பிரியாணியும் பழைய சோறும்

கொண்டாட்டம்.. விருந்து.. என்றால் அது பிரியாணி இல்லாமல் இருக்காது. அசைவப் பிரியர்களின் அருமருந்து பிரியாணிதான். மனசு சரியில்லை என்றாலும், உடம்பு சரியில்லை என்றாலும் பிரியாணி போதும்.
பிரியாணியும் பழைய சோறும்
பிரியாணியும் பழைய சோறும்

கொண்டாட்டம்.. விருந்து.. என்றால் அது பிரியாணி இல்லாமல் இருக்காது. அசைவப் பிரியர்களின் அருமருந்து பிரியாணிதான். மனசு சரியில்லை என்றாலும், உடம்பு சரியில்லை என்றாலும் பிரியாணி போதும்.

பல அசைவப் பிரியர்களிடம் உங்களின் அடுத்த இலக்கு என்னவென்று கேட்டால், பிரியாணி சாப்பிடுவது என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். ஆனால் தற்போது தமிழகத்திலோ பிரியாணி கடையும், பரோட்டா கடையும் இல்லாத ஊர்களே இல்லை என்று சொல்லலாம். பிரியாணி என்றால் ஆட்டிறைச்சி அல்லது கோழி இறைச்சி என்ற நிலை மாறி, தற்போது மீன் பிரியாணி, இறால் பிரியாணி என்று பல மாற்றங்களை கண்டடைந்துள்ளது. அது மட்டுமா? அசைவமே பிடிக்காது என்று கூறுபவர்களுக்கும், இறைச்சியே வேண்டாம் என்றாலும் கூட பிரியாணியை குஸ்கா என்று வாங்கிச் சாப்பிட்டு தங்களது பிரியாணி ஆசையை தீர்த்துக் கொள்ளலாம்.

அசைவ பிரியர்களுக்கு மட்டும்தான் பிரியாணியா? சைவப் பிரியர்களுக்கு இல்லையா என்று நாவில் எச்சில் ஊற கேட்பவர்களுக்காகவே, காளான் பிரியாணி போன்றவையும் கிடைக்கின்றன. 

ஒரு பாய் ஃபிரண்ட் இல்லை என்றால் கூட பரவாயில்லை. ஒரு பாயை ஃபிரண்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று மீம்ஸ் வரை நமக்கு அறிவுரைக் கூற காரணம்.. பல வகைகளில் பிரியாணியும், முஸ்லிம் மக்களும் நகமும் சதையும் போல இருப்பதுதான். முஸ்லிம்களின் திருமணமாகட்டும், ரம்ஜான் போன்ற பண்டிகைகளாகட்டும்.. பிரியாணிதான் ஹைலைட். அதை எப்போதும் பிரிக்க முடியாது.  முஸ்லிம்கள் செய்யும் பிரியாணிக்கு சுவை அலாதிதான். அதை என்றும் மறுக்கவே முடியாது.

பிரியாணி என்றால் ஏதோ பணக்காரர்களுக்கான உணவு என்று சொல்லிவிடமுடியாது. ஏழைகளுக்கும் அது சுவைக்கக் காரணம், மாட்டிறைச்சி, பன்றிக் கறி பிரியாணிகளும் தெருக்கொரு வகையாக விற்பனையாவதே. எந்த ஊருக்குச் சென்றாலும், எந்த ஊரிலிருந்து வந்தாலும், அந்த ஊரில் சிறந்த பிரியாணிக் கடைக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு திரும்பாத அசைவ சுற்றுலாப் பயணிகள் அரிதுதான்.

