கால்நடைகளைப் பராமரிக்க முடியாமல் திணறும் பால் உற்பத்தியாளர்கள்!
பால் கொள்முதல் மற்றும் கொள்முதல் விலை குறைப்பால் கால்நடைகளைப் பராமரிக்க முடியாமல் பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


பால் கொள்முதல் மற்றும் கொள்முதல் விலை குறைப்பால் கால்நடைகளைப் பராமரிக்க முடியாமல் பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தினசரி 2.25 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் தமிழக அரசின் ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து சுமார் 30 லட்சம் லிட்டர் பாலையும் தனியார் நிறுவனங்கள் 1.25 கோடி லிட்டர் பாலையும் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக பேக்கரி, உணவகங்கள் முழுமையாக இயங்காத காரணத்தாலும், திருமணம், திருவிழாவுக்கு கட்டுப்பாடு இருப்பதாலும் பால் விற்பனை கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. இதனால், தினசரி சுமார் 1.5 கோடி லிட்டருக்கு மேல் பால் தேக்கமடைந்து வருகிறது.
பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் பாலை பவுடராக்கும் வசதி இல்லை. மேலும், பால் பவுடராக்கும் வசதி உள்ள நிறுவனங்களில் பால் பவுடரை இருப்புவைக்கும் பாலிதீன் பைகளும், பாலில் இருந்து கொழுப்புச் சத்தைப் பிரித்தெடுத்து இருப்பு வைக்கும் வசதிகளும், பாலினை பவுடராக மாற்றும் இயந்திரங்களை இயக்குவதற்கான எரிபொருள், வேதிப்பொருள், மூலப்பொருள்கள், பணியாளர்கள் போதிய அளவு இல்லாதாலும் பாலை கொள்முதல் செய்ய பால் நிறுவனங்கள் மறுப்பதால் உற்பத்தியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பல்லடம் பனப்பாளையம் பால் உற்பத்தியாளர் ப.ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:
ஆவின் நிறுவனத்தின் கீழ் செயல்படும் அனைத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்துக்கு கடந்த ஜூன் 20-ஆம் தேதி வரையிலான பால் பணம் மட்டுமே பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. 45 நாள்களுக்கு மேலாகப் பால் பணம் பட்டுவாடா செய்யப்படாமல் உள்ளது.
தற்போது, கொள்முதல் செய்யும் அளவை 20 முதல் 40 சதவீதம் வரையில் குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பால் உற்பத்தியாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். கால்நடைத் தீவனம் வாங்குவதற்கு கூட பணமின்றி கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தனியார் பால் உற்பத்தி நிறுவனம்.
பால் விநியோகத் திட்டமிடலில் உள்ள குறைபாடு காரணமாகப் பால் கொள்முதலை ஆவின் நிறுவனம் குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இப் பிரச்னைக்குத் தமிழக அரசு உடனடி தீர்வு கண்டு பால் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்க வேண்டும். மேலும், வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். அனைத்துப் பகுதிகளிலும் ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக, ரூ.30க்கு கொள்முதல் செய்த தனியார் பால் நிறுவனங்கள் தற்போது ரூ.15க்கு விவசாயிகளிடம் இருந்து பாலை கொள்முதல் செய்கின்றன. பருத்திக் கொட்டை 60 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ரூ.1,800, தேங்காய் பிண்ணாக்கு ஒரு மூட்டை ரூ.1600, பாளைத் தவிடு 50 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ரூ.800 என விற்பனையாகிறது.
இந்தத் தீவனங்களைக் கொண்டுதான் கால்நடைகளை விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர். ஒரு லிட்டர் பாலை உற்பத்தி செய்ய தீவன உற்பத்திக்கு ரூ.20 செலவாகிறது. ஆனால், தனியார் பால் நிறுவனங்கள் பால் விற்பனை இல்லை எனக் கூறி உற்பத்தி செலவைவிடக் குறைவாக கொள்முதல் செய்கின்றனர்.
