சிவாஜி கணேசனும் பெருமாள் முதலியாரும் (முகநூலிலிருந்து)
சிவாஜி கணேசனும் பெருமாள் முதலியாரும் (முகநூலிலிருந்து)

சிவாஜி கணேசனும் பெருமாள் முதலியாரும்

பொம்மை அன்றைக்குப் புகழ்பெற்ற சினிமா மாத இதழ். அதன் ஆசிரியராக இருந்த வீரபத்திரன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நெருங்கிய நண்பர். 

பொம்மை அன்றைக்குப் புகழ்பெற்ற சினிமா மாத இதழ். அதன் ஆசிரியராக இருந்த வீரபத்திரன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நெருங்கிய நண்பர். 

பொங்கலுக்கு இரண்டு நாள் இருக்கும் போது  வீரபத்திரனை அழைத்த சிவாஜி, “நாளை எந்த வேலையும் வச்சுக்காதீங்க... நாம் ஓர் இடத்திற்குப் போக வேண்டும்” எனக் கூறியுள்ளார். 

வீரபத்திரனும் மறுநாள் காலையிலேயே சிவாஜி வீட்டிற்குச் சென்றுள்ளார். சிவாஜி வீட்டில் காலை உணவை முடித்துவிட்டு இருவரும் காரில் ஏறி அமர்ந்தனர். 

நாம் ஓர் இடத்திற்குப் போக வேண்டும் என்றுதான் சிவாஜி கூறினாரேயொழிய எந்த இடத்திற்குப் போகிறோம் எனக் கூறவில்லை. வீரபத்திரனுக்கும் அவரிடம் கேட்கத் தயக்கம். அதனால் எதுவும் கேட்காமல் காரில் ஏறிவிட்டார். 

கார் சென்னையைத் தாண்டுகிறது... காஞ்சிபுரத்தைத் தாண்டுகிறது... வீரபத்திரன் அப்போதும் கேட்கவில்லை. கடைசியாகக் கார் வேலூருக்குச் சென்று, அங்கு ஒரு வீட்டின் முன்னால் போய் நிற்கிறது. 

அந்த வீடு சிவாஜி கணேசனை வைத்துப் படம் எடுத்த பி.ஏ.பெருமாள் முதலியார் உடையது. அவர் முன்னரே 1978-இலேயே மரணமடைந்துவிட்டார். 

அவர் குடும்பம் மட்டும் அங்கே வசித்து வருகிறது. பொங்கல் வருவதால் அந்தக் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாடைகள் எடுத்துக்கொண்டு சிவாஜி கணேசன் சந்திக்க வந்துள்ளார். 

அந்த வருடம் மட்டுமல்ல; ஒவ்வொரு வருடமும் சிவாஜி கணேசன் இதேபோல நேரடியாகச் சென்று சந்திப்பாராம். அப்போது, பெருமாள் முதலியார் மனைவி காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டுத்தான் சிவாஜி கணேசன் கிளம்புவாராம். தன்னுடைய 60 வயதிலும் அவருடைய காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி உள்ளார்.

நடிகர் திலகம் எனும் பிறவிக் கலைஞனைத் தமிழ்நாட்டுக்குக் கொடுத்தது வேலூர்தான். வேலூர் மண்ணின் மைந்தரான பி.ஏ. பெருமாள் முதலியார், திரைப்பட விநியோகத் தொழிலில் இருந்து, அதன் அடுத்த கட்டமான திரைப்படத் தயாரிப்பில் கால் பதித்தபோது அவரைக் கவர்ந்தது பராசக்தி நாடகம். இந்த நாடகத்தைத் தனது ‘நேஷனல் பிக்ஸர்ஸ்’ மூலம் திரைப்படமாகத் தயாரித்து, நடிகர் திலகத்தைத் தமிழ்நாட்டுக்கு அளித்தார். 

புராணப் படங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, சமூகச் சீர்திருத்தம் என்னும் புதிய பாதையில் தமிழ் சினிமாவில் புதுயுகமொன்றைத் தொடங்கி வைத்தது பராசக்தி திரைப்படம் . சிவாஜியைப் பராசக்தி படத்துக்கு நாயகனாகத் தேர்ந்தெடுத்த பிறகு, பலரும் அவரை நீக்க வேண்டும், வேறு நாயகன் அமர்த்திக்கொள்ளலாம் என வற்புறுத்தியபோதும், பிடிவாதமாக இருந்து சிவாஜியையே நடிக்க வைத்தார் பெருமாள் முதலியார்.

