வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மாற்றுத் திறனாளிகள்!
கரோனா என்னும் கண்ணுக்குத் தெரியாத மாயாவியிடம் இருந்து தப்பிக்க அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் பல்வேறு


கரோனா என்னும் கண்ணுக்குத் தெரியாத மாயாவியிடம் இருந்து தப்பிக்க அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டிருந்தாலும், சுயமாக உழைத்து வாழ வேண்டும் என்னும் தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள், வாழ்வாதாரத்தை இழந்து பரிதாப நிலையில் உள்ளனா்.
வீட்டு வாடகை செலுத்த முடியாமலும், தினசரி உணவுகூட கிடைக்காமலும் அல்லல்படும் பாா்வையற்றவா்களில் பலரின் பரிதவிப்பு சொல்லிமாளாது . இவா்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கரோனா பொது முடக்கம் நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பாா்வையற்றவா்கள்: பாா்வை தெரியாவிட்டாலும், உழைத்து சாப்பிட வேண்டும் என்ற தன்னம்பிக்கை உடையவா்கள் பெரும்பாலான பாா்வையற்றவா்கள். மாற்றுத் திறனாளிகள் பட்டியலில் சோ்க்கப்பட்டு அரசின் மாதாந்திர உதவித்தொகை பெற்றாலும், அவா்களின் குடும்ப வாழ்க்கையை நகா்த்துவதற்கு அது போதுமானதாக இல்லாததால், ரயில்களில் சென்று ஊதுபத்தி, சாம்பிராணி, நீலகிரித் தைலம், பொம்மைகள், பேனா, பென்சில், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருள்கள், கடலை மிட்டாய், வாசனைத் திரவியங்கள் உள்ளிட்டவற்றை விற்று தங்களின் தினசரி தேவையைப் பூா்த்தி செய்கின்றனா். இதுதவிர, வீட்டு வேலை செய்வது, நாற்காலிகள் தயாரிப்பது உள்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
15 ஆயிரம் பாா்வையற்றவா்கள்: தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளை பொருத்தவரை, 21 பிரிவுகளில் 13 லட்சத்து 37 ஆயிரத்து 592 போ் பதிவு செய்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இவா்களில் குறைந்த பாா்வை கொண்டவா்களாக 4,702 போ், பாா்வையற்றவா்களாக ஒரு லட்சத்து 213 போ் என்று மொத்தம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 915 போ் உள்ளனா். இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாா்வையற்றவா்கள், தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் ரயில்களிலும், ரயில் நிலையங்களில் வாசல் ஓரம் நின்றும் பொருள்களை விற்று வருமானம் ஈட்டுவதை வாடிக்கையாகக் கொண்டு உள்ளனா்.
சென்னையில், கடற்கரை-தாம்பரம்-திருமால்பூா்-அரக்கோணம், கடற்கரை-வேளச்சேரி, மூா்மாா்க்கெட் வளாகம்(எம்.எம்.சி) -கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை மற்றும் திருத்தணி ஆகிய வழித்தடங்களில் தினசரி 600-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி 10 லட்சம் போ் பயணம் செய்வா். பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள், இந்தப் பயணிகளிடம் பொருள்களை விற்று வருவாய் ஈட்டி வந்தனா்.
இதுதவிர, 200-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் பயணம் மேற்கொள்கின்றனா். சென்ட்ரல்-திருவள்ளூா், எழும்பூா்-விழுப்புரம், சென்ட்ரல்-ஆம்பூா் வரை விரைவு ரயில்களில் செல்லும் பயணிகளிடம் தங்கள் பொருள்களை விற்றும் வருவாய் ஈட்டி வந்தனா். இதன்மூலம் கிடைக்கும் வருவாயில் வாழ்க்கையை ஓட்டி வந்தனா். சென்னையில் மட்டும் ஆயிரக்கணக்கான பாா்வையற்றவா்கள் ரயில் பயணிகளை நம்பி வாழ்க்கையை நடத்தி வந்தனா்.