இப்படி நாம் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடும் பிரியாணி ஒரு பாரசீக உணவாம். தாங்கிக் கொள்ளமுடியவில்லைதானே? விடுங்கள் பிரியாணி சாப்பிட்டு மனதை தேற்றிக் கொள்ளலாம். பாரசீக மொழியில் அரிசி அல்லது சாதம் என்பதைக் குறிக்கும் பிரிஞ்சி என்ற வார்த்தை மருவி பிரியாணி என்றானதாகவும் பாரசீக மொழியில் சமைப்பதற்கு முன்பு உணவை வறுப்பதைக் குறிக்கும் பெரியன் என்பது மருவி பிரியாணி என்றானதாகவும் இருவேறு கூற்றுகள் நிலவுகின்றன.

அப்பேர்பட்ட பிரியாணி பற்றிய வரலாற்றைப் புரட்டினால், போர் வீரர்களுக்காக உருவாக்கப்பட்டது என்கிறது சிறு குறிப்பு.  பெர்சிய நாட்டு வீரர்கள் போருக்குச் செல்லும் போது அரிசி மற்றும் மசாலா பொருள்களை உடன் கொண்டு சென்று, அங்குக் கிடைக்கும் விலங்குகளை வேட்டையாடி அதனுடச் சேர்த்து சமைப்பது வழக்கமாம்.

அதுமட்டுமல்ல.. ஷாஜகானின் போர்ப் படையை நேரில் பார்த்த மும்தாஜ், வீரர்கள் போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் இருப்பதைக் கண்டு அவர்களுக்கு அரிசியுடன் இறைச்சியையும் சமைத்துக் கொடுக்க உத்தரவிட்டு, சமையல் குறிப்பையும் கொடுத்துள்ளார். அப்போது முதல் முகலாலயர்கள் ஆட்சி செய்த இடங்களிலெல்லாம் இந்த கறியும் சோறுமான பிரியாணி பிரபலமடைந்ததாகவும் குறிப்புகள் கிடைக்கின்றன.

ஆனால், இந்தியாவுக்குள் பிரியாணியின் பூர்வீகம் என்றால்.. அப்படி  ஓரிடத்தை துல்லியமாகச் சொல்லிவிட முடியாது. ஆனால், முகலாலயர்களால் பிரியாணி இந்தியாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கும் இரண்டாவது கூற்று ஒன்று உள்ளது. 1398ஆம் ஆண்டு துருக்கி - மங்கோலிய படையெடுப்பாளர் தைமூரால் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதே பிரியாணி என்கிறது அந்தக் கூற்று. பிரியாணின்னா கடும் போட்டி இருக்கத்தானே செய்யும்!

பிரியாணியை தயாரிக்கும் முறையானது, பாரசீகத்தில் தோன்றி, அந்நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்த வணிகர்கள், சுற்றுலாப் பயணிகள், படையெடுப்பாளர்கள் மூலம் நம் நாட்டுக்குள் நுழைந்து, இந்திய மக்களின் நாவை அரசாட்சி செய்து வருகிறது. ஆனால், தற்போது நாம் உண்ணும் பிரியாணியை சமைக்கும்முறை முற்றிலும் உள்நாட்டிலேயே உருவானதுதான். அந்தந்த இடங்களில் கிடைக்கும் பொருள்களாலும் மக்களின் சுவைக்கேற்பவும் அதில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. ஆனால், அதனால் எதுவும் குறைந்துவிடவில்லை. திண்டுக்கல் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி என விதவிதமான பிரியாணிகள் உருவாகின.

இதையெல்லாம் தாண்டி பிரியாணியைப் பற்றி சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது இன்னும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அதாவது, 

வரலாற்று ஏடுகளின்படி பிரியாணி இந்தியாவுக்குப் பதினான்காம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் அறிமுகம் ஆனது. ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஊன் துவை அடிசில் என்னும் பெயரில் அது இந்தியாவில் உண்ணப்பட்டதாக சங்க இலக்கியம் நமக்குத் தெரிவிக்கிறது. 
பதிற்றுப்பத்தில்,
சோறு வேறு என்னா ஊன்துவை அடிசில்
ஓடாப் பீடர் உள்வழி இறுத்து (45: 13-14) இது பற்றி விரிவாகப் படிக்க வேண்டுமா?