இந்த நன்றியைக் கடைசிவரை மறக்காத சிவாஜி, ஒவ்வொரு பொங்கல் பண்டிகையின்போதும் இரண்டு நாட்கள் முன்பு, பொங்கல் சீரூடன் வேலூர் சென்று பெருமாள் முதலியார் வீட்டில் கொடுத்துவிட்டு அவரிடம் வாழ்த்துப் பெற்றுத் திரும்புவதை வழக்கமாக வைத்திருந்தார். 

பெருமாள் முதலியார் இறந்த பிறகும் இதை நிறுத்தவில்லை சிவாஜி. அதேபோல “நான் இறந்தாலும் சீர் நீற்கக் கூடாது” என்று சிவாஜி தனது வாரிசுகளுக்கு உத்தரவிட்டதால், சிவாஜியின் மறைவுக்குப் பிறகும் தற்போதும் பொங்கல் சீர் வழக்கத்தை, சிவாஜியின் வாரிசுகள் பிரபுவும், ராம்குமாரும் தொடர்கிறார்கள்.

அன்றைய வடக்கு வட ஆற்காடு மாவட்டம் வேலூர் வட்டம் சத்துவாச்சாரி அருகிலுள்ள பூட்டுத்தாக்கு என்ற கிராமத்தில் ஜவுளித் தொழில் அதிபர் அருணாசல முதலியார் - சிந்தாமணி அம்மாள் தம்பதியருக்கு ஒரே மகனாக மே 10,1919 ஆம் ஆண்டு பிறந்தார்  பெருமாள் முதலியார்.

தனது பள்ளிப்படிப்பை வேலூரில் முடித்தார். பின் லுங்கி ஏற்றுமதியாளராக தொழில் செய்தார். மீனாட்சி அம்மாள் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

சிறுவயதிலேயே பெரியார், அண்ணா ஆகியோரிடம் ஈர்ப்புக் கொண்டு அவர்களுடன் நெருக்கமாகப் பழகி வந்தார்.

அக்காலத்தில் மூட நம்பிக்கைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வந்த தந்தை பெரியார் ரயில் மூலம் ஒவ்வொரு ஊருக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவருக்கு முதன்முதலில் கார் வாங்கிக் கொடுத்தவர் பெருமாள் முதலியார்.

மிகுந்த கலை ஆர்வம் கொண்டவர். வேலூரில் சக்தி நாடக சபாவில் ரோஜா நாடகம் நடைபெற்றபோது அதில் நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகம் ஏற்பட்டது. 

பின்னர் தேவி நாடக மன்றம் நடத்திய பராசக்தி நாடகத்தைப் பார்த்து, அதை திரைப்படமாகத் தயாரிக்கும் எண்ணம் கொண்டார் பெருமாள் முதலியார். 

வசனம் கருணாநிதி, இயக்கம் கிருஷ்ணன் பஞ்சு என முடிவானது. சிவாஜி கணேசனுக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்துள்ளார்கள். சிவாஜி கணேசன்  சக்சஸ் என்று பேசிய வசனம் சரியாக வரவில்லை என்று  சவுண்ட் என்ஜினியர் கூறியுள்ளார். முகம் சரியில்லை எனவும் சிலர் கூறியுள்ளனர். வேறு யாரையாவது வைத்துப் படத்தை முடியுங்கள் என்றும் பலர் ஆலோசனை வழங்கியுள்ளனர். 

மனம் தளராத பெருமாள் முதலியார் சிவாஜியை வேறு ஒரு ஊருக்கு அழைத்துச் சென்று நன்றாக சாப்பிட வைத்து, உடல் தேற்றி, சிலம்பம் போன்ற பயிற்சிகளையும் அளித்து மீண்டும் சென்னை அழைத்துவந்து உத்வேகத்துடன் படத்தைத் தயாரித்தார். 1952 'பராசக்தி' திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

பிறகு பெற்ற மனம், ரத்தக்கண்ணீர் போன்ற படத்தையும் தயாரித்து வெளியிட்டார்.

பெருமாள் முதலியாரின் 9 ஏக்கர் நிலத்தை அன்றைய தமிழக அரசு எடுத்துக் கொண்டது. அதையும் அவர் மனப்பூர்வமாக எழுதிக் கொடுத்தார். பூட்டுத்தாக்கு கிராமத்தில் பள்ளிக்கூடம் அமைக்க அந்த இடம் பயன்பட்டது. அவரை அய்யா என்றுதான் பூட்டுத்தாக்கு கிராமத்தவர் அழைப்பர்.  

ஏழைப் பள்ளி மாணவர்களுக்கு நிறைய உதவிகள் செய்வார். அவரால் அன்று படித்த மாணவர்கள் பலர் அரசு வேலையில் பணியாற்றி சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.

