அறிவியல் ஆயிரம்: உலகில் அனைத்து உயிர்களின் ஆயுள்காலம் அதிகரிப்பு

உலகில் மனிதர்கள் உள்பட அனைத்து உயிர்களின் ஆயுள்காலமும் அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 
அறிவியல் ஆயிரம்: உலகில் அனைத்து உயிர்களின் ஆயுள்காலம் அதிகரிப்பு
Updated on
2 min read

உலகில் மனிதர்கள் உள்பட அனைத்து உயிர்களின் ஆயுள்காலமும் அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

உயிர்களின் இறப்பு தொடர்வான ஓர் ஆய்வினை தெற்கு டென்மார்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்டு 2021, ஜூன் 16ம் நாள் ஆய்வின் முடிவினை வெளியிட்டுள்ளனர்.

தத்துவவாதிகள், கலைஞர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மற்றும் அநேகர் மனித அழியாமையின் திறவுகோலைப் பற்றி நீண்டகாலமாக கவனித்தும் ஆய்வு செய்தும் விவாதித்தும் வருகிறோம். நாம் அனைவரும், வருமானம், பண்பாடு, படிப்பு, உயர் எண்ணங்கள், மதம் என எதுவாக இருந்தாலும், எப்படிப்பட்டவராக இருந்தாலும், முடிவில் ஒருநாள் இறக்க நேரிடுகிறது.

மரண நோய்கள்/விபத்துகளிலிருந்து நாம் தப்பித்தாலும் நாம் அனைவரும் ஒரு கொடிய உயிரியல் சீரழிவை எதிர்கொள்கிறோம். மனிதனின் நீண்ட ஆயுளைப் பற்றிய விவாதம் பல நூற்றாண்டுகளாக விஞ்ஞான சமூகத்தைப் பிளவுபடுத்தியுள்ள நிலையில், ஒரு புதிய ஆய்வு நமது தவிர்க்கவே முடியாத மரணத்திற்கு புதிய ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளது.

ஒவ்வொரு உயிரிக்கும் ஒவ்வொரு வயது விகிதம்

தெற்கு டென்மார்க் பல்கலைக்கழக பெர்னாண்டோ கொல்செரோ (Fernando Colchero) மற்றும் வட கரோலினாவின் டியூக் பல்கலைக்கழக சூசன் ஆல்பர்ட்ஸ் (Susan Alberts) தலைமையிலான குழு ஓர் இந்த ஆய்வினைச் செய்துள்ளது. இக்குழு 14 நாடுகளின் 42 நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களைக் கொண்டது. இது வயதாவதின் கோட்பாடு தொடர்பான "வயதான கருதுகோளின் மாறாத வீதம்" பற்றிய புதிய நுண்ணறிவுகளை வழங்குகிறது. ஒவ்வொரு இனமும் ஒவ்வொரு வயதான விகிதத்தைக் கொண்டுள்ளது என்பதே அது.

மரணம் நிச்சயம்

மனித மரணம் தவிர்க்க முடியாதது. நாம் எத்தனை வைட்டமின்கள் உணவில் எடுத்தாலும், எவ்வளவு சக்தி, உடல் உறுதியுடன் இருந்தாலும் நமது சூழல் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தாலும், எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும், இறுதியில் வயது மற்றும் வயோதிகம் காரணமாக இறக்கத்தான் செய்வோம் என்று பெர்னாண்டோ கொல்செரோ கூறினார்.

இவர், மக்கள்தொகை உயிரியலுக்கான புள்ளி விவரங்கள் மற்றும் கணிதத்தைப் பயன்படுத்துவதில் நிபுணர். தெற்கு டென்மார்க் பல்கலைக்கழகத்தின் கணிதம் மற்றும் கணினி அறிவியல் துறையில் இணை பேராசிரியர்.

ஒப்பீடுகள் மனிதன் மற்றும் விலங்குகள்

பிரதிநிதித்துவப்படுத்தப்படாத/இதுவரை சொல்லப்படாத ஏராளமான தரவுகளை இணைப்பதன் மூலமும், மனித மக்கள்தொகையில் உள்ள பிறப்பு மற்றும் இறப்பு முறைகளை ஒப்பிடுவதன் மூலமும், காடுகளில், உயிரியல் பூங்காக்களில் உள்ள கொரில்லாக்கள், சிம்பன்சிகள், பபூன்கள் உள்பட 30 மனிதரல்லாத விலங்குகளின் தகவல்களுடன் ஒப்பிடுவதன் மூலமும், வயதாவது பற்றிய கருதுகோளின் மாறா விகிதத்தில் சில தகவல்களை  வெளிச்சத்திற்கு கொண்டு வர முடிந்தது என்கிறார் கொல்செரோ. 