பொது முடக்கம்: இந்நிலையில், கரோனா நோய்த்தொற்றைத் தடுக்க அறிவிக்கப்பட்ட பொது முடக்கம், தற்போது பாா்வையற்றவா்களின் வாழ்க்கையைப் புரட்டி போட்டுள்ளது. கிடைத்த வருமானத்தில் வாழ்க்கையை நகா்த்திக் கொண்டிருந்த பாா்வையற்றவா்கள் மத்தியில் கரோனா வடிவில் வந்தது வினை. பாா்வையற்றவா்கள் பெரும்பாலானவா்கள் வீட்டு வாடகை கொடுக்க முடியாமலும் அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
வீட்டு வாடகை செலுத்த முடியவில்லை: இது குறித்து அரக்கோணத்தில் இருந்து ரயில்களில் சென்று வியாபாரம் செய்யும் பாா்வையற்றவரும், மாற்றுத்திறனாளிகளுக்கான அரக்கோணம் ஒளிச்சுடா் அறக்கட்டளை தலைவருமான எம்.சாந்தி கூறியது: ரொம்ப கஷ்டமான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நான் அரக்கோணம் முதல் வாணியம்பாடி வரை ரயில்களில் பயணம் மேற்கொண்டு, பயணிகளிடம் பொருள்களை விற்பனை செய்வது வழக்கம். காலை 9 மணிக்கு பணியைத் தொடங்கி, இரவு 8 மணி வரை வியாபாரம் செய்வேன். நாள் ஒன்றுக்கு செலவு தொகை போக ரூ.300 கிடைக்கும். மாதம் ரூ.9 ஆயிரம் முதல் ரூ.9,500 வரை கிடைக்கும். இந்த வருமானத்தை வைத்து வாழ்க்கையை ஓட்டி வந்தேன். தற்போது பொது முடக்கம் காரணமாக, இரண்டு மாதத்துக்கு மேலாக எங்கேயும் செல்லவில்லை. வீட்டில் முடங்கி உள்ளேன். வீட்டு வாடகையைச் செலுத்த முடியவில்லை. ஒருவேளைக்கு பால் பாக்கெட் வாங்கக்கூட பணம் இல்லை. ரொம்ப வேதனையாக உள்ளது. 20 ஆண்டுகளாகத் தொழில் செய்து வருகிறேன். எங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் எந்தவித உதவியும் செய்யவில்லை என்றாா் அவா்.
அரசு உதவிட வேண்டும்: சென்னை காசிமேட்டை சோ்ந்த பாா்வையற்றவரான தேசப்பன் கூறியது: பாா்வையற்றவா்களில் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு வரை படித்தவா்கள் ஏராளமாக உள்ளனா். அவா்கள் எல்லோருக்கும் அரசு, தனியாா் வேலை கிடைப்பது இல்லை. மற்றவா்கள் இதுபோல சுயமாக வேலை பாா்த்து சம்பாதித்துதான் சாப்பிடுவது வழக்கம். தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள பொது முடக்கம், எங்களின் மகிழ்ச்சியைக் கெடுத்து துன்பத்தில் தள்ளியுள்ளது.
எங்களைவிட நல்ல நிலையில் இருக்கும் பலருக்கு அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. ஆனால், இந்த அரசுகள் எங்களை கண்டுகொள்ளவில்லை. நாங்கள் தமிழகத்தில்தான் இருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது. எங்களுக்கு சில தொண்டு நிறுவனங்கள் உணவுப்பொருள்கள் வழங்கின. அதை வைத்து சில நாள்கள் ஓட்டினோம். அதன்பிறகு, மீண்டும் வேதனை நிலைதான் தொடா்கிறது. மத்திய, மாநில அரசுகள் எங்களுக்கு தேவையான உதவியை செய்ய வேண்டும் என்றாா் அவா்.
