‘சாந்தி நிலவ வேண்டும்! கலாஷேத்ரா கலைநிகழ்ச்சியில் ஒலித்த காந்தி பாடல், இரு நாட்டுத் தலைவர்களுக்கு சேதி சொல்கிறதா?!

ஐந்தாவதாக கண்ணுக்கு விருந்தானது ‘தில்லானா’ இதில் இறுதியாகப் பாடப்பட்ட பாடல் அலாதியானது மட்டுமல்ல, அதில் இருநாட்டு அதிபர்களுக்குமான நுட்பமான செய்தியொன்றும் இடம்பெற்றிருந்தது.
‘சாந்தி நிலவ வேண்டும்! கலாஷேத்ரா கலைநிகழ்ச்சியில் ஒலித்த காந்தி பாடல், இரு நாட்டுத் தலைவர்களுக்கு சேதி சொல்கிறதா?!

இந்தியப் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இருநாட்டுத் தலைவர்களது சந்திப்புக்கான முறைசாரா உச்சி மாநாடு நேற்று சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் துவங்கியது.

நேற்று பிற்பகலில் தனி விமானம் மூலமாக சென்னை விமானநிலையம் வந்திறங்கிய சீன அதிபர் ஷி ஜின்பிங் சாலை மார்க்கமாகவே அங்கிருந்து மாமல்லபுரம் செல்ல விருப்பம் தெரிவித்திருந்தார். அவரது விருப்பத்திற்கிணங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதிபரின் மாமல்லபுரப் பயணத்தின் போது வழிநெடுக தமிழர் பண்பாட்டையும், கலாசாரத்தையும் பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகளையும் கண் குளிரக் கண்டுகளித்தவாறு செல்ல பிரமாதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒயிலாட்டம் (கைகளில் கர்சீஃப் போன்ற சிறு துணியுடன் ஆடும் ஆட்டம்) மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், பறையாட்டம், மிருந்தங்கம், நாகஸ்வரக் கலைஞர்களது வரவேற்புடன் தொடங்கி மாமல்லபுரத்தைச் சென்றடையும் வரை பல இடங்களில் தமிழர் கலாசார மாண்பை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. 

இவை அனைத்துமே தொலைக்காட்சிகளில் நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. அப்போது சிலர் சமூக ஊடகங்களில், அதிபருக்கு சிறந்த வரவேற்பு அளிக்கப்பட வேண்டியது நியாயம் தான். ஆனால், பள்ளிக் குழந்தைகளைக் கூட கலைநிகழ்ச்சிகள் என்ற பெயரில் கடந்த ஒருவார காலமாக இந்தப் புரட்டாசி வெயிலில் வறுத்தெடுத்திருக்க வேண்டாமே! காரில் சென்று கொண்டே ஓரிரு நிமிடங்கள் அதிபர் இவர்களையும் இவர்களது திறமையையும் காண்பதற்கு எத்தனை மணி நேரங்கள் அந்தக் குழந்தைகள் உழைத்திருப்பார்கள். அந்த உழைப்புக்கும் அவர்கள் வெளிப்படுத்திய கலைக்கும் இது அவமானமல்லவா! என்று தமிழக அரசின் இந்த ஏற்பாட்டுக்கு அதிருப்தி தெரிவித்திருந்தனர். அவர்களது ஆதங்கத்தில் அர்த்தமிருக்கலாம்.

சாலையோர கலைநிகழ்ச்சிகளை போகிற போக்கில் பார்த்துக் கையசைத்து சென்ற சீன அதிபருக்கு... கலை நிகழ்ச்சிகள் வாயிலாக ஆற அமர இந்தியப் பண்பாட்டை முழுமையாக உணர்த்தும் பொறுப்பு 
கலாஷேத்ராவுக்கு வழங்கப்பட்டிருந்தது. முழுமையாக 45 நிமிடங்கள் அவர்கள் அளித்த கலை விருந்து ‘கமகம’ ரகம்!

முதலில் அலாரிப்பு, 

இரண்டாவதாக  ‘கதகளி’ வடிவில் புறப்பாடு எனும் நாட்டிய நிகழ்ச்சி, 

மூன்றாவதாக கலாஷேத்ராவை நிர்மாணித்த ருக்மிணி அருண்டேலின் சிந்தையில் உருவான மகாபட்டாபிஷேக நாட்டிய நிகழ்ச்சி (இதில் ராமர் லங்கைக்குப் பாலம் அமைத்து சீதையை மீட்டு அயோத்தி திரும்பி பட்டாபிஷேகம் செய்து கொள்ளும் காட்சிகள் நாட்டிய வடிவில் நடத்திக்காட்டப்பட்டன)

