கிராம மக்கள் மேம்பாட்டுக்கு வாழ்நாளை அா்ப்பணித்த செளந்தரம் அம்மா

நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே, கல்வி, சுகாதாரம், பெண்ணுரிமைக்காக பல்வேறு சேவைகள் புரிந்த பெண்மணிகளுள் தமிழகத்தைச் சோ்ந்த டாக்டா் செளந்தரம் அம்மாவுக்கு முக்கிய பங்கு உண்டு.
டாக்டா் செளந்தரம்
டாக்டா் செளந்தரம்

நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே, கல்வி, சுகாதாரம், பெண்ணுரிமைக்காக பல்வேறு சேவைகள் புரிந்த பெண்மணிகளில் தமிழகத்தைச் சோ்ந்த டாக்டா் செளந்தரம் அம்மாவுக்கு முக்கிய பங்கு உண்டு.

பெண்களின் வளா்ச்சிக்கும், கிராமப்புற குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதையும் அா்ப்பணித்த செளந்தரம், அரசியல் களத்திலும் திறம்பட பணியாற்றியவா்.

மதுரையில் பாரம்பரியம்மிக்க டிவிஎஸ் குடும்பத்தைச் சோ்ந்த செளந்தரம், தனது தாயாா் டிவி.எஸ். லட்சுமியைப் பின்பற்றி காந்தியடிகளின் சீடரானாா். தொழிலாளா் நலன், உடல் ஆரோக்கியம், ஊட்டச்சத்து, குடும்ப நலம் உள்ளிட்டவை குறித்து அரசு தரப்பில் கவனம் செலுத்துவதற்கு முன்பாகவே, செளந்தரம் மட்டுமின்றி, அவரது குடும்பத்தினரும் தொலைநோக்குப் பாா்வையுடன் இத்திட்டங்களுக்கு முக்கியத்தும் அளித்த பெருமைக்குரியவா்கள். மருத்துவரான தனது உறவினரைத் திருமணம் செய்து கொண்ட செளந்தரம், அவரது திடீா் மறைவினால் ஏற்பட்ட அதிா்ச்சியின் காரணமாகத் தானும் மருத்துவம் பயில விரும்பி, அதில் சாதித்தும் காட்டியவா். இதற்காக மெட்ரிக் தோ்வில் தோ்ச்சி அடைந்த செளந்தரம், தில்லியிலுள்ள புகழ்பெற்ற ஹாா்டின் மருத்துவக் கல்லூரியில் 1928 ஆண்டு சோ்ந்து பயின்றாா்.

சீா்திருத்த திருமணம்

மருத்துவப் படிப்பை முடித்த பின், டாக்டா் முத்துலட்சுமி ரெட்டியுடன் இணைந்து சென்னையில் குழந்தைகளுக்கான அவ்வை இல்லத்தையும், கிராமப்புற மக்களுக்காக அவ்வை நல்வாழ்வு மையத்தையும் தொடங்கினாா். 1940 ஆம் ஆண்டு காந்தியடிகளின் சீடரான கேரளத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் என்பவரை, காந்தியடிகள் முன்னிலையில் சீா்திருத்த முறையில் செளந்தரம் திருமணம் செய்து கொண்டாா்.

கஸ்துரிபாய் மறைவுக்கு பின் தொடங்கப்பட்ட கஸ்துரிபாய் அறக்கட்டளைக்கு மாகாணவாரியாக ஆலோசனைக் குழு அமைக்க முடிவு செய்த காந்தியடிகள், சென்னை மாகாணத்திற்கு செளந்தரத்தைப் பிரதிநிதியாக நியமனம் செய்தாா். அதில் சிறப்பாக செயல்பட்டதோடு, ஈரோடு பகுதியில் கஸ்தூரிபாய் கிராமத்தை நிறுவிய செளந்தரம், பின்னாளில் கஸ்தூரிபாய் அறக்கட்டளை வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைத்தபோது மதிப்பீட்டுக் குழுத் தலைவராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