இதனை ஆராய்வதற்காக, ஒருவரது ஆயுள் காலம் மற்றும் சராசரி ஆயுள்காலம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைக் கண்டறிந்தனர். இது மக்கள்தொகையில் தனிநபர்கள் இறக்கும் சராசரி வயது மற்றும் எவ்வளவு இறப்புகள் என்பதைப் பொருத்தது. 

1800 களைவிட இன்றைய ஆயுள்காலம் அதிகரிப்பு

இந்த ஆய்வின் முடிவுகள், ஆயுள்காலம் அதிகரிக்கும்போது, ​​சராசரி ஆயுள்காலத்தையும் அதிகரிக்கிறது. ஜப்பான் அல்லது சுவீடன் நாடுகளில் தற்போது வயதானவர்களின் சராசரி ஆயுள்காலம் அதிகமாக உள்ளது. அதாவது ஒரே காலகட்டத்தில் இணையான வயதினர் உயிரிழப்பு ஏற்படுகிறது. அங்கு சராசரி ஆயுள்காலம் என்பது 70 அல்லது 80 வயதாக உள்ளது. 

இருப்பினும், 1800 களில் மேற்குறிப்பிட்ட நாடுகளில் சராசரி ஆயுள்காலம் மிகவும் குறைவாக இருந்தது. ஏனெனில் அப்போது உயிர் காக்கும் மருந்துகள் இல்லை; வயதான காலத்தில் இறப்புகள் அதிகமா இருந்தன, இதன் விளைவாக சராசரி ஆயுள்காலம் குறைவாக இருந்தது.

வயது விகிதம் அதிகரிக்கக் காரணம்

"இப்போது ஆயுள்காலம் வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது; உலகின் பல பகுதிகளிலும் இதே நிலைதான். ஆனால் இது வயதானோர் விகிதத்தை குறைத்துள்ளதால் அல்ல;

அதிகமான குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நவீன மருந்துகளால் தப்பிப் பிழைக்கிறார்கள், இது சராசரி வாழ்க்கையை உயர்த்துகிறது என்கிறார் பெர்னாண்டோ கொல்செரோ.

தொழில்துறைக்கு முந்தைய காலத்தில்  ஐரோப்பிய நாடுகள், உணவு வேட்டையாடிகளிடமிருந்து  நவீன தொழில்மயமாக்கப்பட்ட நாடுகள் வரை மனித மக்களிடையே ஆயுள்காலம் மற்றும் சராசரி ஆயுள்காலம் இடையிலான வியத்தகு ஒழுங்குமுறையை ஆய்வின் முந்தைய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், நெருங்கிய உறவினர்களிடையே இந்த வடிவங்களை ஆராய்வதன் மூலம், இந்த ஆய்வு விலங்குகளிடையேயும் கூட உலகளாவியதாக இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. அதேநேரத்தில் அதை உருவாக்கும் வழிமுறைகள் குறித்த தனித்துவமான நுண்ணறிவுகளை இது வழங்குகிறது.

துவக்ககால இறப்பைத் தவிர்த்து ஆயுளை அதிகரிப்போம்

"மனிதர்கள் மட்டுமல்ல, வெவ்வேறு வகை விலங்கினங்களிலும்கூட குழந்தை மற்றும் சிறார் இறப்புகளைக் குறைப்பதன் மூலம் நீண்ட காலம் வாழ்வதில் வெற்றி பெறுகின்றன என்பதை நாங்கள் கவனிக்கிறோம். இருப்பினும், ஆரம்பகால இறப்பைக் குறைத்தால் மட்டுமே இந்த உறவு இருக்கும், வயதான விகிதத்தைக் குறைப்பதன் மூலம் அல்ல என்றார் பெர்னாண்டோ கொல்செரோ.

புள்ளி விவரங்கள் மற்றும் கணிதத்தைப் பயன்படுத்தி வயதான விகிதத்தில் ஏற்படும் சிறிய மாற்றங்கள்கூட சிம்பன்ஸிகள் அல்லது மனிதர்களின் மக்கள்தொகையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். உலகில் அனைத்து உயிர்களின் ஆயுள்கால விகிதமும் கூடி இருக்கிறது.

மருத்துவ விஞ்ஞானமே வெல்லும்

மனிதன் மட்டுமல்ல, அனைத்து உயிரிகளின் வாழ்நாளும் அதிகரித்து இருக்கிறது. மருத்துவ விஞ்ஞானம் இதுவரை இல்லாத வேகத்தில் முன்னேறியுள்ளது என்று உறுதி ஆகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com