அரிசி, இறைச்சி, நெய், வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது, எண்ணெய், மிளகாய் பொடி, மசாலாப் பொருள்களை சேர்த்து வறுத்து சமைக்கும் உணவுதான் பிரியாணி. அதன் சுவையைக் கூட்டுவதில், ஒவ்வொன்றுக்கும் முக்கிய பங்குண்டு. பிரியாணியில் சேர்க்கப்படும் ஒவ்வொன்றும் மற்றொன்றுக்கு சளைத்ததல்ல. இதில் உயர்தர பாசுமதி அரிசி சேர்க்கப்படுவதுதான் வெகு சிறப்பு. தென்னிந்தியாவில் இதனை சீரகச் சம்பா போன்ற அந்தந்தப் பகுதியில் விளையும் அரிசி வகைகளிலும் செய்து அசத்துகிறார்கள்.

இந்த பிரியாணிக்கு தயிர், வெங்காயம் சேர்த்து தயாரிக்கப்படும் தயிர் பச்சடி, கத்திரிக்காய் தொக்கு, கறித் துண்டுகள் போட்ட சேர்வா எனப்படும் குழம்பு மிகச் சிறந்த இணையாக விளங்குகின்றன.

இந்திய பிரியாணி வகைகள்

முகல் பிரியாணி
முகலாய பேரரசர்களின் உணவுப் பட்டியலில் அவர்களது விருப்பத்துக்கு ஏற்ப தயாரிப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டு, நன்கு சுவையூட்டப்பட்ட பிரியாணி வகையே முகல் பிரியாணி. இறைச்சித் துண்டுகள் நன்கு மசாலாவில் வேகவைக்கப்படுவதுடன், அரிசியில் தாழம்பூ தண்ணீர் எனப்படும் நறுமணம் சேர்க்கப்பட்டு இந்த பிரியாணி தயாரிக்கப்பட்டதால், முகல் பிரியாணி என்றழைக்கப்பட்டது.

லக்னௌ பிரியாணி
இது லெக்னௌ பகுதியில் தயாரிக்கப்படும் பிரியாணி. பக்கி பிரியாணி என்றழைக்கப்படும் இதில், அரிசியும் இறைச்சியும் தனித்தனியாக அரைவேக்காட்டில் சமைக்கப்பட்டு, செப்புப் பாத்திரத்தில் ஒன்றன் மீது ஒன்றாக பரப்பி மூடி, கோதுமை மாவினால் மூடியை தாழிட்டு குறைந்த தீயில் சமைக்கிறார்கள். இதையே அவதி பிரியாணி என்றும் கூறுகிறார்கள். பாரசீத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அவதி நவாபுக்கு பிடித்தபடி அதிக நறுமணப் பொருள்கள் சேர்த்துத் தயாரிக்கப்படும்.

கொல்கத்தா பிரியாணி
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிரிட்டிஷ் மக்கள் வெளியேறிய நிலையில், நவாப் வாஜித் அலி, தனக்கு ஏற்றார் போல சுவையை மெருகேற்றி உருவாக்கியதே கல்கத்தா பிரியாணி. இதில் சுவைக்கு ஏற்ற அளவுக்கு இறைச்சியை சேர்ப்பதோடு, நன்கு பொன்னிறமாக வறுக்கப்பட்ட உருளைக்கிழங்கு சேர்த்தும் தயாரிக்கப்படுகிறது.  தயிர் மற்றும் மசாலா வகைகளில் இறைச்சியை ஊறவைத்து, குறைவான நறுமணப் பொருள்கள் சேர்த்து அரிசியும் இறைச்சியும் தனித்தனியாக சமைத்து பிறகு சேர்த்து சமைக்கப்படுகிறது கல்கத்தா பிரியாணி.

