5 ஆயிரம் கி.மீ. வலசைபோகும் வண்ணத்துப் பூச்சிகள்! 4 தலைமுறைகள் கழிகின்றன!!

உலகில் உள்ள உயிர்நிறையில், தரைவாழ் உயிரிகளில் அதிக எண்ணிக்கையில் உள்ளவை பூச்சிகள்தான். அவற்றின்  உயிர்நிறை: 10 குவின்டில்லியன்.
5 ஆயிரம் கி.மீ. வலசைபோகும் வண்ணத்துப் பூச்சிகள்! 4 தலைமுறைகள் கழிகின்றன!!

உலகில் உள்ள உயிரினங்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளவை பூச்சிகள்தான். எவ்வளவு என்று தெரியுமா? சொன்னால் மயக்கம் போட்டு விழுந்துவிடுவீர்கள்? ஆமாம். உலகில் உள்ள உயிர்நிறையில், தரைவாழ் உயிரிகளில் அதிக எண்ணிக்கையில் உள்ளவை பூச்சிகள்தான். அவற்றின்  உயிர்நிறை: 10 குவின்டில்லியன். அதாவது, 1-க்கு அப்புறம் 18 சுழியன்கள் இட வேண்டும். 10,00,00,00,00,00,00,00,000! உலகில் உள்ள விலங்கினங்களில் 75% - 80% பூச்சிகள்தான். உலகில் ஒட்டுமொத்தமாக சுமாராக 60,000 - 1,000,000 வகைகள் /இனங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அமெரிக்க ஐக்கிய நாடுகளில்  இருக்கும் பூச்சிகள் மட்டுமே சுமாராக 91,000 வகைகள் / இனங்கள். நமது இந்தியாவில் சமீபத்திய கணக்குப்படி  619 குடும்பங்களில் 59,353 இனங்கள் உள்ளன என்று பதிவு செய்துள்ளனர். ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 75 % பூச்சிகள் அழிந்துவிட்டன. 

அமெரிக்காவின் குறியீடு / பெருமை 

பூச்சிகளின் முன்னோடிகள்  சுமார் 469 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பும், பூச்சிகள் சுமாராக 409 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பும் உருவாயின. இந்த பூச்சிகள் உருவான காலத்தின் பெயர் டிவோனியன் (Devonian period... meslzoic era). முதுகெலும்புள்ள உயிர்களும் இதே டிவோனியன் காலத்தில் (416 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் ) உருவாயின. மொனார்க்  வண்ணத்துப் பூச்சி, வட அமெரிக்காவின் சின்னமாகவும், ஒரு குறியீடாகவும், மகரந்தச் சேர்க்கைக்கான முக்கிய காரணியாகவும் பார்க்கப்படுகின்றது. 

நாடுவிட்டு நாடு பயணம் 

நாம் பள்ளிக்கூடத்தில், பறவைகள் வலசைபோவதை, மீன்கள்  வலசை  போவதைப் பற்றி பாட புத்தகத்தில் படித்திருக்கிறோம் ஆனால் பூச்சிகள் வலசை போவதைப் பற்றி படித்திருக்கிறோமா? பூச்சிகள், அதுவும், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வாழும் மொனார்க்  வண்ணத்துப் பூச்சிகள் வலசை போவதற்குப் புகழ் பெற்றவை. அதுவும் எவ்வளவு தூரம் தெரியுமா? மொனார்க்  வண்ணத்துப் பூச்சிகள் சுமாராக 4,828 கி.மீ. (3,000 மைல்கள்).  நினைத்துப் பார்க்கவே ஆச்சரியம்! துளியூண்டு வண்ணத்துப்பூச்சி, எவ்வளவு தூரம் பறந்து, தன் சந்ததியைப் பெருக்க வலசை போகிறது, அதுவும் 0.25-0.75 கிராம்  எடையுள்ள பூச்சி. ஒரு கிராம் எடைகூட இல்லை. இது சுமார் 4800 கி.மீ. பயணிக்கிறது, பறந்து என்றால் வியப்பாக இல்லையா?