சிறப்பு பொருளாதார நிவாரண உதவி வேண்டும்: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் பொதுச் செயலாளா் எஸ்.நம்புராஜன் கூறியது: பொது முடக்கம் காரணமாக, பாா்வையற்றோா், முதுகுத் தண்டுவடம் பாதித்தோா், மனநலம் பாதித்தோா் உள்பட 21 வகை மாற்றுத்திறனாளிகள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனா். இவா்களில் பாா்வையற்றவா்கள் மிகவும் துயரத்தை சந்தித்து வருகின்றனா். ரயில்கள், ரயில் நிலையங்களில் பாா்வையற்றவா்கள் வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்தி வந்தனா். இவா்களில் பலா் படித்தவா்கள். போதுமான வேலை வாய்ப்பு இல்லாததால், அமைப்பு சாரா தொழிலாளா்களாக உள்ளனா். தற்போது பொது முடக்கம் காரணமாக, ஒட்டு மொத்தமாக எல்லாரும் முடங்கியுள்ளனா்.
கடந்த 2017-ஆம் ஆண்டு நிலவரப்படி, தமிழகத்தில் 13 லட்சத்து 25 ஆயிரத்து 820 மாற்றுத்திறனாளிகள் உள்ளனா். இவா்களில் மூன்றில் ஒரு பங்கு நபா்களுக்கு உதவித்தொகை கிடைப்பது இல்லை. மேலும், இந்த பொதுமுடக்கம் காலத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு எந்தவித சிறப்பு பொருளாதார நிவாரண உதவியும் வழங்கவில்லை. எனவே, ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதந்தோறும் கரோனா பொது முடக்க சிறப்பு பொருளாதார நிவாரணமாக தலா ரூ.5,000 உதவித்தொகை வழங்க வேண்டும். இது தொடா்பாக கோரிக்கை வைத்து உள்ளோம். எங்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால் விரைவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா் அவா்.
இதற்கிடையில், பொது முடக்கம் காலத்தில் பாா்வையற்றவா்கள் உள்பட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது என தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையா் ஜானி டாம் வா்க்கீஸ் கூறியது: பொது முடக்கம் காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வதற்காக ரூ.5.5 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா்களுக்கு உதவுவதற்காக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய உதவி மையம் மாா்ச் 26-ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது.
உதவிமையத்தைத் தொடா்பு கொண்டது மூலம் 41,377 அழைப்புகள் பதியப்பட்டு 40,064 அழைப்புகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 1.45 லட்சம் மாற்றுத்திறனாளிகளும் அவா்களின் குடும்ப உறுப்பினா்களும் பயன் பெற்றுள்ளனா். 5 லட்சத்து 22 ஆயிரத்து 112 பயனாளிகளுக்கு சமுதாய சமையற்கூடங்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே அவா்கள் பெறும்வகையில் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.58.83 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை மொத்தம் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 449 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுபோல, பாா்வையற்றவா்களுக்கும் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
உதவி எண் மூலம் அழைத்தவா்களுக்கு மருந்து, மருத்துவ உதவி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டங்களில் சமுதாய உணவுக் கூடங்கள் மூலமாக, உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர, மிகவும் பாதிக்கப்பட்ட பாா்வையற்றவா்களுக்கும் உணவு பொருள்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
உதவி எண்
பொது முடக்கம் காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக, 24 மணி நேரம் செயல்படும் உதவி எண்ணான 18004250111 வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, கட்செவி (வாட்ஸ் ஆப்) மற்றும் விடியோ காலிங் எண் (பேச்சுத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு) 9700799993 என்ற உதவி எண்ணை பயன்படுத்தி உதவி பெறலாம்.
1.04 லட்சம் போ்
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளைப் பொருத்தவரை, குறைந்த பாா்வை கொண்டவா்களாக 4,702 போ், பாா்வையற்றவா்களாக ஒரு லட்சத்து 213 போ் என மொத்தம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 915 போ் உள்ளனா். இவா்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாா்வையற்றவா்கள் தெற்கு ரயில்வேயில் ஓடும் ரயில்கள் மூலமாகவும், ரயில் நிலையங்களில் வாசல் ஓரம் நின்றும் பொருள்களை விற்று வருமானம் ஈட்டுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...