இந்தியா முழுவதும் உள்ள தங்க நகை வியாபாரிகள், 15, 16, 17, 19, 20, 21 மற்றும் 24 காரட் தங்கத்தை விற்பனை செய்கின்றனர். இந்த புதிய சட்டத்தால், இவ்வகை தங்க நகைகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கரோனா பொதுமுடக்கத்தால், இந்த வகை காரட் தங்கம் தேங்கியுள்ளது. எனவே, இந்த புதிய விதிகள் அமலுக்கு வந்தால், இந்த நகைகளை எல்லாம் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும். அதுமட்டுமல்ல, எந்த வகையான நகைகளை வாங்க வேண்டும் என்பதை நுகர்வோர் தான் முடிவு செய்ய வேண்டும். தற்போதுள்ள விதிகளினால், குறிப்பிட்ட காரட் தங்கத்தை மட்டுமே வாங்க பொதுமக்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர். பல வகையான காரட் தங்கத்தை பொதுமக்கள் வாங்கி வைத்துள்ளனர். இந்த பழைய தங்கத்தை விற்பனை செய்ய அவர்கள் வரும்போது, அதை வாங்கும் நகைக் கடைக்காரரால், மறு விற்பனை செய்ய முடியாது. இதனால் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே, மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிகளை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். இந்த புதிய விதிகளை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர். இந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.