ஏன் பயணம்?

முதுகெலும்பில்லாத இந்த வண்ணத்து பூச்சிக்கு ஏன் மொனார்க்  என்ற பெயர்  வந்தது தெரியுமா? வண்ணத்துப் பூச்சிகளில் மிகவும் அழகானது இந்த மொனார்க்  வண்ணத்துப் பூச்சி. மேலும் மொனார்க்  என்பதற்கு ஆளும் அரசன் என்று பொருள். இந்த மொனார்க்  வண்ணத்துப் பூச்சிகள், குளிர்காலம் & இலையுதிர் காலம் துவங்க ஆரம்பித்ததும், குளிரைத் தாக்குப் பிடிக்க முடியாமல், அந்த நாட்களை மட்டும் வெளியூரில் தங்குவோம் என்று  தென்மேற்கு மெக்சிகோவை  நோக்கி கூட்டம் கூட்டமாய் புறப்பட்டுப்  படையெடுத்துச்  செல்லுகின்றன, அதற்கு முன் அவை தங்களின் வாழ்நாளுக்கு மற்றும் சந்ததிக்கான ஏற்பாடுகளை செய்துவிட்டே புறப்பட்டுப் போகின்றன.  தங்களது சந்ததிகளை அமெரிக்க ஐக்கிய நாட்டிலும், கனடாவிலும் விட்டுவிட்டு,  முதிர்ந்த அம்மா மொனார்க் வண்ணத்துப் பூச்சிகள் மட்டும் புறப்படுகின்றன.

கோடையின் பெருமிதம்

மொனார்க் வண்ணத்துப்பூச்சிகள்  வருடந்தோறும், மெக்சிகோ நோக்கி இலையுதிர் காலத்தில், குளிரிலிருந்து தப்பிக்க, அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து தென்மேற்கு மெக்சிகோ நோக்கி வலசை போகின்றன. இது பூச்சி இனங்களில் தனித்துவம் வாய்ந்தது. வேறு எந்தப் பூச்சியும் வலசை போவதில்லை. மேலும் இந்த மெக்சிகோ வலசை மிகவும் அற்புதமானதும், உலகப் புகழ்பெற்றதும் ஆகும். 

மொனார்க்  வண்ணத்துப் பூச்சிகள் இலையுதிர் காலம் / குளிர் காலம் துவங்கும் அக்டோபர் மாதம் ஆனதும் அவை தான் வாழும் இடத்தை விட்டுவிட்டு அப்படியே தெற்கு நோக்கி மெக்சிகோவுக்குப் புறப்படுகின்றன.

யார் சொல்லுவார் கிளியே... நேரம் யார் சொல்லுவார்... 

இந்த மொனார்க் வண்ணத்துப் பூச்சிகளிடம், இலையுதிர்காலம் இப்ப வரப் போகிறது என்று சொல்லி மெக்சிகோ நாட்டுக்கு புறப்படுங்கள் என்று சொல்வது யார் / யாரும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம்தான் புறப்படும் என்றில்லை. சிலசமயம் சீக்கிரமாகவும்கூட புறப்பட்டுப் போகும். வட அமெரிக்காவின் வெப்பநிலைதான் இவற்றைத் தூண்டுகிறது. பகல் நேரம் குறையத்  தொடங்கி வெப்ப நிலையும் குறைந்து, குளிர் சீக்கிரமே வந்துவிட்டால், மொனார்க் வண்ணத்துப் பூச்சி, அமெரிக்காவில் இருக்கும் வீடு புள்ள குட்டிகளை விட்டுட்டு அப்படியே  பயணம் புறப்பட்டு விடும், மெக்சிகோ நோக்கி, உயிர் காப்பதற்காக.