பாம்பே பிரியாணி
மசாலா பொருள்கள் அதிகமாக சேர்த்து உருவாக்கப்படுகிறது. உலர்த்தப்பட்ட ஃபிளம் பழங்கள் மற்றும் தாழம்பூ நறுமண தண்ணீர் இதில் சேர்க்கப்படுவதால், பிரியாணி சுவையுடன் தனித்து ஒரு இனிப்புச் சுவையும் நாவில் நடனமாடும்.

ஹைதராபாத் பிரியாணி
ஹைதராபாத்தை ஆள ஔரங்கசேப் நியமித்த நிஸா-உல்-முல்க் ஆட்சியின் போது பிரபலமானதே ஹைதராபாத் பிரியாணி. ஹைதராபாத் பிரியாணி உருவான போதுதான், இறைச்சி மட்டுமல்லாமல் மீன், நண்டு, காடை போன்ற சிறு பறவைகள், மான், முயல் கறி என 50 வகையான அசைவப் பொருள்களைக் கொண்டும் பிரியாணி சமைக்கும் முறை சமையலறைகளில் அறிமுகமானது. இந்த பிரியாணியின் சுவைக்கு சுவை கூட்ட குங்குமப் பூ பயன்படுமாம்.

பங்கலோரியன் பிரியாணி
சீரகச் சம்பா அரிசியைக் கொண்டு பங்கலோரியன் பிரியாணி தயாரிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் பங்கலோரியன் திருமண விழாக்கள் மற்றும் வீடுகளில் தயாரித்து சுடச்சுட பரிமாறப்படும்.

தலசேரி பிரியாணி
இதன் பிறப்பிடம் கேரளம். தனித்துவம் மிக்க கேரளத்தில் விளையும் ஜீராகசாலா அரிசியில் செய்யப்படுகிறது. ஜீராகசாலா அரிசியை கைமா அரிசி அல்லது கேரளத்தின் பிரியாணி அரிசி என்று கூறுவார்கள். கோழி இறைச்சியின் மிருதுவான சதைப் பாகங்கள் மட்டும் சேர்க்கப்பட்டு, தலசேரி பிரியாணி மிகப் பக்குவரமாகத் தயாரிக்கப்படுகிறது. இதில் சேர்க்கப்படும் மசாலாவும் கேரளத்தில் விளையும் மசாலாக்களாகவே இருக்கும். இதுவும் பக்கி பிரியாணியைப் போலவே, தக்காளி மட்டும் இல்லாமல், பிற மசாலா பொருள்கள் சேர்த்து சமைக்கப்பட்ட இறைச்சி, நறுமணப் பொருள்களுடன் வேக வைத்த அரிசியை ஒன்றன் மீது ஒன்றாக பரப்பி சமைக்கப்படுகிறது. இதில் சமைப்பதில் மட்டுமல்ல பக்குவம், பரிமாறும் போதும் மசாலாவுக்கு ஏற்ற அரிசி என்ற சரியான பதத்துடன் பரிமாற வேண்டும்.
 

தமிழக பிரியாணி வகைகள்..

தலையாட்ட வைக்கும் திண்டுக்கல் பிரியாணி
பாசுமதி அரிசியில் செய்தால்தான் அது பிரியாணி என்று பிரியப்படுவோர் அனைவரும் திண்டுக்கல் பிரியாணியை ஒரு முறை சுவைத்துவிட்டால் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்வார்கள். சீரக சம்பா அரிசியின் மணமும், மிளகுடன் சிறு துண்டுகளாகப் போடப்பட்ட இறைச்சியும் திண்டுக்கல் பிரியாணிக்கு உலகப் புகழ் சேர்க்கின்றன.