1948-இலேயே வேலூரில் ரசிகர்கள் படம் பார்த்து மகிழ, நேஷனல் தியேட்டர் கட்டியவர். வரி ஏய்ப்பு செய்யாமல் தொழில் நடத்த வேண்டும் என்று பெருமாள் முதலியார் கண்டிப்பாக இருப்பார். 60% விநியோகஸ்தர்க்குக் கொடுத்து விடுவார். 40 சதவீதம் தான் தியேட்டருக்கு வந்து சேரும். 

அவர் தியேட்டரில் தொழிலாளர்கள் வேலையை விட்டு நின்றது கிடையாது. 20 வருஷம், 30 வருஷம் வேலை செய்த தொழிலாளர்கள் இருந்திருக்கிறார்கள். 

தனது பால்ய பருவத்திலேயே பெரியாரின் அணுக்கத் தொண்டரான பி.ஏ.பி. 'கடவுள் இல்லை' என்ற பெரியாரின் சித்தாந்தத்தின் அடியொற்றி நடைபயின்றவர். 

தனது இல்லத்திலும் அலுவலகத்திலும் காலண்டரில் கூட சாமி படங்கள் இருந்தால் மாட்ட மாட்டார். பேச்சிலும், செயலிலும் அதனைக் கடைப்பிடித்தார். 

தூய கதராடை பக்தரான இவர், வாழ்நாள்
முழுவதும் கதராடையையே அணிந்தவர்.
உணவில் சைவம் தான் உண்பார். 

பெருஞ்செல்வந்தராய் மிளிர்ந்த போதிலும் தனது ஆரம்பக்கால நெசவுத் துறையில், கைலி வியாபாரத்தில் பணியாற்றும் ஊழியர்களிடத்தில் அன்பு பாராட்டி பல உதவிகள் புரிந்தார். 

தனது குடும்பத் தொழிலான நெசவுத் தொழிலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளாமல் பால்ய பருவத்திலேயே கலையின் மீது நாட்டம் கொண்டு தன்னை முழுநேரக் கலைஞனாகவே ஆக்கிக் கொண்டவர்.

'நாம் இருவர்' விநியோகஸ்தர் உரிமையைப் பெற்று தமிழ்நாடெங்கும் திரையரங்குகளில் வெளியிட்டு அக்கால சினிமா ரசிகர்களுக்கு விருந்தளித்தார்.

இவரது இந்த முயற்சி ஜெமினி ஸ்டுடியோ அதிபர் வாசனுக்கு வியப்பைத் தந்தது. தொடர்ந்து வெளிவந்த, 'வேதாள உலகம்', தொடங்கி 200-க்கும் மேற்பட்ட திரைப்பட விநியோக உரிமைகளைப் பெற்று வெளியிட்டதோடு அத்திரைப்படங்களின் இயக்குநர்களோடும், தயாரிப்பாளர்களோடும், கலைஞர்களோடும் நட்பு பாராட்டினார்.

பெரியாருடன் கொண்ட தோழமையால் அக்காலத்து திரைப்படத்தில் கோலோச்சிய என்.எஸ்.கிருஷ்ணன், அண்ணா, கலைஞர், திருவாரூர் தங்கராசு ஆகியோர்களுடன் நட்பு கொண்டதுடன் திரை உலகின் அனைத்து தொழில் நுட்பங்களையும் கற்று அறிந்திருந்தாலும் தன்னை ஒரு தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் மட்டுமே அடையாளம் காட்டிக் கொண்டார்.

இவரது முதல் தயாரிப்பான, 'பராசக்தி' தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் சினிமா ரசிகர்களால் ஆகர்ஷிக்கப்பட்டு சுதந்திரத்துக்குப் பின் 50 ஆண்டு கால திராவிட சித்தாந்தங்கள் தமிழ்நாட்டில் வேரூன்றக் காரணமாயின.  

இந்த வெற்றியின் அடையாளமாய் தந்தை பெரியாருக்கு பிரசார வேன் ஒன்றும் வாங்கித் தந்தார். 

மேலும் இவரது குணாதிசயங்களில் ஒன்று, ஆங்கிலேயர்கள் சொல்லாடலான "ஸார்" என்ற வார்த்தையை ஓர் அடிமைத்தனத்தின் வெளிப்பாட்டுச் சொல்லாகவே கருதினார்.

அதனால் யாரையும் "ஸார்" என்று அவர் அழைத்ததில்லை. "ஐயா" என்னும் உரிமையுடனும் , "வாடா" என்று செல்லமாகவும் அழைப்பார். என்.எஸ்.கே., எம்.ஆர்.ராதா முதல் தனது ஊழியர்கள்  மற்றும் ‌அனைத்துத் திரை உலகத்தினரையும் அவ்வாறே அழைப்பாராம்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com