நான்காவதாக கபீரின் ஸ்ரீஇராம பஜன் (15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துளுக்கத் துறவியான கபீர் மிகச்சிறந்த ராமபக்தர். வாரணசியில் ஒரு நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவரான கபீர் மிகச்சிறந்த சமூக சீர்த்திருத்தவாதியாகவும் தன் காலத்தில் கருதப்பட்டவர். அவருக்கு ராமபிரான் மீது கரைகடந்த பக்தி. சமூக நல்லிணக்கத்துக்காக பாடுபட்ட கபீர் ராமபிரான் மீது ஏகப்பட்ட பாடல்களைப் புனைந்திருக்கிறார். அவரது ராம பஜன் பாடல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ‘பஜோரேவையா ராம கோவிந்த ஹரி’ பாடலுக்கு கலாஷேத்ரா குழுவினர் நாட்டியம் ஆடினர்.

ஐந்தாவதாக கண்ணுக்கு விருந்தானது ‘தில்லானா’ இதில் இறுதியாகப் பாடப்பட்ட பாடல் அலாதியானது மட்டுமல்ல, அதில் இருநாட்டு அதிபர்களுக்குமான நுட்பமான செய்தியொன்றும் இடம்பெற்றிருந்தது.

இந்தப்பாடலுக்கென ஒரு சிறப்பு உண்டு. சாந்தி நிலவ வேண்டும் என்று தொடங்கும் இந்தப் பாடலானது காந்திஜி உயிர்நீத்தபோது அவரது நினைவாக மிருதங்க வித்வான் சேதுமாதவராவ் அவர்களால் இயற்றப்பட்டது. இதை அன்றைய காலகட்டத்துப் பிரபல பாடகர்கள் அனைவருமே இணைந்து பாடி காந்திஜியின் தேச சேவைக்கு அர்ப்பணம் செய்தனர். பாடகர் வரிசையில் மையமாக அமர்ந்து பாடி இந்தப் பாடலுக்கு உலகப் புகழ் தேடிந்தந்தவர் என்ற பெருமை பிரபல பாடகி டி.கே பட்டம்மாளுக்கு உண்டு.

ராகம்: திலங். தாளம்: ஆதி தாளம். 

பல்லவி
சாந்தி   நிலவ  வேண்டும்
ஆத்ம சக்தி   ஒங்க  வேண்டும்  உலகிலே                   
சாந்தி நிலவ வேண்டும்..

அனுபல்லவி

காந்தி  மகாத்மா  கட்டளை  அதுவே
கருணை  ஒற்றுமை  கதிரொளி  பரவி 
சாந்தி நிலவ வேண்டும்..
ராம சக்தி ஓங்க வேண்டும்                         
உலகினிலே சாந்தி நிலவ வேண்டும்
சரணம்

கொடுமை  செய்திடும்  மனமது  திருந்த
நற்குணம்  அதை புகட்டிடுவோம்
மடமை  அச்சம்   அறுப்போம்
மக்களின்  மாசிலா  நல்லொழுக்கம்  வளர்ப்போம்
திடம் தரும்  அஹிம்சா யோகி
நம்  தந்தை ஆத்மானந்தம் பெறவே
கடமை  மறவோம் அவர்  கடன் தீர்ப்போம்
களங்கமில்  அறம்  வளர்ப்போம் எங்கும்       
எங்கும் (சாந்தி) நிலவ வேண்டும்
ஆத்ம சக்தி ஓங்க வேண்டும்
உலகிலே சாந்தி நிலவ வேண்டும்.
எங்கும் சாந்தி
எங்கும் சாந்தி
எங்கும் சாந்தி!

ரகுபதி ராகவ ராஜராம்

காந்தி மகாத்மா கட்டளை அதுவே 
கருணை ஒற்றுமை கதிரொளி பரவி 
சாந்தி நிலவ வேண்டும்!
ராம சக்தி ஓங்க வேண்டும்

நிச்சயம் இது ஒரு அற்புதமான நிகழ்வு தான்.

பெளர்ணமி நிலவொளியில் கடற்கரைக் கோயிலைக் கண்டிருக்கிறீர்களா?

நாளை மறுநாள் பெளர்ணமி வரவிருக்கும் நிலையில் பூர்ண நிலா எழாவிட்டாலும் கூட முழு நிலவுத் தோற்றத்திற்குப் பஞ்சமிருக்கப் போவதில்லை.

மொத்தத்தில் மாமல்லை முறைசாரா மாநாட்டுச் சந்திப்பு என்பது சீன அதிபருக்கும், இந்தியப் பிரதமருக்கும் மட்டுமல்ல அதை ஒளிர்திரைகளில் தத்தமது வீடுகளிலிருந்து கண்டு கொண்டிருக்கும் மக்களுக்கும் கூட பேரானந்த அனுபவமாகவே இருக்கலாம்.

Image Courtesy: India Today

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com