சுண்டி இழுக்கும் ஆம்பூர் பிரியாணி
ஆற்காடு நவாப் குடும்பத்துக்காகத் தயாரிக்கப்பட்ட பிரியாணியின் பாரம்பரியம்தான் இன்று ஆம்பூர் பிரியாணியாகத் திகழ்கிறது. தயிரில் இறைச்சியை ஊற வைத்து சேர்ப்பதால் இதன் சுவை கூடுகிறது. ஆற்காடு பகுதியை சாலை மார்க்கமாகக் கடப்பவர்கள் நிச்சயம் ஆம்பூர் பிரியாணியின் மணத்தை நுகராமல் கடக்க முடியாது. தமிழகத்தின் வடகிழக்கு மாவட்டங்களில் இது வெகு பிரபலம். இது மட்டுமல்ல தென்னிந்தியாவின் தெருவோரக் கடைகளில் ஆம்பூர் பிரியாணிதான் சக்கைப்போடு போடும் உணவாகும்.

எச்சில் ஊற வைக்கும் வாணியம்பாடி பிரியாணி
வேலூர் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் வாணியம்பாடியில், முகலாய முறைப்படி தயாரிக்கப்படுகிறது வாணியம்பாடி பிரியாணி. ஆற்காடு நவாப் தனது படை வீரர்களுக்குத் தயாரித்து வழங்கிய இந்த பிரியாணி, பிறகு வேலூர் முழுக்க பரவி, தற்போது பெயரளவில் வாணியம்பாடி பிரியாணி என்ற புகழுடன் கமகமவென சுவைகூட்டி மணம்வீசி வருகிறது.

சுண்டி இழுக்கும் சங்கரன்கோவில் பிரியாணி
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் ஆட்டிறைச்சி சேர்த்து தயாரிக்கப்படுகிறது. நெல்லையைச் சுற்றிலும் இருக்கும் விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் வளர்க்கப்படும் ஆடுகளில் கன்னி வகை ஆடுகளைத் தேர்வு செய்து இந்த பிரியாணிக்கு சேர்ப்பதுதான் நாவில் எச்சில் கொட்ட வைக்கும் சங்கரன்கோவில் பிரியாணியின் சுவைக்குக் காரணம்.

என்னங்க.. பிரியாணின்னா இவ்ளோ தானான்னு நெனச்சிட வேண்டாம். குஜராத்தின் சிந்து பகுதியில் தயாரிக்கப்படுகிறது மெமோனி பிரியாணி, காய்கறிகளைக் கொண்டு பிரியாணியின் சுவையுடன் தயாரிக்கப்படுகிறது தெஹாரி பிரியாணி, அசாமின் காம்பூர் நகரில் தயாரிக்கப்பட்டு, அப்பகுதி மக்களின் நாவை அடிமையாக்கி வைத்திருப்பது காம்பூரி பிரியாணி.

கேரளம் மற்றும் தமிழகத்தில் வாழும் ராவுத்தர்களின் குடும்பங்களில் தயாரிக்கப்படும் ராவுத்தர் பிரியாணி, இலங்கை, கொழும்புவிலிருந்து 1900 ஆண்டுகளில் தென்னிந்தியாவுக்குள் புர்யாணி என்ற உள்ளூர் மொழி அடையாளத்தோடு நுழைந்த புஹாரி பிரியாணி, பர்மாவில், மிக சிறுந்தீயில் வைத்து சமைக்கப்படுவது தன்பக் பிரியாணி. 

தட்சின கன்னடா பகுதியில், முஸ்லிம் மக்களால், யாராலும் அடித்துக்கொள்ள முடியாத வகையில் தயாரிக்கப்படுவது பெயாரி பிரியாணி, கர்நாடக கரையோரப் பகுதிகளில் சுடச்சுட, மணமணக்க தயாராவது பத்களி பிரியாணி, ஹைதராபாத்தில் பால் சேர்த்து தயாரிக்கப்படும் தூத் பிரியாணி என பிரியாணியின் வகைகளையும் பெருமைகளையும் சொல்லிக் கொண்டேப் போகலாம்..  

ஆனால் எதற்கும் ஒரு அளவு இருக்கிறதல்லவா.. ஆகையால் பிரியாணி பெருமையை இத்தோடு நிறுத்திக் கொள்கிறோம்.

