆவணக் குறிப்பில் சோழர்கள் தங்களது தூதர்களை சோழர் ஆட்சிக்காலத்திலும் அனுப்பியுள்ளனர். குறிப்பாக மாமன்னன் ராஜராஜ சோழன் அவரது மகன் முதலாம் ராஜேந்திர சோழன் ஆகியோர் சீனாவிற்கு நல்லுறவு தூதர்களை அனுப்பினர். பல்லவர் காலத்தில் சீனர்கள் கட்டியிருந்த நாகப்பட்டின பவுத்த விகாரையை சீன அரசர் க்சியான்சுன் என்பவர் 1267-ம் ஆண்டு மிக உயர்ந்த மாடங்களை வைத்து திருத்தி கட்டுகிறார். 

இந்த பவுத்த விகாரையின் ஸ்தூபி செங்கல்லாலும், சுதையாலும் கட்டப்பட்டது. பிரமிடு அமைப்பில் பல தளங்களையுடைய இத்தூபியை 1846-ம் ஆண்டு வால்டர் எலியட் என்னும் ஆங்கிலேயர் பார்வையிட்டு அக்கட்டிட அமைப்பை வரைபடமாக வரைந்துள்ளார். இது “சீன பகோடா” எனப்பட்டது. சீன நகரமான குவாங்சூ (சைடோன்) என்ற இடத்தில் தமிழ் மற்றும் சீன மொழியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் பல கிடைத்துள்ளன.

கி.பி. 1281 -ம் ஆண்டைச் சார்ந்த கல்வெட்டு ஒன்று இவ்வூரில் சிவனுக்கான கோவில் ஒன்று கட்டப்பட்டதைக் குறிப்பதுடன் சீன அரசர் குப்ளாய்கான் நலனுக்காக வேண்டுதல் செய்யப்பட்டு நிவந்தங்கள் அளிக்கப்பட்ட செய்தியையும் குறிக்கிறது. இக்கல்வெட்டில் குப்ளாய்கான் மன்னர் செகசேகான் என வழங்கப்படுகிறார். கோவிலின் இறைவன் பெயரும் இவரது பெயரில் வழங்கப்பட்டதை கல்வெட்டு குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டின் கீழ்ப் பகுதியில் சீன எழுத்துக்கள் உள்ளன. இடிபாடுடன் இருந்த இக்கோவிலில் 5 மீ உயரமுடைய லிங்கத் திருமேனி, திருமால், நரசிம்மர், கங்காதரர், புல்லாங்குழலுடன் உள்ள கிருஷ்ணர், காலியமர்த்தனர் ஆகிய சிற்பங்களும், தமிழ்நாட்டுக் கோவில்களின் தூண் அமைப்புகளும் உள்ளன,

இதன் மூலம் சீன அரசர்களுடன் தமிழர்கள் கொண்டிருந்த நெருங்கிய நட்பை அறிய முடிகிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் உலக நட்புறவு வாக்கியத்திற்கு ஏற்ப தமிழர்கள் சீன நாட்டின் மன்னரின் நலனிற்காக வேண்டுதல் செய்தமை இக்கல்வெட்டின் மூலமும் உலக நாடுகளுக்கு எங்கு சென்று வாழ்ந்தாலும் தாய் நாட்டின் மீதும் தாம் சென்ற நாட்டின் மீதும் நீங்கா பற்று கொண்டவர்களாக தமிழர்கள் விளங்கியமையையும் அறிய முடிகிறது.

1956 –இல் சீன பிரதமர் சூ என்லாய் வருகை (Zhou Enlai visits mahapallipuram)
மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பார்வையிட சீன பிரதமர் சூ என்லாய் வருகை தந்தார். எனவே, தான் கட்டிய பிரசவ ஆஸ்பத்திரியை சூ என்லாய் திறந்துவைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி, அரசு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோள், சென்னை வந்த சீன பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது. அவரும் இதற்கு ஒப்புக்கொண்டார். அந்தவகையில் 1956-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி குழிபாந்தண்டலத்தில் 3 அறைகள் கொண்ட பிரசவ ஆஸ்பத்திரியை சீன பிரதமர் சூ என்லாய் திறந்து வைத்தார். 

சீனாக்காரன் ஆஸ்பத்திரி

சூ என்லாய் திறந்து வைத்ததாலேயே அந்த பிரசவ ஆஸ்பத்திரி ‘சூன்லா ஆஸ்பத்திரி’ என்றும், ‘சீனாக்காரன் ஆஸ்பத்திரி’ என்றும் வெகுகாலம் அழைக்கப்பட்டு வந்துள்ளது. 

தமிழில் பேச முடியாததற்கு வருத்தம்

கல்லூரி மாணவர்கள் மத்தியில் அவர் ஆங்கிலத்தில் பேசுகையில், “இந்தியா போலவே சீனாவிலும் சுதந்திர போராட்டத்தில் மாணவர்களின் பங்கு அளப்பரியது. தமிழகத்துக்கு வந்துள்ளேன். ஆனால் என்னால் தமிழில் பேச முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது. இப்போது என்னுடன் வந்த யாருக்குமே தமிழ் தெரியாது. ஆனால் அடுத்தமுறை நான் தமிழகம் வரும்போது நிச்சயம் தமிழ் மொழி தெரிந்தவர்களை என்னுடன் அழைத்து வருவேன்” என்று குறிப்பிட்டார்.

தற்போது சீன அதிபரின் வருகையை அதே பல்லாண்டு நினவுகளுடன் தமிழர்கள் எதிர்நோக்குகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com