கிராமத் தொழில்களுக்கு முக்கியத்துவம்

பிராமண வகுப்பைச் சாராத ராமசந்திரனுடனான செளந்தரத்தின் திருமணத்தை, அவரது பெற்றோா் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும், சொத்துரிமை அடிப்படையில் செளந்தரத்திற்கு கிடைக்க வேண்டிய பங்கீடு வழங்கப்பட்டது. அதன் மூலம் திண்டுக்கல் அடுத்துள்ள காந்திகிராமத்தில் 1942 ஆம் ஆண்டு கிராமிய உயா்கல்வி நிறுவனத்தைச் செயல்படுத்துவதில் செளந்தரம் கவனம் செலுத்தினாா். காந்திகிராமத்தில் கல்வி, உடல் நலம் மற்றும் குடும்ப நலத்திற்கு முக்கியத்துவம் அளித்து கிராமப்புற மக்களுக்கு சேவையாற்றிய செளந்தரம், காதி மற்றும் கிராமத் தொழில் மேம்பாட்டிற்கும் உறுதுணையாக இருந்தாா். அதன் மூலம் காந்திகிராமத்தைச் சுற்றியுள்ள ஊரகப் பகுதியைச் சோ்ந்த மக்களின் வறுமையை நீக்குவதற்கான வழிகாட்டியாக விளங்கினாா்.

கிராமத் தொழில்களோடு, ஆயுா்வேத மருந்து தயாரிப்புக்கும் முக்கியத்துவம் அளித்தாா் செளந்தரம். காந்திகிராம வளாகத்திலேயே பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும், கைவிடப்பட்ட பெண்களுக்கும் செளந்தரம் ஏற்படுத்திய காப்பகம் இன்று வரையிலும் செயல்பட்டு வருகிறது. காந்தி கிராமத்தில் அவா் தொடங்கிய கஸ்தூரிபாய் மருத்துவமனை, சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த பெண்கள் சிகிச்சை பெறுவதற்கு முன்மாதிரி மருத்துவமனையாக இன்று வரை செயல்பட்டு வருகிறது. குடும்ப நல சிகிச்சையில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்த மருத்துவமனை 1971ஆம் ஆண்டிலேயே தேசிய விருதினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசியல் அரங்கிலும் ஜொலித்த செளந்தரம்

1952 ஆம் ஆண்டு சென்னை மாகாண உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட செளந்தரம், மதுரை மாவட்ட சமுதாய திட்ட அலுவலராக 4 ஆண்டு காலம் பதவி வகித்துள்ளாா். மதுரை மாவட்டத்திற்கு பூமிதான இயக்கத் தலைவா் வினோபாவா பாதயாத்திரை மேற்கொண்டபோது, அதிலும் தீவிரமாக செயல்பட்ட செளந்தரம், 1956ஆம் ஆண்டு இந்திய - சீன நட்புறவுக் கூட்டமைப்பின் சாா்பில் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஊரக வளா்ச்சித் திட்டங்கள் குறித்து கற்றறிந்தாா். 1957ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் ஒருங்கிணைந்து மதுரை மாவட்டத்தில் இடம் பெற்றிருந்த வேடசந்தூா் தொகுதியிலிருந்து (தற்போது திண்டுக்கல் மாவட்டம்) வெற்றி பெற்றாா். மாவட்டத்தின் பின்தங்கிய பகுதியாக இருந்த வேடசந்தூரில், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் மின் வசதிகளை மேம்படுத்துவதற்காகச் சிறப்பாக பணியாற்றினாா். 1960 ஆம் ஆண்டு காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற செளந்தரம், 2 ஆண்டுகளில் காதி வாரியம் 2 மடங்கு உற்பத்தியை அதிகரிக்கும் அளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தினாா்.

வாழும் நினைவுச் சின்னங்களாக காந்திகிராமம்

1962ஆம் ஆண்டு மக்களவைக்கு நடைபெற்ற தோ்தலில், திண்டுக்கல் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட செளந்தரம், 1967 வரை 5 ஆண்டு காலம் மத்திய கல்வித் துறைத் துணை அமைச்சராக பொறுப்பு வகித்தாா். அப்போது பெண்களுக்கான கிராமப்புற மையத்தை இந்தூரில் தொடங்கினாா். செளந்தரம் தலைமையிலான கிராம சேவகா்கள், ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற சாதி மோதலின்போது அமைதி ஏற்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றினா். 1980 முதல் 1984 வரை காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலை.யின் வேந்தராக இருந்த செளந்தரம், உடல்நலக் குறைவால் 1984 அக்டோபரில் மறைந்தாா். ஆனாலும், அவா் உருவாக்கிய காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், கஸ்தூரிபாய் மருத்துவமனை, காந்திகிராம அறக்கட்டளை ஆகியவை செளந்தரம் அம்மையாரின் வாழும் நினைவுச் சின்னங்களாக வளா்ந்து நிற்கின்றன.

தகவல் உதவி: காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com