இன்று வந்ததுங்க இந்த பிரியாணி. இதுக்கு ஆளாப் பறக்குறாங்க என்று அங்கலாய்த்துக் கொள்பவர்களின் மனக்கசப்பை சரி செய்து, உள்ளத்தையும், உடலையும் குளிர வைப்பதற்கு ஏற்ற உணவு நம்ம ஊர் பழைய சோறு.

எத்தனை உணவுகள் வந்தாலும், நம்முடைய பாரம்பரிய உணவான பழைய சோறை எந்த உணவாலும் நிரப்ப முடியாது.  ஆனால், பழைய சோறு சாப்பிடுவதை கேவலம் என்று ஏளனப்படுத்தியே அதனை ஒழித்துக் கட்டியது வெளிநாட்டு வர்த்தக யுக்தி. இட்லியும் தோசையையும் சாப்பிட்டு, தற்போது விலங்குகளுக்குப் போடும் ஓட்ஸ் போன்றவற்றை சாப்பிட வைத்து தமிழர்களை நோயாளிகளாக்கி, இந்தியாவை மருந்துபொருள் வணிகச் சந்தையாக மாற்றிக் கொண்டுவிட்டது.

உங்கள் பேஸ்டில் கரி இருக்கா? உப்பு இருக்கா? என்று இப்போது விளம்பரப்படுத்துகிறார்கள். இதைத்தானே 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். அன்று அதனை வேண்டாமென்று பிரஷ்ஷையும் பேஸ்டையும் கையில் கொடுத்துவிட்டு, இன்று உங்கள் பேஸ்டில் கரி இருக்கா? என்றால்.. இல்லை இல்லை தமிழர்களின் முகத்தில்தான் கரி பூசப்பட்டிருக்கிறது என்றுதான் பதில் சொல்ல வேண்டும். அப்படித்தான் மிகவும் சத்தான பழைய சோறுக்கு நாம் டாடா காட்டினோம். அதனால் இன்று நமது உடலுக்கு ஆரோக்கியம் டாடா காட்டிவிட்டது.

பழைய சாதம் செய்வது எப்படி என்று கூகுளில் தேடும் தலைமுறையினர், அவர்களது தாத்தா - பாட்டியின் உடல் ஆரோக்கியத்துக்கான தாரக மந்திரமே இந்த பழைய சோறுதான் என்பதை எப்படி புரிய வைப்பது.

இந்தியர்களோ, இந்தியாவிலோ சொன்னால் எங்கே மதிக்கிறார்கள்.. அதனால்தான் இதனை மேற்கோள்காட்டுகிறோம். அமெரிக்க சத்துணவுக் கழகம், நம்முடைய பழைய சோறின் மகத்துவத்தை பட்டியலிட்டுள்ளது. இந்த பட்டியல் வெளியான பிறகு, அமெரிக்கர்கள் அதிகம் தேடிய உணவு பொருள் பட்டியலில் பழைய சோறுக்குத்தான் முதலிடமாம். அவ்வளவு ஏன், தமிழர்களிடம் பழைய சோறு செய்யும் பக்குவம் குறித்து அறிந்து கொள்வதற்காகவே ஏராளமான அமெரிக்கர்கள் தமிழர்களிடம் நெருங்கிப் பழகுகிறார்களாம்.

இவ்வளவும் தெரிந்து பிறகு.. அதாவது கண் கெட்ட பிறகு.. தமிழகத்திலும் தற்போது உணவகங்களிலும், ஆன்லைன் மூலமும் பழைய சோறு விற்பனைக்கு வந்துவிட்டது. ஒரு குடுவையில் பழைய சோறும், தோல் உரித்த வெங்காயமும் உணவகங்களின் விற்பனைக்கான காட்சிப்பொருளாக வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும் நமக்கு வெட்கம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

பழைய சோற்றில் அந்த அருமையான புளிப்புச் சுவையைக் கூட்டுவது லேக்டிக் ஆசிட் நுண்ணுயிரிகள்தான். நுண்ணுயிரி என்றதும் கரோனா போன்ற தீநுண்மி என்று நினைத்துவிட வேண்டாம். இது உடலுக்கு அருமருந்தானது. 