நானும் கும்பகர்ணனும் சொந்தமே 

மொனார்க் வண்ணத்துப்பூச்சி  மெக்சிகோ போயச் சேர முழுமையாக இரன்டு மாதம் ஆகும்.  மொனார்க் ஒரு நாளில் சுமார் 80-160 கி.மீ. தூரம் பறக்கும். ஒரு நாளில் 450 கி.மீ. பயணம் செய்த மொனார்க் வண்ணத்துப்பூச்சியையும்கூட பதிவு செய்து வைத்துள்ளனர். அங்கே போன மொனார்க் வண்ணத்துப் பூச்சி சும்மா ஜம்முன்னு குளிர்கால தூக்கம் (Hibernation )  போடும்.

அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் இருப்பவை மேற்குப் பகுதி மெக்சிகோவுக்கும், அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ளவை தெற்கு கலிபோர்னியாவுக்கும், குளிரிலிருந்து தம்மைப் பாதுகாத்து, உயிரைத் தக்க வைக்க கூட்டம் கூட்டமாக நீள்பயணம் மேற்கொள்ளுகின்றன.

கிழக்கிலுள்ள மலைப்பகுதி வண்ணத்துப்பூச்சிகள், ப்ளோரிடா மற்றும் மெக்சிகோவின் சரணாலயங்களுக்கும்,   மாரிபோஸா மொனார்க்கா உயிரியல் வனத்துக்கும்,  மேற்குப் பகுதியில் வசிப்பவை, கடுங்குளிரில் கலிபோர்னியா மற்றும் மத்திய அமெரிக்காவின் பல்வேறு கடற்கரைப் பகுதிகளுக்கும் பயணிக்கின்றன.எங்கு சென்றாலும் மீண்டும் தாய் வீட்டுக்கு திரும்பிவிடும் வல்லமை வாய்ந்தவை இவை.

என்னைத் தெரியுமா ? நீள்பயணம் செல்வேன் புரியுமா?

ரொம்ப தூரம் நீள்பயணம் / வலசை போகும் மொனார்க்  வண்ணத்துப் பூச்சியின் வாழ்நாள் எவ்வளவு தெரியுமா? 6 - 8 வாரங்கள் மட்டுமே இவ்வளவு குறைந்த ஆயுளுடன், இவை உலக வரலாற்றில் பதிவு பண்ணும்  அளவுக்கு அற்புதமான செயல்களைச் செய்கின்றன. இவைதான் கூட்டமாகப்  பல்லாயிரக்கணக்கில்  வலசை செல்வதற்கு மறக்க முடியா புகழ் பெற்றவை. அக்டோபர்  மாதம் இவற்றுக்கு முடிசூட்டும் மாதம் என்றே கூறலாம். ஆனால், மெக்சிகோ, புளோரிடா மற்றும் தெற்கு கலிபோர்னியா போன்ற இடங்களுக்கு வலசை சென்ற இந்த குட்டி ஜீவன் வலசை முடிந்தபின், அந்த முதிர்ந்த மொனார்க் வண்ணத்துப் பூச்சிகளே திரும்புவதில்லை. அவற்றின் 5-வது  தலைமுறை திரும்புகிறது, தனது கொள்ளுப் பாட்டி மற்றும் எள்ளுப் பாட்டி வாழ்ந்த இடத்துக்கு, அதே மரத்துக்கு, யாரோ இவற்றுக்குத் தனது மூதாதையர் இருப்பிடத்தைச் சொல்லித் தந்திருப்பார்களோ.. இல்லை. யாருமே சொல்லிக்கொடுக்காமல், எப்படி 5-வது  தலைமுறைக்குப் பின்னர் அதே  இடத்துக்கு வர முடியும், இதுதான் அறிவியலாளர்களின் மண்டையைக் குடையும் வினாவும் புதிரும். 