ஆவின் நிறுவனமும் பால் கொள்முதலைக் குறைத்து ஒரு லிட்டர் பாலை ரூ.24 முதல் ரூ.26 வரைக்கு கொள்முதல் செய்கிறது. இதே நிலை நீடித்தால் கால்நடைகளைப் பராமரிக்க முடியாமல் கால்நடைகளை மிகக் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவார்கள்.
இதனால் பால் உற்பத்தி குறைந்து பால் தட்டுப்பாடு ஏற்பட்டு பால் விலை கடுமையாக உயரும். கரோனா பொதுமுடக்கம் முடியும் வரை பால் உற்பத்தியாளர்களுக்கு நிவாரணத் தொகையாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். கால்நடைகளைப் பாதுகாக்க, பராமரிக்கத் தீவனங்களை இலவசமாக வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கி, வங்கிகளில் பால் உற்பத்தியாளர்கள் வாங்கியுள்ள கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
காரணம்பேட்டையில் உள்ள தனியார் பால் நிறுவன மேலாளர் சகாயபாபு கூறியதாவது: கரோனா பொது முடக்கத்தில் உணவகங்கள், தேநீர்க் கடைகள் திறக்க அரசு தளர்வுகள் கொடுத்தாலும் வாடிக்கையாளர்கள் வர அச்சப்படுகின்றனர். ஒரு தேநீர்க் கடையில் முன்பு 30 லிட்டர் பால் விற்பனையான நிலையில், தற்போது 7 லிட்டர் மட்டுமே விற்பனையாகிறது. மேலும் தேநீர்க் கடைகள், உணவகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாடு காரணமாக முழுமையாக இயங்குவதில்லை. கேரளத்துக்கு 30 ஆயிரம் லிட்டர் பால் விற்பனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட நிலையில், தற்போது 10 ஆயிரம் லிட்டர் மட்டுமே கொண்டுச் செல்லப்படுகிறது.
ஒரு எளிமையான திருமண நிகழ்ச்சிக்கு 150 லிட்டர் பால், 75 லிட்டர் தயிர் விற்பனையாகும், அதே போல நடுத்தர குடும்பத் திருமணம் என்றால் 350 லிட்டர் முதல் 400 லிட்டர் பால் விற்பனையாகும். வசதி படைத்தவர்களின் இல்லத் திருமணம் என்றால் 1,000 லிட்டர் பால் விற்பனையாகும்.
தற்போது, திருமணத்துக்கு 50 பேர் வரை மட்டுமே பங்கேற்க அரசு அனுமதி அளித்திருப்பதால் பால் விற்பனை முடங்கியுள்ளது. பொதுமக்களைப் பொருத்தவரையில் தொழில் துறை பாதிப்பு, பொதுப் போக்குவரத்து இல்லாமை, கட்டாய இ-பாஸ், வேலையின்மை, வருவாய் குறைவு போன்ற காரணங்களால் தங்களது வழக்கமான செலவினங்களை பொதுமக்கள் குறைத்து விட்டனர்.
இதனால், ஒரு லிட்டர் பால் வாங்கிய வீட்டில் தற்போது அரை லிட்டர் மட்டுமே வாங்குகின்றனர். இதன் காரணமாக பால் நுகர்வு குறைந்துள்ளது. பால் நிறுவனங்களில் தேக்கமடையும் பால் பவுடராகவும், வெண்ணெய், கிரீமாகவும் மாற்றப்படுகின்றன. பால் பவுடரை 18 மாதம் இருப்பு வைக்கலாம். தற்போது, அதிகப்படியான உற்பத்தியால் கிலோ ரூ.330 விற்பனையான பால் பவுடரை தற்போது கிலோ ரூ.200க்கு விற்க வேண்டிய நிலைக்கு பால் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. எனவே, பால் பொருள்கள் ஏற்றுமதிக்கு அரசு வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...