அதாவது, உடலுக்கு நன்மை செய்யும் லட்சக்கணக்கான நுண்ணுயிரிகள் நம் குடல் பகுதியில் வாழ்கின்றன. இவைக் குறையும் போதுதான் நமக்கு பல பிரச்னைகள் ஏற்படும். துரித உணவுகளில் அதிகக் காரம், ரசாயனம் கலக்கப்படுவதால் அவற்றை உண்ணும்போது, இந்த நுண்ணுயிரிகள் குறைகின்றன. இதனை சரி செய்ய ஒரே வழி.. பழைய சோறுதான்.

அதோடு, பழைய சோறில் ஏராளமான புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியமும் நிறைந்து இருக்கிறது. வடித்த சாதத்தை விட பழைய சோறில் இரண்டு மடங்குக்கும் அதிகமான இரும்புச் சத்து கூடுகிறது என்பது நாங்க சொல்லலைங்க. அறிவியல் பூர்வமா ஆராய்ந்து சொல்லப்படும் விஷயம்.  பழைய சோறை விடுங்கள், அது ஊறிய தண்ணீரின் சுவையை ஒரு வார்த்தையில் விளக்கிவிட முடியுமா என்ன? 

காலையில் பழைய சோறைச் சாப்பிடுவதால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். உடல் சூடு தணியும். குடல் புண், வயிற்று வலி குணமாகும். நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் வராது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

தினமும் அதிகாலையிலேயே வேலைக்குச் செல்லும் வழக்கம் கொண்டிருந்த முன்னோர், இரவில்தான் அடுப்பை மூட்டி சாதம் வடிப்பார்கள். அப்போதே மறுநாளைக்கும் சேர்த்து சாதம் வடித்து, இரவில் வயிறு நிரம்ப சாப்பிட்டுவிட்டு, மீத சாப்பாட்டை தண்ணீர் ஊற்றி வைத்து விடுவார்கள். காலையில் அதனை ஒரு தூக்குச் சட்டியில் எடுத்துக் கொண்டு கழனிக்கு வேலைக்குச் சென்றால், வெயிலும் தெரியாமல், வெப்பத்தால் உடல் உஷ்ணமடையாமல் காக்கும் குலசாமியாக இருந்தது அந்த பழையச் சோறுதான். அதற்கு சரியான இணை வெங்காயமோ அல்லது பச்சைமிளகாயோ. இருக்கப்பட்டவர்கள் தான் தொட்டுக் கொள்ள ஊறுகாயோ துவையலோ தேடுவார்கள்.

இத்தனை மகத்துவத்தையும் கொண்ட பழைய சோறு, உணவே மருந்தாக இருந்த நிலையில், அதனைப் புறந்தள்ளிவிட்டு, சமைத்து, குளிர்பதனப் பெட்டியில் வைத்து பல நாள்களுக்குப் பிறகு சாப்பிடுவதால் இன்று உணவே விஷமாகி, 40 வயதிலேயே நீரிழிவு, ரத்தக் கொதிப்பு என மாத்திரையே உணவாக விழுங்கிக் கொண்டிருக்கிறோம்.

எனவே, உணவே மருந்து என்பதை நினைவில் கொண்டு, பழைய சோறாக இருந்தாலும் பிரியாணியாக இருந்தாலும், அதனை உரிய முறையில் சமைத்து, வீணாக்காமல் உண்பதே, உணவுக்கு நாம் செய்யும் குறைந்தபட்ச நியாயம் என்பதை நினைவில் கொள்வோம்.

தமிழர்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத உணவாக பிரியாணியும், தவிர்க்கக் கூடாததாக பழைய சோறும் இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com