எனக்கு மட்டும் ரகசியம் இது 

கோடையில் / இலையுதிர்கால துவக்கத்தில் பிறக்கும் மொனார்க் வண்ணத்துப் பூச்சிகளே  மெக்சிகோவிலுள்ள ஓயமேல் பிர் மரங்கள் (oyamel fir tree) நோக்கியும் கனடாக்கார பூச்சிகள் தெற்கு கலிபோர்னியாவுக்கும் பயணம் புறப்படுகின்றன. ஆனால், இவை திரும்பி மீண்டும் அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு வருவதில்லை. இப்படி புறப்பட்டுப் போன பூச்சிகளின் 4 வது / 5-வது  சந்ததிகளே அமெரிக்கா மற்றும் கனடாவுக்குள் இனப்பெருக்கம் செய்ய வசந்த காலத்தில் வந்துவிடுகின்றன. மெக்சிகோவில் இவை போய் தங்கி ஓயமேல் பிர் மரங்கள் உள்ள இடத்துக்கு மொனார்க் வண்ணத்துப்பூச்சி ரிசெர்வ் என்றே பெயர். அங்கெ மரங்களின் மேலே ஒன்றின் ஒன்று அடையாய் அப்பிக்கொண்டு  குளிர்கால நீடு துயில் கொள்கின்றன. இந்த இரண்டு மாத காலமும் நோ சாப்பாடு. எந்த உணவும் கிடையாது. மொனார்க் வண்ணத்துப் பூச்சிகளுக்கு சுவாசிக்க நுரையீரல் கிடையாது. ஆனால் இறக்கைகளின் வழியே தென்படும் நரம்புகள் வழியே சுவாசம் செய்கின்றன. 

எடை போடாதே... வாழ்நாள் வைத்து

மொனார்க் வண்ணத்துப்பூச்சிகள்  பொதுவாக மில்க்வீடு என்ற களைச் செடியின் தழையைச் சாப்பிடும், அதிலேயே முட்டை இடும். இந்தக்  களைச்செடி நஞ்சு உள்ளது. எனவே, இதனை உண்டு வாழும் மொனார்க் வண்ணத்துப் பூச்சியும் அதன் கம்பளிப் புழுவும்கூட, விஷத் தன்மை  வாய்ந்ததாகவே இருக்கும், மேலும் இவை அருகில் வந்தாலே, வயிற்றைப்  புரட்டும் கெட்ட நாற்றம் வரும். எனவே, மொனார்க்  வண்ணத்துப் பூச்சியை, எந்த பறவையும் பாலூட்டியும் சாப்பிடாது. அவ்வளவு கெட்ட வாடை வீசும். மேலும் இதனை சாப்பிட்டால், சாப்பிட்ட விலங்குகள் இறந்துவிடும். எனவே, இந்த ராசா மகள் மொனார்க் வண்ணத்துப் பூச்சிக்கு இயற்கை எதிரி என்று யாரும் கிடையாது. மனிதனின் பூச்சிகொல்லிதான் முதல் எதிரி. 

நான் உயர உயரப் போகிறேன் 

1997-98 களில் வட அமெரிக்காவில் மொனார்க்  வண்ணத்துப் பூச்சிகளின் எண்ணிக்கை சுமார் ஒரு பில்லியன், ஆனால் இதுவே கடந்த 20 வருடங்களில், இதன் எண்ணிக்கை 80% குறைந்துவிட்டது. அதனால் இப்போது அதனை காப்பாற்ற முயற்சி செய்து வருகின்றனர் .மெக்சிகோவில், இவை போய் அடையாக ஒட்டிக்கொண்டு குளிரைக் கழிக்கும் பகுதி சுமார் 60 சதுர ஏக்கராகும். இவை எவ்வளவு உயரத்தில்  பறந்து பயணம் செய்யும் தெரியுமா? சுமாராக, அங்குள்ள எம்பயர் கட்டடத்தைத் தாண்டியும், அதற்கும் மேலே பறந்து மெக்சிகோவுக்கு செல்கிறது, அங்கே அதன் மூதாதையர் எந்த மரத்தில் போய் ஒட்டிக்கொண்டு தூங்கினார்களோ, அதே மரத்துக்குச் சென்று, ஒரு மரத்தில் பல ஆயிரக்கணக்கில் ஒட்டிக்கொண்டு, குதியாட்டம் போட்டு நீள்  உறக்கத்துக்குப் போய்விடும் இரண்டு மாதங்களுக்கு. 

எத்தனை தலைமுறைகள் 

குளிர்கால தூக்கம் முடிந்த உடன், முட்டையிட மில்க்வீடு என்ற பால் களைச் செடியைத் தேடி அதில் முட்டையிடும். முட்டையிலிருந்து 4 நாட்களில் கம்பளிப்புழு வெளிவந்து அசுரத் தீனி தின்னும். ஒரு கம்பளிப்பூச்சி, ஒரு இலையை 4 நிமிடத்தில் கபளீகரம் பண்ணிவிடும். ஒரு மொனார்க் வண்ணத்துப்பூச்சி, சுமார் 400 முட்டைகள் இடும் கம்பளிப்புழு பருவம் 2 வாரங்கள் மட்டுமே. இவை 4 வாரத்தில் மீண்டும் முழு வண்ணத்துப்பூச்சியாக வெளிவரும். ஆனால் குளிருக்காக பயணிக்கும் குளிர்கால / இலையுதிர்கால சிறப்பு மொனார்க் வண்ணத்துப்பூச்சி மட்டும் சுமார் 6-8 மாதங்கள் வரை உயிருடன் இருக்கும். இவை முட்டையிட்டு மீண்டும் கம்பளிப்புழு, கூட்டுப்புழு மற்றும் வண்ணத்துப்பூச்சி என உருவாகும். இதில் கோடை வாழ் வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சியில் 4 தலைமுறைகள் வந்து போகும். இதில் இரண்டு தலைமுறைகளின் பூச்சிகள் 6-8 மாதம் மட்டுமே உயிர்வாழும். 

ஒரு மொனார்க் வண்ணத்துப்பூச்சி ஓர் ஆண்டில் சுமார் 8,000 கி.மீ. பயணம் செய்கிறது. அட்லாண்டிக்  பெருங்கடலைக் கடக்கும் உயிர்களில் மொனார்க்  வண்ணத்துப்பூச்சியும் உண்டு.  

நான் வாழப் பிறந்தவன், சிறப்பானவன்

மெக்சிகோவில் குளிர்கால தூக்கம் தூங்கி விழித்த மொனார்க், மில்க்வீட் என்னும் களைச் செடியில் மார்ச் - ஏப்ரலில் முட்டையிடுகிறது. இதன் இரண்டாவது தலைமுறை மீண்டும் மே மாதம் முட்டையிடுகிறது. மூன்றாவது தலைமுறை ஜூலையில் முட்டையிடுகிறது. நாலாவது தலைமுறை முட்டையிட செப்டம்பருக்கு வட அமெரிக்காவின் மலைப்பாறைகளுக்கு வந்துவிடுகிறது. இந்த தலைமுறை, மெக்சிகோ போன பின்பும் வாழும் இதன் வாழ்நாள் 8 மாதம் என்ற சிறப்பு தகுதி பெற்றது. மொத்தமாக இவை பயணிக்கும் தூரம் 8,800 மகி.மீ. 

பல தலைமுறைகள்

முதல் தலைமுறை மொனார்க் மெக்சிகோவில் கடுங்குளிருக்காக வந்தவற்றின் பிள்ளைகள். ஒவ்வொரு அடுத்தடுத்த தலைமுறையும் அமெரிக்காவின் வடபகுதிக்கு தொலை தூரத்துக்குப் பயணிக்கின்றன. இதற்குள் அவை கனடா மற்றும் வடபகுதி அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சென்று அடைவதற்குள்  3-4 தலைமுறைகள் முடிந்து விடுகின்றன.  என்னே அதிசயம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com